அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.நலமாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன்.
நான் தங்களுக்கு 3 ஜூலை 2016 அன்று எழுதியிருந்த இமெயிலுக்கான உங்களுடைய விளக்கத்தை உங்கள் இணையதளத்தில் வாசித்தேன்.
என்னுடைய பிரபஞ்சம் என்பது என்னுடைய அறிவு மட்டுமே. அதனை தாண்டிய முழுமையான பிரபஞ்சத்தின் இருத்தலையோ, அதன் பிரமாண்டத்தையோ(absolute existence), எந்த நிலையலும் அறிந்து கொள்ள முடியாது என்ற உஙகளுடைய விளக்கம், பிரபஞ்சத்தைப் பற்றிய மனிதனின் புரிதலுக்கு ஒரு முக்கியமான பார்வை. ஞான மார்க்கம், கர்ம மார்க்கம் என்ற வழிகளின் மூலம் மனச்சோர்வுக்கு இடம் தராமல், இந்த வாழ்வை முழுமையாக வாழலாம் என்ற புரிதல், மிகப்பெரிய அனுபவம்.
பிரபஞ்சம் எனும் சொல் என்ற தலைப்பே, சொல் என்பது மொழியினால் கட்டமைக்கப்பட்டு, மொழி என்பது அறிவினால் கட்டமைக்கப்பட்டு, பிரபஞ்சம் என்பதே அறிவைத் தவிர வேறொன்றுமில்லை என்பதாகப் புரிந்து கொள்கிறேன்.
உங்களுக்கு என்னுடைய நன்றிகள்.
வணக்கத்துடன்,
சங்கரநாராயணன்
வணக்கம்.
தம்பி திரு.பிரதீப் குமார் அருணாசலம் இன்று சரியான கேள்வியை தங்களிடம் கேட்டு இருக்கிறார்,நீங்கள் தொலைத்தொடர்களை ஒரு காய்ச்சு காய்ச்ச போகிறீர்கள் என்று ஆவலுடன் படித்த எனக்கு ஏமாற்றம்,ஏனெனில் எனது வீட்டில் நான் இருக்கும்வரை எந்த தொலைத்தொடர்களும் பார்க்க கூடாது என்ற விதியை அமுல் படுத்தி இருக்கிறேன்.காரணம் அதில் வரும் அளவுக்கு மீறிய வன்மம்,உணர்ச்சி கொந்தளிப்புக்கள்,மிகையான காட்சி சித்தரிப்புக்கள் என பலவற்றால்.ஆனால் நீங்கள் ஒரு மாறுபட்ட ,உண்மையான,செய்தியை கீழ்கண்டவாறு.சொல்லி இருக்கிறீர்கள்.
இந்த வன்முறை, காழ்ப்புச்சித்தரிப்புகள் ஒருவகை ‘சொல்லித்தீர்த்துக்கொள்ளும்’ முயற்சிகளாக ஏன் இருக்கக்கூடாது? தன் அகத்தின் அத்தனை அழுக்குகளையும் வாழ்வுடன் சம்பந்தப்படாத ஒரு மின்பிம்பவெளியில் நிகழ்த்தி நிறைவுகொண்டு மீளும் அனுபவத்தை இவை அளிக்கின்றன என ஏன் சொல்லக்கூடாது?
அதை கதார்சிஸ் என்று அரிஸ்டாட்டில் சொல்கிறார். புனைவில் வரும் துயரம் துயரமே அல்ல. அது ஒரு விடுதலை. துயரை நடித்து உண்மைத்துயரிலிருந்து வெளிவரும் முயற்சி அது.
இது வரை தங்கள் வலைத்தளத்தை வீட்டில் உள்ளோர் எல்லோரும் படிக்கவேண்டும் என வற்புறுத்தும் நான் இந்த பதிலை மறைக்கவேண்டும் (!) என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
அன்புடன்,
அ .சேஷகிரி.