நமது நீதிமன்றத்தீர்ப்புகள்….

index

அன்பின் ஜெ..

பெருமாள் முருகன் தீர்ப்பில், “நீதி மன்றத்தின் தீர்ப்பில் சற்றே நம்பிக்கை வருகிறது” என்னும் போலி அறப்பாவனையை சொன்னீர்கள்.

உங்கள் வாக்கியத்தில், நீதி மன்றத்தில் பெரும் அறத்தீர்வுகளே வருகிறது என்னும் பாவனையும் உள்ளது. பெரும்பாலும் முற்போக்கு; விதிவிலக்குகள் அபூர்வம் என.

இதை புள்ளியியல் கொண்டு விளக்க முடியாது; தரவுகள் இல்லை. ஆனால், நீங்கள் சொல்லும் விதிவிலக்குகள் சிலவற்றைக் குறிப்பிடத் தான் வேண்டும்.

இதில் ஆதி முதல்வர், குமாரசாமி. பெரும் கற்பனைத் திறமும், காவியச் சாயலும் கொண்ட தீர்ப்பு அது. தில்லியில் ஜெஸ்ஸிகா என்னும் பெண்ணின் கொலை வழக்கு பின் பெரும் திரைப்படமாகவும் வந்தது. மான் வேட்டை புகழ் கான் காரோட்டிய வழக்கில் மனம் பிறழ்ந்து மரித்த ஒரு சாதாரண போலீஸ் சாட்சி.

சமீபத்தில் இரு திருவாய்மொழிகள் உதிர்ந்துள்ளன – ஒன்று – வருமானத்துக்கு மேல் சொத்து சேர்ப்பது தவறில்லை. ஆனால், அந்தப் பணம், தவறான வழியில் வந்தால்தான் தவறு.. இந்த ஸ்டேட்மெண்டின் உள்ளர்த்தம் – ஒரு நல்ல வக்கீல் சொல்ல முடியும். இன்னொன்று குஜராத் கலவரத்தில், கொல்லப்பட்ட எஹ்ஸான் ஜாஃப்ரியைப்பற்றிய ஒரு வாக்கியம் – அங்கே அவர் தன் துப்பாக்கியால் சுட்டதுதான்அவர் கொல்லப்படக் காரணம் என்ற வாக்கியம்.

பெரும்பாலும், வியாபார சம்பந்தமான வழக்குகள் அனைத்தும் கல்கத்தா கோர்ட்களில் போடப்படும். உலகின் மிக நேர்மையான கோர்ட்கள் உள்ள நகரம் அது என்பதால். கடந்த 25 ஆண்டுகளாக, பெரும் நிறுவனங்களில், நான் கண்ட வழக்குகள் பலவும், எந்த நீதிபதி, எந்தக் கோர்ட், எவ்வளவு வழக்கறிஞர் ஃபீஸ் என்றுதான் பேசப்பட்டிருக்கின்றன.

மிகச் சமீபத்தில், நான் பணிபுரிந்த நிறுவனத்துக்கு எதிராக ஒரு தீர்ப்பு ஒரு கீழ்க்கோர்ட்டில் கொடுக்கப்பட்டது. எங்களுக்கு ஒரே ஆச்சரியம் – ஏனெனில், எங்களுக்கு ஒரு நோட்டிஸ் கூட இல்லை. பின் விசாரித்த போது தெரிந்தது, நோட்டிஸ் அனுப்பப்பட்டதாக கோர்ட்டில் தகவ்ல் இருந்தது, ஆனால், எங்களுக்கு வந்து சேரவில்லை – தீர்ப்பின் நகல் வந்த அடுத்த நாள் நோட்டிஸ் வந்தது. பின்னர் என்ன செய்வது என்று யோசித்த போது, உடனே ஹை கோர்ட் செல்ல வேண்டும் எனச் சொல்லப்பட்டது. அங்கே வழக்கறிஞர் பீஸ் 3 லட்சம் – அதற்கான தொகை செக்காகவும், ரசீதுடனும் தரப்பட்டது. ஆனால், அத்தொகையில் ஒரு பங்கு எங்கு சென்றது என்று அனைவருக்கும் தெரியும்.

நீதிமன்ற விவகாரங்களில், கீழ் மட்டத்தில் ஊழல் மலிந்திருப்பது சாபக்கேடு – தனிப்பட்ட முறையில் பெரும் நீதிபதிகளைக் கேளுங்கள் சொல்வார்கள்.

no one killed jessica என, ஜெஸ்ஸிகா கொலைவழக்கில் தீர்ப்பு வந்த நாளன்று டைம்ஸ் தலைப்புச் செய்தி வெளியிட்டது. No one could prove income beyond means எனத் தீர்ப்பு வரும் நன்னாளை எதிர்நோக்கியிருக்கிறேன்.

மிக அற்புதமான முற்போக்கான தீர்ப்புகளை, நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மெஜாரிட்டியா மைனாரிட்டியா என்பதே கேள்வி.

ஒரு தீர்ப்பு வந்தவுடன், அதன் சரி / தவறுகளைப் பேசுவதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன். மற்ற விவாதங்கள் எல்லாமே பாவனையாக இருக்கலாம்.

பாலா

 

 

 

 

அன்புள்ள பாலா,

வழக்கம்போல ‘நான் சொல்லவந்தது அது இல்ல’ என்ற கட்டுரையை எழுத வாய்ப்பளித்தமைக்காக வழக்கம்போல நன்றி

நான் சொல்ல வந்தது இதுதான். “சமூக அறம் சார்ந்த, அடிப்படை உரிமை சார்ந்த விஷயங்களில் இந்திய நீதிமன்றங்கள் மிகப்பெரும்பாலும் முற்போக்கான தீர்ப்புகளையே வழங்கியிருக்கின்றன. விதிவிலக்குகள் மிகக்குறைவு”

என் வரிகள் இவை

இத்தகைய அடிப்படை விஷயங்களில் இறுதித் தீர்ப்புகள் எப்போதுமே முற்போக்கானவையாகவே உள்ளன – விதிவிலக்கு மிக அபூர்வம். சூழியல் சார்ந்து, மானுட உரிமைகள் சார்ந்து, அடிப்படை உரிமைகள் சார்ந்து சமரசமில்லாத ஒரு நிலைபாட்டையே எப்போதும் நீதிபதிகள் கொண்டிருக்கிறார்கள்

நீங்கள் அதை இப்படி விளக்கிக்கொள்கிறீர்கள். “இந்திய நீதிமன்றங்களில் பெரும்பாலும் சரியாகவே நீதி வழங்கப்படுகிறது. விதிவிலக்குகள் மிகக்குறைவு”. நீங்கள் சொல்லியிருக்கும் பதில் முழுக்க உங்கள் புரிதலுக்கு எதிராகச் சொல்லப்பட்டது. நான் சொன்னவற்றுக்கு எதிராக அல்ல..

உண்மையில் இந்த வேறுபாடு மிகமுக்கியமானது. அதைச்சுட்டிக்காட்டவே நான் எழுதினேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையும், வழிகாட்டுநெறியும் உண்மையிலேயே மகத்தானவை. ஓரு மானுட சாசனம் என்றே சொல்லத்தக்கவை. அது உருவான காலகட்டத்தில் அதற்கு நிகராக உலகில் மிகச்சிலவே இருந்தன.

பெரும் மானுடநேயமும், இலட்சியக்கனவும் கொண்ட வரிகள் அவை. மனஎழுச்சி இல்லாமல் அவற்றை என்னால் வாசிக்கமுடிந்ததில்லை. அவற்றை எழுதிய அம்பேத்கர், அவருடன் இணைந்து அரசியல்சாசன உருவாக்கத்தில் பணியாற்றிய பிறர் நம் தலைமுறையின் வணக்கத்திற்குரியவர்கள்

அடிப்படை விஷயங்களில் தீர்ப்புக்கள் வருகையில் பெரும்பாலும் நீதிபதிகள் அரசியல் சாசனத்தின் உள்ளக்கிடக்கையை கருத்தில் கொண்டே தீர்ப்பளிக்கிறார்கள். அதுதான் சாத்தியம், இல்லையேல் நிற்காது. ஆகவேதான் அவை முற்போக்கானவையாக இருக்கின்றன. விதிவிலக்குகள் மிகக்குறைவே.

உண்மையில் ஒரு சமூகத்தின் பொதுவான அறமனநிலையின் வெளிப்பாடாகவே நீதிமன்றமும் அமையும். ஆனால் இந்தியாவில் இந்திய மக்களின் பொது அறமனநிலையை விட நீதிமன்றத்தீர்ப்புகள் முற்போக்கானவை. சாதிப்பாகுபாடுகள். பெண்ணுரிமை, உழைப்பாளர் உரிமை போன்றவற்றில் தீர்ப்புகள் வந்தபின்னரே சமூகம் அவற்றைப்பற்றி விவாதித்து அவற்றை நோக்கி நகர்கிறது. இதை உணர நாளிதழ்களை வாசித்தாலே போதும். நான் சுட்டிக்காட்டியவை இவையே

இது நம் முன்னோர் நமக்கு வகுத்தளித்தது.நம் தேசக்கட்டமைப்பின் ஆதாரம். ஒருவகையில் இந்திய அரசியல்சட்டத்தை நம் மூதாதையர் அளித்த செல்வம் என்றே சொல்வேன். இன்றைய நீதிவழங்கல்முறை என்பது அதை நாம் பயன்படுத்தும் வழி. அதில் நம் சமூகத்தின் அத்தனை சீரழிவுகளும், சிறுமைகளும் வெளிப்படுகின்றன. நம்மைப்போலவே நாம் நீதிமன்றங்களையும் உருவாக்கி வைத்திருக்கிறோம். அதன்பின் நீதி இல்லை என்று குறைகூறுகிறோம்.

இந்தவேறுபாடு மிக முக்கியமானது. ஏனென்றால் இந்த வேறுபாட்டை உணராமல் நாம் எந்த சுயவிமர்சனமும் செய்ய முடியாது. ஊழல்மிக்க அரசை நாம் தான் தேர்வுசெய்கிறோம். அந்த அரசு ஊழல் நீதிபதிகளை நியமிக்கிறார்கள். நீதிபதிகள் நம்மிடமிருந்து வருபவர்கள். அவர்களை நாம் சூழ்ந்து நின்று கீழே இழுக்க முயன்றபடியே இருக்கிறோம். இருந்தும் இங்கே நீதி எஞ்சியிருக்கிறது. அரசியலில் ஊழலை நாம் அனுமதித்தால் நீதியில் எங்கே நேர்மை திகழமுடியும்? அரசியல் ஊழலுக்கு வக்காலத்து வாங்கும் ஒருவர் நீதிமன்றம் பற்றி என்ன கருத்து சொல்ல தகுதியானவர்?

அது நம்முடைய கீழ்மை. நமக்களிக்கப்பட்ட மிகப்பெரிய வாக்குதத்தத்தை நாம் சீரழித்ததன் சித்திரம் அது. அதை அறியாமல் நீதியமைப்பை குறைசொல்வது பெரும் அறியாமை. அது நம்மை மேலும் கீழிறக்குவது. பெரிய அறசீலர்கள் போல பேசுபவர்கள் அடிப்படையை சீரழிக்கிறார்கள்.

நீங்கள் அறிந்த அளவுக்கே எனக்கும் நீதிமன்றத்தில் நிகழும் ஊழல்கள், நெறியின்மைகள் பற்றித்தெரியும். அதையேகூட இருவகைகளாகவே பிரித்துப்பார்க்கவேண்டும். ஒன்று, ஒரு சமூகத்தின் இயல்பான அயோக்கியத்தனம் நீதிமன்றத்தில் வெளிப்படுவது. இங்கே நிகழ்வது அதுதான்.

நீதிமன்றம் ஒரு முறைகேட்டை, ஊழலைச் சுட்டிக்காட்டினால் நாம் கொதித்தெழுகிறோமா? அரசியல்வாதியோ வணிகரோ அதற்குக் கட்டுப்படவேண்டுமென இங்கே ஏதாவது சமூகநிர்ப்பந்தம் உள்ளதா?

நீதிமன்றங்கள் மேல் நம் சமூகச்சூழலில் இருந்து ஏதேனும் அறநிர்ப்பந்தம் உள்ளதா? ஊழலில் திளைத்து கையும் களவுமாக பிடிபட்டு தகுதியிழப்பு வரை சென்ற நீதிபதிகளுக்குக்கூட சாதிய அடிப்படையில். மொழி இன வட்டார அடிப்படையில் ஆதரவு கொடுக்கத்தானே நம் சிவில்சமூகம் முன்னின்றது? அது நீதியில் எதிரொலிக்கிறது, அவ்வளவுதான்.

அதேசமயம் இந்த நீதியமைப்பின் அடிப்படையிலேயே ஒரு பிழை உள்ளது. இதை என் நண்பர் மறைந்த சோதிப்பிரகாசம் அவர்கள் நான் நடத்திய மருதம் இணைய இதழில் விரிவாக முன்பு எழுதியிருக்கிறார். அவரைச் சார்ந்து என் புரிதலைச் சொல்கிறேன்

நம் நீதிமன்றமுறை என்பது குற்றம்சாட்டப்பட்டவர் குற்றம் சாட்டுபவர் இருதரப்பினரும் தங்கள் நியாயங்களை தங்கள் பிரதிநிதிகளான வழக்கறிஞர்கள் மூலம் முன்வைக்க, அவற்றை மட்டும் கருத்தில்கொண்டு ஒரு நடுவர் தீர்ப்பளிக்கும் வழிமுறை கொண்டது. ஒரு கிராமப்பஞ்சாயத்தில் தீர்ப்பளிப்பவர் அந்த சூழலுக்குள் இருக்கிறார். அவருக்கும் அவ்வழக்கு தெரிந்திருக்கும். நம் நீதிமன்றத்தில் நீதிபதி அன்னியர். அவர் அறிந்தது அங்கே வரும் வாதங்கள் மட்டுமே. அதைமட்டும் கொண்டே அவர் நீதி வழங்கியாகவேண்டும்.

அந்நிலையில் மிகச்சிறந்த முறையில் வாதிடக்கூடியவரின் கை ஓங்குகிறது. அவ்வாறு வாதிடும் திறமைகொண்ட வழக்கறிஞர் அதிக பணம் பெறுபவர் ஆகிறார். ஆகவே அதிகப்பணம் கொடுப்பவர் சிறந்த வாதத்தை பெறுகிறார். ஆகவே நீதி இயல்பாகவே அதிகப்பணம் உடையவரை நோக்கிச் செல்கிறது. நீதிபதியே நினைத்தால்கூட அதைத் தவிர்க்கமுடியாது.

இது இவ்வமைப்பிலேயே உள்ள பிழை.இதைத்தடுக்க குற்றம்சாட்டும் அரசுத்தரப்பில் மிகச்சிறந்த பொதுவழக்கறிஞரை நியமிப்பது, குற்றம்சாட்டப்பட்டவருக்கு வழக்குக்கு நிதியுதவிசெய்வது போன்ற வழிமுறைகள் உலகமெங்கும் உள்ளன. இருந்தாலும் இந்த சமமின்மை ஓர் உண்மை. ஆகவே இங்கே ஏழைகளும் சமூகமையப்போக்குக்கு அன்னியர்களும் பாதிக்கப்படுபவர்களே.

நீதிபதி அன்னியர் என்பதற்கான ஒரு சான்றைச் சொல்கிறேன். என் நண்பர் ஆஜரான வழக்கு இது. குற்றவாளி தன் எதிரியின் முந்நூறுசெவ்வாழைகளை வெட்டித்தள்ளிவிட்டார். வழக்கு விசாரணையில் குற்றவாளியின் வழக்கறிஞர் சான்றாக எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் காட்டி இவ்வாறு வாதிட்டார்.

“வாழைகள் வெட்டப்பட்டது நள்ளிரவு பன்னிரண்டுமணிக்கு மேல் என்கிறார்கள்.. காலையில் அதை குற்றம்சாட்டுபவர் பார்ததாகவும், போலீஸ் எட்டுமணிக்கு. வந்து அதைப் புகைப்படம் எடுத்ததாகவும் சொல்கிறார்கள். ஆனால் வாழையின் நடுவே இலைக்குருத்துச் சுருள் நாலு இஞ்சு உயரத்துக்கு வளர்ந்துள்ளது. எட்டுமணிநேரத்தில் அப்படி வளரமுடியாது. ஆகவே அந்த புகைப்படச்சான்று பொய்யானது. செல்லாது”

நீதிபதி அதை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்தார். நான் அதைக்கேட்டபோது அதிர்ந்து போனேன். ‘வாழையின் இலை மூன்றே நாளில் முழுமையாக வெளிவருவது. ஒருநாளில் அது ஒருசாணுக்குமேல் வளரும். இதுகூடத்தெரியாதா?” என்றேன். உண்மையில் அந்த வழக்கறிஞருக்கு அது தெரியவில்லை. நீதிபதிக்கோ எதிர்வழக்கறிஞருக்கோ நீதிமன்றத்தில் இருந்த பிறருக்கோ தெரியவில்லை. அங்கே நின்ற குற்றவாளிக்கும் குற்றம்சாட்டியவருக்கும் இவர்கள் பேசுவது புரியவில்லை.

நீதிபதி சூழலுக்கு அன்னியர் என்பதன் குறையைப்போக்கவே அமெரிக்கா போன்ற நாடுகளில் ஜூரி முறை உள்ளது. அச்சூழலில் இருந்தே ஒரு குழு உருவாக்கப்ப்ட்டு அவர்கள் தீர்ப்பை முடிவுசெய்வார்கள். ஆனால் அது இந்தியா போல சாதி, மத, மொழிப் பிரிவினைகள் நிறைந்த நாட்டுக்கு உகந்ததல்ல என்பதனால்தான் நம் அரசியலமைப்புச்சட்டத்தால் தவிர்க்கப்பட்டது,

இன்னொன்று, புறவயத்தன்மை என்பதன் எல்லை. புறவயமாக ஐயத்திற்கிடமில்லாது நிரூபிக்கப்படும் குற்றமே இந்த நீதியமைப்பில் குற்றம் எனப்படுகிறது. கணிசமான குற்றங்கள் புறவயமாக நிரூபிக்கப்பட முடியாதவை.

கடைசியாக, நீதிமுறையில் உள்ள தாமதம். சோதிப்பிரகாசம் எழுதிய கட்டுரையில் இங்கிலாந்து போன்ற மக்கள்தொகை குறைவான சிறிய நாட்டின் நீதிமுறை இங்கே அப்படியே நகல் செய்யப்பட்டதன் சிக்கல் என்று அதைச் சொல்கிறார்.1861ல் முதலில் கல்கத்தாவில் உயர்நீதிமன்றம் அமைக்கப்பட்டபோது ஐந்தாண்டுகளுக்குள் நீதிமன்றமே செயலிழக்குமளவுக்கு வழக்குகள் வந்து குவிந்தன. வேறு வழியில்லாமல் பிரிட்டிஷார் வழக்கு தொடுக்கும் முறையை சிக்கலாக ஆக்கினார்கள். பலவகையான தடைகளை உருவாக்கினார்கள்.

இன்று குற்றவாளியின் தரப்புக்கு முடிந்தவரை காலஅவகாசம் அளிக்கப்படுகிறது. தீர்ப்பு வந்தபின் மீண்டும் மீண்டும் முறையீடு செய்ய நான்கு அடுக்கு நீதிமன்றங்கள் உள்ளன. ஆகவே இந்தியா போன்ற மாபெரும் தேசத்தில் நீதி மிகமிகத் தாமதமாகிறது., நடைமுறையில் மறுக்கப்பட்ட நீதியாகிறது.

ஆனால் அதற்கு வேறு என்ன மாற்று? இந்த வாய்ப்புகளை தவிர்த்தால் நீதியமைப்பு பலருக்கும் அநீதியை இழைப்பதாக ஆகக்கூடும்.இந்தமுறை செம்மையாக்கப்படவேண்டும்.

இவையெல்லாமே பேசப்படவேண்டியவை.உண்மையில் இந்த நீதிமுறையே இன்று உலக அளவில் இருப்பதில் சிறந்தது. இங்கிருந்த பஞ்சாயத்துக்கள் சாதிசார்ந்தவையாக, நவீன அறம் அற்றவையாக இருந்தன. ஆகவே. நாம் இதை ஐரோப்பாவிலிருந்து நகல் செய்துகொண்டோம்.. இதைவிடச் சிறந்த முறை வரும்வரை இதை என்ன செய்யலாம் என்பதே கேள்வி.

பொத்தாம் பொதுவாகச் சொல்லப்படும் ‘நீதிமன்றம் செத்துப்போச்சு’ ’ஜனநாயகமே தண்டம்’ போன்ற வரிகளுக்கு எதிரான பேச்சுக்களே இன்றைய அரட்டைச்சூழல்களுக்கு மிக அவசியமானவை. பிரச்சினைகளை பிரித்துப்பார்த்து பேசியாகவேண்டியிருக்கிறது. என் குரல் அதற்காகவே.ஒரு குடிமகனின் உணர்வு அது.

ஜெ

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஅயல் வாழ்க்கை – குறிப்பு