தல்ஸ்தோயின் முதல்முகம்

 

 

index

அன்புள்ள ஆசிரியருக்கு,

தங்களுடையநவீனத் தமிழிலக்கிய அறிமுகம்நூலில் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர்களின் பட்டியலில் வேற்று மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை வாசிக்க வேண்டும் என்று எழுந்த ஆர்வத்தில் முதலில் லியோ டால்ஸ்டாய் அவர்களைக் குறித்து வைத்திருந்தேன். எதிர்பாராவிதமாக நா.தர்மராஜன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்ட லியோ டால்ஸ்டாய் அவர்களின் குறுநாவல்கள் மற்றும் சிறுகதைகளின் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. வாசிக்க ஆரம்பித்த நாட்களிலிருந்து –  வாசித்து முடித்த நிமிடங்களிலிருந்தும் ஏதோவொரு மன அமைதி கிடைத்துக் கொண்டேயிருந்தது. அது முழுமையான மன அமைதி என்று என்னால் சொல்ல முடியவில்லை. வேண்டுமானால் குழப்பங்களினூடே எழுந்து வரும் அமைதி என்று சொல்லலாம். பலவிதமான மனித உணர்வுகள்நுட்பமான உள்ளுணர்வுகள்அப்படியப்படியே ஒரு பெண்ணின் ஒரு ஆணின் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் மாறிக் கொண்டேயிருக்கும் சிந்தனைப் பதிவுகள் இவற்றில் படிக்க ஆரம்பித்த நாளிலேயே மூழ்கிப்போன என்னால் இப்போதும் எழ முடியவில்லை.

இத்தொகுப்பில்குடும்ப மகிழ்ச்சிஎனும் குறுநாவலை வாசித்தபோது, ஒருவேளை டால்ஸ்டாய் அவர்கள் என் மனதிற்குள்ளும் என் கணவரின் மனதிற்குள்ளும் ஊடுருவிப் புகுந்து இருவரின் மனதிலும் ஓடுவதைநினைப்பதைபதினைந்து வருடங்களாகசரியாகச் சொல்ல வேண்டுமென்றால்திருமணத்திற்கு முன் ஒரு வருடம்  – திருமணத்திற்குப் பின் பதினான்கு வருடங்கள் நினைத்தவைஅப்படியே பதிவு செய்துகொண்டு இந்த நாவலை எழுதியிருப்பாரோ என்ற சந்தேகமும் ஏற்பட்டது. கடந்தகால வாழ்க்கையையும் நிகழ்கால வாழ்வையும் ஒருவர் சரியாகச் சொல்லிவிட்டால் நம் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று அவரிடமே கேட்பதுதானே மனித இயல்பு. “குடும்ப மகிழ்ச்சியில் என் குடும்ப மகிழ்ச்சிக்காக என் எதிர்காலத்தை எப்படி வடிவமைத்துக் கொள்வேன் என ஆருடம் பார்த்துக் கொண்டேன். என் எதிர்கால வாழ்க்கையை ஒளிமயமாக்கிய இந்நாவலாசிரியரை நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.

அடுத்ததாக வாசித்தகஜக்கோல்”- இதை என்னால் ஒரு குதிரையைப் பற்றிய கதையாக சாதாரணமாக நினைத்து கடந்துபோக இயலவில்லை. அந்த காயடிக்கப்பட்ட குதிரை கம்பீரமாக இருந்த காலத்திலிருந்து கடைசி கட்டமாக தன் மரணத்தை அறிந்த வினாடிகளுக்கு அப்பாலும் கூட அமைதியாக இருந்து அனைத்தையும் ஏற்றுக்கொள்வதை எத்தனை தடவை முயற்சி செய்தாலும் என்னால் அமைதியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த கலப்பு நிறக்குதிரை அன்று நினைத்து ஆச்சரியப்பட்ட விஷயத்தில் இன்றுவரை எந்த குறையும் நிகழவில்லை. இன்னும் சொல்லப்போனால் அத்தகைய உணர்வுகள் எதிர்காலத்தில் இன்னும் வலுப்பது திண்ணம். எதைப்பற்றி சொல்கிறேனென்றால் அக்குதிரையைஅந்தத் தனிப்பட்ட –  உயிருள்ளஒரு காட்டுக்குதிரையைஇன்னொருவனிடமிருந்து விலைகொடுத்து வாங்கிஅதுவும் அக்குதிரை என்னுடையதுஅந்த மிகப்பெரும் பந்தயத்தில் வெற்றி பெற்ற குதிரை என்னுடையது என்று சொல்லி அதனால் மற்றவர் முன்னிலையில் கிடைக்கப்பெறும் பெருமைக்காகவும் அதனால் தன் மனம் அடையும் மகிழ்ச்சிக்காகவுமே வாங்கிகுதிரை நினைத்ததைப்போல இது என்னுடைய பூமி, என்னுடைய காற்று, என்னுடைய தண்ணீர்என்று சொல்லக்கூடிய காலம் வந்துவிட்டதுதான்அதனைத் தன் சொந்தமாக்கி சந்தோஷப்பட்ட    – எவ்வளவுக்கெவ்வளவு அதிக எண்ணிக்கையுள்ள பிராணிகளையும் நிலம், மக்கள் அனைத்தையும் என்னுடையது என்று உரிமையாக்கிக் கொள்வதால் கிடைக்கும் பெருமையையும் சந்தோஷத்தையுமே பெரிய வெற்றியென கொண்டாடும் மனிதர்களை முன்னுதாரணமாகக் கொண்ட –  அந்தக் குதிரையின் உரிமையாளனாகிய அப்பெருநிலப்பிரபுவின் அர்த்தமற்ற அச்சந்தோஷ மனநிலையைப் பற்றித்தான் சொல்கிறேன்.

இளமையில் துள்ளலுடனும் உயர்ந்த குதிரையாகவும் அதன் உரிமையாளனுக்கு மகிழ்ச்சியை அளித்த அந்தகஜக்கோல்இறந்தபிறகும் தன்னைத் தன் தலைமுதல் குளம்புகள் வரை ஓநாய்கள், காக்கைகள் பருந்துகள் என ஜீவராசிகளுக்கு உணவாகப் படைத்துவிட்டு நிறைவாகச் செல்கிறது. ஆனால் கடைசியாக கஜக்கோலை பணம் கொடுத்து வாங்கியசாப்பிடுவதும் குடிப்பதுமாக இருந்த ஸெர்புஹவ்ஸ்கோயின் பிரேதம் பூமியில் புதைக்கப்பட்டது. அவருடைய தோல், தசை மற்றும் எலும்புகளினால் யாருக்கும் பயனில்லை. அந்தப் பிரேதம் பூமியில் நடந்துகொண்டிருந்த காலத்தில் இருபது வருடங்கள் சுமையாக இருந்ததைப் போல அந்தப் பிரேதத்தை பூமியில் புதைப்பதும் அந்தக் கடமையைச் செய்ய வேண்டியவர்களுக்குப் பெருந்தொல்லையாகவே இருந்தது. நெடுங்காலமாகவே அவரால் யாருக்கும் உபயோகமில்லை. அவர்கள் அவரை ஒரு தொந்தரவாக மட்டுமே கருதினார்கள். ஆனால் அவருடைய வீங்கிப்போன, அழுகிக் கொண்டிருந்த உடலுக்கு அழகான உடையும் நல்ல பூட்சுகளும் அணிவித்து நான்கு மூலைகளிலும் புதிய குஞ்சங்கள் கட்டப்பட்ட அழகான சவப்பெட்டியில் அதை வைத்து இந்த சவப்பெட்டியை ஈயத்தால் செய்யப்பட்ட மற்ற சவப்பெட்டிக்குள் வைத்து மாஸ்கோவுக்குக் கொண்டு போவது அவசியமென்று செத்துப் போனவர்களைப் புதைக்கின்ற செத்தவர்கள் கருதினார்கள். புது உடையும் பளபளப்பான பூட்சுகளும் அணிந்து கொண்டிருந்த அந்த அழுகிப்போன புழுக்கள் நிறைந்த உடலை பூமியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் புதைக்க வேண்டும் என்பதற்காக அதற்கு முன்னால் புதைக்கப்பட்ட மற்ற மனிதர்களுடைய எலும்புகள் தோண்டியெடுக்கப்பட்டன“- இவ்வரிகளைப் படித்துக்கொண்டிருக்கும்பொழுதே எனக்குள் ஒரு ஏக்கம் தோன்றியது. ஒவ்வொரு ஊரிலும் எல்லையில் சுடுகாடு அல்லது கல்லறையை அமைத்திருப்பதற்குப் பதிலாக பாதுகாப்பான காடுகளை வளர்த்து அமைத்திருந்தால் உயிரோடு இருக்கும்போது ஒரு பிரயோசனமும் இல்லாமல் இறப்பவர்கள் இறந்தபிறகாவது அந்தக் காட்டில் பாதுகாக்கப்படும் விலங்குகள், பறவைகளுக்கு உணவாகி அவர்களின் உள்ளத்தில் வந்து தங்கிய ஆன்மாவிற்கு ஒரு சிறு நிறைவையாவது தந்திருக்கலாமே என்ற ஏக்கம்தான். ஏனெனில் நல்லபடியாக அடுத்தவருக்கு பிரயோஜனமாக வாழ்பவர்கள்தான் அவர்கள் இறந்தபிறகு தங்கள் உடலுறுப்புகளை சகமனிதருக்கு தானம் அளிக்கச்சொல்லிவிடுவார்களே. ஆதலால் அவர்களைப் பற்றிக் கவலையில்லை.

அடுத்ததாக வாசித்தஇவான் இலியீச்சின் மரணம்மற்றும்கிரேய்ஸர் சொனாட்டாஇரண்டிலும் ஒரு ஒற்றுமை தென்பட்டது. அதாவது இரண்டிலும் வரும் கதாநாயகர்கள் தும்பைவிட்டு வாலைப் பிடிப்பவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். நாம் எதை மற்றவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோமோ அதை மற்றவர்களுக்கு நாம் அளிக்க வேண்டும்வாங்கப்படாமல் எதுவும் திருப்பித் தரப்படுவதில்லைஎன்பதைக் கற்பிப்பதைப் போல இவான் இலியீச்சின் மரணம் இருந்தது.

கிரேய்ஸர் சொனாட்டாசந்தேகமும் பொறாமையும் ஒரு குடும்பத்தை எப்படி சீர்குலைக்கிறது என்பதற்கு நல்ல உதாரணம். அதன் கதாநாயகன் போஸ்த்நிஷெவ் நல்ல மனநிலையில் இருக்கும்போது தன் ஐந்து குழந்தைகளின் உடல்நிலைக்கும் உயிருக்கும் மாறிமாறி ஆபத்து நேரும்போதெல்லாம் உள்ளம் துடிதுடித்துப்போகும் மனைவியைப் பார்த்து – “குஞ்சு செத்துப்போனால் அது ஏன் செத்தது, எங்கே போய்விட்டது என்று கோழி தன்னைக் கேட்டுக் கொள்வதில்லை. சற்றுநேரம் கிளக், கிளக் என்று சத்தம் போடுகிறது, பிறகு தன்னைச் சமாளித்துக் கொண்டு பழைய மாதிரி வாழ்க்கையை நடத்துகிறது. குழந்தைகளைக் கொடுப்பதும் காப்பதும் எடுத்துக் கொள்வதும் நம் கையில் இல்லை. அனைத்தும் கடவுள் சித்தம்“- என்பதுகூட புரியாதவளாக இருக்கிறாளே என்று நிதானமாக சிந்திக்கிறான். ஆனால் இந்த நிதானம் அவன் மனைவியைக் கொல்லும்போது இல்லை. வாளைச் சொருகிய அடுத்த கணம் வாளைச் சொருகிய கணத்திற்கு முந்தைய கணம் திரும்பி வாராதா என ஒரு கணம் திகைக்கும்போதுஅவள் சாகும்தறுவாயில் அவளையும் ஐந்து பிள்ளைகளையும் மாறிமாறிப் பார்க்கும்போதுதகிக்கும் வெயிலில் வாடும் ஒருவன் குளிரும் நிழலுக்காக ஏஙகித் தவிப்பதைப் போலகொலைத் தொழில் புரிந்தபிறகு இனி அவ்வுயிரைக் காக்க ஏதும் செய்வதறியாமல் மனம்பிசகி நிற்கும்போதுபடைக்கும் தொழிலையும் படைத்ததில் சிறந்தவற்றை  சீரும் சிறப்புமாகக் காக்கும் தொழிலையும் புரிந்துவரும் இயற்கையின் பெருங்கருணை என் கண்முன்னே விரிந்தது.

லியோ டால்ஸ்டாய் அவர்களை தங்கள் நூல்மூலம் எனக்கு அறிமுகப்படுத்தி எவ்வித வாழ்க்கைச் சிக்கல்களையும் சரிசெய்யும் வழி நம் மனதிலேயே உள்ளது என நிதானமாக சிந்திக்க  உதவிய தங்களுக்கும் இதே மனமொத்த சிந்தனையுடன் இலக்கிய ஆர்வத்தை மேலும் தூண்டும் விதமாக இந்நூலைக் கொணர்ந்து வந்து கொடுத்து என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள உதவிய தங்கள் தீவிர வாசகராகிய என் நண்பன் சுரேஷையும் இன்று மனதார நினைத்து நன்றி கூறிக்கொள்கிறேன்.

அன்புடன்

கிறிஸ்டி.

 

முந்தைய கட்டுரைதெளிவத்தை ஜோசப்பின் குடைநிழல் – மதிப்புரை
அடுத்த கட்டுரைவரலாற்றில் இருந்து எதைக்கற்றுக்கொண்டோம்?