பனை இந்தியா! – ஒரு மகத்தான பயணம்

 

11

என் நண்பரும் கிறித்தவப்போதகருமான காட்சன் மேற்கொண்ட ஒரு பயணம் பற்றி அவர் எனக்கு எழுதியிருந்தார்

 

அண்ணன்!

கடந்த மே 16 முதல் ஜூன் 2 வரை எனது இரு சக்கர வாகனத்தில் மும்பையிலிருந்து நாகர்கோவில் வரை பனை மர வேட்கைப் பயணம் ஒன்றை நிகழ்த்தினேன். உங்களில் பெற்றுக்கொண்ட ஒளியால் அப்பயண அனுபவங்களை தொடராக்க முயற்சிக்கிறேன். சில பிழைகள் இருந்தாலும் எழுதவேண்டும் என்ற உந்துதலால் விடாமல் எழுதுகிறேன். இன்று 25 அத்தியாயத்தை முடித்த பின்பே உங்களிடம் சொல்லும் துணிவு வந்தது. உங்கள் மேலான கருத்துக்களையும்  வழிகாட்டுதலையும் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.

 

காட்சன்

1

 

முக்கியமான பயணக்குறிப்புகள். காட்சனை எனக்கு ஏழாண்டுகளாகத் தெரியும். காட்சன் பனைமரம் குறித்த ஆர்வம் கொண்டவர். நெடுங்காலமாக பனைத்தொழிலாளர் நடுவே தன்னார்வலராகப் பணியாற்றியவர். பனையோலைகளைக்கொண்டு அழகிய கைவினைப்பொருட்களைச் செய்யக் கற்றவர். பனைஅவருக்கு ஏதோ ஒருவகையில் கிறிஸ்துவுக்கு அணுக்கமானது. அவரது கிறிஸ்துமஸ் உரைகளில் பனை பலவகைகளில் குறியீட்டுத்தன்மை அடைந்து வெளிவந்துகொண்டே இருக்கும்

தமிழில் ஏதேனும் ஒருவகை எழுத்து முற்றிலும் அரிதாக உள்ளது என்றால் காட்சன் எழுதியிருப்பதுபோன்ற இவ்வகை பயணக்கட்டுரைகள்தான். ஒருவகையில் இது ஓர் ஆன்மிகப் பயணம்.வெறுமே வேடிக்கைபார்ப்பதற்காகச் சென்று போகிறபோக்கில் கண்ணில் பட்டவற்றை எழுதுவது அல்ல இது. இந்தியப்பெருநிலத்தின் வழியாக அவர் பெரும் வேட்கையுடன் சென்றுகொண்டிருக்கிறார். ஒவ்வொரு கணமும் தன்னையும் நிலத்தையும் அனைத்தையும் கடந்த ஒன்றையும் கண்டுகொண்டிருக்கிறார்

மறுபக்கம் இந்தியாவின் நாமறியாத ஒரு தளம் பற்றிய மிக விரிவான சித்தரிப்பு இந்தப்பயணக்கட்டுரையில் உள்ளது. இதிலுள்ள சாகசத்தன்மை நம்மை பேரார்வத்துடன் வாசிக்கவைக்கிறது. மிகச்சிறந்த இலக்கியவாசகரான காட்சனின் மொழி தமிழின் முக்கியமான புனைவெழுத்தாளர்களுக்கு நிகராக எழுகிறது

சமீபத்தில் நான் முழுகையாக ஈடுபட்டு வாசித்தது இக்கட்டுரைத்தொடரைத்தான். எனக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களில் மிகமிகச்சிலரது எழுத்தே என்னை பொறாமைகொள்ளச்செய்துள்ளது. இது அத்தகைய எழுத்து.

இக்கட்டுரைத்தொடர் நூலாக வெளிவரவேண்டும். தி.ஜானகிராமனின்  ‘நடந்தாய் வாழி காவேரி’ சிட்டி-சிவபாதசுந்தரத்தின் ‘கௌதமபுத்தரின் அடிச்சுவட்டில்’ போன்ற நூல்களுக்கு நிகரானது இது.

தம்பி காட்சனுக்கு என் அன்பு.

 

முந்தைய கட்டுரைவரலாற்றில் இருந்து எதைக்கற்றுக்கொண்டோம்?
அடுத்த கட்டுரைவெய்யோன் செம்பதிப்பு முன்பதிவு