மீண்டும் நாகர்கோயில்…

IMG_6945[1]

 

இன்று, ஜூலை ஆறாம் தேதி மாலை எட்டு மணிக்கு திருவனந்தபுரம் வந்தோம். முந்தையநாள், ஐந்தாம் தேதி இரவு தொடங்கிய பயணம். அபுதாபி விமானநிலையத்தில் ஏழுமணிநேரம் காத்திருப்பு. திருவனந்தபுரம் விமானநிலையத்திற்கு அரங்கசாமி வந்திருந்தார். நள்ளிரவு 1130 மணிக்கு நாகர்கோயிலை வந்தடைந்தோம்

சென்ற மே 19 ஆம் தேதி நான் வீட்டைவிட்டுக் கிளம்பியது. சினிமா வேலைகள். அப்படியே ஸ்பிடி சமவெளி. திரும்ப வந்தது ஒன்பதாம் தேதி. பத்தாம்தேதி லண்டனுக்குக் கிளம்பிவிட்டேன். இருபத்தைந்து நாட்களுக்குப்பின் மீண்டும் நாகர்கோயில். கிட்டத்தட்ட இரண்டுமாதம் கழித்து நாகர்கோயிலின் ஈரமான நிலத்தையும், பளபளக்கும் இலைத்தழைப்பையும் ,கருமுகில் படர்ந்த குளிர்ந்த வானத்தையும், வேளிமலையின் நீலத்தையும் பார்க்கப்போகிறேன்.

இதுவரை நான் மேற்கொண்ட பயணங்களில் இப்பயணம் மாறுபட்டது. நான் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, அரபுநாடுகள் என இதுவரை சென்ற நாடுகள் அனைத்துமே ஒப்புநோக்க புதிய காலகட்டத்தின் உருவாக்கங்கள். இந்தோனேசியா விதிவிலக்கு. நமீபியா காலம் கடந்தது. ஆனால் ஐரோப்பா தொன்மையானது. இந்தியாவைப்போலவே பற்பல வரலாற்று அடுக்குகளால் ஆன மண்.

2000த்தில் நான் முதல் வெளிநாட்டுப்பயணத்தை மேற்கொண்டேன். அ.முத்துலிங்கம் அவர்களின் அழைப்பின் பேரில் கனடாவுக்குச் சென்றேன். என் வாழ்க்கையில் முக்கியமான தருணம் அது. நான் ஒரு வெளிநாட்டுக்குச் செல்வேன் என அப்போது எவ்வகையிலும் எண்ணியிருந்ததில்லை. அப்பயணம் என் மனநிலையில் ,வாழ்க்கைநோக்கில் பெரும் மாறுதல்களை உருவாக்கியது. உண்மையில் நான் புறவயமாக உலகைநோக்கி என்னைத் திறந்துகொண்டேன் என்று சொல்லலாம்

அன்றெல்லாம் வெளிநாட்டுப்பயணம் அவ்வளவு எளிதல்ல. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தைச்சேர்ந்த எனக்கு. தக்கலையில் தொலைபேசித்துறையின் எளியவேலை. கூடவே ஊதியமில்லா எழுத்துப்பணி. அதிகமும் சிற்றிதழ்ச்சூழலில் அறியப்பட்டிருந்தேன். ஆகவே என் எல்லைகளை மிகக்குறுகலாகவே வகுத்துக்கொண்டிருந்தேன். என் பொருளியல்நிலை மிகமிகக் குறுகியது. ஏனென்றால் மிகச்சிக்கனமாக, எந்தவிதமான பணப்பிரச்சினையும் இல்லாமல் வாழ்வதே என் வழியாக இருந்தது

தொண்ணூற்றொன்றில் ஒரு டேப் ரிக்கார்டர் வாங்கி பாட்டு கேட்பது பெரிய கனவாக இருந்தது. இரண்டாண்டுகள் ஆயின அதை வாங்கி இசையுலகுக்குள் நுழைய. அது வந்ததும் தேடித்தேடி மகாராஜபுரம் சந்தானம் பாடிய ஒலிநாடாக்களை வாங்கிய பரவசத்தை நினைவுகூர்கிறேன். 1998ல்  எங்கும். வண்ணத்தொலைக்காட்சி வந்தபின்னரும் ஒரு சிறிய கறுப்புவெள்ளை தொலைக்காட்சி வாங்கவே என் பொருளியல்நிலை அனுமதித்தது. அதுவும் ஒரு கொண்டாட்டமாகவே இருந்தது.

தருமபுரியில் இருக்கையில் அஜிதனும் சைதன்யாவும் பிறந்தனர். 1996 டிசம்பரில் சைதன்யா பிறந்தாள். கைக்குழந்தையாக அவளைத் தூக்கிக்கொண்டு 1997ல் பத்மநாபபுரம் வந்தது இன்னொரு இனிய மாற்றம். என் நினைவுகளில் வாழ்ந்த தொல்நகரம். விரிந்த கம்பீரமான தெருக்கள். ஒளிவிடும் குளங்கள். வாழைத்தோப்புகளின் பசுமை. வேளிமலையின் பேரமைதி. அது என் வாழ்க்கையின் ஒரு பொற்காலம். விஷ்ணுபுரம் வெளிவந்தது. கன்யாகுமரி, பின்தொடரும் நிழலின் குரல் நாவலையும் எழுதினேன். வசந்தகுமார் என்னுடன் வந்து தங்கி அந்நூல்களை பிழைநோக்கினார்.

அப்போதுதான் வீடுகட்டும் எண்ணம் வந்தது. முன்னரே அண்ணா பார்வதிபுரத்தில் வாங்கிப்போட்ட இடம். சேறுசூழ்ந்த வயலாக இருந்தது வாங்கும்போது. அண்ணா அது மிகவேகமாக வளரும் இடம் என கணக்கிட்டார். உலகியலில் அவர் கணக்குகள் பொய்ப்பதில்லை. 1994ல் எனக்கு சன்ஸ்கிருதி சம்மான் விருதால் கிடைத்த பணத்தில் வாங்கிய அருண்மொழியின் நகைகளை விற்று அந்நிலத்தை வாங்கினேன். வீட்டை அண்ணாவே கட்டினார்

கடைசிக்கட்டத்தில் வழக்கம்போல உச்சகட்டக் கடன். பிடித்தங்கள் போக மாதம் ஆயிரம் ரூபாய்கூட கையில் வராத நிலை. ஆனால் என் நிலையை அறிந்த மலையாள மனோரமா இதழ் அவர்களே கூப்பிட்டு ஒரு தொடர் எழுதும்படி சொல்லி மாதம் இரண்டாயிரம் ரூபாய் வரும்படி பார்த்துக்கொண்டனர். ஆகவே நான் எந்த கஷ்டத்தையும் அறியவில்லை. புதிய இல்லம் மனதுக்கு மிக அணுக்கமானதாக இருந்தது. என் குழந்தைகளுக்கு இவ்வீட்டில் குடியேறிய காலம் மிக இனிய நினைவாக இன்றும் உள்ளது

2000த்தில் அமெரிக்க நண்பர்கள் காஞ்சனா தாமோதரன், பாலாஜி சீனிவாசன் உதவியால் கணிப்பொறி வாங்கினேன். அரவிந்தன் நீலகண்டன் என்னை கணிப்பொறியின் உலகுக்கு அறிமுகம் செய்தார். அது இன்னொரு இனிய கொண்டாட்டமாக இருந்தது. என் எழுத்தின் இன்னொரு காலகட்டம் தொடங்கியது. கட்டுரைகளை கணிப்பொறியில் எழுதத்தொடங்கினேன். முற்றிலும் கணிப்பொறியில் எழுதிய நாவல் கொற்றவை, இரண்டு வருடம் கழித்து.

2000த்தில்தான் அ.முத்துலிங்கத்தின் அழைப்பு. ஒன்றுக்குப்பின் ஒன்றாக இனியவை நிகழ திளைப்பில் இருந்தேன். பாஸ்போர்ட் எடுக்க கொஞ்சம் ஓடவேண்டியிருந்தது. எனக்கு அப்போது ரேஷன்கார்டு இல்லை. ஆகவே பாஸ்போர்ட் கிடைக்கவில்லை. நண்பர் சுதீர் செந்தில் உதவியால் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து பாஸ்போர்ட்டைப் பெற்றது கூட பெரிய வெற்றியாக இருந்தது.

அதன்பின் என் அலுவலக அனுமதிக்காக அலைந்தேன். யார்க் பல்கலைக்கழக அழைப்பு இருந்தமையால் சட்டபூர்வமாக பிரச்சினை இல்லை. ஆனாலும் சு.தியோடர் பாஸ்கரன் அவர்களின் சொல்லால்தான் அனுமதி கிடைத்தது. அதன்பின் விசா எடுக்க டெல்லி சென்றேன். அங்கே முதல் நேர்காணலில் விசா தரமுடியாது என ஒரு இந்தியப்பெண் சொல்லிவிட்டாள். என் வருமானம் குறைவு என்று காரணம் சொன்னாள்.

என் நண்பர் மு.கி.சந்தானம் அன்று அங்கே செய்தி ஒலிபரப்புத்துறையில் பணியாற்றினார். ஒரு சவாலாக அதை எடுத்துக்கொண்டு மறுநாளே மத்திய அரசின் வெளியுறவுத்துறைச் செயலரின் கடிதம் வாங்கிக்கொண்டு சென்று மீண்டும் விண்ணப்பித்து விசா பெற்றேன்.

தனியாக விமானமேறி கனடா சென்றது பதற்றமும் பரவசமும் கலந்த அனுபவமாக இன்றும் நினைவில் நீடிக்கிறது. அன்றுகண்ட ஒவ்வொரு முகமும், ஒவ்வொரு வேடிக்கையும் கனவுபோல துல்லியமான காட்சிகள். முத்துலிங்கத்தை நேரில் சந்தித்தேன். அவரது மாறா உற்சாகமும் தன்னம்பிக்கை மிக்க பேச்சும் அவ்விளமையில் எவ்வளவுபெரிய ஈர்ப்பை உருவாக்கின!

‘காலம்’ செல்வம், என்.கே.மகாலிங்கம், செல்வ கனகநாயகம், சுமதி ரூபன், திருமாவளவன், மாண்ட்ரியல் மைக்கேல் போன்ற பல நண்பர்கள். டிம் ஹார்ட்டன் ஓட்டலில் அமர்ந்து மணிக்கணக்காகச் செய்த இலக்கிய விவாதங்கள். ஒருகணம் மனம் பொங்கி இறந்த காலத்திற்கே பறந்து சென்றுவிட முடியுமா என ஏக்கம் எழுகிறது.

அடுத்த பயணம் சிங்கப்பூருக்கு, 2006ல். சித்ரா ரமேஷின் ஏற்பாட்டில் சிங்கப்பூர் தமிழ்ச்சங்க அழைப்பு. அருண்மொழியைக் கூட்டிச்சென்றேன். அவளுடைய முதல் வெளிநாட்டுப்பயணம். அவள் கொண்ட துள்ளலை இன்றும் புன்னகையுடன் நினைத்துக்கொள்கிறேன். சாதிசனம் முழுக்க தகவல்தெரிவிக்கப்பட்டது. பொறாமைப்படாதவர்களிடம் இன்னொரு முறை அழைத்துச்சொல்லப்பட்டது. அன்று சுப்ரமணியம் ரமேஷ் சிங்கப்பூரில் இருந்தார். எம்.கெ.குமார், பாண்டியன் போன்ற சிங்கப்பூர் நண்பர்கள் உடனிருந்தனர்

சிங்கப்பூரில் இருந்து மலேசியா சென்றோம். அங்கே டாக்டர் சண்முகசிவா எங்களை அழைத்திருந்தார். நவீன், மணிமொழி, சு.யுவராஜன், பாலமுருகன் சிவா பெரியண்ணன் போன்றவர்கள் அறிமுகமானார்கள். அருண்மொழி பறந்துகொண்டே இருந்தாள். பத்துக்குகைகளைப் பார்த்த பரவசத்தை அவள் இப்பயணத்திலும் சொல்லிக்கொண்டிருந்தாள்.

அடுத்தபயணம் ஆஸ்திரேலியா. உதயம் பத்திரிகையின் ஆசிரியரான நோயல் நடேசனின் அழைப்பு. அங்கே முருகபூபதியின் இல்லத்தில் தங்கினோம். மாலா,  கந்தராஜா, பொன் அநுர, ஆழியாள், ரகுநாதன் என ஒவ்வொரு நண்பர் இல்லமாக தங்கியபடி அந்தப்பெருநிலத்தைச் சுற்றிப்பார்த்தோம்.

2009ல் நான் அமெரிக்கா சென்றேன். அடுத்த பெரும்பயணம் அது. ஒருவேளை பெரும் தொழிலதிபர்களுக்கு மட்டுமே சாத்தியமானது. கிட்டத்தட்ட இரண்டுமாதம் முப்பதுக்கும் மேற்பட்ட ஊர்களில். முழுக்க முழுக்க திருமலைராஜனின் ஆர்வத்தால் நான் அழைக்கப்பட்டேன்.நண்பர்கள் செலவைப்பகிர்ந்துகொண்டார்கள்.

என்னை அழைக்க ஒருவருடக் காலமாகவே திருமலைராஜன் முயன்றார்.எனக்கு விசா பெற ஏதேனும் ஒரு சட்டபூர்வ அமைப்பின் அழைப்பு தேவை. ஃபெட்னா அமைப்பிடம் இருந்து அவர்களின் லெட்டர்பேடில் ஒரு வெறும் அழைப்பிதழைப் பெற ராஜன் ஒரு மாதகாலம் முயன்றார். செலவுகள் ஏதும் அவர்களுக்கில்லை. அவர்களின் அமைப்பில் நான் பேசவும் ஒப்புக்கொண்டார். ஆனால் நான் மலையாளி என்பதனால் அழைக்கமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். ஆகவே அன்று கிட்டத்தட்ட செயலற்றிருந்த பாரதி தமிழ்ச்சங்கம் என்னும் அமைப்பின் கடிதப்பக்கத்தில் எனக்கு அழைப்பு விடுக்க ராஜன் ஏற்பாடுசெய்தார்.

பாஸ்டன் பாலாஜி, சிறில் அலெக்ஸ், திருமலைராஜன் ஆகியோரின் கூட்டான முயற்சியால் நான் அமெரிக்கா சென்றேன். அங்கே எனக்கு கூட்டங்கள் ஏதும் வைக்கமுடியாது, தமிழ் அமைப்புக்கள் என்னை அழைக்க ஒத்துக்கொள்ளவில்லை என்று சிறில் முன்னரே வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால் அன்று என் இணையதளம் புகழ்பெற்றுவிட்டிருந்தது. பாஸ்டனில் நான் நண்பர்களை நண்பர் வேல்முருகன் இல்லத்தில் சந்திக்க விரும்புவதாக இணையதளத்தில் அறிவித்திருந்தேன். பாஸ்டனில் வழக்கமாக நடக்கும் எந்தக்கூட்டத்தையும் விட அதிகமாக வாசகர்கள் வந்திருந்தனர்.

ஆகவே செல்லும் ஊரிலெல்லாம் கூட்டம் நிகழ்த்த இணையதளம் வழியாகவே அறிவிப்பை வெளியிட்டோம். ஒவ்வொரு ஊரிலும் என் வாசகர்கள் கூடினர். திருமலைராஜன் ஃபெட்னாவை உடைக்க முயல்வதாக அதன் நிர்வாகிகள் சொல்லத்தொடங்கினர். நான் ஃபெட்னாவின் வழியாகவே கூட்டங்கள் நடத்தவேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள். நான் எப்போதும் எந்த அமைப்பும் சிதைவதை விரும்பாதவன். ஏனென்றால் அமைப்புகளை உருவாக்கி நடத்துவது மிகக்கடினம் என அறிந்துள்ளேன். ஆகவே என்று வாஷிங்டனில் ஒரே ஒரு ஃபெட்னா கூட்டத்தில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டேன்.

ஆனால் அக்கூட்டத்தை எனக்காக நடத்துவதாகத் தெரியக்கூடாது என அவர்கள் முடிவெடுத்து அன்று அங்கே பணிநிமித்தமாக இருந்த எஸ்.பி.உதயகுமாரை நிதியளித்து கௌரவிக்கும் கூட்டமாகவே நடத்தினர். நான் அதில் ‘கலந்துகொள்வதாக’ அறிவிக்கப்பட்டது. என் பேச்சையும் எவரும் செவிகொடுத்துக் கவனிக்கவில்லை. அபத்தமான கேள்விகளுக்குப்பின் சலித்து இனி எந்நிலையிலும் ஃபெட்னாவுடன் ஒத்துழைக்கப்போவதில்லை என முடிவெடுத்தேன்.

அந்த அமெரிக்கப்பயணமே என்னை ஒரு பேச்சாளனாக ஆக்கியது. நியூஜெர்சி கோ.ராஜாராம், துக்காராம், அல்பெனி ஓப்லா விஸ்வேஷ் என ஒவ்வொரு ஊரிலும் நண்பர்கள் அமைந்தனர். கலிபோர்னியாவில் ஆர்வி, அருணா வெங்கடாச்சலம், பக்ஸ் என்னும் பகவதிப்பெருமாள், சுந்தரேஷ் ஆகியோர் அணுக்கமானார்கள். என் வாழ்க்கையின் ஆன்மீகமான மறைபேரனுபவங்களில் ஒன்று மௌன்ட் சாஸ்தாவைப் பார்த்தது. அதை என்னால் இப்போது முழுதாக விளக்கமுடியாது. அதன் பொருட்டு திருமலைராஜனுக்கு வாழ்நாளெல்லாம் கடன்பட்டிருக்கிறேன்

திருமலைராஜனுடன் மோஜ்வே பாலைவனம் வழியாக நீண்ட பயணம் மேற்கொண்டேன். லாஸ்வேகாஸைப் பார்த்தேன். கிராண்ட் கேன்யனையும் கிரேட்டர் லேக்கையும் பார்த்தேன். அவை காலம் செல்லச்செல்ல கூரிய நினைவுகளாக ஆகிக்கொண்டிருக்கின்றன. ஆச்சரியம் என்னவென்றால் அவை வெண்முரசின் நிலவர்ணனைகளில்கூட இடம்பெற்றிருக்கின்றன.

சென்ற ஆண்டு மீண்டும் ஒருமுறை கனடா சென்றேன். மீண்டும் சென்றவருடம் அருண்மொழியுடன் கனடா பயணம். உஷா மதிவாணன் இல்லத்தில் தங்கியிருந்தோம். உஷா மதிவாணனின் அழகிய இல்லம் ஒரு நல்ல நினைவு. ஆனந்த் ரீங்கா இருவரும் மனதில் அஜிதன் சைதன்யாவின் இடத்தில் இருப்பவர்கள்.

சென்ற ஆண்டு மீண்டும் அமெரிக்காவை சுற்றிவந்தேன். அரவிந்த் கருணாகரன், பாஸ்டன் பாலா என பழைய நட்புகளின் மீட்சி. சிவா சக்திவேல், பழனி ஜோதி, மகேஸ்வரி, நிர்மல்,ராஜி, அரவிந்தன் கண்ணையன், கார்த்திக், பிரசன்னா, ராஜன் சோமசுந்தரம், சசிகலா, ஆஸ்டின் ராஜா, முருகன், நர்மதா என நண்பர்களின் நீண்ட பட்டியல். அவர்களின் முகங்களாகவே அப்பயணம் நினைவில் நிற்கிறது.

சுந்தரேஷின் மனைவி நித்யாவும் திருமலைராஜனும் அவர் மனைவி செல்வியும் பக்ஸும் அவர் மனைவி சித்ராவும் என ஏழுபேர் காரில் சென்று மீண்டும் மௌண்ட் சாஸ்தாவை கண்டோம். மீண்டும் அதே மறையனுபவம்.. முதலில் அடைந்தது ஒரு மனப்பிரமை அல்ல என்றே உறுதியாயிற்று. அது என்ன என்பது மேலும் மர்மம் ஆகியது

இந்நாட்களில் பயணம் சாதாரணமாக ஆகிவிட்டிருக்கிறது.. அனேகமாக எல்லாவருடமும் வெளிநாட்டுப்பயணங்கள். நண்பர் மாதவன் பிள்ளை ஆசிஃப் மீரான் ஜெயகாந்தன் முயற்சியால் வளைகுடா நாடுகளுக்குச் சென்றேன். சரவணன் விவேகானந்தனுடன் இந்தோனேசியா சென்றேன். நமீபியா சென்றேன். இப்போது பயணம் என்றால் ஒருவகை ஆழ்ந்த தியானநிலை. அதை மேலோட்டமான வேடிக்கையால் மறைத்துக்கொண்டிருப்பேன். காட்சிகள் உள்ளே கொட்டிக்கொண்டிருக்க அனுமதிப்பேன். மூளையை கூர்மையாக வைத்திருப்பதில்லை

நண்பர்கள் முத்துக்கிருஷ்ணன். கிரிதரன் ராஜகோபாலன், சிவா கிருஷ்ணமூர்த்தி, பிரபு, தனராஜ், சிறில் அலெக்ஸ், சதீஷ் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த பிரிட்டன் ஐரோப்பா பயணம். அவர்கள் மிகக்கச்சிதமாக பயண ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். அங்குள்ள அனைத்துப் பயணச்செலவுகளையும் அவர்களே பகிர்ந்துகொண்டார்கள். பயணத்தோழர்களாக உடன்வந்தனர். பேசிக்கொண்டே இருந்தோம். சிரித்துக்கொண்டு விவாதித்துக்கொண்டு கிட்டத்தட்ட ஒருமாதம்.

என் எல்லா பயணங்களும் என் நண்பர்கள் என்மீது காட்டிய அன்பினாலேயே சாத்தியமாயின. இப்பயணங்களை நான் சொந்தமாகச் செய்வதென்றால் நான் தொழிலதிபராகவோ, திரைநட்சத்திரமாகவோ, பட்டிமன்றப்பேச்சாளராகவோ இருக்கவேண்டும். பிறநாடுகளில் இலக்கியவாதிகளுக்கு இயல்பாக அமையும் இவ்வசதிகள் இங்கே நண்பர்களின் கருணையால் மட்டுமே சாத்தியமாகின்றன

இப்பயணங்கள் வழியாக நான் இந்த உலகை இன்னும் அகன்ற நோக்கில் புரிந்துகொண்டேன் என்று சொல்லலாம். ஒழுக்க நெறிகளுக்கு அப்பாற்பட்டு அறத்தை நோக்க, மனித இனத்தை ஒன்றாகப் பார்க்க, என் பிறப்பால் அமைந்த பல குறுகிய மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்ய கற்றேன். கூடவே என் நிலம் மீது பேரன்பையும் வளர்த்துக்கொண்டேன்.

இப்பயணத்தில் மீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டது கலிஃபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நண்பர்களை. அவர்கள் பலருக்கு சென்ற ஆண்டு நடந்த ஓர் அரசியல்பூசல் காரணமாக என் மேல் கடுமையான மனவருத்தம் இருக்கிறது. பலர் இன்று மானசீகமாக விலகிப்போய்விட்டிருக்கிறார்கள். அவர்களின் உளநிலை என்னவாக இருந்தாலும் நான் அவர்களை என் நெருக்கமான நண்பர்களாகவே இன்னமும் உணர்கிறேன். அது எப்போதும் அவ்வாறே இருக்கும். ஏனென்றால் அவர்களினூடாக நான் பெற்ற மகத்தான அனுபவங்களுடன் பின்னியுள்ளன அவர்களின் நினைவுகள்.

முந்தைய கட்டுரைபெருமாள் முருகன் தீர்ப்புக்குப்பின்…
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’