இயற்கை உணவு ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ!

நலமா, மீண்டும் ஒரு கடிதம் வாயிலாக உங்களுடன் அளவளாவ. கடிதம் எழுதும் அவா, அதை தாண்டிய பதற்றம், நண்பர்களும் படிப்பார்களே என்னும் ஒரு தயக்கம், இதையும் தாண்டி எதோ ஒன்று எழுத தூண்டுயது.

நீங்கள் பரிந்துரைத்த இயற்கை உணவிற்கு மாறலாம் என்று நானும் ஓரிரு மாதங்கள் முயற்சி செய்து பார்த்து விட்டேன். ஆம் விட்டு விட்டேன். :)

உங்களை போலவே பெரும் பாதிப்புகள் கொண்ட வயிறுடையோன் நான். அமீபா தொந்தரவுகள், அதை தாண்டிய அமில தொந்தரவுகள் என நானும் ஒரு 15 ஆண்டு காலம் ஆங்கில மருத்துவத் துணை கொண்டு வாழ்ந்து வருகிறேன். மிக சமீபத்தில் ஒரு தேர்ந்த சித்த மருத்துவ நிபுணரிடம் சிகிச்சைகள் பெற்று ஓரளவு குணமும் அடைந்து இருக்கிறேன். இதற்கிடையில் தங்களின் http://www.jeyamohan.in/?p=373 கட்டுரையைப் படித்து அன்றிரவே ஒரு முழு தேங்காயும் இரு வாழை பழங்களுமாக இரவு போஜனத்தை துவக்கினேன்.

அமில சுரப்பு அதிகமாகி அன்றிரவு தூக்கம் கைகூட வில்லை, மனைவியின் ஏச்சுக்கள் வேறு, அம்மா தனியாக ஒரு ஆலோசனை நேரம் நடத்தினார், எல்லாருக்கும் நான் புன்னைகையை பதிலாக்கினேன் கருமமே கண்ணாக. விடிவதற்குள் 4 முறை எழுவேன் பசி பொறுக்காமல், முதல் ஒரு வாரம் மிகச் சிரமமாக இருந்தது . எதை சாப்பிடுவது, எதை விடுவது… இரவு 7 மணிக்கே திட்டம் போட்டு உணவு அருந்த பழகினேன். ஓரிரு வாரத்தில், பழகி விட்டது. காலையில் நன்றாக பசிக்கும், காலையும் மாலையும் அன்றாட உணவு, இரவு மட்டும் பழங்கள், கேரட், குடை மிளகாய் (காப்சிகம்) , பேரீட்சை, முந்திரி, என வரிசை கட்டி அருந்தினேன்.

எனது மலச்சிக்கல் மட்டும் மேலும் சிக்கலாகியது, மற்றபடி, எனது உடல் நன்றாக இளைத்து,இலகுவானது. எனது மருத்துவ நண்பனிடம் இதை பற்றி கேட்க, அவர் கட்டாயமாக எனது சோதனை முயற்சியை முடிக்கச் சொன்னார். இரவில் வெறும் மாவுணவு (கார்போ ஹைட்ரேட்ஸ்) நிறைந்த பழங்கள், காய்கறிகள் மட்டும் அருந்துவது மிகவும் சிக்கலானது. உடம்பிற்கு தீங்கு தரும் என்று எனது சோதனை ஓட்டத்தை நிறுத்திவிட்டார்.

எல்லாருக்கும் சிக்கலை தவிர்த்த இயற்கை உணவு எனக்கு மட்டும் சிக்கலை தந்து ஏனோ தெரியவில்லை? இருப்பினும் சுவாச சம்பந்தமான பிரச்சனைகளை அது ஓரளவிற்கு கட்டு படுத்தியதும் உண்மை. இதை, என் அனுபவத்தை உங்களிடம் சொல்லிக் கொள்ள ஆசை, ஆகவே மின்னஞ்சல்.

அன்புடன்
சக்திவேல்

அன்புள்ள சக்திவேல்,

நான் மருத்துவனல்ல. மருத்துவ ஆலோசனைகளும் சொல்வதில்லை. நான் பேசுவது பெரும்பாலும் என் அனுபவங்களைப்பற்றி. நான் என் உடலைக் கூர்ந்து கவனித்து வருகிறேன். அவ்வகையில் சிலவற்றைச் சொல்கிறேன்.

என் நண்பர்கள் பலர் இப்போது இரவில் இயற்கை உணவு உண்பவர்களே. எனக்குத்தெரிந்து எவருக்குமே அமிலச்சுரப்பு அதிகரித்ததில்லை. எனக்கு தெரிந்து எடையும் பெரும் வீழ்ச்சி எதையும் அடைந்ததில்லை. எடைகுறையும். ஆனால் பெரிதாகக் குறையாது. பழங்களிலும் நிறைய கலோரி உண்டு

இயற்கை உணவு மலச்சிக்கலை முழுமையாகச் சரிசெய்யவேண்டும். அப்படிச்செய்யவில்லை என்பதும் உங்கள் பிரச்சினை வேறு என்பதையே காட்டுகிறது.

இயற்கை உணவு நிபுணர் எவரிடமாவதுதான் நீங்கள் ஆலோசிக்கவேண்டும். கோவை பகுதியில் பல நிலையங்கள் உள்ளன

ஜெ