சன்னதம்

1403558278218

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

உங்களை வாசித்து, வாசிக்கும் பழக்கத்தை ஒரு நிரந்தர பழக்கமாக்கிக் கொண்ட வாசகர்களில் நானும் ஒருவன். தங்களது உரைகளை youtube ல் பார்த்து வருகிறேன்.

சன்னதம் வருதல் பற்றி ஒரு கேள்வி.

நீங்கள் “நீலி” பற்றி குறிப்பிடுகையில் தங்கள் சிறுவயதில் சன்னதம் எழுந்த ஒரு அக்காவை பற்றி பேசினீர்கள். “அப்பொழுது நான் நீலியை பார்த்தேன்!”  என்று கூறினீர்கள்.

சன்னதம் வருதல், சாமி ஆடுதல் என்பது உண்மையா?

அங்கே உண்மையில் என்ன நடக்கிறது?

நான் இருவிதம் பாத்திருக்கிறேன்:

(இதில் வெளிப்படையாக சாமி வந்த பிரக்ஞையுடன், ஆட வேண்டும் என்பதற்காக ஆடுபவர்களை, குறி சொல்பவர்களை நான் ஆட்டத்தில் சேர்க்கவில்லை)

திருவிழா நேரங்களில் தீச்சட்டி எடுக்கும் பொழுதோ, சாமி வரும் பொழுதோ அந்த கூட்டத்தின் நெரிசலையும்,, தீயின் வெப்பத்தையும் மீறி அவர்கள் சிலிர்த்து ஆடுவார்கள். நான் பார்த்தவற்றில் பெரிய செய்திகள் ஏதும் அவர்கள் சொல்வதில்லை, பெருபாலும் அர்த்தமற்ற ஆவேசக்கூச்சலிட்டு அடங்கி விடுவது தான் வழக்கம்.அதை பார்க்கும் பொழுது மனமும் உடலும் சற்றும் பதைபதைக்கும்.

இரண்டாம் வகை, என் குலதெய்வக் கோயிலில் நிகழ்வது.

எங்கள் தெய்வம், சிறுமியின் அல்லது கணனியின் வடிவம் கொண்டவள். எல்லா தெய்வங்களை போல், அவளுக்கும் ஒரு வரலாறு அல்லது கதை ஒன்று சொல்லப்படுகிறது.

எங்கள் குலதெய்வ வழிபாட்டின் போது கட்டாயம் அங்கு இருக்கும் சிறுமிகளுள் யாரவது ஒருவருக்கு சன்னதம் வருவதுண்டு. அப்படி வருகையில் அவர்கள் பெரும்பாலும் கண்ணில் தாரை தரையாய் கண்ணீருடனும் உதட்டில் புன்னகையுடனே இருப்பார்கள். எதுவும் பேசமாட்டார்கள். நான் கவனித்த வரையில் கொட்டு சத்தம் கேட்டு தீபாராதனை காட்டும் பொழுது தான் இது நிகழும்.

எல்லாம் முடிந்த பிறகு அவளிடம் சென்று “என்ன பாப்பா, உனக்கு என்ன ஆச்சு அப்போ?” என்று கேட்டால் “தெரியல!” என்று தான் பதில் வரும். அவர்கள் பொய் சொல்வதாகவும் தெரியவில்லை.

இது உண்மைதானா? இதற்கு ஏதும் உளவியல் காரணங்கள் உண்டா? அல்லது இது ஒருவிதமான அமானுஷியம் தானா?

உங்கள் தளத்தில் தேடிப் பார்த்தேன், ஏதும் சிக்கவில்லை.

தங்களுக்கு நேரமிருந்தால் உங்கள் கருத்தை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

 

நன்றி,

ஓம்பிரகாஷ்

 

அன்புள்ள ஓம்பிரகாஷ்,

சன்னதம் வருதல் என்பது உலகம்முழுக்க எல்லா பழங்குடி வழிபாடுகளிலும் இருந்து வரும் ஒரு நிகழ்வு . மதம் என்னும் அமைப்பின் தொடக்கமே அதிலிருந்துதான் என்று சொல்லலாம்.  அதன் தொடக்கம் எங்கிருந்து என பண்பாட்டாளர்கள் பலவகையில் ஊகித்திருக்கிறார்கள்

மனிதனும் விலங்குநிலையில் தனித்த உள்ளமும் தனித்த ஆளுமையும் இல்லாதவனாக இருந்திருப்பான். பண்பாட்டு வளர்ச்சிப்போக்கில் மெல்லமெல்ல அவனுக்கு என தனியாளுமை உருவாகி வந்தது. விளைவாக அவனுடைய பொது உள்ளம் பின்னுக்குத்தள்ளப்பட்டு ஆழ்மனமும் நனவிலியும் ஆகி உள்ளே அமைந்தது. அது அச்சமூகத்தின் கூட்டான உள்ளம். கடந்தகாலம் நிகழ்காலம் என்றெல்லாம் பிரிக்கப்படாத ஒர் அறியாப்பெரும்பரப்பு அது.

நிலத்தடி நீர் போல. வெளியே பெய்யும்மழை ஊறிச்சென்று தேங்கும் ஒரு ஆழம். அங்கே பல்லாயிரமாண்டுக்காலம் ஊறிய நீர் உறைகிறது. மேல்நிலப்பரப்பில் உருவாகும் துளைவழியாக ஆழ்நீர் பீய்ச்சியடிப்பதைத்தான் ஆர்ட்டீசியன் ஊற்று என்கிறோம். சன்னதமும் அப்படித்தான்.

மேல்மனம் பல்வேறு சடங்குகள் வழியாக கரைக்கப்படுகிறது. குறிப்பாக குறியீடுகளும் தாளமும் ஒருவகை மனவசியத்தைச் செய்கின்றன. மேல்மனம் அழியும்போது ஆழ்மனம் பீரிட்டு வெளிப்படுகிறது. அதுவே சன்னதம்.

பூசாரிகளுக்கு அதற்கென்று ஒரு வழிமுறை உள்ளது. ஆனால் கலையில் ஈடுபடுபவர்கள், இலக்கியம் படைப்பவர்களும் அந்த சன்னதநிலையை அடைவதுண்டு. நான் இளையராஜா சன்னத நிலையில் இருப்பதை சிலமுறை பார்த்திருக்கிறேன். அது அவரல்ல, அவர் வழியாக நிகழும் அவரைவிடப்பெரிய ஒன்று எனத் தோன்றும்.

சன்னதநிலையில் அந்த ஆளுமையை கடந்த அவரது சமூகத்தின் கூட்டுஆழ்மனம் வெளிப்படுகிறது. ஆகவேதான் அறிவிலும் நுண்ணுணர்விலும் மேலும் பலமடங்கு வீரியமும் நுட்பமும் வெளிப்படுகிறது. அதை கடவுள் வெளிப்படுவது என்று நம்புகிறார்கள். ஒருவகையில் சரிதான்.

நான் சொல்வது உண்மையான சன்னதத்தை. அதை தொழில்முறையாக நடிப்பவர்கள் உண்டு. பலவகையான நரம்புத்தளர்ச்சிகள் சன்னதத்தை உருவாக்குவதும் கிராமப்புறங்களில் சாதாரணமாகக் காணக்கிடைப்பதே. பலசமயம் அவை நோய்கள். குணப்படுத்தவேண்டியவை

ஆனால் நம் ’பகுத்தறிவாளர்கள்’ மற்றும் ‘மனநல நிபுணர்களை’ப் பொறுத்தவரை  ’நார்மல்சி’ என அவர்கள் வகுத்துக்கொண்ட ஒன்று உண்டு.  அவர்களைப்போல அன்றாட உலகியல்தளத்தில் நின்றிருப்பதுதான் அது. அல்லாத எல்லாமே நோய்தான். ஆகவே எல்லா படைப்பூக்க நிலைகளையும் எல்லா உளம்கடந்த நிலைகளையும் அவர்கள் ‘சிகிழ்ச்சை’ செய்யத் துடிப்பார்கள்

என்னையே  ‘குணப்படுத்திவிட’ சில மனநல மருத்துவர்கள் விரும்பியதுண்டு.

 

ஜெ