பெண்ணியம் -கடிதம்

simone-de-beauvoir-1

 

வணக்கம் திரு.ஜெயமோகன்,

உங்களது தளத்தில் ‘வாயுள்ள ஊமைகள்’ எனும் பதிவுக்கு எதிர்வினையாக ஒருவர் எழுதியிருந்த ‘பெண்ணிய’ கடிதத்தையும் அதற்கான உங்களது விளக்கத்தையும் படித்தேன்.

//எந்த செய்தி என்றாலும் அதில் ஒற்றைப்படையான ஒரு நிலைப்பாடு எடுத்து செயற்கையான மிகையான கொந்தளிப்புகளை அடைவதே நமது வழக்கமாக ஆகிவிட்டது. அதில் சம்பிரதாயமான ஒரு கோணத்தில்  ‘அதிதுயர பாவனை’ ‘அதிபுரட்சி எழுச்சி’ -க்கு அப்பால் எவரும் எதையும் சொல்லிவிடக்கூடாது. உடனே மனிதாபிமான, பெண்ணிய , லொட்டு லொடுக்கு உணர்வெழுச்சிகளுடன் கடிதங்கள் வந்து குவிந்துவிடும்//

//எங்கும் எதிலும் இப்படி இருட்டைக்காணும் இந்த பெண்ணிய மனநிலையை –  அதை ஒருவகை நரம்புத்தளர்ச்சி என்றே சொல்வேன் – பொதுச்சொல்லாடலில் இருந்து அதட்டி விலக்காமல் இங்கே எதையுமே பேசமுடியாதுபோலும்.//

உங்களது கருத்துகளில் நானும் ஒத்துப் போகிறேன் என்கிற அடிப்படையில் உங்களுக்குக் கடிதம் எழுதும் இதே நேரம் என் ஆள் மனதில் சிறு அச்சமும் இருக்கிறது. ஏனெனில் எனது கடிதத்தையும்  ஆணாதிக்கத்தனத் திமிரின் வெளிப்பாடு என்று பெண்ணியவாதிகள் கூறி வசை மாரி பொழிந்து விட்டால் என்ன செய்வது? என்பதற்கான அச்சம்தான் அது.

கொலை, பாலியல் வன்புணர்ச்சி, ஆசிட் வீச்சு என ஒவ்வொன்றுக்குப் பின்பும் பல காரணிகள் இருக்கின்றன. குறுகிய பார்வைக்குள் வைத்து மட்டும் அதை பார்த்து விட முடியாது. ஆனால் இச்சம்பவங்களைப் பற்றி, சராசரி பெண்களினின் மன நிலை என்னவாக இருக்கிறது? என்று பார்த்தால் ‘குற்றவாளியை நடுச் சாலையில் தூக்கில் போட வேண்டும்’  ‘நாயை அடிப்பது போல் அடித்தே சாகடிக்க வேண்டும்’ என்று உணர்ச்சி மிகுதியில் கூறுவார்கள். அது அவர்களின் அறியாமையின் வெளிப்பாடு என்பதால் நான் அதை குறையாகக் கூற மாட்டேன். ஆனால் பெண்ணியவாதிகள் அல்லது அறிவுஜீவிப் பெண்களிடம்தான் எனக்கு சிக்கலே. ஒட்டுமொத்தமாக ஆணாதிக்க சமூகத்தின் முகம் என்று அந்த குற்றத்தை அடையாளப்படுத்துவார்கள். ஆண் சமூகத்தின் மீது சேற்றை வாரி இறைப்பதைத் தவிர வேறெந்த கோணத்திலும் தனது பார்வையைக் கொண்டு செல்வதில்லை.

இதைச் சொன்னால் ஆணாதிக்கவாதி என்பர். சத்தியமாக நான் ஓர் ஆண் என்கிற மன நிலையில் இந்தக் கடிதத்தை எழுதவில்லை. எந்த விதத்திலும் நான் வன்முறையையும், அதைக் கையாண்ட ஆண்களையும் நியாயப்படுத்தவுமில்லை. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஆணாதிக்கம் என்று ஒட்டுமொத்த பழியையும் ஆண் இனத்தின் மீது தூக்கிப் போட்டு விட்டு தங்கள் மீது நூலிழை கூடத் தவறில்லை என்பது போலதான் இவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

பெண்களை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக ஏற்றுக்கொள்வதுதான் பெண்ணியமோ? என்கிற கேள்வி எழுகிறது. பெண்கள் புனிதப்படுத்தப்பட்ட பிம்பங்களாகி விட்டனர். இப்போது நிலவி வருகிற சூழல் எப்படியிருக்கிறதென்றால், எதாவது ஒரு பிரச்சனை நிகழும்போது, அதன் மீதான எந்த வித ஆழமான பார்வைகளும் இல்லாமல் ‘மானங்கெட்ட ஆண்கள்’ ‘ஆணாதிக்க வெறியர்கள்’ என்று கண்டபடி திட்டி பெண்களை ஆதரித்து எழுதினால் நான் Rebel. அதுவே அப்பிரச்னையை ஆழமான பார்வைக்கு உட்படுத்தி அதில் பெண்களுக்குண்டான பொறுப்பு மற்றும் அவர்கள் மீதான விமர்சனத்தையும் முன் வைத்தால் நான் ஆணாதிக்க வெறியன். இது ஆரோக்கியமான போக்குதானா?

எனக்கு விவரம் தெரிந்த வயதில் இருந்து ஆணாதிக்கம் – பெண்ணிய விடுதலை என்கிற சொல்லாடல்களைக் கேட்டு வருகிறேன். ஆணாதிக்கம் என்பது என்னளவில் தியரியாக மட்டும்தான் இருக்கிறதோ தவிர ப்ராக்டிக்கலாக அதை நான் பார்த்ததில்லை. என் அம்மா மற்றும் சகோதரிகள், உறவினர்கள், தோழிகள் என பலரது வாழ்க்கையையும் ஆராய்ந்து பார்த்ததில் எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ‘பாஸ் நான் பொண்டாட்டிக்கு பயப்படுவேன்’ என்று சொன்ன நண்பரைப் பார்த்து ஒரு கணம் அதிர்ச்சிக்குள்ளானேன். இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் இப்படியும் ஒரு ஆளா? என்று. நாளடைவில் பல திருமணமான நண்பர்களுடன் பழகிய போதுதான் மோசமான பல உண்மைகள் முகத்தில் அறைந்தன. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல் என்பது பொதுவாக சொல்லப்பட்டாலும் எச்சூழ்நிலையிலும் ஆண்கள்தான் விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதுதான் இங்குள்ள யதார்த்தம். பொது நியாயங்கள் எதுவாகவோ இருக்கட்டும் ஆனால் ஆண் – பெண் உறவில் அந்த நியாயங்கள் செல்லுபடியாவதில்லை. ஒரு பெண் தனது நிலைப்பாடு தவறு என்பதை எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் ஆண்கள் தங்களது சரியான நிலைப்பாடுகளைக் கூட தளர்த்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு ஆட்படுத்தப்படுகின்றனர் என்பதே உண்மை.

குடித்து விட்டு தன் மனைவியை பொது வெளியில் அடிக்கும் ஆண்களைப் பார்த்திருப்போம். அக்காட்சியைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பரிதவிப்பு வரும். அடிக்கிற கணவன் மீது கடுங்கோபம் வரும். அக்கோபத்தை நான் ஒரு நண்பரிடம் வெளிப்படுத்திய போது அவர் சொன்னார். ‘நீ பார்த்தது க்ளைமேக்ஸ்தான்… முதல் இரண்டு மணி நேரம் என்ன நடந்துச்சுனு உனக்குத் தெரியாது’ என்றார். (மறுபடியும் சொல்கிறேன் கணவன் மனைவியை அடிப்பதை நான் நியாயப்படுத்தவில்லை. அதற்கு ஆண் மட்டுமே காரணம் என்கிற நிலைப்பாட்டை பரிசீலிக்கச் சொல்கிறேன்) இப்பிரச்சனையை எடுத்துக் கொண்டாலே இதற்கு பல காரணிகள் இருக்கின்றன. மது மற்றும் குடும்பப் பொருளாதாரச் சிக்கல் ஆகியவை பிரதானக் காரணமாக இருக்கிறது. அதே சமயம் கணவன் இத்தகைய செயலில் இறங்குவதற்கான தூண்டுதல் மனைவியிடம் இருந்திருக்காது என்று சொல்ல முடியுமா? இதை உளவியல் மருத்துவப் பூர்வமாகக் கூட அணுகிப் பார்க்கலாம்.

நான் பெண்கள் மீதுதான் தவறு இருக்கிறது ஆண்கள் குற்றமற்றவர்கள் என்று பேசவில்லை. ஆணாதிக்கம் என்கிற ஒரு புள்ளியை மட்டுமே மையப்படுத்தி ஒரு தரப்பு மீது மட்டும் குற்றம் சுமத்துவதன் மூலம் என்ன சாதிக்கப்போகிறார்கள் என்பது மட்டுமே எனது கேள்வியாக இருக்கிறது. பெண்ணியவாதிகளை விமர்சனத்துக்குட்படுத்தினால் வரிந்து கட்டிக்கொண்டு பல ஆண்கள் வருவார்கள். ஐயா நான் உங்களுக்கும் சேர்த்துதான் பேசிக்கிட்டிருகேன் என்று சொல்லத்தோன்றுகிறது அவர்களிடம்.

 

இப்படிக்கு

நன்மாறன்

 

அன்புள்ள நன்மாறன்

பெண்ணியம் என்று சொல்லப்படும் கருத்தாக்கம் சென்ற நூற்றாண்டில் உருவான மிகமுக்கியமான விடுதலைவிசை என்றே நினைக்கிறேன். இன்றும் தேவையான ஒன்று. ஒரு நூற்றாண்டுக்காலமாவது நீடிக்கவேண்டியது.

அதற்குள் பல உள்விவாதங்கள் உள்ளன.பொதுவாக பிரெஞ்சு பெண்ணியம் என்பது பெண்ணை மட்டுமே கருத்தில்கொண்டு , அவளுடைய தனித்தன்மையை மட்டுமே முன்னெடுப்பதாக இருந்தது. பிரிட்டிஷ் பெண்ணியம் பெண்ணை ஒரு சமூக உறுப்பாகக் கண்டு அவளுடைய கடமைகளையும் பொறுப்பையும் சேர்த்துப்பேசுவது.

சிமோன் த பூவா போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்ட பிரெஞ்சுப்பெண்ணியம் அமெரிக்காவிலும் அதன் வழியாக இந்தியாவிலும் செல்வாக்கு பெற்றது. ஏனென்றால் அது அதியதிதீவிர நிலைப்பாடுகளை எடுக்க வாய்ப்பானது.ஒற்றைவரி விமர்சனங்களையும், நிராகரிப்புகளையும் எளிதில் செய்யமுடியும். அதற்கு எதையும் ஆழமாக தெரிந்துகொள்ளவேண்டியதில்லை. மறுதரப்பைக் கவனிக்கவும் வேண்டியதில்லை.

இங்கே எந்த விவாதத்திலும் பொருட்படுத்தத்தக்க கருத்துக்களைச் சொல்வது என்பது இலக்காக இருப்பதில்லை. உச்சகட்ட உணர்ச்சிக்கொந்தளிப்பை வெளிப்படுத்துபவர் தீவிரமானவர் என்றும் ஆழமானவர் என்றும் எண்ணப்படுகிறார். ஆகவே எந்தச் சிந்தனையையும் அதிதீவிர கொந்தளிப்புக்குரிய ஒற்றை நிலைப்பாடாக ஆக்கிக்கொள்கிறார்கள்.

ஜனநாயகம் போல, பொதுவுடைமை போல, சூழியம் போல பெண்ணியமும் உலகத்தை மேலும் சமத்துவமும் மேலும் நீதியும் கொண்டதாக ஆக்குவதற்கான கருத்தாக்கம் என்று நம்புபவன் நான். ஆனால் எல்லா கருத்தாக்கங்களையும் மிக எளிமையாக ஆக்கிக்கொண்டு தங்கள் சொந்தச் சிக்கல்களையும் சுயலாபங்களையும் சார்ந்து பயன்படுத்த முடியும்.

கருத்துவிவாதம் என்பது விரிந்து விரிந்து செல்லவேண்டியது. நுண்மைகளை நாடவேண்டியது. ஆனால் கருத்தாக்கங்களை எளிய தரப்புகளாக ஆக்கிக்கொண்டு எல்லா விவாதங்களையும் சுருக்கி ஒற்றைச்சொல்லாட்சிகளாக ஆக்கி, ஒற்றை உணர்ச்சிகளை மட்டுமே வெளிப்படுத்தி சிந்தனைக்கே எதிரானவையாக ஆக்கமுடியும். ஜனநாயகம், பொதுவுடைமை, சூழியம் போல அனைத்திலும் இது நிகழ்கிறது. அந்நிலையில் இத்தகைய எளிமைப்படுத்தல்களை அகற்றி நிறுத்தவேண்டியிருக்கிறது

 

ஜெ

முந்தைய கட்டுரைபெருமாள்முருகன் தீர்ப்பும் நம் அறிவுஜீவிகளும்
அடுத்த கட்டுரைதொலைத்தொடர்கள் – பொதுநோக்கும் இலக்கியமும்