பிரபஞ்சமென்னும் சொல்

1

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். நலமாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன்.

இது தங்களுக்கு நான் எழுதும் முதல் கடிதம்.எங்கிருந்து தொடங்குவது, எவ்வாறு தொடங்குவது எனத் தெரியவில்லை.உள்ளிருக்கும் எண்ணங்களுக்கு, வார்த்தைகளாக வடிவம் கொடுத்து வெளியில் கொண்டு வருவதற்கு சிரமமாக இருக்கிறது. உள்ளிருக்கும் பொழுது, இந்த எண்ணங்களுக்கு ஒழுக்கம் தேவைப்படுவதில்லை.சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. அவை வார்த்தைகளாக வடிவம் பெறும் பொழுது ஒரு கட்டமைப்பு தேவைப்படுகிறது. ஓரளவு கோர்வையாக எனது எண்ணங்களைப்  பதிவிட முயற்சிக்கிறேன்.

உங்களுடைய “வற்றாத ஜீவநதி இந்திய இலக்கியத்தின் சாரம்” படித்தேன். வெகு நாட்களாக நான் தேடிக் கொண்டிருக்கும் பிரபஞ்சத்திற்கான அர்த்தம் இந்த கட்டுரையில் ஒளிந்திருப்பதை மனம் உணர்கிறது. ஆனால் அதை அறிவினால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இந்த தேடலே ஒருவித சோர்வு அளிக்கிறது. பிரபஞ்ச இயக்கத்தின் பொருள் என்ன? இந்த இயக்கம் என்றாவது ஒருநாள் முடிவடையுமென்றால் எதற்காக அது இயங்க வேண்டும்?இந்த பிரபஞ்சத்திற்கு முன் இங்கே என்ன இருந்தது?இதற்கு பின் இங்கே என்ன இருக்கும்?

இதையே வெளிகளுக்கும், கோள்களுக்கும், உயிர்களுக்கும் பொருத்திப் பார்க்கும் போது ஒரு முடிவில்லாத இருள் சுழியில் மாட்டிக் கொண்டதைப் போல உணர்கிறேன்.சோர்வு ஏற்படுகிறது.

உங்களுடைய விளக்கத்தை வேண்டுகிறேன்.

அன்புடன்,
சங்கரநாராயணன்

அன்புள்ள சங்கரநாராயணன்

நேற்றும் முன்தினமும் வந்த கேள்விகளுக்கும் இதற்கும்கூட ஒரு தொடர்பு உள்ளது என நினைக்கிறேன்.

புத்தர் சொன்ன கதை ஒன்றுண்டு. ஒருவன் உடலில் நஞ்சூட்டப்பட்ட அம்பு ஒன்று தைத்தது. அதை நண்பர்கள் எடுக்க முயன்றனர். அவன் சொன்னான், ‘நான் இதை அறிந்தாகவேண்டும். யார் இதை எய்தார்கள். அவர்களின் இலக்கு என்ன?அவர்கள் பயன்படுத்திய நஞ்சு என்ன? இந்த அம்பின் வரலாறு என்ன? அதை அறிவதுவரை எடுக்கவிடமாட்டேன்’. நஞ்சு உடலில் ஊறி அவன் இறந்தான்.

பிரபஞ்சம் என நீங்கள் அறிவது உங்களைச்சூழ்ந்துள்ள ஒரு பிரம்மாண்டத்தை அல்ல. அதில் நீங்கள் அறிந்துகொண்டிருக்கும் சிறுபகுதியைத்தான். அதாவது அறிவையே நீங்கள் அறிகிறீர்கள். அந்த அறிவு உங்களுடையது என்பதனால் அது உங்கள் பிரபஞ்சம் மட்டுமே. அதற்கு அப்பால் அது என்ன என்பதை நீங்கள் ஒருநிலையிலும் அறியமுடியாது

ஆகவே இது உங்களுக்கு அறியவருவது எதற்காக என்னும் வினா முக்கியமானது. அந்த வினாவுக்கான விடையை உங்கள் அறிதல்களைக்கொண்டே உணர்ந்துவிடமுடியும். அதையே தன்னறிவென்றாகுதல்- self realization – ஆத்மசாக்‌ஷாத்காரம்- என வேதாந்தம் சொல்கிறது.

உங்கள் முன் இருவழிகள் உள்ளன. ஒன்று தன்னையறிந்து ஆகிநிற்றலின் வழி. அதையே ஞானமார்க்கம் என்கிறார்கள். வேதாந்தமோ பௌத்தமோ இன்னபிற மெய்மைப்பாதைகளோ சொல்வதென்ன எனக் கற்றல். கற்றவற்றை நோக்கிச் சென்று அதுவாக ஆதல். வேதாந்த மரபில் ‘தெரிந்துகொள்வது’ ஒரு தொடக்கம் மட்டுமே. அனுபவபூர்வமாக ஆவதே விடுதலை.

அல்லது இந்த உலகில் உங்களுக்குச் சாத்தியமான அறங்களையும் இன்பங்களையும் நோக்கிச்சென்று அவற்றை முழுமையாக ஆற்றி நிறைவடைதல். அதை கர்ம மார்க்கம் என்கிறார்கள். அதற்கு நீங்கள் இதெல்லாம் என்ன என்று அறியவேண்டியதில்லை. அறங்களுக்கும் இன்பங்களுக்கும் தேவையானவற்றை மட்டும் அறிந்தால்போதும்.

இரண்டும் இரண்டு வழிகள். இரண்டுமே இங்கே பொருள்கொண்டு வாழும் வழிகளையே காட்டுகின்றன. இரண்டும் இல்லாமல் வெறுமே சோர்வூட்டும் கேள்விகளுடன் அமைவது புத்தர் சொன்ன மனநிலை.

ஜெ

முந்தைய கட்டுரைவெள்ளையானை- சுரேஷ் பிரதீப்
அடுத்த கட்டுரைசன்னதம்