தொலைத்தொடர்கள் – பொதுநோக்கும் இலக்கியமும்

DSC01285

 

அன்புள்ள ஜெ மோ அவர்களுக்கு,

உங்கள் வலைத் தளத்தை தினமும் வாசிக்கும் விசிறியில் ஒருவன் நான்.

நான் தினமும் பார்க்கும், கடந்து செல்லும் விஷயங்களை, சற்று நின்று நிதானித்து யோசிக்கும் போது, எனக்குள் சில கேள்விகள் எழுகின்றன? அதை ஒட்டி நான் எனது நண்பர்களோடு என்னுடைய பார்வையை சொல்லும் போது, அவர்களுக்கும் அது புதிய கோணமாகவே தெரிகின்றது. உங்களிடம் என்னுடைய கேள்விக்கு தக்க விடை இருக்கும் என்பதால், உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

நான் சின்ன வயதில் இருந்து பார்க்கும் விஷயம், வீடுகள் தோறும் உலா வரும் சீரியல். அவை யாவும் சின்ன வயதில் எனக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், இப்பொழுது அதை சாதரணமாக பார்க்கும் போது, எதோ அதன் பின்னணியில் இருகின்றதோ என்று தோன்றுகிறது. அனைத்து சீரியல்களுமே ஒரு குடும்பம் எப்படி இருக்கக் கூடாதோ அப்படித்தான் குடும்பத்தை சித்தரிக்கின்றன. மாமியார், மருமகள் பந்தம், அப்பா மகன் உறவு, கொழுந்தன், அண்ணி பந்தம்ன்னு எல்லா உறவுகளிலும் ஒரு பிரச்சனையை புகுத்தி, சண்டை, சச்சரவுடன் தொடர்கிறது.

எல்லா குடும்பங்களிலும் பிரச்சனை இருக்கிறது. ஆனால், சீரியல்களில் காட்டப்படுவது போல், ஒவ்வொரு உறவும் எடுக்கும் முடிவு, பேசும் விதம், சாதாரணமாக குடும்பத்தில் நடப்பவை அல்ல. ஆனால், நித்தம் அதை பார்க்கும் நம் குடும்ப உறவுகள், நம் வீட்டிலும் அதே மாதிரி ஒரு பிரச்சனை வரும் பொழுது, அந்த சீரியலில் வருவது போல் செயல் படுகிறார்களோ என்று தோன்றுகிறது. அதன் தாக்கம் இருக்கின்றதோ என்று தோன்றுகிறது.

இப்பொழுது ஒளிபரப்பாகி கொண்டு இருக்கின்ற ஒரு சீரியலில் மாமியார், நாத்தனார், இரண்டு மருமகள்கள், அவர்களின் அம்மாக்கள், இந்த சொந்தங்களின் இடையே உள்ள பிரச்சனையே கதை. ஒரு பிரச்சனைக்கு அவர்கள் யோசிக்கும், பேசும் பதில் எல்லாம் கேட்கும் பொழுது, அதை பார்ப்பவர்கள், நம் வீட்டிலும் மருமகள் இப்படி தான் யோசிப்பாளோ, நம் நாத்தனாரும் இப்படி தான் நடப்பரோ என்ற எண்ணம் கண்டிப்பாக வரும். இப்படி தொடர்ச்சியாக எல்லா சீரியல்களும் குடும்ப உறவுகளை பாதிக்கும் வண்ணம் எடுப்பதற்கு காரணம் என்ன? இதன் பின்னணியில் ஏதாவது உள்ளதா? இது புதிது அல்ல என்றாலும், இப்பொழுது அதன் வக்கிரம் அதிகமாகவே தோன்றுகிறது.

இந்தப் பிரச்சனை குழந்தைகளுக்கும் இருக்கிறது. நான் சிறுவனாக இருக்கும் போது, (இப்பொழுது எனக்கு வயது 25) நிறைய அருமையான கார்ட்டூன்கள் இருந்தன. ப்ளின்ஸ்டோன்ஸ் (Flintstones), ஜெட்சன்ஸ் (Jetsons), ஸ்கூபி டூ (Scooby Doo), டாம் அண்ட் ஜெர்ரி (Tom and Jerry), பசலை கீரையை தின்று பலம் பெரும் பாப்பாய் (Popeye) என்று பல. எதுவுமே எந்த குழந்தையின் நற்பண்பை கெடுக்காத, நல்ல பொழுதுபோக்காக, நல்ல விஷயங்களை போதிக்கும் கார்ட்டூன்களாக இருந்தன. நான் என் அம்மாவிடம் ஸ்பினாச் (Spinach) வேணும் என்று அடம் பிடித்த ஞாபகம் கூட எனக்கு உண்டு. அனால், இப்பொழுது வரும் கார்டூன்கள் எதுவுமே அப்படி இல்லை, பழைய கார்ட்டூன்கள் ஏதும் வருவதும் இல்லை. பாதி கார்ட்டூன்கள் ரத்தமும், சதையுமாக உள்ளது. சோட்டா பீம் (Chotta Beem) எனப்படும் கார்டூனில், பீம் லட்டு சாப்பிட்டால் தான் அவனுக்கு புத்தி வேலை செய்யும், சுறு சுறுப்பாவான். பசலை கீரை எங்கு உள்ளது, லட்டு எங்கு உள்ளது. இதற்கும் பின்னணியிலும் எதாவது இருக்கிறதா?

எனக்கு என்னவோ நம் குடும்பச் சூழலை உடைக்க நடக்கும் விஷயமாக தோன்றுகிறது. உங்கள் பதிலை எதிர் நோக்கி காத்து இருகிறேன்.

அன்புடன்,
பிரதீப் குமார் அருணாசலம்

***

அன்புள்ள பிரதீப்குமார்,

நீங்கள் சொல்வதெல்லாம் ஒருவகையில் உண்மை. ஆனால் இவையனைத்தும் நேரடியாகவே எவருக்கும் தோன்றக்கூடியவை. எந்த ஒரு விவாதத்திலும் இவை சொல்லப்பட்டு பொதுவாகவே அங்கீகரிக்கவும் படும் இல்லையா? இலக்கியவாசகன் என்பவன் இந்த பொதுப்புத்தி சார்ந்த உண்மைகளை மட்டுமே பார்ப்பவன், வெளிப்படுத்துபவன் அல்ல. இந்த அடிப்படைப்புரிதலில் இருந்தே இலக்கியம் எழுதப்பட்டு வாசிக்கப்படுகிறது.

முதலில் வரலாறு சார்ந்து கேட்டுக்கொள்ளுங்கள். இந்த தொலைத்தொடர்களுக்கு முன்பு நம் குடும்ப உறவுகள் இலட்சியதளத்தில் இருந்தனவா? குறைந்தபட்சம் இப்போதிருப்பவற்றைவிட மேலாக இருந்தனவா?

எளிய ஆய்விலேயே அப்படி இல்லை என்று தெரியவரும். நம் பாட்டிகளிடம் பேசிப்பாருங்கள். அவர்கள் அடைந்த மாமியார், நாத்தனார்கொடுமைகள் இன்றெல்லாம் நினைத்துக்கூட பார்க்கமுடியாதவை. அன்றைய இலக்கியங்களை வாசித்துப்பாருங்கள். அன்றைய பெண்களின் அகவுலகைச் சொல்லும் பல படைப்புகள் உள்ளன. அநுத்தமா, எம்.வி.ராஜம்மா போன்ற எழுத்தாளர்கள் குடும்ப உறவுகளில் இருந்த தாளமுடியாத வன்முறையை, ஆதிக்கப்பூசலை, உளச்சிக்கல்களை விரிவாக எழுதியிருக்கிறார்கள்.

அப்படியென்றால் தொலைத்தொடர்கள் அப்படி என்ன பெரிதாகச் சீரழித்துவிட்டன? அவற்றின் பங்களிப்பு என்ன?

அடுத்தது மாற்றுச்சிந்தனை. ஒன்றை வேறு கோணத்தில் பார்க்கமுடியுமா என ஆராய்தல். பாருங்கள், உச்சகட்ட வன்முறைச் சித்தரிப்புகள் கொண்ட சினிமாக்களை எடுக்கும் கொரியா, ஐரோப்பா முதலிய நாடுகளில் சமூகவன்முறை மிகமிககுறைவு. வன்முறையே வாழ்க்கையாகக் கொண்ட ஈரான் அன்புக்கூச்சலிடும் சினிமாக்களை எடுக்கிறது

இந்த வன்முறை, காழ்ப்புச்சித்தரிப்புகள் ஒருவகை ‘சொல்லித்தீர்த்துக்கொள்ளும்’ முயற்சிகளாக ஏன் இருக்கக்கூடாது? தன் அகத்தின் அத்தனை அழுக்குகளையும் வாழ்வுடன் சம்பந்தப்படாத ஒரு மின்பிம்பவெளியில் நிகழ்த்தி நிறைவுகொண்டு மீளும் அனுபவத்தை இவை அளிக்கின்றன என ஏன் சொல்லக்கூடாது?

அதை கதார்சிஸ் என்று அரிஸ்டாட்டில் சொல்கிறார். புனைவில் வரும் துயரம் துயரமே அல்ல. அது ஒரு விடுதலை. துயரை நடித்து உண்மைத்துயரிலிருந்து வெளிவரும் முயற்சி அது.

இவ்வாறு யோசிக்கவேண்டுமென நான் சொல்லவில்லை. இப்படிப்பட்ட கோணங்கள் திறப்பதே சிந்தனை எனச் சொல்லவருகிறேன். அன்றாட உண்மைகளை சாதாரணமாகச் சொல்வது அல்ல. எல்லாரும் கொள்ளும் கவலைகளை நாமும் கொள்வது அல்ல.

இதையே சிற்றிதழ்சார்ந்த எழுத்தாளர்கள் மிகையாகச் செய்துவிடுவதும் உண்டு என்பதை மறுக்கவில்லை. ஒன்றை அதன் அதீத எல்லைவரை சென்று பார்ப்பதும் தடுக்கில்பாயவேண்டிய இடத்தில் கோலத்தில்பாய்வதும் நடந்துகொண்டுதான் இருக்கும். ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் இலக்கியம் என்பது கடந்து நோக்கிச் சிந்திப்பதே

ஜெ

முந்தைய கட்டுரைபெண்ணியம் -கடிதம்
அடுத்த கட்டுரைவெள்ளையானை- சுரேஷ் பிரதீப்