நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்:கடிதம்

தங்களது ‘நவீன தமிழிலக்கிய அறிமுகம்’ படித்துக் கொண்டிருக்கிறேன்.

இதற்குமுன் தங்களுடைய விஷ்ணுபுரம், எழுதும் கலை, இந்திய ஞான மரபில் ஆறு தரிசனங்கள், நாவல் கோட்பாடு ஆகியவற்றையும் எஸ்.ரா-வின் உபபாண்டவம், தாங்கள் சொல்லியிருந்ததால் கநாசுவின் பொய்த்தேவு இவற்றையும் வாங்கினேன்.

சமீப காலமாக கவனித்ததில், என்னால் கட்டுரை நூல்களை எளிதாகப் படிக்க முடிகிறது, ஆனால் நாவல்களினுள் செல்வது மிகவும் சிரமாக இருக்கிறது. கட்டுரைகளின் கருத்துக்களை நேரடியாகப் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் நாவல்களிலோ அவை பாத்திரங்களின் குணநலன்களிலும், உரையாடல்களிலும் மறைந்துகொள்வதாகத் தோன்றுகிறது. தவிர வர்ணனைகள் வேறு Deviate செய்வதாக நினைக்கிறேன்.

நான் விரும்பிப் படித்த நாவல்களை யோசித்துப் பார்த்தால் அவற்றையும் நேரடியாக எந்தவித சுயவிரிவுமின்றிதான் புரிந்துகொண்டிருக்கின்றேனோ என்ற ஐயம் எழுகிறது. உதாரணமாக காஃப்கா-வின் உருமாற்றம் எவ்வளவு புதிய கற்பனைகளைத் தோற்றுவித்திருக்கமுடியும் என்பது எஸ்.ரா-வின் இந்த சிறுகதையைப் படித்ததும் தோன்றுகிறது. ஆனால் நான் அதைப் படித்து முடித்ததும் அதைப் பற்றி சிலாகித்துவிட்டு மூடிவத்துவிட்டேன். (இந்தச் சிறுகதையையும் கூடத்தான்)

நான் எந்தக் கதைகளையும் கேட்டு வளர்ந்ததில்லை. எப்போதும் என்னைவிட வயதில் பெரியவர்களோடுதான் வளர்ந்துவந்திருக்கிறேன், பழகியிருக்கிறேன். (சிறு வயதில் பூந்தளிரைக் காட்டிலும், அறிவியல் பத்திரிக்கையான துளிர்தான் என்னை மிகவும் கவர்ந்தது) அது காரணமாக இருக்குமோ? (நாவல்களைப் படிப்பதைக் காட்டிலும் கட்டுரைகள் படிப்பதுதான் சிறந்தது என்ற எண்ணம் எனக்குள் இருப்பதை உணர்கிறேன்)

எழுதுவதில் விருப்பம் இருந்தாலும் கட்டுரைகளைத்தான் எழுத முடிகிறது. என் கவிதைகள்கூட நேரில் பார்த்தவற்றின் பிரதிபலிப்பாகவே இருக்கின்றன. சிறுகதையை எழுதுவதைப் பற்றியோ, நாவலைப் பற்றியோ யோசிக்கக்கூட முடியவில்லை (அதற்கு என்ன தகுதி இருக்கிறது என்பது வேறு விஷயம்).

இது என் இயல்பாக இருக்கலாம், ஆனால் நாவல்களை முழுமையாகப் படிக்க முடியாததின் மூலம் எதையோ இழப்பதாகத் தோன்றுகிறது. இதைக் குறித்து ஏதேனும் செய்யமுடியுமா? உங்கள் அறிவுரையை எதிர்பார்க்கிறேன்.
நன்றியுடன்,

மோகன் சுப்பிரமணியன்.

அன்புக்குரிய ஜெமோ,

‘You do not know when you are going to a make a memory’ என்பது எனக்குப் பிடித்த வாக்கியங்களில் ஒன்று. னம் வாழ்வையே மாற்றும் சில நிகழ்வுகள் யதேட்சையாகவே நிகழ்கின்றன. அப்படித்தான் அனேகமாக ஒரு மாதம் முன்பு, அதீத கோபத்திலும், ஆர்வத்திலும் தங்களது ‘தூய அத்வைதம்’ என்ற இணைய கட்டுரைக்கு பின்னூட்டம் இட்டதும், நீங்கள் அதற்குப் பதிலிட்டதும் அமைந்தது.

இதுவரை நான் அறிந்தவை அனைத்தும் புத்தகங்கள் மூலம் தெரிந்துகொண்டவையே! விவாதிக்கவும், கூடிப்பேசவும் ஆட்களும், நேரமும் கிடைக்கவில்லை. எனவே என் புரிதல்களை, இதுவரை பரீட்சித்துப் பார்த்ததில்லை. என்னுடைய பின்னூட்டத்திற்கு தாங்கள் அளித்த பதில், என்னைத் த்ட்டி எழுப்பியுள்ளது.

நாம் நம்மையே மறு உருவாக்கம் செய்துகொள்ளவேண்டியிருப்பது புரிந்ததால், மீண்டும் நிறையப் படிக்கத் தொடங்கியுள்ளேன். தங்களின் எழுதும் கலை, நாவல் கோட்பாடு, இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் ஆகியவை நேற்றுத்தான் கிடைத்தது. என்னை அடுத்த தளத்துக்குக் கொண்டு செல்லக் கூடிய புத்தகங்கள் இவை என்று புரிகிறது. அவற்றை எழுதியதற்காக என் நன்றிகள்.

விஷ்ணுபுரமும் வாங்கியிருக்கிறேன், ஆனால் இன்னும் படிக்கத் தொடங்கவில்லை. மற்றவற்றைப் படித்துவிட்டு அதைப் படிக்கலாம் என்றிருக்கிறேன்.

தங்களோடு நிறையப் பேசியும், விவாதித்தும் கற்றுக்கொள்ள ஆவலாக இருக்கிறேன். முதலில் அதற்குத் தயாராகிவிட்டு வருகிறேன்.

கடைசியாக ஒரு விருப்பம். தங்களுக்கு இத்தகைய விண்ணப்பங்கள் நிறைய வரும். எனினும், என்னுடைய பதிவைப் படித்துத் தங்களின் கருத்தைவேண்டுகிறேன். http://sumohan.blogspot.com இதுவரையில் சிறுகதை, நாவல் எதையும் முயன்றதில்லை. தங்களின் எழுதும் கலையைப் படிக்கையில், அது குறித்த நிறைய விஷயங்கள் புரிகின்றன. விரைவில் முயற்சிக்கிறேன்.

இன்னும் நிறைய எழுதத்தோன்றுகிறது. ஆனால் தங்களை நிறையப் படித்துவிட்டுவருகிறேன்.

நன்றியுடன்,

மோகன் சுப்பிரமணியன்.

ஜெமோ,

மிகவும் ஆச்சரியாக, நான் எந்த இடத்தில் ந.த.அ படிப்பதை நிறுத்திவிட்டு, இந்தக் கேள்வியை எழுப்பினேனோ, சரியாக அதற்கு அடுத்த சிறு பத்தியில் (வாசிப்பும் இலக்கிய வாசிப்பும்), கட்டுரைகள் மற்றும் கதைகள் குறித்து எழுதியிருக்கிறீர்கள்.

சரியாகக் கற்பனை செய்யாததுதான் இத்ற்குக் காரணம் என்று புரிகிறது. ஆனால் அதை எப்படித் தொடங்குவது என்று தெரியவில்லை. பெரும்பாலும் என்னால் ஏதாவது பிரச்சனையை, அதற்கான விளைவை, தீர்வை, குறித்துதான் சிந்திக்க முடிகிறதே தவிர, வர்ணனைகள் போன்றவற்றைக் குறித்து அல்ல. மிகச் சமீபமாக, திரைப்படங்கள் அதிகம் பார்க்கத் தொடங்கியதும் நல்ல காட்சியை ரசிக்க முடிகிறது, மனதிற்குள் காட்சியை ஓட்டிப் பார்க்கமுடிவதில்லை. காட்சி சரியில்லையென்றால், படத்தைவிட்டி சட்டென்று விலகிவிட முடிகிறது. என்னுடைய தொழிலும் (Software Engineer) இத்தகைய போக்குக்குக் காரணமோ என்று தோன்றுகிறது.

மோகன் சுப்பிரமணியன்.

அன்புள்ள மோகன் சுப்ரமணியம்

உங்கள் வினாவுக்கு நீண்ட பதில் எழுத நினைத்தேன். ஆனால் அப்படியே கடிதம் பெட்டிக்கு அடியில் சென்றுவிட்டது. தாமதத்துக்கு வருந்துகிறேன்.

முதலில் ஒரு விஷயத்தைச் சொல்லிவிடுகிறேன். உங்களுக்கு இன்னமும் விரிவான வாசிப்புப் பழக்கம் வரவில்லை. வந்த பின்னரே உங்கள் இயல்புகள் என்ன, உங்கள் தேவைகள் என்ன என்பதைப்பற்றி முடிவாக ஏதும் சொல்ல முடியும். இப்போது தொடர்ந்து வாசியுங்கள் என்றே சொல்வேன்.

நாம் நம் சூழலில் புத்தகங்கலை வாசிக்கும்படியாக பழக்கப்படுத்தப்படுவதில்லை. பாடம் படிக்கவே பழகியிருக்கிறோம். நூல்களை கல்லூரி அளவில்கூட நாம் நூல்களாக வாசிப்பதில்லை. இந்தபயிற்சியின்மை நம்மை ஒருகுறிப்பிட்ட வயதுக்குமேல் நூல்களுக்குள் நுழையவே தடையாக ஆகிவிடுகிறது. என்னுடைய தளத்தில் நான் எழுதும் கட்டுரைகள் மிகத்தெளிவான மொழியில் நேரடியாக எழுதப்படுபவை. அவற்றை வாசிக்க சிரமப்படுபவர்களை தினமும் சந்திக்கிறேன். காரணம் இதுவே

நாம் வாசிப்பை ஒரு தொடர் பழக்கமாகக் கொண்டோமென்றால் மெல்லமெல்ல நமக்கு அது பயிற்சியாக ஆகிறது. வாசிப்பே வாசிப்பை கற்று தந்துவிடும். எல்லாவகை நூல்களையும் தொடர்ந்து வாசிப்பதே ஆரம்பத்தில் செய்ய வேண்டிய விஷயம்.

புனைகதை அல்லாத நூல்களை சிறு குறிப்புகளாக எடுத்துக்கொள்ளாமல் வாசிப்பதென்பது பெரும்பாலும் பயனற்றது. முக்கியமாக கோட்பாட்டு நூல்களை. சிந்தனைகளை நம் சொந்த மொழியில் திரும்ப எழுதிக்கொண்டால் அவை நம்முள் வளர ஆரம்பிக்கும். ஒரு நூலைச்சார்ந்து விவாதிப்பது மிக இன்றியமையாதது. நமக்குள் சிந்திப்பதையேகூட ஒருவருடன் விவாதிப்பதாக அமைத்துக்கொள்ளலாம்.

புனைகதை நூல்களை அவை நம்மை உள்ளே இழுக்கும்வரை பிடிவாதமாக வாசிக்கவேண்டும். சிலநாவல்கள் நூறுபக்கம் தாண்டும்போதுகூட நம்மை உள்ளே இழுப்பதில்லை. அதுவரை நம்மை நாமே உள்ளே அழுத்திக்கொள்ளவேண்டும்

அப்படி சில வருடங்கள் சென்றபின்னர் நமக்குரிய நூல்கள், நமக்குரிய தளங்கள் தெளிவாகலாம். அந்நிலையில் ஒருவேளை புனைகதைகள் நமக்குரியவை அல்ல என தோன்றலாம். இயல்பிலேயே கற்பனை குறைந்த தர்க்கம் மேலோங்கிய மனிதர்கள் உண்டு. ஆனால் அம்முடிவை அடைய சிலவருடங்கள் பொதுவான விரிவான வாசிப்பு தேவை

ஜெ

சார்,

தங்கள் கடிதத்திற்கு மிகவும் நன்றி. இதுவே மிக நீண்ட கடிதம், அதற்காக நேரம் ஒதுக்கி பதிலளித்தமைக்கு மிக்க நன்றி. நவீன இலக்கிய அறிமுகம், எழுத்துக் கலை போன்ற நூல்களைத் தந்ததற்கு மீண்டும் பல நன்றிகள். இல்லாவிட்டால் என்னைப் போன்றவர்கள் இந்த அளவிற்குக்கூட முயற்சித்திருக்கமாட்டோம்.

நவீன இலக்கிய அறிமுகம் புத்தகத்தில் படிமம் என்ற ஒற்றை வார்த்தை, புரிதலில் இருந்த பல தடைகளைத் தகர்த்துவிட்டது. ஒரு நூலைப் படிமங்களாகக் கருதிப் படிக்கும்போது, ஏராளமான விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. இன்னும் படிக்கவேண்டும் என்ற ஆசை எழுகிறது.

நான் தூரத்தே பெய்த மழை http://sumohan.blogspot.com/ என்ற என் வலைப்பூவில் எழுதி வருகிறேன். என் எழுத்து நடையைக் குறித்து ஏதேனும் சொன்னீர்களென்றால் மிகவும் உதவியாக இருக்கும். கலீல் ஜிப்ரான், மிர்தாதின் புத்தகம் குறித்து எழுதிய கட்டுரைகள் சிலருக்கு உதவியாக இருந்திருக்கின்றன. ஜென் கவிதைகள் குறித்தும் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது. (அதற்காகப் படித்துக் கொண்டிருக்கிறேன்)

இதற்கெல்லாம் தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால், என்னளவிற்குக்கூட தேடலில் ஆர்வம் இல்லாதவ்ர்களுக்கான சிறு அறிமுகமாக இதைச் செய்ய நினைக்கிறேன். பிழை இருந்தால் மன்னியுங்கள்.
நவீன காலக் கவிதைகளைப் புரிந்துகொள்ள சில எளிமையான புத்தகங்களைப் பரிந்துரைக்க வேண்டுகிறேன்.

தங்களை நேரில் சந்திக்க ஆர்வமாக இருக்கிறது.
அதற்குள் இன்னும் நிறையப் படித்துவிட்டு வருகிறேன். மிக்க நன்றி ஐயா.

அன்புடன்,

மோகன் சுப்ரமணியன்.

முந்தைய கட்டுரைஆர்.சூடாமணி
அடுத்த கட்டுரைகடிதங்கள்