வெய்யோனொளியில்…

Shanmukhanathanji

கர்ணனைப்பற்றிய நாவல் இது.வெண்முரசு நாவல்களை நான் செவ்வியலின் வெவ்வேறு வடிவங்களாகவே உள்ளூர உருவகித்திருக்கிறேன். செவ்வியல் என்பது அனைத்துவகையான புனைவுவகைகளுக்கும் உள்ளே இடமளிப்பது. அதன் இயல்பே தொகுப்புத்தன்மைதான். அதற்குள் ஒருமையையும் ஒத்திசைவையும் அது அடையமுயல்கிறது. அதன் மையத்தரிசனத்தால் அதை நோக்கிச் செல்கிறது.

வெய்யோன் இயல்பாகவே பரசுராமனின் கதையிலிருந்து தொடங்கியது எனக்கே புதிய திறப்பாக அமைந்தது. அன்னையென்றும் காதலி என்றும் துணைவி என்றும் பெண்மையால் அலைக்கழிக்கப்படும் கர்ணனின் சித்திரமாக அது விரிந்தது. பெருந்தன்மையால் தோற்றுக்கொண்டே செல்பவன் வென்று நின்றிருக்கும் பேரறத்தின் தருணம் ஒன்றில் நிறைவடைந்தது.

பிறநாவல்களுக்கு மாறாக நுண்மையான அன்றாடத்தருணங்கள் நிறைந்த படைப்பு இது. உத்வேகமான புராணக்கதைகளும், எளிய சாகசச்சித்தரிப்புகளும் , குலக்கதைகளும்  குறுக்குவாட்டில் புகுந்து இதன் பின்னலை அமைத்தன. அதன் அன்றாடத்தன்மைக்கு அவை அடிக்கோடிடுகின்றன. இந்நாவலின் நான்குவகை உச்சங்கள் என நான் எண்ணுபவை இந்த ஒவ்வொரு தளத்திலும் உள்ளன. ராதைக்கும் கர்ணனுக்குமான உறவு எப்போதைக்குமாக வெளித்தெரியாமல் முறிவடையும் தருணம் அன்றாடவாழ்க்கையின் நுண்மை கொண்டது. ஜயத்ரதனின் தந்தை தன் மைந்தனை கையால் தொடமறுக்கும் தருணம் இன்னொன்று.  அர்ஜுனன் நாகர்குலக்குழவியை விட்டுவிடும் தருணமும் அதன் மறுபக்கமாக வரும் கர்ணன் அதை கையிலேந்தும் தருணமும் அந்த அன்றாடத்தருணங்களால்தான் ஒளிகொள்கின்றன. நடுவே துரியோதனனின் இன்றியமையாத வீழ்ச்சியின் சித்திரம் அமைகிறது.

முற்றிலும் மாறுபட்ட நான்குவகைப் புனைவுகள் ஒருங்கிணைந்த இந்நாவல் அதன் முழுமையை உச்சகட்டத்தில்தான் அடைந்தது. அதுவரை நானும்தான் தேடிச்சென்றுகொண்டிருந்தேன். அது கர்ணனை எனக்குக் காட்டியது.

இந்நூலை மெய்ப்பு நோக்கிய ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் அவர்களுக்கும், சீர்நோக்கி வெளியிடும் ஹரன்பிரசன்னாவுக்கும், கிழக்கு பதிப்பகத்துக்கும் நன்றி. வெண்முரசு நாவல்களை இணையத்தில் மெய்ப்பு நோக்கிய எம்.ஏ.சுசீலாவுக்கும் தகவல்கள் மற்றும் நடையை சீர்நோக்கிய மீனாம்பிகைக்கும் நன்றி. வெண்முரசு நாவல்கள் அனைத்தையும் ஒவ்வொருநாளும் தகவல்கள் சரிபார்த்து செம்மைசெய்து வெளியிடும் ஸ்ரீனிவாசன் , சுதா தம்பதியினருக்கு வழக்கம்போல மனமார்ந்த வணக்கமும் நன்றியும். அவர்களுக்கும் உரியது இந்நாவல்.

இந்நாவலை என் பெருமதிப்பிற்குரிய வீ.ஷண்முகநாதன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். இளமைமுதல் என் மூத்தசகோதரனின் இடத்தில் அவர் இருந்திருக்கிறார். பலவகை  விலகல்களின்போதும் என்னை அவர் விட்டு விடவில்லை. அவருக்கு என் எளிய கடப்பாடு இது

அன்புடன்

ஜெயமோகன்

[வெண்முரசு நூல்வரிசையில் கிழக்கு வெளியீடாக வரவிருக்கும் வெய்யோன் நாவலுக்கான முன்னுரை ]

முந்தைய கட்டுரைஎழுத்தும் உடலும் – கடிதம்
அடுத்த கட்டுரைஅஞ்சலி : வே.சபாநாயகம்