அன்புள்ள ஜெயமோகன் சார், வணக்கம்.
வாயுள்ள ஊமைகள் கடிதம் படித்தேன்.
முகநூல் கயவனால் அந்தப் பெண் இறந்துவிட்டார் என்பது தவிர இதில் வருத்தப்பட என்ன உள்ளது?
தாய்த் தமிழ் பள்ளிகள் மாணவர்கள் இல்லாததால் கோவையில் மூடப்படுகின்றன.
மாநிலப் பாடத்திட்டம் அல்லாத சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற பாடத்திட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் தமிழ் மொழி பாடம் கட்டாயம் என்று அரசாணை 144, 145 உள்ளது. அதை மதிக்கவே மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் மத்திய, சர்வதேச பாடத்திட்டம். அதனால் மாநில அரசின் சட்டத்தை நாங்கள் பின்பற்ற மாட்டோம் என்று கூறி வழக்கு போடுகிறார்கள். அவ்வளவு ஏன் கல்வித்துறை அதிகாரிகளை சில சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி பள்ளிகள் உள்ளேயே விடாத நிலை எல்லாம் இருக்கிறது. ஆனால் தமிழே படிக்காமல் டிஎன்பிஎஸ்சி மூலம் அரசு வேலையில் சேர முடியும். சேர்ந்து பணியாற்றியும் வருகிறார்கள். ( வந்த பின் ஒரு பெயரளவு தமிழ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் போதும்)
இந்தி படித்தால் வடநாடு சென்று வேலை செய்யலாம் என்கிறார்கள். அவன் இங்கு வந்து பானி பூரி விற்கிறான். அவர்களை யாரும் தமிழ் படிக்க சொல்லவில்லை.
நம் மக்களும் இந்தி ஆங்கிலம் என்கின்றனரே தவிர யாரும் தமிழ் பாடம் வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதில்லை. அது போன்ற பள்ளி எங்களுக்கு வேண்டாம் என பெற்றோர் கூறினால் பள்ளி நிர்வாகங்கள் சிந்திக்கும். வேறு வழியில்லாமல் தமிழ் பாடம் கற்பிப்பார்கள். ஏனெனில் அவர்கள் வியாபாரிகள்.
தமிழை தவிர்ப்பது எங்கிருந்தோ வரும் இந்தியல்ல. நமக்கு பண்பாட்டுக் கல்வியால், தமிழால் என்ன ஆகப்போகிறது என்ற எண்ணம்தான்.
மொழிவழி மாநிலம் ஆகியும் இன்னும் தமிழ் படியுங்கள் என்று கெஞ்ச வேண்டியுள்ளது. தும்பை விட்டு வாலைப் பிடிக்கிறார்கள். தலை இவர்களைத் திருப்பிக் கடிக்கிறது.
தாயைத் தெரியாதவனுக்கும் தாய்மொழி தெரியாதவனுக்கும் வேறுபாடு உள்ளதா? எத்தனை வீட்டுப் பெண்மணிகளையும் அம்மா என்றழைத்தாலும் பெற்றவள் தானே அம்மா.
அ.முத்துலிங்கம் கூறும் உலகின் ஒரே அராமிக் மொழிக்காரருக்கு மற்ற மொழி தெரியாதா என்ன? வீட்டுச் சுவற்றில் பேசிப் பார்க்கும் அவரது பதற்றத்தின் வழி அறிய முடிகிறது இழப்பின் வலி நம் மக்களுக்குத் தெரியாது என்பது.
இன்னும் சில தலைமுறை தாண்டி வெண்முரசுக்கு ஆங்கில, தங்கிலிஷ் பதிப்புகள் கேட்பார்களோ என்பதே என் அச்சமாக இருக்கிறது.
க.ரகுநாதன்.