தமிழ் ஆங்கில எழுத்துவடிவம்- ஒரு கேள்வி

1466985652b

ஜெமோ,

ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன என்று நீங்கள் கட்டுரை எழுதினீர்கள். இன்றைக்கு ஒரு பெண் ஆங்கில எழுத்துருவில் கடிதம் எழுதியதை ஒரு பெரிய சரிவாகக் கண்டு கடிதம் வெளியிட்டிருக்கிறீர்கள். முன்னால் எழுதியதை மற்றவர்கள் மறந்திருப்பார்கள் என்று நம்புகிறீர்களா?

ஜெகன்.

***

அன்புள்ள ஜெகன்,

பொதுவாக நம்மவர்களின் மொண்ணைத்தனத்துடன் மோதுவதே என்னுடைய செயல்பாடுகளில் பாதியாக இருக்கிறது. சம்பந்தமில்லாமல் எதையாவது ‘முரண்பாட்டைக்’ கண்டுபிடித்து அதை ஒரு பெரிய தரப்பாக முன்வைப்பது இவர்களின் வழக்கம். உண்மையான பிரச்சினை எதையும் புரிந்துகொள்ளமுடியாத மழுங்கலின் விளைவு இது. முன்பு நான் எழுதிதையே இந்தக்கடிதத்திலும் மீண்டும் சொல்லியிருந்தேன்.

நான் முன்பு சொன்னதும் இதுவே. தொடர்ச்சியாக பல கட்டுரைகளாக இதை விரிவாக எழுதியிருக்கிறேன்..

அ. நம் குழந்தைகளுக்கு இரண்டு எழுத்துவடிவுகளைக் கற்பது பெரும்சுமையாக இருக்கிறது. கல்வி நாளுக்குநாள்  விரிவு மிக்கதாக  ஆகிக்கொண்டிருக்கும் சூழலில் இரண்டு சம்பந்தமில்லாத எழுத்துவடிவுகளை கற்று நினைவில் வைத்திருப்பது சாமானிய மாணவர்களின் தகுதிக்கு அப்பாப்பட்டது.

ஆ. அதை நாம் நம் மாணவர்களைக் கண்டாலே அறியலாம்.  நம் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே தமிழை ஆங்கில எழுத்துவடிவில்தான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

இ. தமிழ் எழுத்துவடிவில் வாசிப்பது கடினமாக இருப்பதனால் அவர்கள் தமிழில் வாசிப்பதே இல்லை. ஆங்கிலம் அவர்களின் அன்றாடவாழ்க்கையில் இல்லை. ஆகவே ஆங்கில அறிவும் குறைவாக உள்ளது. இருமொழிகளும் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களால் எந்த மொழியிலும் எதையும் வெளிப்படுத்த முடிவதில்லை.

ஈ  ஆகவே இளமையிலேயே அவர்கள் ஒரே எழுத்துவடிவில் தமிழையும் ஆங்கிலத்தையும் கற்றால் தமிழில் அவர்கள் வாசிப்பது கூடலாம். தமிழ் என்பது அதன் எழுத்துவடிவில் இல்லை. சொற்களில், சொற்பொருளில் உள்ளது. எழுத்துவடிவம் எப்போதும் மாறிக்கொண்டே தான் இருக்கிறது.

இந்தக்கடிதமும்கூட நான் சொன்னதைத்தான் உறுதிசெய்கிறது. அதெப்படி தமிழை ஆங்கிலத்தில் எழுதிப்படிப்பது என்று கொந்தளிப்பவர்களுக்கு இக்கடிதமே பதில். விரும்பினாலும் இல்லாவிட்டாலும் உண்மையில்   தமிழ் அப்படித்தான் இளைஞர்களால் எழுதி வாசிக்கப்படுகிறது.

அதை முறைப்படுத்தி, இளமையிலேயே பழக்கப்படுத்தி,அதிலேயே தமிழை வாசிக்கவும் செய்தால், அதிலேயே நூல்களும் கிடைக்குமென்றால் அடுத்தடுத்த தலைமுறையில்  தமிழ் வாசிப்பு பெருகக்கூடும். இல்லையேல் இன்றுள்ள தமிழ் எழுத்துவடிவும்  இதிலுள்ள தமிழும் ஐம்பதாண்டுகளுக்குள் ஒரு தொல்மொழியாக ஆகிவிடக்கூடும்.

இது நான் எழுதிய ஓர் எச்சரிக்கை. ஒரு மாற்று யோசனை. சற்றே காலத்தில் முற்பட்ட கூற்று அது என நானும் அறிவேன்.  முன்னரே இந்திய அரசும் தமிழக அரசும் அத்தகைய எதிர்கால சாத்தியம் பற்றி யோசித்துள்ளன, ஆய்வுத்தாள்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

அதை முழுக்க மறுக்கலாம், மாற்றுவழிகளை முன்வைக்கலாம். ஆனால் நம்மவர்கள் அதை வம்பாக ஆக்கினர். தங்கள் மொழிப்பற்றை காட்டுவதென்பது சம்பந்தமில்லாமல் கொந்தளித்துக் கண்ணீர்மல்குவது என்று நம்புவதே இங்குள்ள வழக்கம். ஆக்கப்பூர்வமாக எதையும் செய்வதுமில்லை, சிந்திப்பதுமில்லை , நிதர்சனங்களைப் பார்ப்பதுமில்லை.மிக எளிய கருத்துக்களைக்கூட புரிந்துகொள்ள முயல்வதுமில்லை.

நான் என் சொந்த அனுபவத்தில் கல்லூரிகளில் பார்த்தவற்றில் இருந்து அடைந்தது அந்த எண்ணம். பெரும்பாலான கல்லூரி மாணவர்களுக்கு தமிழில் தலைப்புகளுக்கு அப்பால் படிக்க முடியவில்லை என்பதை கண்டேன்.  ஆகவே செய்தித்தாள்களைக்கூட அவர்கள் வாசிப்பதில்லை.  உடைந்த ஆங்கிலச்சொற்களும் ஆங்கில எழுத்தில் நாலைந்துவரித் தமிழுமே அவர்கள் அறிந்தது. நம் கண்ணெதிரே இப்படி ஒரு தலைமுறை உருவாகி வந்துவிட்டது. அந்த யதார்த்த்தையே நான் சுட்டிக்காட்டினேன். இக்கடிதமும் அதையே காட்டுகிறது.

ஜெ

முந்தைய கட்டுரைதற்கொலை – ஒரு பெண்ணியக்கடிதம்
அடுத்த கட்டுரை’என்றேதான் தோன்றுகிறது’