வாயுள்ள ஊமைகள்

1466985652b

 

அன்புள்ள ஜெமோ

சமீபத்தில் சேலம் அருகே ஓர் இளம்பெண் தற்கொலைசெய்துகொண்ட செய்தி நாளிதழ்களில் வெளிவந்தது. அந்தப்பெண் ஃபேஸ்புக்கில் இருந்திருக்கிறாள். நிறையப்புகைப்படங்களை வெவ்வேறு கோணத்தில் வெளியிட்டியிருக்கிறாள். அதை ஒரு கயவன் மார்ஃபிங் செய்து இணையத்தில் ஏற்றியிருக்கிறான். போலீஸுல் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கைஎடுக்கவில்லை. மீண்டும் அதே கயவன் அப்படியே செய்யவே அவள் தற்கொலைசெய்துகொண்டாள்.

நிற்க, இது அந்தக்குழந்தை எழுதிய கடிதம். அவள் இறந்தவிதம் மனதைப்பாதித்தது. ஆனால்  அவள் எழுதிய அந்தக்கடிதமும் மனதிலேயே ஓடிக்கொண்டிருந்தது. அந்தக்கடிதத்தை இணைத்திருக்கிறேன். அது தமிங்கிலத்திலே இருக்கிறது. அதாவது தன் உயிரை போக்கிக்கொள்ளும்போது எழுதிய கடைசிக்கடிதத்தைக்கூட தமிழிலே எழுத அவளால் முடியவில்லை.

அவள் மனம் தமிழில்தான் செயல்படுகிறது. ஆனால் எழுத்து கைவரவில்லை. நான்குவரிகூட தமிழில் எழுத முடியவில்லை. ஆங்கிலத்தில் எழுத ஆங்கிலமும் தெரியவில்லை. அதாவது அவள் உள்ளத்துக்கு மொழியே இல்லை. எவ்வளவு சங்கடமான விஷயம். பேச்சுத்தமிழை ஆங்கில எழுத்துக்களில் தப்பும்தவறுமாக எழுதியிருக்கிறாள். வேதியியலில் இளங்கலைப்பட்டம் பெற்ற பெண். ஃபேஸ்புக்கில் செயல்படும் அளவுக்கு இணையத்தில் அறிமுகமும் இருக்கிறது.

அதாவது இந்தக்குழந்தை தமிழில் எதையுமே வாசிப்பதில்லை என்று தெரிகிறது. இணையத்திலே தமிழ் இருப்பதைக்கூட அறியாமலிருக்கிறாள். ஆங்கில அறிவும் கிடையாது. இருக்கும் ஒன்றிரண்டு வரிகளைக்கொண்டு ஃபேஸ்புக்கில் இயங்கியிருக்கிறாள். ஆனால் வெளியுலகுடன் தொடர்பு கொள்ளவும் வளரவும் ஆர்வமிருக்கிறது.

உண்மையில் இவ்வளவு அசட்டுத்தனமாக ஃபேஸ்புக்கில் செயல்படவும் இவ்வளவு கோழைத்தனமாக தற்கொலைசெய்துகொள்ளவும்கூட எதையும் அறியாதிருந்த நிலைதான் காரணம் என்று தோன்றுகிறது. கொஞ்சம் வாசிக்கும் பழக்கம் இருந்தால்கூட தைரியமும் நம்பிக்கையும் வந்திருக்குமோ?

நான் ஆசிரியனாக இருந்து ஓய்வுபெற்றவன். இன்றைய குழந்தைகளின் மொழியறிவு பற்றி தொடர்சியாக ஆராய்ந்துவருகிறேன். தமிழ் தெரியாது. ஆங்கிலம் எழுத்துக்கள் மட்டும் தெரியும். எந்தமொழியிலும் எழுதவோ வாசிக்கவோ தெரியாது. சொந்தமாக எந்த விஷயத்தைப்பற்றியும் நாலுவரி எழுதத்தெரியாது. தற்கொலைக்கடிதம்கூட இப்படித்தான் எழுதமுடிகிறது

நான் கடைசியாக வேலைபார்த்த பள்ளியில் புதியதாகவந்த ஆசிரியர்கள் பலர் விடுமுறைக்கடிதத்தைக்கூட இதேபோலத்தான் எழுதிக்கொடுத்தார்கள். அப்படி எழுதக்கூடாது என்று சொன்னதற்காக என்னை திட்டியவர்களும் உண்டு. நம் சூழலில் முப்பது வயதுக்கு குறைவானவர்களில் 5 சதவீதம்பேருக்குக்கூட ஏதாவது ஒரு மொழியில் தன் எண்ணத்தை ஒருபக்க அளவுக்கு எழுதத்தெரியாது. சந்தேகமிருந்தால் ஃபேஸ்புக் எழுத்துக்களை பாருங்கள்.

இப்படி தன்னை வெளிப்படுத்த மொழியே இல்லாத ஒரு  தலைமுறையே உருவாகி வந்திருக்கும் ஒரு நிலப்பகுதி உலகத்தில் வேறெங்காவது இருக்குமா?

சத்யமூர்த்தி சீனிவாசன்

 

அன்புள்ள சத்யமூர்த்தி அவர்களுக்கு,

உண்மை. இதற்குக்காரணம் நம் கல்விமுறை. தொழில்மையக் கல்விமுறை மொழி மற்றும் பண்பாட்டுக்கல்வியை முழுமையாக நிராகரிக்கிறது. வரலாறு, பண்பாடு எதுவுமே மாணவர்களுக்குத்தெரிவதில்லை. வழக்கமாக சிறுவர்கதைகள் வழியாக பொழுதுபோக்கு எழுத்துக்கு வரும் ஒரு பயணம் உண்டு. அது முழுமையாகவே இல்லாமலாகிவிட்டிருக்கிறது. காரணம் மொழியறிவு இல்லை

ஆனால் ஆங்கிலம் இங்கே பயிற்றுவிக்கப்படுவதே இல்லை. ஆங்கில இலக்கியம் படிக்கும் குழந்தைகள் கூட ஆங்கிலத்தை மனப்பாடம்தான் செய்கின்றன. தொழில்நுட்ப – அறிவியல் கல்வியில் மொழிக்கு முக்கியத்துவமே இல்லை. மனப்பாடம் செய்தால்போதும். முனைவர்பட்டம் பெற்றவர்கள் இதைவிட மோசமான தங்கிலீஷ் மட்டுமே அறிந்தவர்களாக இருப்பதை நானும் பார்க்கிறேன்

இதற்கு இளமையில் இரண்டுலிபிகளைக் கற்பதன் சுமையும் ஒரு காரணமாக இருக்கலாம். தமிழ் எழுத்துக்களை பதினொன்றாம் வகுப்புவரை ஒப்புக்கு கற்பிக்கிறார்கள். அத்தோடு மறந்துவிடுகிறார்கள்.

 

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் என்னும் அறிதல்
அடுத்த கட்டுரைஇயல், தமிழ் இலக்கியத்தோட்ட விருதுகள்