அன்புள்ள ஆசிரியருக்கு,
அன்றுமுதல் இன்றுவரை மனிதனின் அடங்காத் தேடல் “விஷ்ணுபுரம்” நாவலில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதுதான் தேடல் என்றில்லாமல் அவன் ஆதியைத் தேடுகின்றான்; அன்பைத் தேடுகின்றான்; அறிவைத் தேடுகின்றான்; பெண்களைத் தன்னந்தனியனாகவும், பலரறியவும், பெண்ணை ஒரு நினைவாக மட்டுமே கொண்டும் புணர்ந்து பார்க்கிறான். அதன் வழியாக அவன் முறையே தன்னை உணர்கிறான்; தன்னை பிறருணர வைக்கிறான்; தன்னை மறைத்துக் கொள்கிறான். அனைத்துவகைத் தேடலிலும் பிறரறியா ஒன்றைத் தான் கண்டடைய வேண்டும் என்ற முனைப்பே மேலோங்கியுள்ளது. அனைவரும் புனிதமாக நினைக்கும் தெய்வத்தின் கால்களை குஷ்டரோகியின் கால்களாக நினைப்பதிலிருந்து அவனின் இந்த வித்தியாசமான எண்ணங்களின் முனைப்பு, தன்னை பிறரிலிருந்து வித்தியாசப்படுத்தும் முனைப்பு விஷ்ணுபுராணத்தில் வளர்ந்து கொண்டே செல்கிறது. இதில் மிகவும் என் மனதைத் தொடும் விஷயம் என்னவென்றால் “அறிந்தவன் ஒன்றுமில்லாமல் ஆகின்றான்” என்பதுதான். அறிவானது இரண்டு வழிகளில் கிடைக்கிறது. ஒன்று அனுபவ அறிவு. மற்றொன்று நூலறிவு. முதற்பாகம் ஸ்ரீபாத காண்டத்தில் அனுபவ அறிவு கிடைக்கிறது. இரண்டாம் பாகமாகிய கௌஸ்துப காண்டத்தில் நூலறிவு கிடைக்கிறது. மூன்றாம் பாகம் மணிமுடிக் காண்டத்தில் அனுபவ அறிவும் நூலறிவும் சேர்ந்துகொண்டு மனிதனைப் போராட்டக்களத்தில் குதிக்க வைக்கின்றன. பிரளயம் வருமா? வராதா?
எனக்குத் தெரிந்தவரை, உலக அழிவு நாள் ஒன்று வரும்; அன்றுதான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நடுத்தீர்வை நாள்; அன்று நல்லவர்களெல்லாம் சொர்க்கத்துக்கு எடுத்துச் செல்லப்படுவார்கள். தீயவர்களெல்லாம் பாதாள எரிநரகத்தில் தள்ளப்படுவார்கள் என்று விவிலியத்தில் கூறப்பட்டுள்ளதுதான். அந்த நம்பிக்கையிலேயே ஊன்றி என்னை இதுநாள்வரை வளர்த்திருந்தார்கள். விஷ்ணுபுரத்திலும் பிரளயம் என்ற உலக அழிவு குறிப்பிடப்படுகிறது. உலகம் அழியப்போகிறது என்பது உண்மையானால் அது ஒரேமாதிரியாகத்தானே இருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு கதையைக் கூறுவதிலிருந்து இந்த உலக அழிவு என்பதே இல்லை. ஆகுதலும் அழிதலுமே நிலையானது என்று கண்கூடாகத் தெரிகிறதே. பின் எப்படி இவ்வளவு தைரியமாக கிறிஸ்தவ பாதிரிமார்களும் இந்து குருமார்களும் வெளிப்படையாக இரண்டு மதக் கோயில்களிலும் இயேசுவையும் விஷ்ணுவையும் தெய்வமாக வழிபட வைக்கிறார்கள்? நிச்சயமாக அவர்களுக்கு தெய்வமாக வழிபடப்படுகிறவர்களெல்லாம் இவ்வுலகைப் படைத்து ஆண்டுகொண்டிருக்கும் தெய்வமல்ல எனத் தெரிந்திருக்கும் என இப்போது எனக்கு சந்தேகம் எழுகிறது. பின் ஏன் மக்களுக்கு உண்மையை எடுத்துரைப்பதில்லை? மதவழிபாட்டு முறைமைகளையும் வழிவழிச் சடங்குகளையும் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து அதில் குறை கண்டுபிடிக்கும் பெரியவர்கள்தான் என்கண்முன் இப்போது நிற்கிறார்கள்.
விஷ்ணுபுரத்தில் வருவதைப்போல சூரியதத்தர், பவதத்தர், ஆரியதத்தர் என முக்காண்டங்களிலும் வழிவழி வரும் மதக்குருக்கள், இந்த நிஜ உலகிலும் நம்கண்முன் நம்மெதிரே இருக்கிறார்கள். அவர்களின் வாரிசுகளாகிய ஸ்வேததத்தன், தேவதத்தன், வேததத்தன் ஆகியோர் பழைய முறைமைகளை மீறுகிறார்கள். இங்கு பழைய பஞ்சாங்கத்திற்கும் இளைய தலைமுறையினரின் முற்போக்கு எண்ணங்களுக்கும் பெரிய மோதலே நடக்கிறது. ஆனால் இதில் என்ன எனக்கொரு மனச் சமாதானம் கிடைத்தது என்றால் ஆதியிலிருந்த மோதல் படிப்படியாக குறைந்துவருவதைப் போல தோன்றியது. ஏனெனில் முதற்காண்டத்திலிருந்த தத்தரின் தீவிரம் கடைசிக் காண்ட தத்தரிடம் இல்லை. கடைசி மதவாரிசு எந்த மதக்கோட்பாட்டின் அடிமையாகவும் இல்லை. முற்றிலும் அவனுக்குகந்த வாழ்வு வாழ்கிறான். அதுதான் நிறைவான வாழ்க்கை.
தேடவேண்டியதுதான். ஆனால் கண்டடைய முடியாத ஒன்றைத் தேடுவதால் என்ன பயன்? இரண்டாம் பாகத்தில் அஜிதனின் தருக்க விவாதங்களிலேயே கடவுள் பற்றியும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் மர்ம பிரபஞ்சம் பற்றியும் தெளிவாகத் தெரிந்துவிடுகிறதே!
முதற்பாகத்தில் இதைத்தவிர வேறொன்றுமில்லை எனுமளவிற்கு பலவிதமான அனுபவங்கள்…..ஒரு சிறு குழந்தையின் மரணம், அந்த மரணத்தால் அதன் தாயும் தந்தையும் அனுபவிக்கும் வேதனை, வேதனையைத் தீர்க்க ஒருவன் தாசியை நாடுவது, வேதத்தை அறியவும் ஒருவன் தாசியையே தேடுவது, ஒருவன் தன் அதிகாரத்தை பெண்புணர்தலில் காட்டுவது, தான் விரும்பும் பெண்ணை தான் வணங்கும் கடவுளாக வரித்துக்கொண்டு கவிதைகள் புனைவது, அது புராணமாக்கப்படுவது, பெண்களை எடுத்துக்கொண்டால், தன் கணவனுடன் புணரும்போது தனக்குப் பிடித்த ஏதோ ஒன்றை நினைத்துக்கொள்வது, சீரழிந்தவள் பழிவாங்குவது, சீரழியுமுன் தன்னையே அழித்துக்கொள்வது, அவள் தெய்வமாக்கப்படுவது…. இன்னும் இவ்வுலகில் கிடைக்கக்கூடிய அனுபவங்கள் அனைத்தும் காவியங்களாய் உயிரோவியங்களாய் “விஷ்ணுபுரத்தில்“.
இவ்வாறு மனிதர்களின் தேடல் ஒருபுறமிருக்க, விலங்குகள், பறவைகள், கோபுரங்கள், காண்டாகர்ணம், ஹரிததுங்கா, சோனா ஒவ்வொன்றிலும் உள்ள தேடல்கள் கண்முன் விரிந்தெழுகின்றன. தினமும் சோனா நதியில் குளித்துவிட்டு காண்டாகர்ணத்தை மீட்டும் அங்காரகனின் தேடலைப் படித்த அக்கணத்திலிருந்து நான் எங்கள் வீட்டு நாய்க்குட்டிக்கென சிறிதுநேரம் ஒதுக்கிவிட்டேன். ஹரிததுங்கா மலைப்பிரதேசத்திலும் சோனாவின் குளிர்ப்பிரவாகத்திலும் மூழ்கியே இருப்பதால் வெந்நீர் தேவையில்லாமல் போய்விட்டது. எரிபொருள் சிக்கனம். சரி வீட்டை விட்டு வெளியே வந்தால் மனிதர்கள் பரபரவென இருசக்கர வண்டிகளிலும் நான்கு சக்கர வாகனங்களிலும் பறக்கிறார்கள். அனைத்துப் பரபரப்பும் இந்த ஒரு சாண் வயிற்றுக்காக. பசி வந்தால் பத்தும் பறந்துபோகும். திருவடியின் பசிபோக்க அந்நேரத்தில் ஒரு பிச்சைக்காரன்தானே உதவுகிறான். ஆனால் அங்கு நடப்பதுபோன்று காரியமாகும்வரை காலைப் பிடிப்பது; காரியமானபிறகு கழுத்தைப் பிடிப்பது கதைதான் நிஜ வாழ்க்கையிலும். சிற்பியும் பெருந்தச்சரும் இந்த பிச்சைக்காரனைப் போன்றே வேண்டும்வரை உபயோகப்படுத்தப்பட்டு அதிகார துஷ்பிரயோகத்தால் ஒதுக்கிவிடப்பட்டவர்களாகிறார்
விஷ்ணுபுரம் என்னைத் தாயாக்க மட்டும் செய்யாமல் எனக்கு ஞானப்பெற்றோர்களையும் தந்துள்ளது. திருவடி– லலிதாங்கி, சங்கர்ஷணன்– லட்சுமி, பிங்கலன்– சாருகேசி. பெரும்பான்மையான ஞானம் தாசிப்பெண்களிடமிருந்தே கிடைக்கிறது. அதனால்தான் என்னவோ ஆண்கள் தாசிகளைத் தேடிச் செல்கிறார்கள் போலும். இது இப்படியிருக்க பெண்ணனுபவமின்றி தான் கற்ற ஞானத்தால் மனதை வென்றாலும் இவ்வுலகை வெல்லமுடியவில்லை அஜிதனால். தன் நண்பன் சந்திர கீர்த்தியின் அரசியல் வியூகத்திற்குள் அடைபட்டுவிடுகிறான். ஒருவன் தன்னையறிய ஆரம்பிக்கிறான் என்று ஒரு சிறு பொறி ஆளும் சமூகத்தினருக்கு தெரிந்துவிட்டால் போதும் அவனை முழுமையடையவிடாது தடுத்துவிடும். மற்றெவரையும் முழுமையாக்கவும் விடாது. அதிகாரமும் பணபலமும் வலிமையும் கூட்டுச்சேர்ந்து அனைவரையும் மடமைபோதையிலேயே வைத்திருக்கும். இந்த போதையிலிருந்து விழித்தெழ வைக்க மனிதனுக்கு சிந்திக்கும் ஆற்றலை ஆசிரியர்கள் கல்விக்கூடங்களில் வளர்த்தெடுக்க வேண்டும். அங்கு, அவன் யார், அவன் எதற்காக வாழ்கிறான், எப்படி வாழ்கிறான், எப்படி வாழ வேண்டும், அவனை வாழவைப்பது எது, அவன் ஒருவன் வாழ்வதற்காக எத்தனை பேர் சாகிறார்கள் என்று சிந்திக்க ஆரம்பித்து அவன் கடமை என்ன என்றுணர்ந்து தன் கடமையாற்ற முனைப்புடன் முன்வந்து நின்றால் நிற்பவன் ஒவ்வொருவனும் கடவுளாகிறான். தனக்குத்தானே வழிபாடுகள் எதற்கு அங்கு? மூட சடங்குசம்பிரதாயங்களும் எப்படி அங்கு?
ஆசிரியர்களுக்கு மட்டும்தான் என்றல்ல இந்த முனைப்புண்டாக்கும் பங்கு வீட்டிலுள்ள ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டு. ஆனால் பெற்றோர்கள் தம் குழந்தைகளின் சிறுபிள்ளைப் பிராயம் முதல் இயேசுவையும் மரியாளையும் சிவனையும் விஷ்ணுவையும் பார்த்து கைகூப்ப வைத்து “இதோ பார் சாமியை நல்லா கும்பிட்டுக்கோ” என்று மட்டுமே பழக்கிவிடுகிறார்களே தவிர அவர்களும் உன்னைப்போல என்னைப்போல சாதாரண மனிதர்கள்தான் ஆனால் ஏன் அவர்கள் தெய்வமாக வணங்கப்படுகிறார்கள் நீ நினைத்தால் நீயும் ஒரு தெய்வமாகலாம் என்று மடிமீது அமர வைத்து உரையாடுவதில்லை. அந்தளவு நேரமும் பொறுமையும் தாய்தந்தையருக்கு இருப்பதுமில்லை. சரி முன்மாதிரியாகவாவது நடந்துகொள்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. எந்நேரமும் கூச்சலும் குழப்பமும். எப்படி அந்தக் குழந்தை தெய்வமாகும்?
இதுவரை சொன்ன இந்த முனைப்பு இருந்தால் மட்டும் போதாது. முனைப்பு குடியிருக்க வேண்டிய மனநிலைகளைப் பற்றி மூன்றாம்பாகம் மணிமுடி காண்டம் பேசுகிறது. இன்றைய உலகின் நிலையில்லா மனநிலைகளையும் அர்த்தமில்லா மரணங்களையும் மாதவன், பத்மன், பாவகன் போன்றோர்களின் முடிவு காண்பிக்கிறது. குழப்ப மனநிலையை யோகவிரதரின் ஓட்டம் காண்பிக்கிறது. இதில் தெளிந்த மனநிலையுடன் திடமான நெஞ்சம் கொண்ட நீலி மட்டுமே முன்னேறுகிறாள். வாழ்வினை அச்சமின்றி எதிர்கொள்கிறாள். தன்னை நம்பினோர்க்கு வழிகாட்டியாக இருந்து அவர்களுக்கு வாழ்வளிக்கிறாள். அவர்களால் தெய்வமாக்கப்படுகிறாள். உண்மையில் தெய்வம் தெய்வம் என்று சொல்கிறோமே அது இதனைத்தான்.
இறுதியாக எல்லாவற்றிலிருந்தும் ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது. விஷ்ணுபுரத்தில் வாழாத மனிதனுமில்லை, தெய்வமுமில்லை. ஒவ்வொரு மனிதனும் தனக்குள்ளேயே தெய்வத்தை வைத்துக் கொண்டு எங்கெங்கோ தேடியலைகிறான். இன்று எனக்குள்ளே புதைந்திருக்கும் தெய்வத்தைத் தோண்டியெடுக்கும் கடப்பாரையாக நான் “விஷ்ணுபுரம்” நாவலை உணர்கிறேன்.
அன்புடன்,
மேரி எர்னஸ்ட் கிறிஸ்டி.
அன்புள்ள கிறிஸ்டி,
இப்போது வாட்டிகனில் இருக்கிறேன். இங்குள்ள பிரம்மாண்டமான புனித பீட்டர் ஆலயத்தின் முன் நிற்கையில் அதன் மாண்பும் அழகும் நெஞ்சை நிறைக்கின்றன. அதை ஆடம்பரம் என்று எளிய நோக்கில் சொல்லிவிடலாம். ஆனால் நெஞ்சு பறந்தெழும் அனுபவத்தை கலையினூடாக மட்டுமே சொல்ல முடியும். அதற்கு இன்னும் இன்னும் என்று எழும் தவிப்பு மட்டுமே உந்துசக்தியாக அமைய முடியும். கிறிஸ்துவின் எளிமையைச் சொல்ல கலைக்கு இத்தனை தங்கமும் பளிங்கும் போதாது என்றே தோன்றியது. விஷ்ணுபுரத்தின் மாபெரும் ஆலயத்தையும் அப்படித்தான் நான் புரிந்துகொள்கிறேன்
ஜெ