கோவை வாசகர் சந்திப்பு -ஒரு தாமதமான பதிவு

Eyal, Mallika and Me

 

தோளில் பையுடன் காரிலிருந்து இறங்கியபோது, மீனா சர்ச் எதிர்ப்புறம் தெரு ஆரம்பிக்கும் சந்திப்பிலேயே நின்றிருந்தார். “ஜெ சார்…” என்று ஆரம்பித்தவுடன், “அதோ அந்த கார் நிக்கிற இடத்துல ரைட் சைடு கறுப்பு கேட் வீடு” என்றார். “வெங்கி” என்று அறிமுகப்படுத்திக்கொண்டு விட்டு, கேட் தாண்டி வாசலில் செருப்பு கழட்டி தயங்கி வீட்டுக்குள் நுழைந்தேன்.

ஹாலில் ஜெ நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். பெயர்சொல்லி கைகொடுத்து கதவருகில் வலதுபக்கம் உட்கார்ந்துகொண்டேன். புதிய முகங்களோடு ஜெ வலைப்பக்கத்திலும், சொல்புதிது குழும பதிவுகளிலும் பார்த்த நண்பர்களிருந்தனர். அரங்கா, சீனு, வெ.சுரேஷ், விஜய்சூரியன், ராதா…சந்திப்பிற்கு பதிவு செய்தவர்கள் இன்னும் ஒவ்வொருவராய் வந்துகொண்டிருந்தனர். தேர்தல் நெருங்கியிருந்ததால் பெரும்பாலும் விவாதம் அரசியல் சுற்றிவந்தது; ஜெ-வின் சமீபத்திய தினமலர் கட்டுரைகள் மீதும்.

புது வாசகர்கள் சந்திப்பானதால், குறிப்பிட்ட தலைப்புகளில்லாமல், அறிமுகமும், கேள்வி பதில்களுமாய், புது வாசகர்கள் ஏதேனும் படைப்புகள் எழுதியிருந்தால் அதன்மீதான விவாதங்களுமாய் இரண்டு நாட்களுக்கு திட்டமிடப்பட்டிருந்தது.

ஜெ-வை முதன்முதலில் பார்ப்பதனால் பிரமை பிடித்ததுபோல் உட்கார்ந்திருந்தேன். காலை உணவு முடித்து பின்னறையில் ஒரு அமர்வு. புது வாசகர்களின் கேள்விகளுக்கு ஜெ பதிலளித்தார். நான் ஜெ பேசுவதையே பார்த்துக்கொண்டிருந்தேன். கோவையின் கோடைக்கு இன்னும் உடம்பு பழகாமல் வியர்த்து ஊற்றிக்கொண்டேயிருந்தது எனக்கு.

மதிய உணவு முடித்து மீண்டும் ஒரு அமர்வு. கேள்விகள் தயாரித்துக்கொண்டு போயிருந்தாலும், கேட்கத் தயங்கி மற்ற கேள்விகளையும் ஜெ பதில்களையும் தொடர்ந்துகொண்டிருந்தேன். “வேற ஏதாச்சும் கேள்விகள்?” என்று ஜெ கேட்கும்போதெல்லாம் கேள்விகள் கழுத்துவரை வந்து தயங்கி உள்ளேயே அமுங்கின. பெரும்பாலும் தத்துவம் சார்ந்த கேள்விகள்தான்; பிறகு கேட்டுக்கொள்ளலாம் என்று தள்ளிப்போட்டுக்கொண்டேயிருந்தேன்.

மாலை சிற்றுண்டி முடித்து அமர்வு தொடர்ந்தது. வியர்வை தாளாமல் இடைவேளையில் குளித்துவிட்டு வந்தேன். செல்வேந்திரன் குடும்பத்தோடு வந்திருந்தார். ”இவர்தான் இளனி” என்று இளவெயினியை மடியில் தூக்கி வைத்துக்கொண்டார் ஜெ. கதகளியில் தோய்ந்து திரும்பியிருந்தார் அஜிதன். புதுவாசகர்களுக்கு புத்தகங்கள் கொண்டுவந்திருந்தார் ஜெ.

இரவுணவுக்குப்பின் வீட்டின் பின்னால் வெளியில் சேர்கள் போட்டு உட்கார்ந்துகொண்டோம். வாசகர் ஒருவர் இரண்டு பாடல்கள் பாடினார். ஜெ கதகளியை பற்றி பேசினார். கதகளியின் தொன்மம் பற்றியும், அதை ரசிப்பதற்கு தேவையான புராணங்களின் பரிச்சயம் பற்றியும்.

படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், சூட்டிற்கு பயந்து, இரவு நடு ஹாலில் ஃபேனுக்கடியில் சட்டையை கழற்றிவிட்டு வெறும் தரையில் தலையணை வைத்து படுத்துக்கொண்டேன். மாணிக்கவேல் அப்போதுதான் வந்தார். அவரோடும் முத்துகிருஷ்ணனோடும் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன்.

மறுநாள் காலை ஜெ-வுடன் வ.உ.சி பூங்காவிற்கு ஒரு காலை நடை. காலை அமர்வில் புதுவாசகர்களின் நான்கு படைப்புகள் மேல் வாசித்து விவாதங்கள். சிறுகதை மற்றும் கட்டுரையின் வடிவமைப்பு குறித்து ஜெ விளக்கினார். செண்டிமெண்ட் (சுஜாதாவின் நகரம்), மெலோடிராமா, எமோசன்

(சு.வேணுகோபாலின் வெண்ணிலை) குறித்த உதாரணத்துடனான ஜெ-வின் விளக்கம் நல்ல திறப்பாயிருந்தது.

ஈரோடு கிருஷ்ணன், க்விஸ் செந்தில், விஜயராகவன் சார் வந்திருந்தனர்.

மதிய உணவுடன் அமர்வு முடிந்தது. புதுவாசகர்கள் ஜெ-வுடன் போட்டோ எடுத்துக்கொண்டனர். நானும் போட்டோ எடுக்க எழுந்தபோது, சிரமம் கவனித்து “நீங்க உட்காருங்க. நானே வரேன்” என்று சோஃபாவில் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டார். நண்பர்கள் ஒவ்வொருவராய் விடைபெற்று கிளம்பினர்.

ஜெ-யுடன் பேச்சு தொடர்ந்தது. அரங்கா ரவிசங்கர் போல் மிமிக் செய்து காண்பித்தார். ஜக்கியின் மேனரிசத்தையும். மாலை ஜெ-வுடன் கோவை பிரமுகர்கள் சிலரின் சந்திப்பிருந்தது. அரங்காவுடன் சிங்காநல்லூர் வரை போகலாமென்றிருந்து, கடைசியில் அவர் ஜெ-வுடன் இருக்கவேண்டியிருந்ததால் போன்செய்து வண்டி ஏற்பாடு செய்துதந்தார்.

வீடுவந்து, மல்லிகா கதவு திறக்க உள்ளே நுழையும்போதுதான் யோசித்தேன்.

“ஜெ-யுடன் ஏதாவது பேசினேனா?”

வெங்கடேஷ் சீனிவாசன்

 

முந்தைய கட்டுரைதலைகொடுத்தல்
அடுத்த கட்டுரைவாழ்க்கைமரம்