கல்வி- மேலுமொரு கேள்வி

Elementary_School

அன்புள்ள ஜெமோ

என்னுடைய இரண்டரை வயது மகளுக்கு பள்ளிக்கூடம் தேடி அலைந்த போது, இன்றைய கல்வி முறை பற்றி நீங்கள் பேசிய சில வீடியோ பதிவுகளை பார்த்தேன். என்னதான் பெற்றோர்களாகிய நாங்கள் சில தேவைகளை முன்வைத்து தேடினாலும் அந்த வசதிகளை எந்த பள்ளியிலும் என்னால் காண இயலவில்லை. முக்கியமாக தமிழ் வழி கல்வி[அரசு பள்ளி தவிர எங்கும் இல்லை, ஆனால் வீட்டில் அதற்கு பெரிய எதிர்ப்பு கிளம்பும்], விளையாட்டு, எளிமையான ப்ராஜாக்ட்கள் இப்படி எதுவுமே இல்லை. எல்லா பள்ளிகளும் பணம் ஈட்டும் ஒரே நோக்கத்திற்காகவே இயங்குகின்றன. எந்த பள்ளியிலும் விளையாட்டு மைதானமே கிடையாது, எல்லோரும் மதிப்பெண்களை தேடி ஓடும் மற்றும் ஆங்கிலம் நன்றாக பேச வைக்கும் நோக்கிலேயே உள்ளனர். இந்த சூழ்நிலையில் ஒரு பெற்றோர் எதன் அடிப்படையில் ஒரு பள்ளியை தேர்வு செய்யலாம். சிலசமயம் இன்று பரவலாகி கொண்டிருக்கிற “ஹோம் ஸ்கூலிங்” வகையை தேர்வு செய்யலாமா என்று கூட தோன்றுகிறது.

ஒரு எழுத்தாளராகவும், ஒரு பெற்றோராகவும் உங்களின் கருத்துக்கள் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

பி .கு : வீட்டில் அனைவரும் சிபிஎஸ்சி பள்ளிக்கே பச்சைக்கொடி அதுவும் 3.5 வயதில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்று. என்னை பொறுத்த வரையில் பிள்ளை எங்கு படித்தாலும் படிக்கும், நாம் தரங்களை நோக்கி ஓடவேண்டாம் என்பது .

அன்புடன்

மகாலட்சுமி

***

அன்புள்ள மகாலட்சுமி,

ஒவ்வொருமுறை பள்ளிகள் திறக்கும்போதும் இத்தகைய கேள்விகள் பெற்றோரை அலைக்கழிக்கின்றன. எந்தப்பள்ளியில் சேர்ப்பது, எந்தவகையில் படிக்கவைப்பது?

உண்மையில் இந்தக்கேள்வி கல்விமுறை பற்றியது அல்ல. குழந்தைகள் பற்றியது அல்ல. நம்மைப்பற்றியது. நாம் கொண்டுள்ள உலக உருவகம் என்ன என்பதைப்பற்றியது.

வாழ்க்கையை நாம் எப்படிப்பார்க்கிறோம் என்பதே கேள்வி. வாழ்க்கையை ‘கடுமையான போட்டியின் வழியாக உலகியல் வெற்றியை ஈட்டி மகிழ்ச்சியுடன் வாழவேண்டிய ஒரு களம்’ என நீங்கள் வகுத்துக்கொண்டிருந்தால் எந்த பள்ளியில் அதிக மதிப்பெண் எடுக்கச்செய்கிறார்களோ அதுவே உங்கள் தேர்வு.

மாறாக வாழ்க்கை என்பது பலவகையான மகிழ்ச்சிகளின் களம் என நீங்கள் புரிந்துகொண்டிருந்தீர்கள் என்றால், கண்டடைதலும் வளர்ச்சி பெறுதலும் இன்பங்களில் தலையாயவை என நினைத்தீர்கள் என்றால் உங்கள் தெரிவு பிறிதொன்றாகவே இருக்கும்.

ஒரு குழந்தைக்கு ஒரேயொரு இளமைப்பருவம்தான். அதன் உற்சாகத்தையும் விளையாட்டையும் தானாக கற்றுக்கொள்வதன் பேரின்பத்தையும் அது தன் எதிர்காலத்தின் பொருட்டு முழுமையாகவே தியாகம் செய்யவேண்டும் என்றால் அது எத்தனை முட்டாள்தனம்? அந்த எதிர்காலமோ என்னவென்றே தெரியாத ஒன்று. அப்படிக்கற்றால் எதிர்காலம் வெற்றியாகும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. அப்படி கல்லாதவர்கள் அதே வெற்றியை அடையமாட்டார்கள் என்றும் சொல்லமுடியாது.

நம் பதற்றத்துக்காக , நாம் வாழ்ந்த கடந்தகால வாழ்க்கையில் இருந்த நெருக்கடிகள்  அளித்த பயத்திற்காக, நாம் நம் குழந்தைகளை பலிகொடுக்கிறோம் என்பதே என் எண்ணம். ஆனால் நான் இதைச் சொல்லமுடியாது. ‘பாருங்க, பக்கத்துவீட்டுப்பையன் இருபத்தஞ்சு வயசிலே அமெரிக்காவிலே அஞ்சுலட்சம் சம்பாரிக்கிறான். நம்ம புள்ளையும் அங்க போகணும்’ என நம் மனம் ஓடுமென்றால் அதற்கான கல்வியே உகந்தது. ஒருவரின் தனித்தேர்வு அது.

ஏனென்றால் நம் குழந்தைகள் நாளைக்கு நாம் விழைந்து உருவாக்கி அளிக்கும் பாதையில் போகாமல் சொந்த பாதைகளை தேர்வுசெய்யும்போது நாம் பதறக்கூடும். நாம் தோல்வியடைந்தோம் என எண்ணவும் கூடும். அவ்வாறு ஆசையும் திட்டமும் இருந்தால் அதற்கான கல்வியை அவர்களுக்கு அளிப்பதே முறை. ஆம், கொட்டடிக்கல்வி. அவ்வாறு தன் மக்களுக்கு அத்தகைய போட்டிக்கல்வியை அளித்து அவர்களை ஆளாக்கி நிறைவடைந்த பல நண்பர்கள் எனக்கும் இருக்கிறார்கள். அந்த பாதையை தவறு என நான் சொல்லமாட்டேன். அது அவர்களின் வழி. எனக்கு அது சரியெனப்படவில்லை, அவ்வளவுதான்.

இன்னொரு வழி குழந்தைகளின் மகிழ்ச்சி, படைப்பூக்கம் ஆகியவை குறையாமல் அளிக்கப்படும் கல்வி. அதில் அக்குழந்தை தன் வாழ்க்கைவழியை தானே தேர்ந்துகொள்ளும் என்னும் ‘அபாயம்’ உள்ளது அதில் நிச்சயவெற்றிகள் இல்லை. உலகியல் வெற்றிகள் அடையப்படாது போகலாம். பக்கத்துவீட்டுக்காரர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டியிருக்கலாம்.. அதற்கு தயாராக இருந்தால் அவ்வழியை தேர்வுசெய்யலாம்.

அவ்வழியில் குழந்தையை அதிகப்பயணம்செய்யத்தேவையில்லாத பள்ளியில், விளையாட்டும் சுயமான கல்வியும் அதிகமாக உள்ள பயிற்றுமுறையில், நிறைய ஓய்வுநேரம் கிடைக்கும் அமைப்பில் சேர்க்கலாம். ஒன்பதாம் வகுப்புக்குப்பின் போட்டியைப்பற்றி யோசித்தால் போதும். கல்வியில் ஆர்வமுள்ள குழந்தை என்றால் ஒன்பது பத்து மேலிரு வகுப்புகளிலேயே மற்ற பிள்ளைகளுக்கு நிகராக போட்டியில் நின்றிருக்கவும் முடியும். அது இளமையையும் இழந்திருக்காது

ஜெ

 

முந்தைய கட்டுரைஎனது கல்லூரி
அடுத்த கட்டுரைதலைகொடுத்தல்