பாரதமாதா : சொல்லும் மறுசொல்லும்

1

 

 

அன்புள்ள ஜெயமோகன்,

பயணத்தின் நடுவெ இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இப்போது இதை எழுதலாமா என்றுக் கூட தயக்கம் தான். நீங்கள் திட்டவட்டமாக இது உங்களுக்கேயானப் பயணம் என்று சொல்லிவிட்டீர்கள். மிகவும் சரியானதொரு முடிவு.

இர்பான் ஹபீப்பை நீங்களும் ஒத்திசைவும் ஏனையோரும் காய்ச்சி எடுத்தப் பிறகு என்னுள் எழுந்தக் கேள்விகள் “இவர்கள் சொல்வதுப் போல் நிலம் என்பதை பெண் கடவுளாகக் கொண்டாடும் மரபு அறியாதவரா ஹபீப்? அவர் ஏன் அப்படிச் சொன்னார்? வேறுத் தரவுகள் உள்ளனவா?” வேறுத் தரவுகளை சுயமாகத் தேடியபோது கிட்டியது சுமதி ராமசாமி (இவருக்கும் ஒத்திசைவுக்கும் சம்பந்தமில்லை :-) ) என்பவர் எழுதிய “The goddess and the Nation:Mapping mother India”, Duke University Publication, கிடைத்தது. பொதுவாக பல்கலைக் கழக வெளியீடுகள் தரமானவையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வாங்கிப் படித்தேன்.

நீங்கள் காப்காவின் குறுங்கதைகளைப் படித்திருக்க மாட்டீர்கள் என்று என்று நம்புவதற்கினையானது ஹபீப்பிற்கு நிலத்தை வணங்கும் மரபு தெரியாது என்று நினைப்பது. நிலத்தை, நிலப் பரப்பை தெய்வம் என்று கும்பிடுவது எல்லா தொன்மங்களுக்கும் பொது. நிலமும் பெண்ணும் ஈணுபவர்கள், போஷிப்பவர்கள் என்றப் பொது படிமத்தை குறிப்பது தான் அது. ஆனால் ஒரு தேசத்தை, குறிப்பாக தேச வரைப் படத்தை, தெய்வாம்சம் கொண்ட தெய்வத்தோடு தொடர்புபடுத்தி வழிபடுவது என்பது நவீன, ஐரோப்பிய தாக்கத்தினால் உண்டான, iconography என்பது தான் ஹபீப் சொன்னதன் சாராம்சம். ராமசாமியின் நூல், இந்த சர்ச்சைக்கு முன் வெளி வந்தது, அதை முழுமையாக நிறுவுகிறது. பல வகையான மாதாக்கள் உள்ள இந்திய ஞான மரபில் பாரதியின்பாரத மாதாவேறு வகை. அதை வரலாற்று ரீதியான ஆராய்ச்சியில் நிறுவுகிறார் சுமதி. விரிவான நூல் மதிப்புரை எழுதியுள்ளேன்http://contrarianworld.blogspot.com/2016/06/bharat-mata-ki-jai-reaction-to.html)

தாபரை வெறும் தகவல் சேகரிப்பாளர் என்று வசைப் பாடிவிட்டீர்கள். பி..கே தாபர், பால் டண்டாஸ், ஜான் கார்ட் ஆகியோரை மேற்கோள் காட்டி, இலக்கிய சான்றுகளையும் முன் வைத்து சமணர்கள் கழுவேற்றப் படவில்லை என்று எழுதினால் அது ஏற்றுக் கொள்ளப் படுகிறது ஆனால் அதே தாபர் அதே டண்டாஸ், கார்ட், இலக்கிய சான்றுகள் வைத்து சோமநாதா சூறையாடப்பட்டது (சூறையாடப்பட்டதை அவர் மீண்டும் மீண்டும் அடிக்கோடிடுகிறார்) ஆனால் இரண்டு மக்களும், இந்துக்களும் இஸ்லாமியரும், காலப் போக்கில் இசைந்தே வாழ்ந்தனர் என்று எழுதினால் தாபரை நோக்கிமார்க்ஸியர்“, “நேருவிய மார்க்ஸியர்என்று வசைகள்.

நீங்களும் மற்றவர்களும் இந்தியாப் பற்றிய மேற்கத்திய வரலாற்று ஆராய்ச்சிகளின் குறைகளாக கூறுவதையே தாபரும் கூறுகிறார். இந்திய வரலாற்றை இந்து, முஸ்லிம், காலணியாதிக்க காலகட்டமாக செயற்கையாக பிரித்ததோடல்லாமல் இந்துக் காலக்கட்டத்தை சமஸ்கிருத சான்றுகளை சார்ந்தும், இஸ்லாமியக் காலக் கட்டத்தை துருக்கியபெர்ஷிய சான்றுகளை மட்டுமேக் கொண்டு ஆய்வு செய்து பலத் தவறான impressions உருவாக்கப்பட்டு விட்டன என்று சாடுகிறார்.

இது சம்பந்தமாக பல நூல்களை ஒப்பு நோக்கியும் ஆராய்ந்த போதும் எனக்கு ஒரு முக்கியமான புரிதல் கிடைத்தது. நாம் பொதுவாக V.A. Smith போன்றவரை வரலாற்று ஆய்வாளர் என்றே குறிப்பிடுகிறோம். ஜதுநாத் சர்க்கார் பற்றி சமீபத்தில் சிகாகோ பல்கலஒக் கழக ஆசிரியர் ஒருவர் எழுதிய நூலில் ஸ்மித் வெறும் அரசுப் பணியாளர் மட்டுமே என்கிறார். காலணியாதிக்கக் காலத்தில் இதுப் போன்ற அதிகாரிகள் இங்கிலாந்துப் பல்கலைக் கழகங்களில் வரலாற்று ஆசிரியர்களாக பரிணமித்தனர் என்கிறார். இன்னும் சொல்லப் போனால் இந்திய வரலாற்று ஆய்வு என்பதே மிக சமீபத்திய ஒன்று தான்.

தாபர் தரவுகளை திரித்து விட்டார் என்று, வேறு யார் நம்ம ஒத்திசைவு தான், கூறப் பட்டதால் அவர் சுட்டிக் காட்டும் தரவுகளை சரிப் பார்த்தேன். தாபர் புடம் போட்டத் தங்கமாய் மிளிர்கிறார் என்றால் மிகையில்லை. நூல் மதிப்புரையாக மட்டுமின்றி அதற்கு மேலும் தொடர்புடையத் தரவுகளையும் சேர்த்து எழுதப்பட்டது http://contrarianworld.blogspot.com/2016/05/somanatha-temple-mahmud-of-ghazni.html

 

இவ்விரண்டு பதிவுகளும் உங்களைப் போன்ற மற்றவர்களின் விமர்சனங்களால் தூண்டப்பட்டு எழுதப் பட்டதே. ஹபீப் சமாசாரத்தில் நீங்கள் முன் வைத்த வசைகள் கடுமையானவை.

இதையொட்டி எந்த விவாதம் எங்கு நிகழ்ந்தாலும் ஹபீபின் கூற்றுக்கு ஆதாரமுண்டா என்னும் வினாவே எழாது. அவரது அரசியலுக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என்னும் அடிப்படையிலேயே தரப்புக்கள் இருக்கும். அறிவுத்தளத்தில் ஹபீப்  ‘முற்போக்குஎன்பதனால் அவருக்கு ஆதரவே இருக்குமென அவர் அறிந்திருக்கிறார்.”

எதை மற்றவர்கள் செய்வார்கள் என்கிறீர்களோ அதயே தான் நீங்கள் வெளியிட்ட ஜடாயுவின் கடிதமும் செய்தது. நீங்களும்.

“‘காவி அரசியலுக்குஎதிராக வரலாற்றாய்வை கையாளவேண்டுமென வாதிட்டவர்.” — அதில் என்னத் தவறு? இன்று நீங்கள் திராவிட அரசியலின் புளுகு மூட்டைகளுக்கு எதிராக செய்வது அது தானே? அது தானே செய்யப் பட வேண்டும்? இன்று தமிழகத்தில் வைக்கம் போராட்டம் பற்றி நீங்கள் முன் வைத்த ஆதாரங்களை மறுத்து வரலாற்று ரீதியாக எழுத எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்கள்? இந்திய அளவில் ஹபீப் போன்றவர்களாவது மிச்சம் இருப்பது நம் நல்லூழ். நான் என்றுமே காவி அரசியலும் திராவிட அரசியலும் ஒரே நாணயத்தின் இருப் பக்கங்கள் என்று கருதபவன். இருவரின் வழி முறைகளும் ஒன்றே. இருவருமே வரலாற்றை திரிப்பதில் சமர்த்தர்கள். தமிழகத்தில் திராவிட அரசியல் வெற்றி அடைந்ததற்கு முக்கியக் காரணம் ஹபீப் போன்றவர்கள் இங்கில்லை என்பதால் தானே? வரலாற்று திரிபுகளுக்கு வரலாற்று ரீதியான, ஆய்வு தரத்தில், பதில் சொல்வது தானே முறை?

பாபர் மசூதி சர்ச்சையில் முன் வைக்கப்பட்ட ஒரு முக்கியமான தரப்பு சோமநாதா போன்ற சூறையாடல்கள் இரு சமூகத்தை காலா காலத்திற்கும் பிளவுப் படுத்திவிட்டது, மேலும் அதுப் போன்ற வரலாற்றுச் சோகங்களுக்கான மருந்தே அவ்வழிப் பாட்டுத் தலங்கள் மீள் உருவாக்கம் செய்யப் படுவது தான் என்பதே. ஆகவே அத்தரப்பை வரலாற்று ரீதியாக ஆராய்ந்து மாற்றுக் கருத்தாக தான் அறிந்தவற்றை தாபர் முன் வைக்கிறார். அதற்கா அவரை நாம் வசைப் பாடுவது? அவர் வெறும் தகவல் சேகரிப்பாளரா? வெறும் துல்லியமான கலைச் சொற்களும் நவீனத் தேய்வழக்குகளுமா தாபரின் எழுத்துகள்? அவர் என்ன எம்.எஸ்.எஸ். பாண்டியனா. நீங்கள் சொன்ன வசைகள் எல்லாம் எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் ‘Brahmin Non Brahmin Genealogy” புத்தகத்திற்கு பொருந்தும். இப்போது திராவிட கட்சியினர் என்னை வசைப் பாடுவார்கள் அப்படி பாண்டியனை சொன்னதற்கு. Irschick எழுதிய நூலைப் படித்த எவரும் அப்படித் தான் சொல்வார்கள். அடுத்ததாக விரிவாக எழுத வேண்டிய மதிப்புரை பாண்டியனின் நூலுக்கு தான்.

http://www.jeyamohan.in/86293#.V2cKvFfijjV

http://www.jeyamohan.in/86484#.V2cYBFfijjU

உங்கள் சுற்றுலாவில் குறுக்கிட்டதற்கு மன்னிக்கவும். ஐரோப்பாவில் கலப்படமில்லாத பொருட்கள் கிடைக்கும். இன்னொரு முறை அமெரிக்காவிற்கும் இதுப் போன்ற ஒரு சுற்றுலா வாருங்கள் பார்ப்பதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன. ஜெபர்சனின் இல்லத்தை நீங்கள் பார்க்க முடியாமல் போனது, பிலடெல்பியாவில் நேரம் செலவிட முடியாமல் போனது எல்லாம் வருத்தமே.

அன்புடன்

அரவிந்தன் கண்ணையன்

index

அன்புள்ள அரவிந்தன்

 

வழக்கம்போல விரிவான கட்டுரைகள். நான் இன்னும் ஒருமுறை வாசிக்கவேண்டும்.

 

இர்ஃபான் ஹபீபின் ஆய்வுகளைப்பற்றிய என் எண்ணத்தை தெளிவாகவே சொல்லிவிட்டிருக்கிறேன்.

 

பார்தமாதா பற்றிய விவாதத்தையே பார்ப்போம்.

அ. நிலத்தையும் நாட்டையும் பெண்ணென்றும் அன்னையென்றும் உருவகிப்பது தொன்றுதொட்டே இந்தியாவில் உள்ள வழக்கம்.

ஆ. இந்தியா அல்லது பாரதம் என்னும் கலாச்சாரப்பரப்பு அல்லது பண்பாட்டு தேசம் மூவாயிரமாண்டுகளாக இருந்து வந்துள்ளது

இவ்விரு கருத்துக்களின் மறுபக்கமாக மேலும் இரண்டைச் சொல்லலாம்

இ. நாம் இன்று கொண்டிருக்கும் நவீன தேசிய உருவகம் ஐரோப்பாவில் உருவானது. ஒரு நில எல்லை அதனுள் வாழும் ஒரே குடிகளான மக்கள் ஒரே அரசு என்னும் கட்டமைப்பு கொண்டது இது.

ஈ. மேலைநாட்டில் இந்த நவீன தேசிய உருவகம் உருவானபோது அவர்களின் பண்பாட்டு மரபுப்படி அதை தந்தை என்று உருவகித்தனர். நிலத்தை தாய் என்று உருவகித்தனர்

உ.இந்தியா என்னும் அரசியல்தேசம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே உருவானது. நவீனக்கல்வியின் வழியாகவே நாம் அந்த நவீன உருவகத்தை பெற்றுக்கொண்டோம். அதனடிப்படையில் இந்திய தேசிய இயக்கம் உருவானது. அது பல்வேறு குறியீடுகளை ஐரோப்பாவிலிருந்து எடுத்துக்கொண்டது

 

இவ்விரண்டு தளமும் கொள்ளும் இணைப்பு அல்லது தொடர்ச்சிதான் நவீன காலகட்டத்தில் ஒரு வாசகன் புரிந்துகொள்ளவேண்டியது. எப்படி இந்திய தேசிய இயக்கத்தின் போது தொன்மையான ஒரு பண்பாட்டு தேசம் ஒரு நவீன தேசமாக இயல்பாக மாற்றுருக்கொண்டது, எப்படி அதற்கான குறியீடுகள் மறு ஆக்கம் செய்யப்பட்டன, எப்படி அதற்குள் பல்வேறு கொள்கைகளும் முரண்பாடுகளும் உருவாயின என்பதுதான் ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தவேண்டியது.

 

பாரதமாதா என்னும் குறியீடு மட்டும் அல்ல பெரும்பாலான தேசியக்குறியீடுகள் இந்தியத் தொல்மரபிலிருந்தே எடுத்துக்கொள்ளப்படும். ஏன் என்றால் அவையே இங்கே ஏற்கனவே மக்களின் கூட்டுநனவிலியில் ஊறியிருக்கும். அவை மட்டுமே வலுவானவை. புதியதாக எதையும் கொண்டுவந்து வைக்க அரசியலறிந்தோர் முயலமாட்டார்கள். அவற்றை மக்கள் அடையாளம் காணவே மாட்டார்கள். ஆனால் அந்தக்குறியீடுகள் நவீனச்சூழலுக்காக, நவீன அரசியலுக்காக உருமாற்றமும் செய்யப்பட்டிருக்கும். அதாவது பண்பாட்டுத்தேசியத்தின் குறியீடுகள் நவீனதேசியத்துக்குரியனவாக ஆக்கப்பட்டிருக்கும். அந்த நுணுக்கமான மாற்றத்தைப்பற்றியே இந்தியாவின் பண்பாட்டாய்வுக்களத்தில் பேசப்படவேண்டும்.

 

இது அத்தனை எளிதானது அல்ல. மிகமிக நுணுக்கமான விவாதம் மூலம் விரிவாக்கிக்கொள்ளவேண்டிய ஒரு விஷயம் இது. பல்வேறு பிழைகள், மாற்றுப்புரிதல்கள் நிகழும் களம். இதுசார்ந்து இ.எம்.எஸ் நாற்பதாண்டுகளுக்கு முன்னர் எழுதியவற்றில் உள்ள கவனமும் சூட்சுமமும்தான் நான் அளவுகோலாகக் கொள்பவை.

 

ஹபீப் செய்வது என்ன? இரண்டாவது பகுதியை முதல்பகுதிக்கான மறுப்பாக வாதிட்டுக் காட்டுகிறார். நவீன தேசியம் ஐரோப்பாவிலிருந்து வந்தது, ஆகவே இந்தியாவிற்கு பண்பாட்டுத்தேசிய மரபு இல்லை, அதுவும் ஐரோப்பிய உருவாக்கமே என வாதிடுவதற்கு சமானமான ஒரு மழுங்கல் இது. ஆய்வுக்குரிய மொழி என்பது நிதானமே. அரசியல் களத்தில் கவனிக்கப்படவேண்டும் என்பதற்காக அதை ஒருவகை வம்பின் மொழியில் சீண்டலின் மொழியில் ஒற்றைப்படையாக சொல்லும்போது ஆய்வுக்கான அடிப்படைத்தகுதியே இல்லாமகாகிவிடுகிறது.

 

நம் பண்பாட்டாய்வில் உள்ள ஒரு நுணுக்கமான சிக்கலை ஒரு பக்கம்  அவர்கள் மூர்க்கமாக ஒற்றைப்படையாக்குகிறார்கள். மறுபக்கம் அவர்களை அரசியல்களத்தில் எதிர்கொள்வதற்காக இவர்களும் அதேபோல மூர்க்கமாக ஒற்றைப்படையாக்குகிறார்கள். இருதரப்புமே எதிர்ப்புக்குரியவை என்பதே என் எண்ணம். ஒன்றின் மேல் உள்ள எதிர்ப்பரசியலால் இன்னொரு தரப்பின் மழுங்கடித்தலை ஏற்றுக்கொண்டால் இங்கெ வரலாற்றாய்வே இருக்காது,வெற்று அரசியல்வம்புகளே எஞ்சும்

 

சுமதி ராமசாமி குமரிக்கண்டம் பற்றி எழுதிய நூலை வாசித்திருக்கிறேன். முக்கியமான நூல். அவரைப்பற்றி எழுதியிருக்கிறேன். மேலைநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு உரிய சில அடிப்படையான முன்முடிவுகள் உடையவர் என்றாலும் விரிவான ஆய்வுமுறைமை கொண்ட ஆய்வாளர். பார்க்கிறேன்.

 

ஜெ

 

முந்தைய கட்டுரைபண்டைய கழிவறை முறை
அடுத்த கட்டுரைகடைநிலை பொருளாதாரம் – அறுந்த நூல்கள்