இப்போது பாரீஸில் இருக்கிறேன். காலை ஆறுமணிக்கு வந்த தொலைபேசி அழைப்பில் கவிஞர் கதிர்பாரதி பேசினார். குமரகுருபரன் மறைந்தார் என்று அவர் சொன்னபோது நெடுநேரம் யார் என்றே புரியவில்லை. மறையக்கூடியவர்கள் என்று சிலரை நம் மனம் கணக்கிட்டிருப்பதில்லை. புரிந்ததும் இறப்புச்செய்திகள் அளிக்கும் வெறுமை, சலிப்பு, எவரிடமென்றில்லாத ஒரு கோபம்.
தொலைதூர அயல்நிலத்தில் இறப்புச்செய்தியைக் கேட்பது மேலும் அழுத்தம் அளிக்கிறது. மனுஷ்யபுத்திரன் காலையிலேயே அழைத்திருந்தார். அதைப்பார்த்தபோது உடனே பேசவேண்டும் என்று மனம் எழுந்தது. பின்னர் மீண்டும் சலிப்பு
குமரகுருபரன் எழுத்தின் வழியாக அன்றி எனக்கு பெரிய அறிமுகம் இல்லாதவர். நான் அவரை இரண்டுமுறை மட்டுமே சந்தித்திருக்கிறேன். என் கூட்டம் ஒன்றுக்கு வந்திருந்தார். அதன்பின் அவரது கவிதை வெளியீட்டுக்கு நான் சென்றிருந்தேன். புகைப்படங்களில் கௌபாய் போல போஸ் கொடுப்பவர் நேரில் இனிய எளிய இளைஞராக இருந்தார்.
குமரகுருபரன் எனக்கு அறிமுகமானது சினிமா பற்றிய அவரது நூல் வழியாக. அதை எனக்கு அனுப்பி முன்னுரை அளிக்க முடியுமா என்று கேட்டிருந்தார். நான் முன்னுரைகள் எழுதுவதில்லை என கறாராக பதில் அனுப்பினேன். ஆனால் சும்மா அந்த நூலின் கட்டுரைகளை வாசித்தபோது ஊக்கமடைந்தேன். முன்னுரை எழுதி அனுப்பினேன்.
தொடர்ந்து அவரது கவிதைகளை கவனிப்பவனாக இருந்து வந்திருக்கிறேன். அலைக்கழிப்பும் தனிமையும் கொண்ட அவரது கவிதைகள் தமிழ்க்கவிதையின் புதிய வழிப்பாதை ஒன்றை திறந்தன என்று கணித்தேன். கடைசியாக வந்த தொகுதிவரை அவை தர்க்கமின்மையும் மொழிக்கூர்மையும் முயங்கும் படைப்புகளாக இருந்தன
யோசிக்கையில் குமரகுருபரன் ஒவ்வொரு நாளும் சின்னச்சின்னத் தற்கொலைகளையே செய்துகொண்டிருந்தார் என்று படுகிறது. குடி, துயில்நீப்பு, கால ஒழுங்கின்மை, கொந்தளிப்பு. கடைசியாக அவரது கவிதைவெளியீட்டுவிழாவில் பார்த்தபோது அவரால் நடக்கவே முடியவில்லை.
மீண்டும் மீண்டும் இது நிகழ்கிறது. கவிஞர்கள் இப்படித்தான் இருக்கவேண்டும், இப்படித்தான் செல்லவேண்டும் என வேறெங்கோ முன்னரே முடிவாகிவிடுகிறது போலும்.