சிறுகதை, விடுபட்ட பெயர்கள்

12

 

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களே!

தங்களின் ‘சிறுகதையின் வழிகள்: தமிழ் சிறுகதை நூற்றாண்டு’ என்ற கட்டுரையை ஆனந்த விகடன் ‘தடம்’ ஜூன் மாத இதழில் வாசித்தேன். தமிழ்ச் சிறுகதையின் தோற்றத்திலிருந்து அதன் வளர்ச்சி மேலும் அது இன்று சென்றடைந்திருக்கும் இடம் வரை தெளிவாக விளக்கியிருந்தீர்கள். அன்று தொட்டு இன்று வரையுள்ள அத்துணை சிறுகதை ஆசிரியர்களையும் பதிவு செய்திருந்தீர்கள். இருந்தும் எனக்கொரு மன வருத்தம் ஏற்பட்டது. தமிழின் ஆகச் சிறந்த படைப்பாளிகளான பிரேம்-ரமேஷ் கதைகளை குறிப்பிடாமல் ஒதுக்கியிருந்தீர்கள். ஏன்? பிரேம் ரமேஷ் கதைகள் சிறுகதை வகையைச் சேராது என்றா அல்லது அதைத் தாண்டி ஏதுமா?

இன்றைய தமிழ்ச் சமூகம் அவ்வாளுமைகளை புறக்கணிப்பதாக உணர்கிறேன்.

மணிகண்டன்

புதுக்கோட்டை

***

அன்புள்ள மணிகண்டன்

பிரேம் ரமேஷை நான் பதினைந்தாண்டுக்காலமாக அறிவேன். எனக்கும் அவர்களுக்கும் பல கருத்துமுரண்பாடுகள் உண்டென்றாலும் அவர்களை தொடர்ந்து முன்வைத்து வருபவன். சொல்லப்போனால் இத்தனை ஆண்டுக்காலத்தில் நான் மட்டுமே சீராக அவர்களின் பெயர்களைச் சொல்லிவருகிறேன். அவர்களின் முக்கியமான பங்களிப்பு கவிதையிலும், இலக்கியக்கோட்பாட்டு விவாதங்களிலும்தான் என்பதே என் எண்ணம். கவிதையில் தமிழின் புதியகவிஞர்களில் முதன்மையான நால்வரில் ஒருவராக அவர்களை சொல்லிவந்துள்ளேன்

பிரேம் ரமேஷ் முக்கியமான கதைகளை எழுதியிருக்கிறார்கள். முதன்மையான ஒரு கதையை சொல்புதிதில் நானே வெளியிட்டிருக்கிறேன். ஆனால் என்னுடைய கட்டுரை என்பது ஒரு பட்டியல் அல்ல. அதை நான் நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் நூலிலேயே அளித்துள்ளேன். இது ஒரு குறுக்குவெட்டுத்தோற்றம். தமிழ்ச்சிறுகதையின் பொதுப்போக்குகளைத் தொட்டுச்செல்லும் கட்டுரை அது. அதில் ஒரு பொதுப்போக்கைத் தொடங்கிவைத்தவர்கள், அப்போக்கை எவ்வகையிலேனும் ‘தொடர்ச்சியாக’ முன்வைத்து எழுதியவர்களே சொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஓரிரு நல்லகதைகளை எழுதிய பலர் உள்ளனர். அவர்கள் அனைவரையும் சொல்லமுடியாது. அக்கட்டுரையில் ந.சிதம்பர சுப்ரமணியனோ, எம்.எஸ்.கல்யாணசுந்தரமோ, ந.முத்துச்சாமியோ, சார்வாகனோ, ஆர்.சூடமணியோ, சம்பத்தோ அதனால்தான் சுட்டப்படவில்லை. அப்படி பல படைப்பாளிகளைச் சுட்டிக்காட்டமுடியும். இலக்கியப்பங்களிப்பு என்பது தொடர்ந்து அதில் ஈடுபடுவதன் மூலம் அளிக்கப்படுவது.

ஆனால் இப்படி பிடித்த படைப்பாளிகளைச் சுட்டிக்காட்டி ஒருவர் விவாதத்தில் ஈடுபடுவது என்பது மிகமிக முக்கியமானது. ஏனென்றல் பார்வைக்கோணங்கள் வேறுபடுபவை. இறுதிப்பட்டியலை எவரும் அளிக்கமுடியாது. பலகோணங்களில் பேசப்படும்போதே இலக்கியம் தெளிவடைகிறது. அதை காழ்ப்போ உள்நோக்கமோ இல்லாமல் அக்கப்போரின் தளத்தில் அல்லாமல் செய்வதிலேயே இலக்கியத்தின் வெற்றிகரமான செயல்பாடு உள்ளது

ஜெ

 

முந்தைய கட்டுரைபன்னிரு படைக்களம் முடிவு
அடுத்த கட்டுரைகடவுள், மதம் -கடிதங்கள்