கவிஞனின் சிறை

1

[தேவதச்சனுக்கு 2015க்கான விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவில் பேசப்பட்ட உரை]

அரங்கில் கூடியிருக்கும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய மூத்தசகோதரரும் பிரியத்துக்குரிய எழுத்தாளருமான நாஞ்சில் நாடன் இந்த மேடையில் அமர்ந்திருக்கிறார். என்னுடைய ஒருமையில் நான் அழைக்கும் ஒரே நண்பனாகிய யுவன் சந்திரசேகர் அமர்ந்திருக்கிறார். இந்த அரங்கில் இரண்டு முறை பாலுமகேந்திரா வரவேண்டியதாக இருந்தது. ஒருமுறை அவர் தயாரானபோது அவர் உடல்நிலை கருதி நான் தான் வரவேண்டாம் என்று சொன்னேன். இந்த மேடையில் அவருடைய வடிவமாக அமர்ந்திருக்கும் திரு வெற்றிமாறன் அமர்ந்திருக்கிறார். என்னுடைய இளமைக்காலத்தில் ஒரு பகுதியாக இருந்த நண்பரும் எதிரியுமாக இருக்கும் நண்பர் லக்ஷ்மி மணிவண்ணன் அமர்ந்திருக்கிறார். பல வகையிலும் இந்த அவை எனக்கு மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது

நண்பர்களே யூமா வாசுகி எழுதிய ஒரு அழகிய கவிதை நினைவுக்கு வருகிறது. அவர் தன்னைப்பற்றி எழுதிய கவிதை என்று அதை சொல்லலாம் அவர் ஒரு ஓவியர். படம் வரைந்து கொடுப்பதாக சொல்லி வெவ்வேறு மனிதர்கள் தங்களுடைய புகைப்படங்களை அவரிடம் தருகிறார்கள். அந்த புகைப்படங்கள் அந்த புகைப்படங்களை ஒட்டி இவர் வரைந்த படங்கள் ஆகியவை இவர் பாக்கெட்டில் பல்வேறு இடங்களில் இருக்கின்றன. வீட்டை விட்டு அவசரமாக கிளம்பிப்போகும்போது அவசரத்திற்கு பணம் என்று சொல்லி அந்த படங்களை எடுத்துச் செல்கிறார்.”பேருந்தில் எனக்கு பயணச்சீட்டை நீட்டும் டிக்கெட் தருபவர் நான் பதிலுக்குஅளித்த புகைப்படத்தை பார்த்து திகைக்கிறார். ஒரு சிகரெட் பற்றவைத்துவிட்டு அதற்கு ஒரு புகைப்படத்தை கொடுக்கும்போது ஒரு பெரிய நிலைகுலைவு உருவாகிறது. ஒரு கடைக்கு போய் நான் அளித்த புகைப்படத்தில் ஒரு பெண் துயரமாக புன்னகைக்கிறாள்” என்று அந்த கவிதை.

ஒவ்வொன்றுக்கும் லௌகீக மதிப்பு ஒன்று இருக்கிறது. அந்த லௌகீக மதிப்புக்கு அப்பாற்பட்ட ஒன்றை அதற்கு விலையாகக் கொடுக்கும்போது அந்த மதிப்பீடு திகைப்படைந்து விடுகிறது. முன்பு ஒரு மலையாள கவிஞன் எழுதினான்.”இந்தக் கவிதை உங்களுக்கு என்ன தரும்? இதை வைத்து பச்சரிசி கூட வாங்க முடியாது” மலையாளிகள் பொதுவாக பச்சரிசி சாப்பிடமாட்டார்கள், ரேஷனில்தான் வேறுவழியில்லாமல் பச்சரிசி வாங்குவார்கள். ஏழைகள் மட்டும்.”பச்சரிசி கூட வாங்க முடியாத இந்த பன்னிரண்டு வரிகள்” என்று அவர் தன் கவிதையை சொன்னார்.

உலகியல் மதிப்பு அறவே இல்லாத, எந்தக் கடையிலும் எவருமே கைநீட்டி வாங்காத, எந்தப் பிரமுகரும் திரும்பி பார்க்காத, எந்த உலகியலாளனுக்கும் என்னவென்றே தெரியாத ஒரு செயல்பாடு கடந்த மூவாயிரம் நாலாயிரம் வருடங்களாக இந்த உலகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. கவிஞனுடைய பக்கத்து வீட்டுக்காரன் “இவர் என்ன செய்கிறார்?” என்று நாம் கேட்டால் விழிப்பார். விளக்கினால் திகைப்புடன் “அப்படியா!” என்று கேட்பார். ஆனால் இந்த செயல்பாடு கடந்த மூவாயிரம் வருடங்களாக உலகத்தில் எந்த நாகரீகத்திலும் அறுபட்டதே கிடையாது. இவ்வளவு பயனற்ற, இந்த அளவு எந்த நேரடி விளைவுகளையும் உருவாக்காத, ஒரு செயல்பாடு இத்தனை தூரம் பேணி நடத்தப்படும் அளவுக்கு மனித குலத்திற்கு ஏன் அது முக்கியமாக இருக்கிறது?

இந்தக் கேள்வியிலிருந்து தான் கவிதையை அணுக வேண்டும். ஒரு இளைஞன் கவிதை எழுதுகிறேன் என்று சொன்னால் ஒரு லௌகீகன் “தம்பி, வேறு ஏதாவது வேலையை பாரு, உன் நன்மைக்காகச் சொல்கிறேன்” என்று தான் சொல்வான். ஆனால் அவனால் கவிதை எழுதாமல் இருக்க முடியாது. எங்கோ ஒருவன் இந்தக் கவிதைக்காக தேடி கண்டடைந்து பரவசம் அடைந்து கொண்டும் இருப்பான். இவர்களுக்குள் இருக்கும் இந்த மர்மமான தொடர்புறுத்தல் ஒரு சிலந்தி வலை போல அந்த சமுதாயத்தில் படர்ந்தபடியே இருக்கிறது. அழிவதேயில்லை. சிலந்திவலை போல நொய்மையானதும் இல்லை. அழியாததும் இல்லை. அதன் பொறியியலை இன்னும் இவ்வுலகு அறியவில்லை.

இந்தியாவில் மட்டுமல்ல, தமிழில் மட்டுமல்ல, உலக அளவில் கூட ஒருவகையான தலைமறைவு செயல்பாடாகத்தான் இன்றைக்கும் கவிதை இருந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் கிட்டத்தட்ட அரைகிலோமீட்டர் நீளமுள்ள புத்தகக் கடைகளை நான் பார்த்திருக்கிறேன். புனைவற்ற எழுத்துக்கள் எல்லாம் பல பல அடுக்குகளாக இருக்கும். நாவல் பல பல அடுக்குகள் இருக்கும். கவிதை என்பது பெரும்பாலும் ஒரு அடுக்கு தான் இருக்கும். அதிலும் வால்ட் விட்மன் போன்ற பழைய கவிஞர்கள் தான் இருப்பார்கள். புதுக்கவிஞர்களுடைய ஒரு கவிதைத் தொகுப்பை வாங்குவது பெரும்பாலும் சாத்தியமில்லை. கடைகளில் விற்கப்படுவதில்லை. புத்தகங்களின் சொர்கமான அமெரிக்காவில்கூட.

கிட்டத்தட்ட எல்லா இடத்திலும் ஒரு தற்கொலைபடைச் செயல்பாடு மாதிரிதான் இவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். நாஞ்சில்நாடன் அவர்கள் இங்கே சொன்னார், பெரிய அமைப்புகள் கவிஞர்களுக்கு விருதுகள் அளிப்பதில்லை என்று. விருது கொடுப்பவர்களுக்கு ஒரு பிரச்னை இருக்கிறது. தேவதச்சனுக்கு விருது என்று சொன்னால் “ஏங்க, மொத்தமா நீட்டி அடிச்சா நாப்பது பக்கம் வருங்க. அதுக்கா சாகித்ய அகாடமி?” என்று கேட்பார்கள். “வரிகளை முறிச்சு முறிச்சு போட்டு நாலு தொகுதிகளாக போட்டிருக்கிறார், அவ்வளவுதானே?” என்பார்கள். ஆனால் சிலப்பதிகாரமே அறுபது பக்கத்துக்குள்தான் வரும். லௌகீகர்களுக்கு அதை சொல்லி புரியவைக்க முடியாது. கவிதையின் இடம் என்ன, இந்த சமுதாயத்தில் அது என்ன பங்களிப்பை ஆற்றுகிறது என்பது சொல்லி புரியவைக்கும் அளவில் இல்லை. எவரேனும் வலுவாக அடிக்கோடிடாவிட்டால் ஒரு நல்ல கவிதைகூட போய்ச் சேருவதே கிடையாது.

விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டதும் தேவதச்சனைப்பற்றி தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 25 கட்டுரைகளுக்கு மேல் பிரசுரமாகியிருக்கின்றன. இப்படி தொடர்ந்து பிரசுரமாகி பல தளங்களில் அந்த கவிதைகள் பேசப்பட்ட பிறகுதான் தேவதச்சனின் கவியுலகம் சார்ந்து ஒரு வாசல் புதுவாசகனுக்கு திறக்கிறது. என்னுடைய நண்பர் கிருஷ்ணன் ஒருமுறை சொன்னார். சட்ட விதிகளை சட்டவிதிகளாகப் படித்தால் நினைவில் நிற்காது, அது ஏதாவது வழக்குடைய பகுதியாகப் படித்தால் நினைவில் நிற்கும் என்று. கிட்டத்தட்ட அதேபோலத்தான் கவிதையும். அதாவது ஒரு கவிதை அந்தக் கவிதைக்கான ஒரு சொற்களப் பின்னணியோடு, அக்கவிதை நிகழும் சூழலோடு கொண்டுவந்து வைக்கப்படும்போது தான் புது வாசகனுக்கு பிடிகிடைக்கிறது. அதாவது கவிதையில் அதற்கான ’காண்டெக்ஸ்ட்’ இருப்பதில்லை. அதை வாசிப்புசூழல்தான் உருவாக்கவேண்டும். ஆகவே கவிதைதான் ஒரு சூழலில் அதிகமாகப் பேசப்படவேண்டும்.

இப்படி ஒரு தொடர்பாடல் நம் சூழலில் நடந்துகொண்டிருக்கிறது. மிகச்சிலரே அறிந்த ஒரு பொதுக்கனவு. அதற்காக பலர் வாழ்க்கையை உருக்கி அர்ப்பணித்திருக்கிறார்கள். நான் லக்ஷ்மி மணிவண்ணன் அழகான துடிப்பான இளைஞனாக பைக்கில் வருவதை பார்த்திருக்கிறேன். அவருடைய வாசலை அந்த விஷக்கன்னி தட்டுவதை அப்போதே நான் பார்த்தேன். அப்படி உயிர் உறிஞ்சித் துப்பப்பட்ட பல கவிஞர்களை எனக்குத் தெரியும். திரும்ப திரும்ப இது ஏன் எல்லா சமுதாயங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது? அது சமூகத்திற்குத் தேவையாகிறது. ஆம், நம்மில் மிகச்சிறந்த கனவுஜீவிகளைக் கொன்று தின்றுதான் நாம் வாழவேண்டியிருக்கிறது.

எமர்சன் தன்னுடைய இயற்கை என்ற கட்டுரையில் சொல்கிறார் மொழி அதனுடைய ஆரம்ப நிலையில் முற்றிலும் கவிதையாகத்தான் இருந்தது. அதன் பிறகு தான் புழக்கம் வழியாக அது கவிதையாக அல்லாமல் ஆக்கப்பட்டது என. அதனுடைய ஆதித்தளத்தில் எல்லா வார்த்தையும் கவிதைதான். நீங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையுமே ஒரு படிமமாக இருப்பதைப் பார்க்கலாம். காக்காவின் மூக்கு என்று சொல்கிறோம். பொதுவாக நம் சாதாரண வாழ்க்கையில் ஐந்து அல்லது ஆறு சொற்றொடர்களுக்கு ஒருமுறை படிமங்களை பயன்படுத்தாமல் யாராலும் பேச முடியாது என்று சொல்வார்கள். மொழி உருவாகிவந்த காலகட்டத்தில் அது அழகிய படிமங்களாக இருந்திருக்கிறது. பிறகு நாம அதை பயன்படுத்தத் தொடங்கினோம். மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறோம். சமையலைறைப்பாத்திரங்கள் போல புழங்கி புழங்கி அதற்கு ஒருவிதமான கூர்மையின்மை வருகிறது. அந்தக் கூர்மையின்மையை மீண்டும் கூர்மையாக்கும் செயல்பாடாக மொழியின் மூலையில் எங்கோ ஒரு இடத்தில் நடந்து கொண்டிருக்கிறது கவிதை.

கோவை நண்பர் ஒருவருடைய தொழிற்சாலைக்கு போயிருந்தேன். அதற்கு பின்னால் இரண்டுபேர் உட்கார்ந்து அங்குள்ள இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் ஊசிகளை கூர்தீட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த தொழிற்சாலை போன்றது தான் நம் மொழி. அதில் தொடர்ந்து பின்னால் இரண்டுபேர் கூர் தீட்டிக்கொண்டே இருக்கிறார்கள், அவர்களை நாம் பார்ப்பதில்லை. அவர்களே கவிஞர்கள். ஒவ்வொரு பண்பாட்டுக்கும் பின்னால் அதை செயலூக்கம் கொண்டதாக, உயிர்த்துடிப்புள்ளதாக ஆக்கும் ஒரு சின்ன குழு ஊதியமில்லாமல் பழிக்கப்பட்டு இழிக்கப்பட்டு ஏதோ ஒரு மூலையில் செயல்பட்டுகொண்டிருக்கிறது. அவர்கள்தான் கவிஞர்கள், கலைஞர்கள். அவர்களுக்கு அந்தப்பண்பாடு பெருமளவு கடன்பட்டிருக்கிறது.

நோபல் பரிசை எடுத்துக் கொண்டால் கூட மிகக்குறைவாகத்தான் அது கவிஞர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மிகச் சமீபமாகத்தான் அது அதிகமாக கவிஞர்களுக்கு அளிக்கப்படுகிறது. கவிஞர்களுக்கு ஒவ்வொரு முறையும் அளிக்கப்படும்போதும் அந்தப் பெயர் பெருமளவில் ஒரு அதிர்ச்சியை உருவாக்குவதை உலக அளவில் பார்க்கலாம். தாமஸ் டான்ஸ்ட்ரூமக்கு 2011-ல் நோபல்பரிசு அளிக்கப்பட்டபோது அந்த ஊர்க்காரர்களே அதிர்ச்சி அடைந்தார்கள். உலக அளவில் யார் இவர் என்ற திகைப்பு. அதற்குபிறகு அவருடைய கவிதைகள் மொழிபெயர்ப்பாகி வருகின்றன. பின்புதான் அவர் மேல் கவனமே விழுந்தது.

ஒரு மொழியின் பிறப்புக் கணம் என்பது கவித்துவமாகத்தான் இருக்கும். அதை எப்போதுமே பழங்குடிகளுடைய மொழிகளில் பார்க்கலாம். யானையுடைய மூக்கில் இருக்கும் அந்த நீளமான குழாயை கை என்று அவன் எப்போது சொன்னான்? எந்த தருணத்தில் மாட்டின் தலையில் இருப்பதும் மரத்தில் கிளையாக வளர்ந்து நிற்பதும் கொம்பு என்று தோன்றியது? ஒரு விஷயத்தை பார்த்தவுடனே அதை ஒரு கவிதையாக கவித்துவமாக உருவகிக்கும் பண்பு பழங்குடிகளின் மொழிக்கு இருக்கிறது. ஏனெனில் பழங்குடிமொழிகளில் குறைவான வார்த்தைகள் தான் இருக்கின்றன. அவை மொழிகள் அல்ல, டைலக்டுகள். குறுமொழிகள். ஆயிரம் அல்லது ஆயிரத்தைநூறு வார்த்தைகளுக்குள் அவர்கள் தொடர்புறுத்தியாக வேண்டும்.

இன்னொரு விஷயம், மிகச்சிறிய, வரையறுக்கப்பட்ட வட்டத்திற்குள்தான் அவர்கள் தொடர்புறுத்தவேண்டும். ஒருவர் என்ன சொல்கிறார்கள் என்று இன்னொருவருக்கு நுட்பமாகப்புரியும். என் இளவயதில் ஆட்டின் இலை என்று அதன் காதை சொல்வதைக் கேட்டிருக்கிறேன். “வயல் சிரிக்கிறது” என்று சொன்னால் சகவிவசாயிக்குப்புரியும். குழூக்குறி என்பது இப்படித்தான் செயல்படுகிறது. பழங்கால மொழிகள் அனைத்துமே குழூக்குறிகள்தான். இப்படி மொழி தன்னை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் செறிவாக்கிக் கொண்டே போகும் செயல்பாடுதான் கவிதையை மேலும் மேலும் சூட்சுமம் நோக்கிக் கொண்டு போகிறது. சங்கப்பாடலைப்பற்றி ஆராய்ந்த போது ஏ கே ராமானுஜம் சொல்கிறார், என்ன காரணத்தினால் இந்தப்படைப்புகள் இவ்வளவு subtle ஆக இருக்கின்றன? இவ்வளவு மர்மம் கொண்டவையாகவும் அடங்கிய மொழியில் சொல்லக்கூடியவையாகவும் இருக்கின்றன? அவற்றின் அத்தனை அர்த்தங்களையும் வாசித்து எடுக்கும் அவ்வளவு பெரிய அறிஞர் குழு அன்றைக்கு இருந்ததா? இல்லை, அது ஒரு சிறியவட்டம்தான்.

கருங்கல் அயலது மாணை மாக்கொடி

துஞ்சு களிறு இவரும் நாட

’கருங்கல் அருகே இருந்த போதும் கூட தூங்கும் யானைமேல் படரும் மாணை கொடியின்நாடனே நான் உன்னை நம்பினேன்’ அவ்வளவுதான் கவிதை. அது ஒரு பெரிய நம்பிக்கை துரோகத்தின், பெரிய ஏமாற்றத்தின், துயரத்தின் கதை. அதை அந்த மாணைக் கொடியின் மடத்தனத்தில் மட்டுமே பொதிந்து வைத்து சொல்கிறது அக்கவிதை. ஏனென்றால் அதை உணரக்கூடிய மிகச்சிறிய வட்டத்துக்காக மட்டுமே அது எழுதப்பட்டது.

நாம் பண்பாட்டால் விரிய விரிய நம்முடைய மொழியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகிறோம். மொழியை தொழில்நுட்பத்துக்குக் கொண்டு போக, செய்திக்கு கொண்டு போக, சட்டம் அறிவியல் என நாம் மொழியை புறவயமாக ஆக்க, நாம் தொடர்ந்து இழந்து கொண்டே இருப்பது கவிதைதான். அந்த இழப்பை தொடர்ந்து ஈடுகட்டும் ஒன்றாகத்தான் கவிதைச் செயல்பாடு இருக்கிறது. உங்கள் உணவில் போதுமான அளவில் போஷாக்கு இல்லையென்றால் ஹார்லிக்ஸ் அருந்துவது போல என்று விளம்பரம் சொல்கிறதே அப்படி.

நாம் அன்றாட வாழ்க்கையில் தொடர்ந்து வரையறுக்கப்பட்ட மொழியில் பேசவேண்டிய அவசியம் இருக்கிறது. பல்வேறு அர்த்தங்களை மொழி கொடுக்கக்கூடாது. சொல்வதன் சுட்டு தெளிவாக இருக்கவேண்டும். நான் அரசாங்க அலுவலகத்தில் வேலை பார்த்திருக்கிறேன். ஒரு போதும் கடிதங்களை புதிதாக எழுத மாட்டார்கள். நூறுவருடங்களாக ஒரே அலுவலகல மொழிதான். ஏனெனில் அர்த்த மாறுபாடு வரக்கூடாது. புதிதாக எந்தக் கற்பனையும் அதில் சேர்ந்துவிடக்கூடாது. நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மறுவிளக்கம் கொடுக்கவோ திரிக்கவோ வாய்ப்பளிக்கக்கூடாது.

இப்படித்தான் நம்முடைய எல்லா வாழ்க்கையிலும் மொழியை கறாராக வரையறுத்து ஒரு நாணயம் போல பயன்படுத்துகிறோம். பத்து பைசா என்றால் பத்து பைசாமதிப்பு தான் அதற்கு. அது ஒரு சிற்பம் அல்ல, அது ஒரு குறியீடு அல்ல, அடையாளம் அல்ல, பத்து பைசா மட்டும்தான் இப்படி மொழியை ஒரு பக்கம் உறைய வைத்துக் கொண்டு இருக்கும் போது ஒருபக்கம் அதை நெகிழ வைக்கவேண்டிய தேவை உள்ளது. மேலும் மேலும் அர்த்தங்கள் கொடுக்கக்கூடியதாக வார்த்தைகளை மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. அந்தப்பொறுப்பு இருப்பவர்களைதான் கவிஞர்கள் என்று சொல்கிறோம்.

நாம் சாம்ஸ்கியின் ஒரு மேற்கோள் புகழ் பெற்றது ஒரு மொழியின் புதிய சொல்லாட்சிகள் கவிஞர்களிடமிருந்து வரும். அல்லது குழந்தைகளிடமிருந்து வரும். எப்படி பழங்குடியினர் தன்னிடமிருக்கும் குறைவான வார்த்தைகளை வைத்துக் கொண்டு தொடர்புறுத்துவதற்கு ஒரு கவித்துவத்தை அடைகிறார்களோ அதேபோல குழந்தை தன்னுடைய அம்மா அப்பாவுக்கு மட்டும் சொல்வதற்காக ஒரு மொழியை உருவாக்குகிறது. குழந்தை தனக்கான வார்த்தைகளையே உருவாக்கும். என் பையன் சின்னக்குழந்தையாக இருக்கும்போது தப்தப் என்று சொன்னால் அது செருப்பை குறிக்கும். குத்குத் என்று சொன்னால் அது குதிரையைக் குறிக்கும். தத்தத்தயம் என்றால் ரசம்சாதம். அது எனக்கும் மனைவிக்கும்தான் தெரியும். அந்தக் குறைவான வார்த்தைகளை வைத்துக் கொண்டு குழந்தை ஒருவகை கவித்துவத்துக்குப் போகும் என் மகள் சின்னப் பெண்ணாக இருக்கும்போது சொன்ன விஷயங்களை வைத்து ஒரு குட்டி புத்தகமே எழுதி இருக்கிறேன். ‘ஜே.சைதன்யாவின் சிந்தனை மரபு’ அவள் வார்த்தைகளை வளைப்பாள். “பாப்பா உனக்கு இன்னிக்கு மிட்டாய் கிடையாது” என்று சொன்னால் “கிடையும்” என்பாள்.

ஒருமுறை அவளை தூக்கிக் கொண்டுபோனேன். ஒரு ஒலிபெருக்கி தெரிந்தது. அதைப்பார்த்து ”பாத்திரம்” என்று சொன்னாள். உடனே அதில் இசை ஓட ஆரம்பித்தது உடனே “பாட்டு பாத்திரம்” என்று சொன்னாள். பின்பு ஒரு பெண் அதில் பாட ஆரம்பித்தாள். “அக்கா பாட்டு பாத்திரம்” என்று மாறிச் சொன்னாள். இப்படி ஒரு வார்த்தையை கண்டுபிடித்து அதை வளர்த்துச் சொல்ல வேண்டிய கட்டாயமே அவர்களை கவிதைக்கு அருகில் கொண்டு செல்கிறது

நண்பர்களே, நம் மொழியுடைய மையத்தில் ஒரு பழங்குடியை, ஒரு குழந்தையை குடி வைப்பதற்கான முயற்சிக்குப் பெயர்தான் கவிதை

அந்தக் குழந்தை, அந்த பழங்குடி, அங்கு இருக்கும் வரைதான் இந்த மொழி ஆரோக்கியமாக இருக்கும். மூச்சுவிட்டுக்கொண்டு இருக்கும். இல்லை என்றால் அது கொஞ்சம் கொஞ்சமாக இறுகி விடும். ஒரு கிலோவுக்கு ஒரு கிலோதான் அர்த்தம் வரும் என்று ஒரு வணிகம் மொழியில் இருக்குமென்றால் அது வளரும் மொழி அல்ல. வாழும் மொழியும் அல்ல. அதில் கவிதை கிடையாது. ஒரு கிலோ ஒன்பது கிலோவும் இருக்கலாம் என்ற மயக்க நிலையைத் தான் கவிதை தொடர்ந்து உருவாக்கிக்கொண்டிருக்கிறது. நிலையான அர்த்தங்களை ஒரு வார்த்தையிலிருந்து தொடர்ந்து ரத்து செய்யும் ஒரு நீண்ட செயல்பாட்டின் பெயர் கவிதை.

நீங்கள் நினைக்கலாம், ஒரு ஐம்பது பேர் அல்லது நூறுபேர் தங்களுடைய சிறுபத்திரிகை உலகுக்குள், இணையதளங்களுக்குள், இந்தக் கவிதைமொழியை பேசிக் கொண்டிருப்பதனால் என்ன ஆகப்போகிறது, இது எப்படி மக்களுக்கு போய்ச் சேரும் என்று. தினத்தந்தியைப் பார்த்தால் தெரியும். நான் படிக்கவரும்போது நம் நவீனக் கவிஞர்கள் மட்டுமே பயன்படுத்திய பல சொல்லாட்சிகள் இன்றைக்கு தினத்தந்தி செய்திகளில் வருவதைப் பார்க்கிறேன். சொல்லாடல் என்கிற வார்த்தையை தினத்தந்தியில் பார்த்த அன்றைக்கு வந்த மயிர்க்கூச்செரிப்பு நினைவுருக்கிறது. ஏனெனில் முதன் முறையாக ஒரு கவிஞன் அதைப் பயன்படுத்தியபோது சிலர் அதை கேலி செய்து சிரித்ததுகூட நினைவிருக்கிறது. 15 வருஷத்துக்குள் அது அன்றாடச்செய்தியில் வருகிறது.

கவிதை ஒரு மையம். அங்கு அகலமில்லை, ஆழம் அதிகம். வீச்சு இல்லை, விசை அதிகம். அந்த ஊற்றிலிருந்து தண்ணீர் ஊறிப்பெருகி காடுமுழுக்க ஓடைகளாக போய்க்கொண்டு இருக்கிறது. ஒருவேளை மரங்கள் அறியாமல் இருக்கலாம். ஆனால் வேர்களுக்குத் தெரியும். நம் மொழி திரும்பத்திரும்ப அந்த ஊற்றிலிருந்து தன் உயிர்ச்சத்தை எடுத்துக் கொண்டுதான் இருக்கும்.

அந்தவகையில்தான் தொடர்ந்து கவிஞர்கள் மேல் ஒரு கவனம் எனக்குண்டு ஒரு விமரிசகனாக நான் அதிகமான பக்கங்கள் எழுதியது கவிஞர்களைப் பற்றித்தான். இரண்டு தொகுதிகள் வந்திருக்கின்றன. உள்ளுணர்வின் தடத்தில், நவீனத்துவத்திற்குப்பின் தமிழ்க்கவிதை –தேவதேவனை முன்வைத்து. பெரும்பாலும் எனக்குப் பிடித்த எல்லாக்கவிஞர்களையும் பற்றி விரிவான கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். ஏனென்றால் கவிஞர்களைப்பற்றி தொடர்ந்து பேச வேண்டிய அவசியம் இருக்கிறது. ஒரு மொழியில் கவிதை பற்றிய விவாதம் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்தமொழி தன்னுடைய மொழி நுட்பத்தைப் பற்றிய கவனம் கொண்டிருக்கிறதென்று சொல்லலாம்.

ஈராயிரம் வருடங்களாக ஒருபக்கம் கவிதையும் மறுபக்கம் கவிதையியலும் தொடர்ந்து வளர்ந்து வந்த ஒரு மொழியைச் சார்ந்தவர்கள் நாம் ஆனால் இன்றைக்கு நமக்கு என்று நவீன கவிதையியலே கிடையாது. இன்றைக்கு உலக மேடையில் தமிழ் கவிதையியல் என்று சொல்லும்போது அது நன்னூல் வரைக்குமான பழைய கவிதையியல்தான். அதற்குபிறகு நாம் கவிதையியலை நாம் உருவாக்கவில்லை, ஏனெனில் நம் மொழியில் கவிதை குறைவாக இருக்கிறது. கவிதை பற்றிய கவனம் அதைவிடக் குறைவாக இருக்கிறது. கவிதை பற்றின பேச்சு இன்னும் மிகமிகக் குறைவாக இருக்கிறது. ஆகவே ஒட்டுமொத்தமாக இலக்கியம் என்று பேசும்போது எப்போதுமே அதன் சாராம்சத்தைப் பற்றி, அதன் மையத்தில் இருப்பதை பற்றித்தான் பேசவேண்டும். அது கவிதை.

டி எச் லாரன்ஸ் ஒரு கட்டுரையில் சொல்கிறார், ஒரு நாவலாசிரியர் யாரை படிக்கவேண்டும் என்று. அவன் கவிஞர்களை மட்டும் படித்தால்போதும். அவனுடைய இலக்காக இருக்கும் ஒரு நுட்பமான இடம் தொடர்ந்து அவர்களால் வேறு ஒருவகையில் அடையப்பட்டுக் கொண்டே இருக்கும். அவனுடைய பெரிய புனைவுப் பரப்பில் அந்த இடம் வெளிவரும்போதுதான் அது நாவலாகும். கவிஞன் துளிக்குள் அடைந்ததை அவன் அலையில் அடையவேண்டும். ஆகவேதான் உலக அளவில் தத்துவவாதிகள் கவிதை மேல் மிகுந்த கவனம் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஆச்சரியமான விஷயம் உலக அளவில் கணித மேதைகள் பலர் கவிதை மேல் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்.

கார்ல் சகன் எழுதிய காண்டாக்ட் நாவலில் எல்லி அரோவே காலயந்திரத்தில் ஏறி வேறு பிரபஞ்சத்திற்குப் போகிறாள். அங்கு இருப்பவர்கள் இந்த உலகு படைத்த முன்னோடிப் பிரபஞ்சசக்திகள். இவர்களைப்பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. மனிதர்கள் அவர்களுக்கு கொசு போல. ஆனால் எல்லி தன் கனவுகளை சொல்ல ஆரம்பிக்கும்போது அந்த பிரபஞ்சப்பேரிருப்புகள் அதை காது கொடுத்து கேட்கின்றன. ஏனென்றால் அதில் மட்டும்தான் அந்த பிரபஞ்ச சக்திக்கு தெரிந்து கொள்ள ஏதாவது இருக்கிறது. நண்பர்களே, கவிதையில் மட்டும்தான் கடவுள் மனிதனிடம் இருந்து தெரிந்து கொள்ள ஏதாவது இருக்கிறது.

இந்த மேடையில் கௌரவிக்கப்படும் மூன்றாவது கவிஞர் தேவதச்சன். தேவதேவன், ஞானக்கூத்தன், இன்று தேவதச்சன். இது எந்த வகையிலும் வரிசைப்பாடு கிடையாது. இது ஒரு பொதுப்புரிதலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு. எங்களுடைய பொதுவான வாசிப்பில் நம் மொழி இவர்களின் சந்நிதியில் நின்று தலைதாழ்த்த வேண்டும் என்று நினைத்ததனால்தான் இந்த விருதுகளை நாங்கள் வழங்குகிறோம். இந்த விருது வழங்குதல் என்பது ஒரு மொழிப்பழக்கத்தினால் சொல்வது. உண்மையில் இந்த விருதை இவர்கள் காலடியில் வைத்து எடுத்துக் கொள்ளுங்கள், எங்களை வாழ்த்துங்கள் என்று வேண்டிக்கொள்கிறோம் என்று தான் சரியாக சொல்லவேண்டும்.

நண்பர்களே தேவதச்சனுடைய கவிதையை பற்றி மிக விரிவாக இந்த மூன்று மாதங்களில் பல்வேறு பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டன. நிறையப் பேசிவிட்டோம். ஒரு புத்தகமும் இன்றைக்கு வெளியிடப்பட்டுள்ளது. [அத்துவான வெளியின் கவிதை. சொல்புதிது பதிப்பகம்] கடந்த இரண்டு நாட்களில் மூன்று அமர்வுகள் நடந்தன. ஏறத்தாழ பத்து மணிநேரத்துக்கு மேல் அவருடைய கவிதைகளைப்பற்றி நாம் பேசியிருக்கிறோம். ஆகவே இந்த மேடையில் திரும்பவும் அவருடைய கவிதைகளைப்பற்றி நாம் பேச வேண்டியதில்லை என நினைத்தேன். ஆனால் கவிதையைப்பற்றி பேசும் போது இதுவரைக்கும் பேசாத ஒரு விஷயம் வருவது எனக்கே ஆச்சரியம்.

அவருடைய புகழ்பெற்ற வரி ஒன்று இருக்கிறது. ’வண்ணத்துப்பூச்சி தன் கால்களில் காட்டை சுமந்தலைகிறது’ கவிதையில் ஒரு வரி அது. ஒரு படிமம். ஒரு மகரந்தப்பொடி அக்கால்களில் இருக்கிறது. அது ஒரு காயாகி விதையாகி மரமாகி மறுபடி விதையாகி காடாகலாம். ஒரு காடு ஆவதற்கான சாத்தியக்கூறை வண்ணத்துப்பூச்சி சுமந்தலைகிறது. காற்றில் அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள் காலில் காட்டை சுமந்தலைகின்றன. அலைக்கழியும் காடு. முளைக்க மண் தேடும் காடு. இது ஒரு வாசகனை தொட்டு எங்கெங்கோ திடீர் என்று திறக்கும் வரி.அந்த திசைகளை இப்போது நான் திறந்து காட்ட விரும்பவில்லை.

கவிதையில் ஜென் காலகட்டத்திலிருந்து இன்றைக்கு வரைக்கும் இந்த மர்மமான,விளங்கிக் கொள்ள முடியாத பட்டாம் பூச்சி வளர்ந்து கொண்டே இருக்கிறது. இன்றைக்கு காலையில் அவர் வேறு ஒரு கவிதையை படிக்கும் போது இரண்டு ஜன்னல்கள் என்று சொன்னார். வண்ணத்துப்பூச்சியின் சிறகுகளை இரண்டு படபடக்கும் ஜன்னல்கள் என்றார். வண்ணத்துப்பூச்சியை பற்றி யோசிக்கும்போது பிரமிளின் ஒரு வரி நினைவுக்கு வருகிறது. புகழ் பெற்ற கவிதை அது. தேன் தேடி ஒரு வண்ணத்துப்பூச்சி கடற்கரைக்கு போகிறது. கடலுக்கு அந்தப்பக்கம் முடிவின்மைக்கு அந்தப்பக்கம் ஒயாது விரியும் ஒரு பெரிய பூவைப்பார்த்து அங்கு போய் உட்கார்கிறது முதற்கணம் துவர்த்த சமுத்திரம் தேனாய் இனிக்கிறது என்று அந்தக்கவிதை முடியும்.

நண்பர்களே, இரண்டு கவிஞர்கள் நம் முன்னால் இருக்கிறார்கள். அந்த வண்ணத்துப்பூச்சி சூரியன் என்ற பூவில் அமர்ந்தது. இந்த வண்ணத்துபூச்சி ஒரு காட்டை சுமந்து கொண்டு காற்றில் இன்னமும் அலைக்கழிகிறது.

இந்த படிமங்கள் வழியாக இவர்கள் அருகில் நாம் போகிறோம். ஏதோ ஒரு வகையில் இவர்களுக்கும் நமக்குமான ஒரு பொதுஇடத்தைக் கண்டடைகிறோம். திரும்பவும் இன்னொரு புகழ் பெற்ற உவமை சொல்லவேண்டும் எல்லாக் கவிதைகளுமே ஒரே நிலத்தடி நீரை நோக்கி வெவ்வேறு நிலங்களில் தோண்டப்பட்ட கிணறுகள். கோவில்பட்டியில் வரும் ஆழ்குழாய்த் தண்ணீர் ஏதோ ஒருவகையில் இங்கு கோவையில் உள்ள ஆழ்குழாய் தண்ணீரில் இணைந்துள்ளது.

நாம் நம் கற்பனையில், நம் மொழியில் மீண்டும் மீண்டும் கவிஞர்களைக் கண்டடைந்து கொண்டே இருக்கிறோம். அந்தக் கண்டடைதல் நம்முடைய அகம் பற்றிய சொந்தக் கண்டடைதல். தாளில் மூன்றுமுறை அல்லது ஐந்து முறை வாசிப்போம். பலசமயங்களில் அதில் ஒரு சுவாரசியம் இருக்கும். அந்த வடிவம் நமக்கு பிடித்திருக்கும். விளங்கிக் கொள்ளாத ஏதோ காரணத்தால் அந்த கவிதை நம்முடைய மனதில் நின்றுகொண்டிருக்கும். ஆனால் பின்னால் எப்போதோ வேறொரு காலகட்டத்தில் அந்தக் கவிதை நமக்கு வாசல் திறக்கும்.

நம் ஊர்கள் மிகச் சத்தமானவை. ஒரு மதிய நேரத்தில் கண் மூடிக் கேட்டால் எவ்வளவு பறவைகள் நம்மைச்சுற்றி ஒலித்துக் கொண்டிருக்கின்றன என்று கேட்கலாம். காது கேட்பதில்லை, நம்முடைய ஆழ்மனம் கேட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்காவுடைய காடு எப்போதும் அமைதியானது. பைன் மரக்காடுகளில் உயிர்களுக்கு தின்பதற்கு எதுவும் இருக்காது. ஆகவே அனேகமாகப் பறவைகளே இருக்காது. ஓசையிடும் பூச்சிகள் இருக்காது. பெரும்பாலும் அங்கு நம்மை வந்து அறைவது அமைதிதான். அமெரிக்காவின் காட்டில் நான் இறங்கி நடக்கும்போது முதுகில் ஒரு தொடுகை போல என்னுடைய ஊரில் இருக்கும் பசுமைமாறாக்காட்டின் பறவைகள் ஒலியைக் கேட்டேன். பின்னர் அவ்வொலிகளின் இன்மைதான் அந்தக் காட்டின் ஒலியாக இருந்தது.

ஒரு மின்னல் போல என்னை தேவதச்சனின் கவிதை வந்து தொட்டது. துணி துவைக்கும் பெண்மணியை குருவிகள் போடும் சத்தம் சூழ்ந்திருக்கிறது. அதன்பிறகு குருவிகள் போன நிசப்தம் சூழ்ந்திருக்கிறது. அதன்பின்பு நிசப்தம் எழுப்பிய குருவிகளின் சப்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது – என்ற ஒரு கவிதை. என் அனுபவத்தை அக்கவிதை ஒரு பிரபஞ்ச அனுபவமாக ஆக்கி எனக்களித்தது. என்னை நான்குபக்கமும் திறந்து விட்டு திகைக்கவைத்தது.

பலகோணங்களில் தேவதச்சனின் கவிதைகளைப்பற்றி இங்கே பேசினார்கள். ஒரு புகழ் பெற்ற அறிவியல் புனைகதை நினைவில் எழுகிறது. ஒரு ஐம்பது வருஷம் கழித்து நடக்கச் சாத்தியமான கதை. அந்த கதையில் மிருகங்கள் ஆழ்துயிலுக்கு hibernation-க்கு- போக உதவும் என்சைமை அறிவியலாளர்கள் பிரித்து எடுத்துவிடுகிறார்கள். ஆழ்துயில் என்பது மிருகங்கள் குளிர்பருவத்தை தூங்கி கழிக்கும் செயல்பாடு. மிருகங்கள் தங்களுடைய உடல் செயல்பாடை பத்தில் ஒன்றாக, ஐந்தில் ஒன்றாக குறைத்துவிடும். உடம்பினுடைய மொத்த வளர்சிதை மாற்றம் ஐந்தில் ஒன்றாக குறைந்துவிடும். ஐந்தில் ஒரு பங்கு உணவோடு அது பனிக்குள் வாழும். ஆறு மாதமோ, மூன்றூ மாதமோ பனி உருகி வெளிவரும்போது எழுந்துவரும். அதன் உடல் உணவில்லாமல் மூச்சில்லாமல் அதற்குள் இருக்கும்

அப்போது உலகை ஆளும் சர்வாதிகாரிக்கு ஒரு எண்ணம் வருகிறது. இது ரொம்ப முக்கியமான் ஒரு கருவி. இனிமேல் சிறைத்தண்டனை கொடுக்க வேண்டாம். ஒருவனுக்கு பத்துவருடம் தண்டனை என்றால் அவனுடைய உடற்செயல்பாடை பத்தில் ஒன்றாகக் குறைத்தால் போதும். அவன் மொத்த மூச்சு பத்திலிருந்து ஒன்றாக ஆகிறது அவனுடைய இதயம் பத்தில் ஒரு பங்காகிறது. அவனுடைய செல்களின் இயக்கம் மூளைச்செயல்பாடு எல்லாமே பத்தில் ஒரு பங்காகிறது. உணவு பத்தில் ஒரு பங்கு போதும். விளைவாக அவனுடைய காலமும் பத்தில் ஒரு பங்கு ஆகிறது. அப்படி நூறில் ஒன்றாக இருக்கும் காலம் கொண்ட ஒருவன் நடந்து போகும் போது பக்கத்தில் ஒரு ஹும் என்று ஒரு ஹெலிகாப்டர்போல பறந்து போகிறவன் ஒரு சாதாரண மனிதன். இன்னும் சிலர் இவர்களின் உலகில் இருந்தே மறைந்துபோய்விட்டார்கள். இவ்வாறு ஒரே உலகத்தில் வெவ்வேறு காலத்தில் வாழும் மனிதர்களை உருவாக்குகிறார்கள். அது சுவாரசியமான திகில் கதை அது.

நண்பர்களே, ஒரு வகையில் நம் சமுதாயத்தில் அத்தனை பேருமே வெவ்வேறு காலங்களில் வாழ்பவர்கள்தான். அந்தக்காலங்களுக்கு பக்கத்தில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் நம்முடன் ஒரு தொடர்பு இருக்கிறது. அவர்களிடம் மட்டுமே நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். எவ்வளவோ ஆட்கள் நம்மைக்காணாமல் இருக்கிறார்கள். கவிஞர்களைப் போன்றவர்கள் வேறொரு காலத்தில் வாழ்பவர்கள். யுவன் சந்திரசேகரின் தொகுப்பின் தலைப்பு வேறொரு காலம். அது ஒருகவிஞன் தனக்குத்தானே தன்னைப்பற்றி விடுக்கும் ஓர் அறிக்கை. வேறு காலம். கவிதை வழியாக நாம் இந்தக் காலப்பயணத்தை செய்கிறோம்.

எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் அதிவேகமான காலகட்டத்திலிருந்து ஒன்றுமே நடக்காமல் கிட்டதட்ட 35 வருடமாக அப்படியே இருக்கும் கோவில்பட்டிப் பொட்டலுக்கு போய்வரும் அனுபவம் தான் இந்தக் கவிதைகளில் இருக்கிறது. திரும்ப திரும்ப காலத்தினுடைய நுட்பமான அவதானிப்புகளாக இருக்கிறது தேவதச்சனுடையது. வேகமாக ஓடும் காலம், ஒன்றுமே நிகழாமல் இருக்கும் காலம். ஒன்றுமே நிகழாத போது வேகமாக போகும் காலம். சென்னை சாலையின் பரபரப்பை செயிண்ட் தாமஸ் மௌண்ட் மேலே ஏறி நின்று பார்த்தால் ஒன்றுமே நடக்காத மாதிரிதான் இருக்கும். ஒரு வரைபடம் போல அசையாமல் இருக்கும். இறங்கிப்போனால் அங்க நிற்க முடியாது அத்தனை போக்குவரத்து. ஒரு குறிப்பிட்ட தூரத்தில் விமானத்திலிருந்து பார்க்கும் போது பூமி அளவுக்கு அமைதியான, ஒன்றுமே நிகழாத வெளியைப் பார்க்கவே முடியாது. கீழே வாழ்க்கை கொந்தளிக்கும். அப்படியென்றால் காலமென்பது என்ன? தூரம்தானா?

வெவ்வேறு தூரங்கள் வழியாக நம்முடைய காலத்தை நமக்கு மாற்றி காட்டும் அழகு இந்த கவிதைகளில் இருக்கிறது. தேவதச்சனுடைய காலம் பற்றிய பெரும்பாலான கவிதைகள் நாம் அறிந்த காலத்தை, ஒன்று இரண்டு மூன்று என்று போகும் காலத்தை, இன்று நேற்று நாளை என்று போகும் காலத்தை, செயல் விளைவு செயல் விளைவு என்று போகும் காலத்தை மாற்றி வேறொரு காலத்துக்கு நம்மை கூட்டிபோகும் அனுபவத்தை நமக்கு அளிக்கின்றன.

ஆன்மீகம் என்று சொல்கிறோம்.தியானம் என்று சொல்கிறோம். ஒரு தியானத்தை பயில்வதற்காக ஆறாயிரம் ஏழாயிரம் ரூபாய் பணம் கட்டி போய் தங்குகிறோம். ஆனால் உண்மையான தியானத்துக்கு நிகரான,அல்லது ஒரு படி மேலான அனுபவத்தை மொழி வழியாக அளிக்கும் திற்னுள்ள கவிதைகள் இவை. ஆம், இவை பயனற்றவை அல்ல.

இந்தக் கவிதைகள் அனைத்துமே நாம் அமைந்துவாழும் மாற்றமில்லாத  விதிகளிலிருந்து விடுவித்து நெகிழ்வான பிறிதொரு உலகுக்கு கொண்டு போகின்றன. தேவதச்சனுடைய ஒரு கவிதை

ஒரு ரயில்வே கேட்

ஒரு தூக்கு வாளி

எண்ணற்ற தூக்குவாளிகள் எண்ணற்ற ரயில்வே கேட்கள்

எண்ணற்ற காத்திருப்புகள்

ஒருவர் ரெயில்வேகேட் அருகே நிற்கிறார். காலத்தை தனித்தனி கணங்களாக மாற்றினால் கணத்திற்கு ஒன்று என்று பல்லாயிரம் பேர் அங்கு நிற்கிறார்கள். சினிமாவில் ஒருவர் நிற்கிறார். ஆனால் நிமிடத்திற்கு இருபத்து நான்குபேர் அங்கே நிற்கிறார்கள் அல்லவா? சாதாரணமாக ஒரு குழல்விளக்கு முன் கையை ஆட்டினால் ஆயிரம் கை ஆக இருக்கிறது அது. நாம் பார்க்கும் காலம் ஒழுகும் காலம். தேவதச்சன் அதை துண்டுகளின் காலமாக ஆக்கிக்காட்டுகிறார். காலத்திலிருந்து ஒரு துண்டு எடுத்து வைக்கப்படுகிறது காலத்தின் ஒழுக்கில் அவுக்கு பிறகு ஆ வரவேண்டும். அவுக்கு பிறகு அஃக் வரும் ஒரு காலம் தெரிகிறது. அந்த வேறொரு காலத்தில் சென்று வாழும் அனுபவத்தை அளிப்பதாக இருக்கிறது இந்தக் கவிதை

நண்பர்களே உர்சுலா லே க்வின் எழுதிய ஒரு பிரபலமான கதை நினைவுக்கு வருகிறது. ஓமலாஸைவிட்டு செல்பவர்கள் என்று பெயர். அது ஒரு தேவதைக்கதை போன்ற ஆக்கம். ஓமல்லாஸ் என்பது ஐரோப்பாவில் எங்கோ இருக்க்கும் ஓர் அழகான கிராமம். ஒரு லட்சிய கிராமம். அந்த கிராமத்தை பற்றி எல்லோருக்கும் தெரியும். அந்த கிராமத்தை பற்றி பெரிய ஒரு வர்ணனை கொடுக்கிறார். முற்றிலும் இயற்கைக் காட்சிகளால் சூழப்பட்டது. அழகிய மலைகள் வரம்பிட்டது. ஒவ்வொரு வீடும் ஒரு கனவு இல்லம் போல இருக்கும். காலையில் அங்கு போனால் மகிழ்ச்சியான குடும்பங்களைச் சேர்ந்த குடும்பத்தலைவர்கள் வேலைக்கு போவதை பார்க்கலாம். குழந்தைகள் வீட்டு முற்றத்தில் கவலையில்லாமல் விளையாடிக் கொண்டிருப்பதை பார்க்கலாம். வயோதிகர்கள் தங்களுடைய வீட்டு முற்றத்தில் எளிய வேலைகளைச் செய்தபடி மகிழ்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். சாயங்கால நேரத்தில் அந்த கிராமம் முழுக்க ஒரு கொண்டாட்டம் இருக்கும். இளைஞர்கள் களியாடிக் கொண்டிருப்பார்கள் பெண்கள் பாடிக் கொண்டிருப்பார்கள். காதல் விளையாட்டுகள் நடந்துகொண்டிருக்கும். சின்னக் குழந்தைகளுடைய கூச்சல் எங்கும் நிறைந்திருக்கும். எங்கும் துயரமோ, இழப்போ, எதிர்காலம் பற்றிய அச்சமோ இல்லை. அவ்வளவு லட்சிய கிராமம்.

“ஆனால் நண்பர்களே…” என்று இந்தக் கதை மீண்டும் ஆரம்பிக்கும். இங்குள்ள அத்தனை இளைஞர்களையும் இளமையில் ஒருமுறை அந்த ஊர் நடுவில் இருக்கும் ஒரு சதுக்கத்துக்கு கூட்டிக் கொண்டு போவதுண்டு. அந்த சதுக்கத்தில் ஒரு கட்டிடம் இருக்கிறது. அதற்கு அடியில் ஒரு படிக்கட்டு வழியாக இறங்கி போனால் அங்கு ஒரு பாதாள அறை இருக்கும். அதனுள் கம்பிகளால் சூழப்பட்ட ஒரு சிறை இருக்கிறது. அந்தக் கம்பிகள் எல்லாமே திறக்க முடியாதபடி உருக்கி இணைக்கப்பட்டு நிரந்தரமான சிறை அமைக்கப்பட்டுள்ளது. அதற்குள் ஒரு 5-6 வயது பையனை அடைத்து வைத்திருக்கிறார்கள். அவன் கைக்குழந்தையாக இருந்த போதிருந்தே அவனை அங்கு அடைத்து வைத்திருக்கிறார்கள். வெளியுலகையே பார்க்காதவன் ஆகையால் அவன் அங்கேயே மலம் கழித்து, உடம்பெல்லாம் சிக்கு பிடித்து, மூளைவளர்ச்சி அற்று, ஒரு பைத்தியக்கார குழந்தை போல் இருக்கிறான்.

ஆனால் அவனுள் வெளியே போக வேண்டும் என்று ஆசை துடிக்கிறது. அவனைச் சுற்றி வரும் அந்த ஊர்க்காரர்களை பார்த்தவுடனே “நான் நல்ல குழந்தையாக இருப்பேன். என்னை வெளியே கூட்டிக் கொண்டு செல்லுங்கள். ஒன்றுமே செய்யமாட்டேன். யாரையும் எதுவும் செய்யமாட்டேன். இங்கு பாருங்கள், நான் நல்ல பிள்ளையா இருக்கிறேன்” என்று உட்கார்ந்து காண்பிக்கிறான். அழுவான். பிறகு ஒரு நம்பிக்கை வந்து அவர்களின் கண்களை சந்தித்து” என்னை வெளியே கூட்டிட்டு போங்கள்” என்று கெஞ்சுகிறான்.

அவர்கள் ஒவ்வொருத்தராக கடந்து போகும்போது நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுகிறான் அந்தக் கம்பியில் தன்னுடைய மண்டையை முட்டுகிறான். அந்தக் குழந்தையை பார்த்த ஒவ்வொருவரும் மனம் உருகி கண்ணீர் விட்டு வெளியே வருகிறார்கள். “ஏன்?” என்று கேட்கிறார்கள். “அவனை ஏன் விட்டுவிடக்கூடாது?” என்கிறார்கள். “ஏன்?” என்றால் “அது அப்படித்தான். வெளியே இருக்கும் இவ்வளவு பேரும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்றால் அந்தக் குழந்தை அங்கே இருக்கவேண்டும். அது சாஸ்திரம். அந்தக் குழந்தை வெளியே வந்தால் எல்லா பக்கமும் அழிவும் துக்கமும் நிகழும். இந்தக் குழந்தையை இங்கே அடைத்து வைப்பதன் வழியாகத்தான் இங்கே இவ்வளவு பேரின்பத்தை அடைந்திருக்கிறோம்” என்கிறார்கள் மூத்தவர்கள்.

அந்தக் கதையின் ஆசிரியர் சொல்கிறார். வெளியே வரும் அத்தனை பேரும் மனம் உடைந்து அழுதுகொண்டு வருவார்கள் நாட்கணக்கில் அந்தக் குழந்தையை பற்றி நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் சுயநலம் ரொம்ப பெரியது. அவர்கள் கொஞ்ச கொஞ்சமாக சமாதானம் ஆவார்கள். இத்தனை பேர் சந்தோஷமாக இருக்க ஒரு குழந்தை உள்ளே இருந்தால் என்ன என்று ஆறுதல் கொள்வார்கள். ஒருவேளை அந்தக் குழந்தை வெளியே வந்தாலும் அது சந்தோஷமாக இருக்கும் என்பதற்கு என்ன சான்று. என்று வாதிடுவார்கள். அந்தக்குழந்க்கு சிறைதான் பாதுகாப்பு என்பார்கள்.

”ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் அந்த குழந்தையை அங்கு அடைத்து வைத்திருப்பதை சமரசம் செய்துகொள்ளவே முடியாது. அவர்கள் ஓமல்லாஸை விட்டு வெளியே போய்க்கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு தலைமுறைக்கும் இரண்டு பேர் வெளியே போய்விடுகிறார்கள்” என்று அந்தக் கதை முடிகிறது நம் பண்பாட்டுடைய உள்ள ஆழத்தில் ஒரு களங்கமின்மை சிறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கதையை பாலர்வகுப்புக்கு போகும் குழந்தைகளை பார்த்தால் யாருக்கும் புரிந்து கொள்ள முடியும். களங்கமின்மையை சிறை வைத்து அந்தக் கல்லறை மேல் கட்டப்பட்ட நாகரீகத்தின் மேல்தான் நாம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய பண்பாட்டின் ஆழத்தில் அந்தக் கண்ணீர் இருக்கிறது. நண்பர்களே, அது குழந்தையின் கண்ணீர். பழங்குடியின் கண்ணீர். கவிஞனின் கண்ணீர்.

தேவதச்சனுடைய கவிதைகளைப் படிக்கும்போதெல்லாம் இந்தக் கதை எனக்கு ஞாபகம் வரும். ஆனால் அதில் ஒரு பெரிய திருப்பம் அதில் இருக்கிறது. அந்தக் குழந்தை அந்த சிறைக்குள் மகிழ்ச்சியாக மலர்ச்சியாக இருக்கிறது. அதுதான் தேவதச்சன். நம் காலகட்டத்தின் சிரிக்கும் கவிஞன்.

நன்றி.

முந்தைய கட்டுரைகடவுள், மதம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைபண்டைய கழிவறை முறை