பன்னிரு படைக்களம் முடிவு

2

 

அன்புள்ள நண்பர்களுக்கு,

வெண்முரசு தொடரின் பத்தாம் நாவலான பன்னிரு படைக்களம் நேற்றுடன் முடிந்தது. வழக்கம்போல உச்சகட்ட உளஅழுத்தத்தில் எழுதிய ஆக்கம். ஒருபக்கம் என்னை அதற்கு முற்றாக அளித்திருந்தேன். மறுபக்கம் ஊர் ஊராக அலைந்தேன். உழைத்தேன். உறவுகளில் திளைத்தேன். தனித்திருந்து அனைத்தையும் வியந்தேன்.

வானூர்தி நிலையங்களில், ரயிலிடங்களில், நாளொன்றுக்கு பதினைந்தாயிரம் வாடகை கொண்ட விடுதியறைகளில், நூற்றைம்பது ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்த கூட்டுவிடுதியின் கட்டில்களில், முச்சந்திச் சாலையோரத்தில்  எங்கெல்லாமோ வைத்து எழுதப்பட்டவை இவை. தமிழகத்தில் கேரளத்தில் ஆந்திரத்தில் கர்நாடகத்தில் இமாச்சலப்பிரதேசத்தில் லண்டனில் இதை எழுதியிருக்கிறேன். ஆனால் இறையடி மறவா பக்தன்போல இதிலேயே இருக்கமுடிந்தது. ஒருவேளை அதனால்தான் இங்கெல்லாம் செல்லவும் முடிந்தது.

நேற்று முன்நாள் எழுதிய எண்பத்தேழாவது பகுதியை எழுதி முடித்ததுமே சேமிக்காமல் விட்டுவிட்டேன். தானாகவே அணைந்து மறுபடி எழுந்த கணிப்பொறியில் அப்பகுதி மறைந்திருந்தது. லண்டனில் சிறில் அலெக்ஸின் இல்லம். அவரும் நண்பர்களும் முயன்றும் மீட்கமுடியவில்லை. அக்கணமே அமர்ந்து மீண்டும் எழுதி முடித்தபின்னரே எழுந்தேன். மீண்டும் எழுதியது பிறிதொரு கதைவடிவம். அது மேலும் பொருத்தமானதென்று பின்னர் அறிந்தேன். அதுவும் நல்லூழே.

அடுத்த நாவலை  இந்த ஐரோப்பியப்பயணம் முடிந்து மீண்டுவந்தபின் எழுதலாமென நினைக்கிறேன்.

முந்தைய கட்டுரைவரலாற்று ஊகங்களை அணுகுதல்
அடுத்த கட்டுரைசிறுகதை, விடுபட்ட பெயர்கள்