[ 17 ]
சகுனி கைநீட்ட ஓர் ஏவலன் அருகே வந்து அவர் தோளை பற்றினான். வலிகொண்ட காலை மெல்லத்தூக்கி எழுந்து அவன் தோள்பிடித்து நடந்து கணிகரின் அருகே தன் பீடத்தில் அமர்ந்தார். அவர் அணுகியதையே கணிகர் அறிந்ததுபோல் தெரியவில்லை. ஏவலர்கள் இருவர் வந்து பன்னிரு பகடைக்களத்தில் பொருளிழந்து வெற்றுப்பொருட்களென்றாகி பரவியிருந்த காய்களைப் பொறுக்கி தந்தப்பேழைகளில் சேர்த்தனர். பகடைக்களம் வரையப்பட்ட பலகையை ஒருவன் அகற்ற முயல துரியோதனன் உரக்க “அது அங்கிருக்கட்டும்! அங்குதான் அவ்விழிமகளை கொண்டு வந்து நிறுத்தப்போகிறேன். பாரதவர்ஷத்துடன் அவள் பகடையாட விழைந்தாள். எனது பகடைக்களத்தில் அவளும் ஒரு காயென்று வந்து நிற்கட்டும் இங்கே” என்றான்.
கர்ணன் புன்னகைத்தான். துரியோதனன் சிற்றமைச்சரைப் பார்த்து “அந்தப் பகடைகளை எடுத்து இங்கே அளியுங்கள்” என்றான். பகடைகளை பொற்பேழையிலிட்டு அவனிடம் அளித்தான் ஏவலன். அதை தலைமேல் தூக்கி “நூறாயிரம் நூல்களை, சூதர்பாடல்களை, வேதம் மறுத்தெழுந்த படைப்பெருக்கை வென்றவை இவை” என்றான் துரியோதனன். சூழ்ந்திருந்த அவையினர் நகைத்தனர். துர்மதன் “கௌரவரின் வழிபடுதெய்வம் வாழ்கிறது அதில்” என்றான். துச்சலன் “எழுத்துக்களை வென்றன எண்கள்” என்றான். சிரிப்பொலிகள் அலையலையாக எழுந்தன.
விகர்ணன் அவர்களை திரும்பித்திரும்பி பார்த்தான். ஒவ்வொருவரிலிருந்தும் அவர்கள் அக்கணம் வரை வென்றுவென்று கடந்து வந்த பிறிதொருவர் எழுந்து நின்றது போல் வெறி கொண்டிருந்தன விழிகள். கள்மயக்கைவிட, காமமயக்கைவிட, வெற்றிமயக்கைவிட வல்லமை கொண்டது கீழ்மையின் பெருமயக்கு என்று விகர்ணன் எண்ணிக்கொண்டான். கைகளைக் கூப்பியபடி கண்ணீர் வழிய தன் இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான்.
ஏவலனை அழைத்து மேலும் மேலும் மது கொணரச்சொல்லி உண்டு மூக்கிலும் இதழோரத்திலும் கோழை வழிய வலப்பக்கமாகச் சரிந்து இறந்த உடலென கிடந்தான் குண்டாசி. பெருந்தசைகள் புடைத்தெழ கௌரவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி கூச்சலிட்டனர். சிலர் கைவீசி மெல்ல நடனமிட்டனர். சிலர் ஆடைகளைத் தூக்கி மேலே வீசிப்பற்றினர். அவன் திரும்பி பீஷ்மரை பார்த்தான். இருகைகளையும் கோத்தபடி கண்கள்மூடி அங்கில்லையென அவர் அமர்ந்திருந்தார். துரோணரும் கிருபரும் உதடுகளை இறுக்கி விழிகள் பொருளற்ற ஏதோ ஒன்றை வெறிக்க சரிந்திருந்தனர். பற்றற்றவர் போல் தாடியை நீவியபடி விதுரர் இருந்தார்.
அவர்கள் எதை நோக்கி ஆழ்ந்திருக்கிறார்கள்? எப்போதும் அறிந்த ஒன்றையா? என்றும் உடனிருக்கும் ஒன்றையா? அவர்கள் எதிர்கொண்டிராத தருணம். கற்றவையும் கனிந்தவையும் கேள்விக்குள்ளாகும் தருணம். அரசும் குடியும் வெறிகொண்டு எழுந்த அவையில் அவர்கள் செய்வதற்கொன்றுமில்லை போலும். ஆனால் எழுந்து உடைவாளெடுத்து தங்கள் கழுத்தில் பாய்ச்சிக் கொள்ளலாம். அவைமுன் செத்துவிழலாம். ஆனால் கற்பாறை எனக் குளிர்ந்து காத்திருக்கிறார்கள். ஒருகணத்தில் உள்நடுக்கமென அவன் ஒன்றை உணர்ந்தான். அத்தனை பேரிலும் தோன்றி பேருருக்கொண்டு நின்றிருப்பது ஒன்றே. அது பெண்முன் தன்னைத் தருக்கி எழும் ஆண்மையின் சிறுமை.
“ஆம்!” என்றது ஒரு குரல். திடுக்கிட்டவன் போல் அவன் திரும்பிப்பார்க்க தன்னருகே எருமைத்தலையும் கல்லுடைந்த துண்டுபோன்ற விழிகளும் குளம்புகள் கொண்ட கால்களுமாக ஒருவன் நின்றிருப்பதை கண்டான். “யார்?” என்று அவன் கேட்டான் “எருமையன்” என்றான் அவன். அவன் சொல்லுடன் ஊனின் ஆவியெழுந்த மூச்சு கலந்திருந்தது. “எனது குலமூத்தார் முன்பு ஒரு படைக்களத்தில் இவளால் கொல்லப்பட்டார். நெஞ்சுபிளந்து இவள் காலடியில் விழுகையில் இப்புவி வாழும் அனைத்து ஆண்களும் என் குருதியில் ஒரு துளியேனும் கொள்க என்று அவர் சொன்னார். புடவியைப் பகடையாக்கி ஆடும் பிரம்மம் ஆம் என்றது அப்போது.”
நிரைவகுத்த வெண்பற்கள் தெரிய அவன் நகைத்தான். “இங்குள அனைவருக்கும் இடது செவியருகே நான் நின்றிருக்கிறேன். வலதுசெவியருகே அவர்களின் வழிபடுதெய்வங்களும் முன்னோரும் அவர்கள் கற்ற நூல்களின் உரையும் நால் வேதங்களும் ஆறு அறங்களும் நின்றுள்ளன. அத்தனை குரலுக்கும் என் குரல் நிகர். அணுகுகையில் அவற்றைவிட ஓர் அணுவிடை மிகுதி. எதிர்த்துப் போரிடுகையில் ஆயிரம் முறை பெரிது.”
“இல்லை! இல்லை!” என்று விகர்ணன் சொன்னான். “விலகு! இது ஏதோ உளமயக்கு. என் சித்தம் கொள்ளும் வெற்றுக்காட்சி.” அவன் நகைத்து “மாயமில்லை இளையோனே, இவ்வவையில் இறுதியாக நான் எழுந்தது உன்னருகேதான். அங்கு பார், பீஷ்மரின் அருகே செவியாட்டி நான் நின்றிருக்கிறேன். துரோணரின், கிருபரின், ஏன் விதுரரின் அருகிலே கூட” என்றான்.
விகர்ணன் அச்சத்துடன் நெஞ்சை அழுத்தியபடி நோக்கினான். அங்கிருந்த ஒவ்வொருவர் அருகேயும் கரிய நிழலென அரைக்கணம் தோன்றி, விழிமயக்கோ என விளையாடி, மீண்டும் விழிமின்ன எழுந்து பல்துலங்க உறுமி மறைந்த எருமையனை கண்டான். “காலம்தோறும் பெண்மை வென்று கொண்டிருக்கிறது. மண் என விரிந்து இங்கெழுந்தவை அனைத்தையும் அவள் உண்கிறாள். மழையெனப் பொழிந்து இங்குள்ள அனைத்தையும் புரக்கிறாள். முலையெனக்கனிந்து இங்குள அனைத்தையும் ஊட்டுகிறாள். வெல்பவள், கடக்க முடியாதவள், ஆக்கி அளித்து ஆடி அழிப்பவள். அவளுக்கு எதிராக நின்றிருக்க கல்வியோ வீரமோ தவமோ உதவுவதில்லை. மதவிழியும் இருளுடலும் கொம்பும் கொண்ட நானே அதற்கு உதவுபவன். என்னைத் தவிர்க்க இயலாது எவரும்.”
உரக்க நகைத்து “தவிர்த்தவன் ஆணெனப்படுவதில்லை. அவனை பேடி என்கின்றனர். கோழை என்கின்றனர். பெண்ணன் என்று பழிக்கின்றனர்” என்றான். “உண்மையில் அருகில் நானில்லாத ஆணை பெண்ணும் விரும்புவதில்லை. ஏனெனில் அவள் அவனிடம் நிகர் நின்று போரிலாடி வெல்ல வேண்டும். அவன் நெஞ்சில் கால்வைத்து தருக்கி எழவேண்டும். அவளுக்கு எதிர்நிலை நானே. நோக்குக!”
அவன் கைசுட்ட விகர்ணன் துரியோதனனின் அருகே பேருருக்கொண்டு நின்ற மகிஷனை கண்டான். அவ்வளவே உயரத்துடன் கர்ணனருகே நின்றிருந்தான் பிறிதொருவன். துச்சாதனனிடம் துர்மதனிடம் துச்சலனிடம் சுபாகுவிடம் சுஜாதனிடம். கௌரவர் ஒவ்வொருவர் அருகிலும். அவன் உரக்க நகைத்து அவன் தோளைத்தொட்டு “பார்! மூடா, இந்த அவையிலேயே நான் நிழல்பேருரு என அருகணைய அமர்ந்திருப்பவன் பீஷ்மன்!” என்றான். வளைந்த பெருங்கூரை முட்ட கரியமுகில்குவை போல் எழுந்து நின்றிருந்தான் பீஷ்மரின் துணைவனாகிய மாமகிடன்.
அவரது இமைகளுக்குள் விழிகள் ஓடிக்கொண்டிருப்பதை, உதடுகள் அழுந்தி அழுந்தி மீள்வதை, தாடை அசைவதை விகர்ணன் கண்டான். “ஆயிரம் நூல்கள், பல்லாயிரம் நெறிகள், வாழ்ந்த கணமெலாம் வழுத்திய மூதாதையரின் கனிந்த சொற்கள்… அங்கே துலாவில் அவர் அள்ளி அள்ளி வைப்பவை இப்புடவிக்கு நிகரானவை. அனைத்தையும் வென்று வென்று மேற்சென்று எழுந்து நின்றிருக்கிறேன்” என்றான் மகிஷன். வெறிகொண்டு அக்கனவை உதறி திமிறி “விலகு! விலகு!” என்றான் விகர்ணன்.
“எளிதில் அவ்வண்ணம் விலக இயலாது. ஏனெனில் நீயும் ஒரு ஆண்மகனே” என்றான் மாமயிடன். “எவ்வண்ணம் நான் வெல்வேன்? எந்தையே, உன்னைக்கடந்து எப்படி செல்வேன்?” என்றான் விகர்ணன். “என்னைக் கடப்பதற்கு வழி ஒன்றே. என்னிடம் போரிடாதே. துளிக்குருதி சொட்டினாலும் ஒன்று நூறெனப் பெருகும் ஆற்றல் கொண்டவன் நான். என்னை வென்றவன் பெண்ணில் நல்லாளுடன் இருந்த பெருந்தகை ஒருவனே. தன்னைப் பகுத்து பெண்ணென்றான தாயுமானவன் அவன். உன்னை இரண்டெனப் பகுத்து என்னை எதிர்கொள்!”
“பெண்ணென்றா?” என்று அவன் கேட்டான். “ஆம். உன் முலைகள் ஊறவேண்டும். கருப்பை கனியவேண்டும். அன்னையென கன்னியென மகளென என்னை நீ தொடவேண்டும். என்னை வென்று கடக்க வழி என்பது ஒன்றே. ஆணென நின்று நீ கைக்கொள்ளும் அத்தனை படைக்கலத்திலும் எழுவது உனது கீழ்மை. கீழ்மைக்கு முன் ஆடிப்பாவையென பெருகி நிற்பது எனது வலிமை.”
“நான் அடிபணிகிறேன். உன் மைந்தனென்றாகிறேன்” என்றான் விகர்ணன். “மைந்தன் என்பதனால்தான் இக்கணம் வரை நீ சொல்லெடுக்கிறாய், மூடா” என்றான் மகிடன். விகர்ணனை சூழ்ந்து நிழல் அலைக்கொந்தளிப்பென சுழித்தது பன்னிரு பகடைக்களம். ஒவ்வொரு நிழலும் தன் கையில் ஒருவனை வைத்திருந்தது, களிப்பாவையென. அவனை கைமாற்றி வீசி விளையாடியது. அவன் தலையைச் சுண்டி தெறிக்கவைத்தது. கால்களைச் சுழற்றி வீசிப்பிடித்தது. “இரண்டென்றாகுக! ஆம், இரண்டென்றாகாது வெல்வதில்லை எவரும்” என்றான் மாமயிடன்.
[ 18 ]
அவை வாயிலில் வீரர்களின் குரல்கள் எழுந்தன. இரு காவலரை விலக்கி காமிகன் அங்கே தோன்றினான். துரியோதனன் உரத்த குரலில் “வருக! எங்கே அவள்?” என்றான். “அரசே, அரசி என்னுடன் வரவில்லை” என்றான் காமிகன். சினந்து “என்ன நிகழ்ந்ததென்று சொல், மூடா” என்றான் துரியோதனன். அஞ்சி துரத்தப்பட்டவன் போல் மூச்சிரைக்க அருகணைந்த காமிகன் “அரசே!” என்றான். சினத்துடன் பீடம் விட்டெழுந்து அவனை அணுகி “என்ன நிகழ்ந்தது? சொல்!” என்றான் துரியோதனன்.
“அரசே, அரசி இல்விலக்கி அமர்ந்திருக்கும் புறமாளிகையை என் படைவீரருடன் அணுகினேன்” என்றான் காமிகன். “அங்கே எதிர்ப்பிருக்கக்கூடும் என்றெண்ணி நூற்றுவரை என்னுடன் அழைத்துக்கொண்டேன். போரென்றால் அவ்வண்ணமே என்று உறுதிகொண்டே அங்கே சென்றேன்.”
வாயிலில் நின்றிருந்த செவிலியரிடம் “விலகுங்கள்! தடுத்து ஒரு சொல் சொல்பவர்கள் அக்கணமே வெட்டி வீழ்த்தப்படுவார்கள்” என்றேன். அவர்கள் அஞ்சி வழிவிட முதற்சுற்று வாயிலைக் கடந்து உள்ளே சென்றேன். என்னை நோக்கி கன்னங்கரிய பெண்ணொருத்தி வந்தாள். “யார் நீ?” என்று அவளை கேட்டேன். பற்கள் ஒளிர புன்னகைத்து அவள் “நான் ஐங்குழல்கொண்ட அரசி திரௌபதியின் அணுக்கத்தோழி மாயை” என்றாள். “எங்கே உன் தலைவி? அவளை அவைக்கு இழுத்துவரும்படி அரசாணை” என்றேன்.
மெல்ல இதழ்கோடச் சிரித்து “முடிந்தால் இழுத்துச் செல், மூடா!” என்றபோது அவளது விழிகள் சிம்மத்தின் விழிகள்போல் முத்துவெண்மை கொண்டன. நான் என் வாளை உருவி அவளை அணுகியபோது தரையிலிருந்து அவள் நிழல் எழுந்து பிறிதொரு மாயையாகியது. சுவரிலிருந்த நிழல் எழுந்து மற்றொரு மாயையாகியது. பறக்கும் கருங்குழலும் அனலென எரியும் விழிகளுமாக அவள் பெருகினாள். அவ்வறையின் அனைத்து வாயில்களிலிருந்தும் ஐம்புரிக்குழலும் திறந்த வாய்க்குள் எழுந்த கோரைப்பற்களும் சிம்மவிழிகளுமாக பெண்கள் வந்தனர். அறியாத பிடாரிகள். குருதி வேட்கை கொண்டு நெளியும் செவ்விதழ் பேய்கள். காளிகள். கூளிகள். சுவர்கள் கருமைகொண்டன. கன்னங்கரிய தூண்கள். கருமை நெளியும் தரை. இருள் இறுகி எழுந்த மாளிகை அது.
அரசே, அப்பெண்களைக் கடந்து செல்ல அஞ்சி நின்றேன். என்னை குளிர் சூழ்ந்தது. என் கையிலிருந்த படைக்கலங்கள் நழுவின. ஒருத்தி என் அருகே வந்து கைபற்றி “வருக!” என்றாள். என் படைவீரர்கள் அஞ்சி நின்றுவிட்டனர். நான் மட்டும் இருளுக்குள் கருமைக்குள் இன்மைக்குள்ளென புதைந்து புதைந்து உள்ளே சென்றேன். இருள் அள்ளி உருவாக்கிய மாளிகை இருளிலாடி நின்றது. இருளினாலான தூண்களுக்கு மேல் இருள் குவிந்த குவை மாடம். அங்கு இருண்ட அவைக்கூடம். அதன் நடுவே இருளுருகி எழுந்த பீடமொன்றில் அமர்ந்திருந்தாள் ஒருத்தி.
பதினாறு தடக்கைகளில் படைக்கலங்கள். ஐம்புரிக் குழற்பெருக்கு. அனல்விழிகள். இடியெனச் சூழ்ந்த குரலில் “எங்கு வந்தாய்?” என்றாள். “உன்னை இழுத்துச்சென்று என் அரசன் அவை முன் நிறுத்த வந்துள்ளேன். நான் அரசகாவலன்!” என்றேன். “சென்று சொல்க! தன் நெஞ்சு பிளந்து என் காலடியில் குருதி கொடுக்க உறுதிகொண்டவன் எவனோ அவன் எழுக என்று. ஒருதுளியேனும் எஞ்சாமல் மாமயிடனுக்கு தன்னை அளித்தவன் எவனோ அவன் வருக என்று” என்றாள். “ஆம், அன்னையே” என்றேன். தலைவணங்கி இங்கு மீண்டேன்.
துரியோதனன் “அவளது மாயங்கள் அளவிறந்தவை. அத்தனை உளமயக்குகளுக்கு முன்பும் நின்றிருப்பது விழிமூடாமை ஒன்றே. அஞ்சாதவனை ஆட்கொள்ளும் மாயமென்பது தேவரும் கந்தர்வரும் அறியாதது. தம்பியரே, உங்களில் எவர் சென்று அவளை இழுத்துவர முடியும்?” என்றான். அக்கணமே துச்சாதனன் கைகளைத் தூக்கி “நான் சென்று இழுத்துவருகிறேன், மூத்தவரே. அதற்குரியவன் நானே” என்றான்.
“ஆம், மாமயிடன் பேருருக்கொண்ட வடிவன் அவன்” என்றான் விகர்ணனை நெருங்கி நின்ற மகிடன். “அவன் என்னைக் கண்டதுமே ஆடியில் நோக்குபவன்போல் உணர்ந்து முகம் மலர்ந்தான். அரசனும் அவனுக்கு ஒரு படி கீழேதான்.” விகர்ணன் “ஏன்?” என்றான். “நூறுமுறை அணுகியே அரசனை வென்றேன். அவன் மடியிலிருந்து அக்கரிய மகளை எளிதில் அகற்ற என்னால் முடியவில்லை” என்றான் மகிடன். “வலத்தொடையில் அமர்ந்திருந்தாள். தாமரைநூல் அது. ஆனால் விண்ணவரும் அசுரரும் இழுத்த வாசுகி போன்றது.”
அவைநிறைத்த பல்லாயிரவர் “ஆம், செல்க! செல்க! இழுத்துவருக அவளை” என்று கூவி ஆர்த்தனர். இருகைகளையும் விரித்து அலையலையென நடனமிட்டபடி “சென்று வருக! அவளை கொண்டு வருக!” என்றனர். புடைத்த தோள்களுடன் திமிறெழுந்த நடையுடன் துச்சாதனன் அவை விட்டு வெளியே சென்றான்.
[ 19 ]
துச்சாதனன் புறமாளிகையின் வாயிலுக்கு வந்தபோது அங்கு மாயை அவனுக்காக காத்து நின்றிருந்தாள். உடலெங்கும் தசைகள் எழுந்து இறுகி அமைந்து அலைபாய, மதம் நிறைந்த விழிகள் சேற்றில் குமிழிகளென உருள, அறியாத ஒழுக்கொன்றால் அடித்துவரப்பட்டவன் போல அணுகிய அவன் தன் இரு கைகளையும் ஓங்கி அறைந்து “எங்கே அவள்? எங்கே இந்திரப்பிரஸ்தத்தின் இழிமகள்? அவளை அவைக்கு இழுத்துவரும்படி அரசரின் ஆணை” என்றான்.
மாயை தலைவணங்கி புன்னகைத்து “தங்களுக்காகத்தான் காத்திருக்கிறார்கள், இளவரசே” என்றாள். “ஆம், அந்தத் தன்னுணர்வு அவளுக்கிருந்தால் நன்று. தொழும்பி இருக்கவேண்டிய இடம் அரண்மனையல்ல, புறக்கூடம். அவள் ஆற்றவேண்டியது அடிமைப்பணி. அவையில் அதை அரசர் அவளுக்கு அறிவுறுத்துவார். எங்கே அவள்?” என்றான்.
“வருக!” என்று மாயை தலைவணங்கி அவனை அழைத்துச் சென்றாள். அவள் வெண்ணிற ஆடை அணிந்திருந்தாள். வெண்மலர்களை தலையில் சூடி, சங்குவளையும் பாண்டிய நாட்டு வெண்முத்து கோத்த ஆரமும் அணிந்திருந்தாள். இனிய புன்னகையுடன் “இது நீங்கள் அரைமணிக்கிண்கிணி ஒலிப்ப ஆடிவளர்ந்த அரண்மனை என்றே கொள்க என்று அன்னை சொன்னாள். அங்கிருப்பவளும் தங்கள் அன்னையென்றே எண்ணுக!” என்றாள்.
துச்சாதனன் “விலகு! உனது மாயத்திற்கு அடிமைப்படுபவனல்ல நான். எந்த வலையையும் கிழித்துச் செல்லும் வண்டு. நூறு கைகளை தட்டி விலக்கியே என்னை இவ்வண்ணம் தொகுத்துக் கொண்டிருக்கிறேன். எங்கே அவள்?” என்றான்.
வெண்சுவர்களும் பால்விழுதென எழுந்த தரையும் வெண்ணெய்த்திரள் போன்ற தூண்களும் நுரையென அலையடித்த திரைகளும் கொண்ட அந்த மாளிகை அஸ்தினபுரியில் அதற்குமுன் இருந்ததா என்று அவன் ஐயம் கொண்டான். பெண்கள் குருதிவிலக்குக்கு சென்றமைவது தாழ்ந்த கூரையும் கரிய தூண்களும் கொண்ட புறச்சாய்ப்புகளில்தான் என்று அறிந்திருந்தான். இது இவள் அளிக்கும் விழிமயக்கு. இதை வெல்லும் ஒரே வழி என் ஊன்விழிகளுக்கு அப்பால் உளவிழி இல்லாமல் ஆக்கிக் கொள்வதே. ஆம், என் ஊன் விழியால் மட்டுமே இதை பார்ப்பேன். எனது வெறுங்கால்களால் மட்டுமே இதன் மேல் நடப்பேன். வெறும் உயிரென்றும் உடலென்றும் மட்டுமே இங்கே நிறுத்துவேன். நான் விழியிழந்த தந்தையின் மைந்தன்.
தன்னை தான்வகுத்து தன்மேல் சுமத்தியபடி அவன் நடந்தான். இனிய இசை சூழ்ந்த அறை. அதன் முதல்வாயிலை திறந்தபோது அங்கு வெள்ளியலையென கீழாடையும் வெண்பட்டு மேலாடையும் அணிந்து தரையில் விரிக்கப்பட்ட ஈச்சை மரப்பாயில் அமர்ந்து தன்முன் சுண்ணத்தால் வரையப்பட்ட நாற்களத்தில் மலர்மொட்டுகளை வைத்து தன்னுடன் தான் ஆடிக்கொண்டிருந்தாள் திரௌபதி. காலடிகேட்டு அவள் விழிதிருப்பி அவனை நோக்கி இனிய புன்னகையுடன் “வருக மைந்தா, உனக்கென்றே காத்திருந்தேன்” என்றாள்.
உரத்த குரலில் “எழுக! இழிமகளே, உன்னை என் தமையன் அரசவைக்கு இழுத்து வர ஆணையிட்டிருக்கிறார்” என்றான். “இழுத்துச்செல்ல வேண்டியதில்லை. உன் விழைவுப்படி உடன் வரவே இருந்தேன்” என்றாள். எழுந்து தன் ஆடை திருத்தி “இந்த நாற்களத்தில் நீல நிற மொட்டாக உன்னை வைத்திருந்தேன். இதனுள் நீ நுழையும் வாயில் எப்போதும் திறந்திருந்தது” என்றாள்.
“நீ மாயம் காட்டுகிறாய். இவ்வுளமயக்குக்கு ஒருகணமும் ஆட்படேன். எழுக! இல்லையேல் உன் கூந்தல் பற்றிச் சுழற்றி இழுத்துச்சென்று அவை நிறுத்துவேன்” என்றான் துச்சாதனன். அவள் தன் குழலை அள்ளிச் சுழற்றி முடிந்து “அதற்குத் தேவையில்லை. உன்னுடன் வருவதற்கு விழைவு கொண்டிருக்கிறேன்” என்றாள் கனிந்த புன்னகையுடன். “ஏனெனில் இது உனது களம். இங்கு நின்றாடுவதற்காகவே என் உடலில் இருந்து பிரிந்தவன் நீ” என்றாள்.
நடுக்கு ஓடிய குரலில் “என்ன சொல்கிறாய்?” என்றான். “நெடுநாட்களுக்கு முன் கன்னியென காந்தாரத்தில் நான் இருந்தேன். அன்று என்னை கீழ்குலத்தாள் என்று துறந்து சென்றான் மகதத்து மன்னன். அச்செய்தி என்னை வந்தடைந்த கணம் என்னுள் ஊறிய ஒரு துளி நச்சின் கசப்பை அடிநாவில் உணர்ந்தேன். கற்றவற்றால் தேர்ந்தவற்றால் மூதன்னையர் கொடுத்தவற்றால் அதை இனிதென ஆக்கி உண்டு செரித்தேன். கடந்து கடந்து வந்து மறந்தபின் கண்ணிழந்தவனை கணவன் என்று அடைந்தபின் கருநிலவெழுந்த இரவொன்றில் என் கனவில் நீ முதல் முறையாக எழுந்தாய். கரிய உடல். கையில் கதாயுதம். கண்களில் மதமும் மூச்சில் ஊன்வாடையும். உன் கால்களில் குளம்புகளும் தலையில் நீண்டு வளைந்த கரிய கொம்புகளும் இருந்தன. அதன் பின் என்றும் என் உடலுக்குள் நீ வாழ்ந்தாய். உடல் விட்டு பிரிந்து இளமைந்தனாக எழுந்தாய். நீ காத்திருக்கிறாய் என்றறிந்தேன். உனக்கென மறுமுனையில் நானும் காத்திருந்தேன்.”
“போதும்! இனி ஒரு சொல் எடுக்காதே! என்னை பித்தனாக்க எண்ணுகிறாய்” என்றான் துச்சாதனன். “கும்பக்களத்தில் நின்று நீ ஆடிச் சோர்ந்து வீழும் அப்பன்னிரு பகடைக்களத்தில் சிம்மக்களத்தில் நின்றிருக்க நான் வந்தாக வேண்டும்” என்றபடி அவள் அவன் அருகே வந்தாள். சினந்து உரக்க “பித்தெழுந்துவிட்டதா உனக்கு? நீ பேசுவது என்னவென்றறிவாயா?” என்றான் துச்சாதனன். உரக்க நகைத்து “அச்சத்தில் அறிவிழந்துவிட்டாய். அல்லது இங்கு மதுவருந்தி களிகொண்டிருக்கிறாய். கீழ்மகளே, இவ்வண்ணமே நீ வந்து என் தமையனின் பகடைக்களத்தில் நிற்கவேண்டும்” என்று கூவியபடி பாய்ந்து குழலைப்பற்றினான்.
அவள் அன்னத்தின் இறகென முகில்கீற்றென நிலவொளியென எடையற்றிருந்தாள். தன் ஒற்றைக்கையால் நிலம் தொடாது தூக்கி இழுத்தபடி அவன் நடந்தான். ஏழு அடிவைத்து அம்மாளிகை விட்டு வெளிவந்ததுமே சித்தம் குழம்பி கொந்தளித்து கனவிலிருந்து விழித்துக்கொண்டான். எங்கிருக்கிறோம் என்று உணர்ந்ததுமே நிலையுறுதிகொண்டான். எளிய சாய்ப்புமாளிகையின் வாயிலுக்கு வெளியே சேடியரும் செவிலியரும் அஞ்சி உடல் நடுங்கி விதிர்த்து நோக்கி நின்றிருந்தனர். சிலர் நெஞ்சறைந்து கூவி அழுதனர். சிலர் கால்தளர்ந்து விழுந்தனர். காவலர் விறைத்த உடலோடும் இறுகப்பற்றிய படைக்கலங்களோடும் சிலைத்து நின்றிருந்தனர்.
அவள் மெல்லிய உதடசைவுகளுடன், பாதி சரிந்த விழிகளுடன், மெய்ப்பு கொண்டு மெல்ல அதிர்ந்த கரிய உடலுடன் அவன் கையில் இருந்தாள். அவள் குழல் பற்றி இழுத்து இடைநாழியினூடாக அவை நோக்கி நடந்தான். கால் தளர்ந்து அவன் கைவிசையால் விரல் இழுபட வந்தாள். உறுமியபடியும் உரக்க நகைத்தும் தரையில் காறித்துப்பியும் எடைஒலிக்கும் காலடிகளை எதிரொலி தொடர அவன் நடந்தான்.