[ 16 ]
கோல் விழுந்துகொண்டிருந்த முரசின் உட்பக்கமென முழங்கிக்கொண்டிருந்த பன்னிரு பகடைக்களத்திற்குள் கூப்பிய கைகளுடன் காளிகன் நுழைந்தான். துரியோதனன் இரு கைகளையும் விரித்து “அமைதி! இதோ வருகிறான் சூதன்! கேட்போம் அவனை!” என்றான். “அமைதி! அமைதி!” என்றனர் அவை முழுக்க நிறைந்திருந்த அவனுடைய மாற்றுருக்கள். மெல்ல அவை அடங்கியது. காளிகன் கூப்பிய கைகளை விலக்காமலேயே படிகளில் ஏறி துரியோதனன் அருகே வந்து நின்றான்.
“எங்கே அவள்? அஸ்தினபுரியின் முதற்தொழும்பி…” என்றான் துரியோதனன். காளிகன் முகம் சிறுகுழந்தையென உவகையில் மலர்ந்திருந்தது. சொல்லெடுக்க இயலாமல் உதடுகளை அசைத்தான். கர்ணன் துரியோதனனை நோக்கி கைகாட்டிவிட்டு “சொல்! நீ அங்கு என்ன பார்த்தாய்?” என்றான். அவன் மேலும் சொல்லுரைக்க இயலாமல் உதடுகளை அசைத்தான். கர்ணன் சினத்துடன் “சொல், மூடா! என்ன கண்டாய் அங்கு?” என்றான்.
காளிகன் “நான் மகளிர் மாளிகைக்கு சென்றேன்” என்றான். “ஆம், அதை அறிவோம். அங்கு என்ன கண்டாய்? அவள் என்ன உரைத்தாள்? சொல் இந்த அவைக்கு!” என்றான் கர்ணன். “அரசே, அவையீரே, இங்கிருந்து கிளம்புகையில் அரசரின் ஆணையை சென்னி சூடிச் செல்லும் எளிய ஏவலன் என்றே என்னை உணர்ந்தேன். நன்றோ தீதோ அறமோ மறமோ ஒன்று தேரும் உரிமை என்போல் ஏவலருக்கில்லை. ஏழு தலைமுறையாக எங்கள் தலையை அஸ்தினபுரி அரசரின் காலடியில் வைத்தவர்கள் நாங்கள். ஆணையிடப்பட்டதை அவ்வண்ணமே செய்யும் எண்ணம் ஒன்றே என்னுள் இருந்தது. என்னுடன் ஏழு படைவீரர்களை அழைத்துக்கொண்டு உருவிய வாளுடன் இந்திரப்பிரஸ்தத்தின் அரசி இருந்த மகளிர் மாளிகைக்கு சென்றேன். என் எதிர்வந்த செவிலியிடம் இந்திரப்பிரஸ்தத்தின் அரசி எங்கே என்று கேட்டேன்.”
அரசி குருதிவிலக்காகி இருப்பதாகவும் வடக்குத் துணைமாளிகையில் ஒதுக்கத்தில் அமர்ந்திருப்பதாகவும் சொன்னார்கள். அங்கு ஆண்களுக்கு நுழைவொப்புதல் இல்லை என்றார் காவலர்தலைவர். “நான் அரசரின் ஏவலன், ஆணை பெற்று வந்தவன், அஸ்தினபுரியின் எப்பகுதியிலும் நுழைவேன், எனக்கு ஒப்புதல் தேவையில்லை. விலகுக!” என்றபடி வீரர்களை விலக்கி முன்னால் சென்றேன். “என்ன இது? இது எவ்வண்ணம்?” எதிரே கைவிரித்து வந்த முதுசெவிலியை “விலகு…! அரசாணை” என ஆணையிட்டு பிடித்து ஒதுக்கிவிட்டு முன்னால் நடந்தேன்.
எனக்குப்பின்னால் பதறியபடி அவள் வந்தாள். “நில்லுங்கள்! நான் சொல்வதை கேளுங்கள்! இது முறையல்ல. பெண்களின் ஒதுக்கமென்பது ஏழு தெய்வங்களால் காக்கப்படும் இடம். அங்கு மங்கையர் அன்னையராக மட்டுமே அமர்ந்திருக்கிறார்கள். அங்கு ஆண்கள் நுழையலாகாது என்பது ஆன்றோர் வகுத்த விதி” என்று அவள் கூவினாள்.
“வாயை மூடு, இழிபிறவியே! பிறிதொரு சொல் உரைத்தால் உன் நாவை வெட்டி இங்கு வீசுவேன்” என்று கூவியபடி நான் மேலே நடந்தேன். அங்கிருந்த காவலர்கள் வாளுடன் என்னை எதிர்கொள்ள அஸ்தினபுரியின் ஆணைக் கணையாழியை தூக்கிக்காட்டி “இது அரசரின் ஆணை” என்றேன். படைக்கலம் தாழ்த்தி அவர்கள் வழிவிட்டனர். ஒதுக்கமாளிகையை நோக்கிச் சென்று அதன் வாயிலில் இருந்த செவிலியிடம் “வரச்சொல் உன் அரசியை!” என்றேன். இருகைகளையும் விரித்து அவள் என்னை தடுத்தாள். “இதற்கப்பால் ஆண்களுக்கு ஒப்புதல் இல்லை. இங்கு உங்களை தடுத்து நிறுத்த வேண்டியது என் பொறுப்பு” என்றாள்.
“விலகு! இல்லையேல் உன் தலை இங்கு உருளும்” என்றேன். “அவ்வண்ணமே ஆகுக! என்றேனும் ஒருநாள் அரசியின்பொருட்டு உயிர் துறக்க உறுதிகொண்டவள் நான். இழிமகனே! இங்கு நாங்கள் எழுவர் இருக்கிறோம். ஏழு பெண்டிரின் தலைகொய்த குருதியில் நடந்தே நீ இதற்கப்பால் அரசியை அணுக முடியும்” என்றாள்.
முதல் நின்றவள் நெஞ்சில் பாய்ச்சுவதற்காக எனது உடைவாளை உருவினேன். அப்போது உள்ளிருந்து அரசியின் பெருந்தோழி மாயை வந்தாள். “அவனை உள்ளே அனுப்பும்படி அரசியின் ஆணை” என்றாள். என்னைத் தடுத்த செவிலி திகைப்புடன் திரும்பி “உள்ளே அனுப்புவதா? அவ்வண்ணம் ஒரு முறைமையில்லையே…!” என்றாள். மாயை “அவன் வருக என்றார் அரசி” என்றாள். செவிலி “குருதிவிலக்கான பெண்ணை அவள் இளமைந்தரன்றி பிற ஆண்கள் நோக்கலாகாது” என்றாள்.
பெருந்தோழி புன்னகைத்து “வந்திருப்பது தன் மைந்தனே என்றார் அரசி” என்றாள். விழிகளில் குழப்பத்துடன் அவர்கள் வழிவிட்டனர். பெருந்தோழி மெல்லடி வைத்து என்னை அணுகி “வருக, மைந்தா!” என்றாள். நான் என் கையில் இருந்த கத்தியை பார்த்தேன். அது ஒரு தாழைமலர் இதழாக மாறிவிட்டதுபோல் விழிமயக்கேற்பட்டது.
அவளை நோக்கி “நீ ஏதோ மாயம் செய்கிறாய்” என்றேன். என் குரல் சிறுமைந்தனின் குரல் போன்றிருப்பதாக தோன்றியது. அவள் இனிதாக புன்னகைத்து “என்னை மாயை என்பார்கள். வருக!” என்று என் கைகளை பற்றினாள். பிறிதொரு கையால் என் தோளை அணைத்து “வா!” என்றாள். மறைந்த என் அன்னையின் குரலென்றே அதை கேட்டேன்.
அரசே, சிற்றடி எடுத்து வைத்து சிறுவன் போலவே அவளுடன் சென்றேன். நான் சென்றது எவ்விடம் என்று இந்த அவையில் என்னால் சொல்ல முடியாது. அப்பெண் மாயம் கற்றவளா? மகேந்திர வித்தையால் என் உள்ளத்தைக் குழைத்து காட்சிகளையும் ஒலிகளையும் தானே அமைத்து எனக்களித்தாளா? நான் நுழைந்தது ஒதுக்கறையின் முதல் வாயிலை என்று உறுதிபடச் சொல்வேன். சென்ற வழியோ நான் இதுவரை அறிந்திலாதது.
அரசே, அங்கே மெல்லிய இசையொன்று சூழ்ந்திருக்க கேட்டேன். பீதர் நாட்டு வெண்பட்டாலானவை போன்று சுவர்கள் ஒளிவிட்டன. மலைவாழை அடிபோல வெண்பளிங்குத் தூண்கள். பால்நுரை போன்ற திரைச்சீலைகள். என் ஆடிப்பாவை என்னை நோக்கிய வெண்தரை. என் விழிகள் பாலென பட்டென பளிங்கென விரிந்த வெண்மையால் முற்றிலும் நிறைந்திருந்தன. அவ்வினிய இசை என்னை வழிகாட்டி அழைத்துச் சென்றது.
என் கைபற்றி உடன்வந்தவள் அந்த இசையின் பருவடிவமென்று அதிர்ந்து கொண்டிருந்தாள். “வருக!” அருகே என் செவிக்குள் ஒரு குரல் ஒலித்தது. நான் சென்று நின்ற அவையில் ஓர் அரியணையில் வெண்ணிறப் பட்டாடையும் ஒளிவிடும் நீர்த்துளி வைரங்களும் இளநீலமோ வெண்மையோ என்று விழிதிகைக்கும் மணிமுடியும் அணிந்தவளாக அன்னை அமர்ந்திருக்கக் கண்டேன். நானறிந்த அத்தனை பெண்முகங்களும் ஒரு முகமானது போல். திருமகளா? தெற்கு ஆலயத்தில் கோயில் கொண்டுள்ள ராதையா? மகாகௌரியா? புலரி ஒளிகொண்ட சாவித்ரியா? அல்லது என் மறைந்த அன்னையா? மூதன்னையரா? என் மடிக்கு கன்னிமுகம் சூடி வந்த மனைவியா? கருக்குழந்தையென என் கையில் தவழ்ந்த என் மகளா? அல்லது இந்திரப்பிரஸ்தத்தின் அரசியேதானா? அறியேன்.
அவ்விழிகள் மிக கனிந்திருந்தன. முலையூட்டிக் கொண்டிருக்கும் அன்னையின் விழிகள் மட்டுமே அத்தனை கனிந்திருக்கும். இவ்வுலகில் நிகழ்பவை அனைத்தையும் பொறுத்தருளும் பேரருள் கொண்டவை அவை. “எதற்கென வந்தாய், மைந்தா?” என்று அவள் கேட்டாள். அவளைச் சூழ்ந்து நின்றிருந்தனர் நூற்றெட்டு வெண்ணிறக் கன்னியர். என் உள்ளத்தை உணர்ந்தபின் என்னால் அவள் கால்களைத்தான் நோக்க முடிந்தது. குளிர்ந்தவை. மீன்விழிகள் என மின்னும் வைரங்கள் பதித்த கணையாழிகளை அணிந்திருந்தாள். மண்டியிட்டு அக்கால்களை நோக்கினேன். அவ்வைரங்கள் ஒவ்வொன்றும் விழிகளென மாறி என்னைப்பார்த்து கனிந்து புன்னகைத்தன. “சொல்!” என்றாள்.
“அன்னையே, அங்கு அவையில் மாமன்னர் துரியோதனர் தன்னிலிருந்து தான் ஊறிப்பெருகி பேருருக் கொண்டு எழுந்து நின்றிருக்கிறார். உங்களை அவைக்கு இழுத்துவரும்படி ஆணையிட்டார்” என்றேன். உரக்க நகைத்து “அவ்வாடலில் நான் மகிழ்ந்தேன் என்று அவனிடம் சொல். மைந்தரின் மடமையும் ஆணவமும் அன்னைக்கு உவப்பளிப்பதே. அவனிடம் மூன்று வினாக்களை மட்டுமே நான் எழுப்பினேன் என்று சொல்” என்றாள். “அருள்க, அன்னையே!” என்றேன்.
“தொழும்பியராக ஒரு குலப்பெண்ணை அவன் அவைக்கு கொண்டு செல்லும்போது என்றேனும் ஒருநாள் தன் அன்னையும் உடன்பிறந்தாளும் துணைவியரும் அவ்வண்ணம் கொண்டு செல்லப்படுவதும் அரசமுறையே என்று உணர்கிறானா? இத்தருணத்தில் அவன் வென்று தருக்க எண்ணுவது இந்திரப்பிரஸ்தத்தின் அரசியையா அல்லது தான் தன்னுள் விழையும் முதற்பெண்ணையா? பெண்ணை எவ்வழியிலேனும் ஆண் முற்றிலும் வெல்லமுடியுமென்று அவன் எண்ணுகிறானா? கேட்டுவா!” என்றாள்.
“ஆம், இறைவியே! அவரிடம் அவ்வினவைக் கேட்டு மீள்கிறேன்” என்றேன். “என் துணைவனென அங்கிருக்கும் இந்திரப்பிரஸ்தத்தின் அரசனிடம் கேள். அவன் தன் நாட்டை வைத்திழந்தான். பின்னர் தம்பியரை வைத்திழந்தான். தன்னையே வைத்திழந்தானா? தன்னையிழந்தவன் எவ்வண்ணம் என்னை வைத்திழக்க முடியும்? தன் உடல்மேலும் உயிர்மேலும் உரிமை இல்லாதவன் பிறிதொருவள் மேல் எவ்வுரிமையை கொண்டான்? எங்ஙனம் என்னை களப்பணயமென வைத்தான்?” என்றாள். “ஆணை அன்னையே, அவ்வண்ணமே கேட்கிறேன்” என்றேன். தலைவணங்கி திரும்பி வந்தேன்.
“அரசே, பல்லாயிரம் வெண்தாமரை மலர்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி பூத்துச் சொரிந்த தடாகம் ஒன்றின்மேல் கால்படாது நடந்து வரும் உணர்வை அடைந்தேன். அரண்மனை முற்றத்திற்கு வந்து விழுந்தேன். விண்ணிலிருந்து உதிர்ந்த கந்தர்வன் போல் இருந்தேன். எங்கிருக்கிறேன் என்றறியவே நெடுநேரமாகியது. அங்கு நின்றிருந்த காவலர் என்னை இருகைகளையும் பற்றித்தூக்கி “என்ன நிகழ்ந்தது?” என்றனர். “அறியேன். என்னை அரசரிடம் கொண்டு செல்லுங்கள்” என்றேன்.
இரு கண்களிலும் கண்ணீர் வார தலைக்கு மேல் கைகூப்பி காளிகன் சொன்னான் “அன்னையை கண்டுவிட்டேன். இப்பிறவியில் இனி விழிகள் காண ஏதுமில்லை.” துரியோதனன் இதழ்கள் வளைய சிரித்து “நான் எண்ணினேன். அவளிடம் இருப்பது ஆட்சித்திறனும் சூழ்ச்சித்திறனும் மட்டுமல்ல, நாமறியா மாயத்திறன் ஒன்றும் கூட” என்றான். கர்ணன் “ஆம் அரசே, தொன்று தொட்டே பாஞ்சாலம் இந்திரமாயத்திற்கும் மகேந்திர மாயத்திற்கும் புகழ் பெற்றது” என்றான்.
சினம் எழ “மாயத்தால் வெல்லப்படுவதல்ல அஸ்தினபுரியின் அரசவை” என்றான் துரியோதனன். “அனைத்து மாயங்களையும் அறுக்கும் விசை மறுத்துத் தருக்கி நிற்கும் ஆண்மைதான். அவளுக்கு ஆண்மை என்றால் என்னவென்று காட்டுகிறேன்.” திரும்பி பாண்டவரை நோக்கி இளிவரலாக நகைத்து நிலத்தில் துப்பி “இப்பேடிகளை மட்டுமே அறிந்திருக்கிறாள். ஆகவேதான் என் அவைக்களத்துடன் சொல்லாடுகிறாள்” என்றான்.
“காமிகா!” என்று துரியோதனன் அழைத்தான். “அவன் படைத்தலைவன். ஷத்ரியன்!” என்றான். காளிகனை நோக்கி “வெற்று உளமயக்குக்கு விழியளிக்கும் சூதன் நீ. இச்செயலுக்கு நீ உகந்தவனே அல்ல. வீரர்களே, இவனை அகற்றுக! இனி அவளிடம் செல்ல உளம் வைரம்பாய்ந்த ஷத்ரியன் எழுக!” என்றான்.
விகர்ணன் அவன் உடல் அறியாக் காற்றால் கொந்தளிக்கும் காட்டுப்புதர்மரம் போல அவை நின்று ஆடுவதை நோக்கிக்கொண்டிருந்தான். அத்தனை மானுடருக்குள்ளும் அவைநடிகன் ஒருவன் வாழ்கிறான். தன் அகத்தை அசைவென குரலென உணர்வென மிச்சமின்றி கொட்டி நிரப்ப விரும்புபவன். அகமே புறமென மாறி நின்று கனல்பவன். அவனை கட்டுப்படுத்தும் சித்தச்சரடொன்று அறுந்துவிட்டால் எழுகிறான். ஆடத்தொடங்கிவிட்டால் சூழ்ந்திருக்கும் அனைத்தையும் இணைத்து அவையொன்றை அமைக்கிறான். அதில் தன் வெளிப்பாட்டை தானே உணர்ந்து சுவைகண்டபின் அவன் அடங்குவதில்லை.
காமிகன் வந்து தலைவணங்கி “ஆணை அளியுங்கள், அரசே!” என்றான். துரியோதனன் “என்ன கேட்டாள்? தன்னை வைத்திழந்தபின் அவளை வைத்திழக்க அரசனுக்கேது உரிமை என்றா? அதோ நின்றிருக்கிறான் அவளை வைத்தாடிய கீழ்மகன். அவனிடமே கேள்!” என்றான். தருமனை நோக்கி “சொல், அடிமையே! உன் மறுமொழி என்ன?” என்றான். தருமன் தலைகுனிந்து உடல் மட்டும் சிலிர்த்துக்கொண்டிருக்க அசையாது நின்றார். “நன்று! அடிமை அரசுசூழ்தலில் பங்கு கொள்ளக்கூடாது. அடிமையின் நாவில் அமையவேண்டும் முதற் தளை” என்று துரியோதனன் சிரித்தான்.
காமிகனை நோக்கி “அவள் அவை நின்று சொல்சூழ விழைகிறாளா? நெறிநூல் கேட்க விரும்புகிறாளா? சொல் அவளிடம், தன்னை வைத்து அவன் இழந்தான் என்றால் பராசர ஸ்மிருதியின்படி அப்போதே அவளும் அடிமையாகிவிட்டாள். லகிமாதேவியின் ஸ்மிருதியின்படி எப்போதும் பெண்ணென்று எஞ்சும் அவள் தன் கைபிடித்து உரிமைகொண்ட கணவன் சூதில் வைத்திழந்தபோது அடிமையானாள்” என்றான். “அதை மீறவேண்டுமென்றால் இங்கு வந்து சொல்லட்டும், இவர்கள் ஐவரும் அவள் கொழுநர்கள் அல்ல என்று… ஆம், ஐந்துமுகத்தாலியை கழற்றி அவைமுன் வீசி சொல்லட்டும்!”
கர்ணன் “நாங்கள் ஏற்று ஒழுகுவது நாரதஸ்மிருதியை என்று சொல். எந்த நெறியின்படி ஐவருக்கும் துணைவியாகி அவள் மைந்தரைப் பெற்றாள் என்று சென்று கேள். ஒருவனைப்பற்றி ஓரகத்திருப்பவளே கற்புள்ள பெண் என்கின்றன எங்கள் நெறிகள். எங்கு எதன்பொருட்டு ஒரு காலடி எடுத்து வெளியே வைத்தவளாயினும் அவள் பரத்தையே. இங்கு அவள் பரத்தையென்றே அழைத்துவரப்படுகிறாள். பலர்பார்க்கும் அவைமுன் பரத்தை வந்து நிற்பதில் முறைமீறலென ஏதுமில்லை” என்றான்.
துரியோதனன் “ஆம்! அதுவே எங்கள் மறுமொழி” என்றான். அரியணையில் சென்றமர்ந்து “சென்று சொல் அச்சிறுக்கியிடம்! அவள் என்னிடம் கேட்டவற்றுக்கு என் மறுமொழி இது. என் அன்னையர், உடன்பிறந்தோர், துணைவியர், மகளிர் ஆண்மை கொண்ட பெருங்குடிப்பிறந்த பெண்கள். பெண் சிம்மம் நாய்முன் தலைவணங்கி நிற்காது. நின்றதென்றால் அது சிம்மமே அல்ல. அது வாலாட்டி கால்நக்கி குழைவதே நெறி. இதோ, குடிப்பெண்ணை பகடைப்பணயம் வைத்து ஆடி நின்றிருக்கும் இழிமகனின் துணைவியென ஆனதினாலேயே குலத்தையும் குடிப்பெருமையையும் பெண்ணெனும் தகைமையையும் அவள் இழந்துவிட்டாள்” என்றான்.
“ஆம், என் குடிப்பெண்டிர் எவரேனும் இத்தகைய ஓர் இழிமகனை கைபிடித்து இல்லறம் கொள்வார்களென்றால் இதைவிட பன்னிருமடங்கு இழிவை அவர்கள் சூடுவார்களாக!” என்று அவன் கூவினான். மூச்சிரைக்க கைகளை தட்டிக்கொண்டு துரியோதனன் சொன்னான் “என்ன சொன்னாள்? இவ்வவையில் நான் இழுத்து வரப்போவது எவளை என்றா? ஆம். இங்கு சூழ்ந்துள்ள அத்தனை பேரும் அறியட்டும். அவளை என் நெஞ்சுக்குள்ளிருந்துதான் இழுத்து இங்கு கொண்டுவந்து அவைமுன் விடவிருக்கிறேன். குருதி சிதற ஈரல்குலையை பிழிந்தெடுத்து வைப்பதுபோல அதை செய்கிறேன்.”
குரல் உடைய நெஞ்சை அறைந்து அவன் கூவினான் “எங்கோ அன்று அவளிருந்த அரியணை ஏதென்று அறிந்திருந்தால் இவ்வண்ணம் இழிந்திருக்கமாட்டாள். சென்று சொல், அந்தப் பொதுமகளிடம். அவள் கால்களில் பணிந்த முதல் தலை என்னுடையதென்று. கன்னியென அவள் காலடிகள் பதிந்த மண்ணனைத்தும் என் நெஞ்சம் மலர்ந்து விரிந்ததே என்று!” அவன் உதடுகள் இறுக கழுத்துத் தசைகள் அதிர சொல் அடைத்து திணறினான்.
பின்னர் மூச்சை மீட்டு “இந்திரப்பிரஸ்தத்தின் அரசியை அல்ல. பாஞ்சாலத்துக் குலமகளை அல்ல. பாண்டவர்களின் தேவியையும் அல்ல. பெண்ணென்று வந்து என் முன் பெருகி எழுந்து முழுமை காட்டிய ஒன்று. கட்டைவிரல் முனையாலேயே முழுதும் தன்னைக் காட்டும் பெரிது. எதன் பொருட்டு ஆண் முழுதமைந்து வாழமுடியுமோ, எதற்காக சிரமறுத்து வீழமுடியுமோ, எதன் பொருட்டு விண்ணையும் மண்ணையும் புல்லெனக் கருதமுடியுமோ அதுவாக அமைந்த ஒன்று. பெரும்பெண்மை. பேரன்னை. அறுத்து குருதி பெருக நான் என்றோ வீசிய ஒன்றை கடக்கிறேன். ஆம், அதையே இழுத்து வந்து இங்கு நிறுத்த விரும்புகிறேன். அவள் முகத்தை நோக்கி நீ என் அடிமை என்று சொல்ல விரும்புகிறேன். அவள் தலைமேல் கால் வைத்து மிதித்தேறியே நான் நான் என்று கூவ விரும்புகிறேன்” என்றான்.
“சென்று சொல், அழைப்பது அஸ்தினபுரியின் அரசன் என்று. காலவடிவன். கலி எழுந்தவன். கொதிக்கும் குருதிக்கலமென தன் தலையை சுமந்தலையும் வெறியன்” என்றான் துரியோதனன். ஒருகணம் தளர்ந்து மேலும் வெறிகொண்டு இருகைகளையும் விரித்து தூதனை நெறித்துக் கொல்ல விழைபவன் போல அருகே சென்று தொண்டை நரம்புகள் புடைக்க இரு கண்களும் நீர் கொண்டு கசிந்து வழிய கூவினான் “என்ன கேட்டாள்? பெண்ணை வெல்ல ஆணால் முடியுமா என்றா? முடியாதென்றே ஆகட்டும். ஆம், ஒருபோதும் இயலாதென்றே ஆகட்டும். ஆனால் இப்புவியில் பெண்ணென்றும் ஆணென்றும் பிரிந்து வந்த நாள் முதல் அவ்வெல்லமுடியாமைக்கு முன் நெஞ்சறுத்து குருதி பெருக்கி விழுந்த பல்லாயிரம் ஆண்களில் ஒருவனாக நான் இருக்கிறேன். சென்று சொல்! ஆம், நான் மகிஷன், நான் நரகன், நான் ராவணப்பிரபு!” அவன் நெஞ்சை ஓங்கி ஓங்கி அறைந்து நகைத்தான். “ஆம்! ஆம்! சென்று சொல், மூடா!”
காமிகன் “ஆம் அரசே, ஆணை!” என்று தலைவணங்கி வெளியேறினான். தளர்ந்தவன் போல அரியணையில் விழுந்து தன் தலையை கையால் பற்றிக்கொண்டான் துரியோதனன்.