[ 13 ]
அஸ்தினபுரியின் விரித்த கைகளில் வைத்த தாமரைபோல் வடிவுகொண்டிருந்த பன்னிரு பகடைக்களத்தின்மீது வானமென கவிந்திருந்த குவைக்கூரைப் பரப்பை பின்னிநிறைந்த உடல்களாக மாற்றிப் பரவியிருந்த தேவர்களும் அசுரர்களும் நாகங்களும் இருட்தெய்வங்களும் பூதங்களும் கின்னரரும் கிம்புருடரும் கந்தர்வர்களும் எண்திசைக்காவலரும் ஏழுமீன் முனிவரும் அருந்தவத்தோரும் விழிதிறந்து கீழே நோக்கிக்கொண்டிருந்தனர். பெருமூச்சுடன் வசிஷ்டர் “முதற்பிழை” என்றார். விஸ்வாமித்திரர் “எப்போதும் முதலில் எழுவது அமுதே” என்றார்.
கரியநாகம் ஒன்று நெய்யருவிபோல வழிந்திறங்கி தருமனுக்குப் பின்னால் சென்று வளைந்து அவன் இடத்தோளுக்கு மேலாக எழுந்து ஏழுதலைப்படம் விரித்து ஆடியது. இந்திரன் சலிப்புடன் “எவர் வெல்லவேண்டுமென்பதை பகடைக்களம் தன் கோடுகளில் முன்னரே எழுதி வைத்திருக்கிறது. அவனுக்கு முதல் வெற்றியை அளித்து உள்ளத்தில் மாயையின் களிப்பை நிரப்புகிறது. ஊழென தன்முன் விரிந்துள்ள பகடைக்களத்தை ஆளும் தெய்வமென அவன் தன்னை எண்ணத்தொடங்குகிறான்… மூடன்” என்றான்.
சோமன் “அவனுள் இன்னும் வாழும் பேரறத்தானைச் சூழ்ந்துள்ளன அவன் மூதாதையர் அளித்த நெய்யும் சோமமும் உண்ட தெய்வங்கள். எளிதில் அவன் தோற்கமாட்டான்” என்றான். “பார்ப்போம்” என்றபடி கரிய உடல் வளைவுகளைச் சுழித்துச் சீறியது வாசுகி. அருகணைந்த அனலோன் “அவன் அகச்செவிகள் மூடியபடியே வருகின்றன. இத்தனை அருகே சூழ்ந்தும் அவன் தெய்வங்களை உணரவில்லை” என்றான். “ஆனால் அவன் உணர்ந்துகொண்டிருக்கிறான் என்னை!” என்றபடி கார்க்கோடகன் சகுனியின் மேல் எழுந்து மலைவாழையிலை போல படம் திருப்பினான். “அவன் காதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். மெல்ல மெல்ல என்று.”
சகுனி தன் கையை தூக்கி “இந்திரப்பிரஸ்தத்திற்கரசே, இவ்விரண்டாவது ஆடலில் அஸ்தினபுரியின் சார்பாக அமர்ந்துள்ள நான் இந்நகரத்தில் ஓடும் மூன்று பேராறுகளை தங்களுக்கு பந்தயமென வைக்கிறேன்” என்றார். தருமன் புன்னகையுடன் “அதற்கு நிகரென இந்திரப்பிரஸ்தத்தின் பன்னிரு துறைமேடைகளையும் நான் பந்தயம் வைக்கிறேன்” என்றார். சகுனி “ஏற்றேன்” என்றார். “அஸ்தினபுரியின் ஆறுகள் வழியாக இந்திரப்பிரஸ்தத்தின் வணிகர்கள் ஒழுகுவார்கள்” என்று தருமன் சிரித்தபடி பகடைகளை சகுனியிடம் அளித்தார். எவ்வுணர்ச்சியுமில்லாமல் “நன்று” என்றபடி சகுனி பகடைகளை உருட்டினார்.
“ஆறு” என்று அறிவித்தான் நிமித்திகன். அவரது படைமுகப்பில் ஆறு வில்லவர்கள் எழுந்து முன்நின்றனர். தருமன் பகடைகளை வாங்கி நடனமென கைநெகிழ உருட்டி குனிந்து பார்த்தார். “பன்னிரண்டு” என்று அறிவித்தான் நிமித்திகன். தருமன் தாடியை நீவியபடி திரும்பி அர்ஜுனனை பார்த்தார். பின்பு இருவிரல்களால் காய்களை நகர்த்தி கவசப்படை ஒன்றை தன் களத்தில் அமைத்தார். “மூடன்! மூடன்!” என்றார் வசிஷ்டர். “வெல்லும்போதே அச்சம் கொள்ளாதவன் சூதில் கடந்து செல்வதில்லை” என்றார். விஸ்வாமித்திரர் “அவன் ஊழ் அவனைச் சூழ்ந்துள்ளது” என்று நகைத்தார்.
கூரையிலிருந்து வழிந்திறங்கிய பிறிதொரு நாகம் தருமனின் அருகே தலைதூக்கி வலத்தோள் வழியாக நோக்கி நின்றது. சகுனி தன் வில்லோர் படையை அம்பென குவித்து முன் கொண்டுவர அகல்விளக்கின் சுடரைப் பொத்தும் கைகளைப்போல் தன் படையை மாற்றி அதை சூழ்ந்தார் தருமன். இருமுறை ஒன்பதும் ஒருமுறை எட்டும் பிறிதொருமுறை பன்னிரண்டும் அவருக்கு விழுந்தன. தன் முழுப்படையுடனும் அலைபோல் அறைந்து சகுனியின் படையை சிதறடித்தார். இறுதிக்காயும் களம் விட்டுச் சென்றபோது வில்லேந்திய அவர் படைத்தலைவன் சகுனியின் அரியணையில் ஏறி அமர்ந்தான்.
கைகளை கட்டிக்கொண்டு தன் பீடத்தில் சாய்ந்து “இவ்வாடலும் முடிந்தது, மாதுலரே” என்றார் தருமன். சகுனி நீள்மூச்சுடன் “ஆம்” என்று தலையசைத்தார். துரியோதனன் எழுந்து இறுகிய முகத்துடன் கையில் நீர்விட்டு தன் நதிகளை தருமனுக்கு அளித்தான். சூழ்ந்திருந்த அவை உடலசைவில்கூட உளம் எஞ்சாமல் சிலைத்திருந்தது. தருமன் “மூன்றாவது ஆடலை தாங்கள் தொடங்கலாம், மாதுலரே” என்றார். “அல்லது ஆடலை முடிப்பதென்றாலும் ஆகும்.” சகுனி “எளிதில் முடியாது இப்போர்” என்றார். “ஆம்” என தருமன் புன்னகைத்தார்.
வசிஷ்டர் கைகளை நீட்டி “மூடா! நிறுத்து! போதும்!” என்றார். இரு நாகங்களும் பத்தி புடைக்க அவர் இருபக்கங்களிலும் விரிந்து மெல்ல அசைய அவர் செவியசையும் வேழமுகம் கொண்டவராகத் தோன்றினார். சகுனி “இந்திரபுரிக்கரசே! இதோ அஸ்தினபுரியின் தலைவர் தனது மணிமுடியையும் செங்கோலையும் பந்தயமென வைக்கிறார்” என்றார். தருமன் புன்னகையுடன் துரியோதனனை பார்த்தபின் “ஒப்புகிறேன். இந்திரப்பிரஸ்தத்தின் அரியணையை நான் பந்தயமென வைக்கிறேன்” என்றார்.
“என்ன செய்கிறான்…!” என்று கூவியபடி தெற்குமூலையிலிருந்து முப்புரிவேலை சுழற்றியபடி யமன் எழுந்தான். “விதுரா, நீ என்ன செய்கிறாய் அங்கு? சொல் அவனிடம்!” அக்குரலைக் கேட்டவர் போல விதுரர் உடல் அதிர சற்று எழுந்து பின் அமர்ந்தார். “நிறுத்து அவனை…!” என்று யமன் கூவ விதுரர் நிலையழிந்தார். ஆனால் அக்குரல் தருமனை சென்றடையவில்லை.
சகுனிக்கு மூன்று விழுந்தது. அவரது குதிரைப்படைத்தலைவன் இருகுதிரை வீரர்களுடன் களத்தில் எழுந்தான். பகடையை கையில் தருமன் வாங்கியதும் யமன் அவனை அணுகி அவன் நெற்றியை ஓங்கி அறைந்து “நிறுத்து, மூடா! நீ எல்லை கடக்கத் தொடங்கிவிட்டாய்” என்றான். கைகளும் தலையும் அதிர தருமன் ஒருகணம் பின்னகர்ந்தார். தலையை கையால் மெல்ல தட்டிக்கொண்டார். நீள் மூச்சு விட்டு அதை கடந்து சென்றார்.
அவர் பகடைநோக்கி கைகளை நீட்ட அக்கையைத் தொட்டு அதில் வால் சுழற்றி பின்னி மேலேறி அவன் கைவிரல்களுக்கு நிகராக தன் பெரும் பத்தியை விரித்தது நாகம். பிறிதொன்று அவன் காதில் மெல்லிய சீறலாக “ஆடு, வெற்றி அணுகுகிறது. இவ்வாடலுடன் இக்களம் விட்டெழுந்து வெல்லற்கரிய பாரதவர்ஷத்தின் சத்ரபதி நான் என்று கூவு! இதுவே அத்தருணம்” என்றது.
வருணன் “பகடைப்புரளல் என்பது தெய்வங்களும் அஞ்சும் முடிவிலி. அவனோ தன் விரல்களில் அது ஆற்றப்படுவதாக எண்ணுகிறான். வீணன்!” என்றான். “சூது கண்டு மகிழ்பவர்களும் வீணர்கள்தான். மூடர்கள்தான்” என்று திரும்பி அவனை நோக்கி சீறினான் யமன். “அறத்தான் நான் என்பதே ஆணவங்களில் தலையாயது. அவன் வீங்கியவன். அழுகுபவன்” என்று சலிப்புடன் விஸ்வாமித்திரர் சொன்னார்.
ஒன்பது விழுந்ததும் புன்னகையுடன் மீசையை மேல் நோக்கி நீவியபடி தருமன் தன் படையை முன்னெடுத்தார். எட்டும் ஆறும் பன்னிரண்டும் ஒன்பதுமென பகடை அவருக்கு அள்ளித்தர அவர் தரப்பிலிருந்து களங்களுக்குள் வில்லம்புவேல்யானைபுரவி கொண்டு எழுந்த படைவீரர்கள் இரு கைகளையும் விரித்த நண்டு போலாகி சகுனியின் படை நோக்கி சென்றார்கள்.
சகுனி தன் பகடையை உருட்டியபோது பன்னிரண்டு விழுந்தது. அவரது முகம் மெழுகுப்பொம்மையென ஆயிற்று. வலசைப்பறவைகளென கூர்முனை கொண்ட அவரது படை இருபுறமும் வீரர்களை திரட்டிக்கொண்டு தருமனை நோக்கி வந்தது. மீண்டுமொரு பன்னிரண்டு. தருமன் இருமுறை மூன்று விழுவதைக் கண்டு முதல்முறையாக உள்ளம் நடுங்கினார். ஆனால் அவர் செவியருகே என ஒரு குரல் “பன்னிரண்டு வருகிறது… இதோ” என்றது. சகுனியின் ஒன்பதுக்குப் பின் அவருக்கு இரண்டு விழுந்தது. கைகள் நடுங்க காய் நகர்த்தினார்.
மீண்டும் சகுனிக்கு பன்னிரண்டு விழுந்தது. தனக்கு நான்கு என்பதை காண்கையில் விழிமுன் நீராவியென காட்சி அலையடிப்பதை தருமன் உணர்ந்தார். “அஞ்சாதே… எண் எத்தனை விழுந்தாலும் ஆடுபவனே களம் அறிந்தோன்” என்றது நாகம். “நீ ஊழையும் வென்றுகடப்பதைக் காணட்டும் இந்த அவைக்களம்.” அவர் நெஞ்சை நிறைத்த பெருமூச்சை ஊதி வெளிவிட்டார். “உன் முன் விரிந்திருப்பது நீ எண்ணி ஆடி வென்று கடக்கும் களம்… எண்ணல்ல, உன் எண்ணத்திறன் வெல்லட்டும்.”
மீண்டும் ஒரு முறை பன்னிரண்டு விழ தருமனின் படையைச் சூழ்ந்து சிதறடித்து அவர் அரியணையைச் சூழ்ந்து நின்றது சகுனியின் படை. அவர் மணிமுடியைச் சூடினான் சகுனியின் படைத்தலைவன். சகுனி பெருமூச்சுடன் மெல்ல உடல் தளர்ந்து தன் காலை கையால் தூக்கி அசைத்து அமர்த்தினார். ஏவலன் ஒருவன் பொற்கிண்ணத்தில் அவருக்கு இன்நீர் கொண்டு வந்தான். அதை அருந்தி மரவுரியால் தாடியில் நீர்த்துளிகளை துடைத்தபின் புன்னகைத்தார்.
சிதறிய தன் களத்தை நோக்கி தாடையை கையில் தாங்கி தருமன் அமர்ந்திருந்தார். “அரசே…” என்றான் ஏவலன். விழித்தெழுந்து “ஆம்” என்றார். அவன் சொன்னதை புரிந்துகொண்டு தருமன் எழுந்து பொற்கிண்டியின் நீரை கையிலிட்டு மும்முறை சொட்டி “இந்திரப்பிரஸ்தத்தின் மணிமுடியை அஸ்தினபுரியின் அரசருக்கு கொடையென இதோ அளித்தேன். ஆம். அளித்தேன்! அளித்தேன்! அளித்தேன்!” என்றார். பீமனின் உடலில் நிகழ்ந்த அசைவை ஓரவிழி காண உடல் துணுக்குற்று திரும்பி நோக்கினார். பின்னர் தோள்கள் தளர விழியோரம் ஈரம்கொள்ள தலையை இல்லை என்பதுபோல் அசைத்தார்.
“விதுரா, இத்தருணம் உன்னுடையது. எழுக!” என்றான் யமன். விதுரர் எழுந்து உரத்த குரலில் “மணிமுடியும் கோலும் வைத்து சூதாடுவதற்கு மரபுள்ளதா, மூத்தவரே?” என்றார். துரியோதனன் “அதை ஆடுவோர் முடிவு செய்யட்டும். மரபென்று ஒன்றும் இதிலில்லை” என்றான். கணிகர் “அமைச்சரே, தெய்வங்களைக்கூட வைத்து ஆடியிருக்கிறார்கள் முன்னோர். நூல்களை நோக்குக!” என்றார். விதுரர் தருமனிடம் “அரசே, இது குடிவிளையாட்டென்றே சொல்லப்பட்டது. முடிவைத்து ஆடுதல் முறையல்ல” என்றார்.
தருமன் தவிப்புடன் வாயசைக்க “போதும்… முடிவைத்ததும் நீங்கள் முழுக்க தோற்றுவிட்டீர்கள். இனி அஸ்தினபுரியில் ராஜசூயம் நிகழலாம். அஸ்வமேதப்புரவி உங்கள் மண்ணை மிதித்துக் கடக்கலாம்…. இதற்காகத்தானே இந்த ஆடல்!” என்றார் விதுரர். “போதும், அரசே. கைகூப்பி களம் விட்டு எழுங்கள்!” என்று குரல் உடைய விதுரர் கூவினார். “இப்போதெழுந்தால் உங்கள் குடி எஞ்சும். சொல் மிஞ்சும்…”
தருமன் நடுங்கிக்கொண்டிருந்தார். அவர் முன் நின்று யமன் கூவினான் “நீ முற்றிலும் தோற்பாய். மூடா, இன்னுமா அதை உணரவில்லை நீ? விலகு!” அவர் செவியருகே அசைந்த நாகம் காற்றென சொன்னது “அடுத்த களத்தில் நின்றிருப்பதென்ன? அதை அறியாமல் விலகுவாயா? அது நீ இதுவரை காணாத பெருங்கொடை என்றால் நீ இழப்பதென்ன என்று அறிவாயா?” இன்னொரு நாகம் “அஞ்சி எழுகிறாயா? எக்களமாயினும் அஞ்சாமையே வீரமெனப்படுகிறது” என்றது.
“இல்லை. நான் ஆடவே விழைகிறேன்” என்றார் தருமன். அதை அவர் வாய் சொல்ல செவிகள் கேட்டன. உள்ளம் திடுக்கிட்டு நானா நானா சொன்னேன் என வெருண்டது. “போதும், அரசே… போதும்… நான் சொல்வதை கேளுங்கள்” என்றார் விதுரர். “இனி ஒரு களம். அங்கே நிறுத்திக் கொள்கிறேன்” என்று தருமன் சொன்னார். “அமைச்சரே, இனி ஒரு சொல் எடுக்க உங்களுக்கு ஒப்புதலில்லை… அமர்க!” என்றான் துரியோதனன். கைகள் பதைக்க கண்ணீர் ததும்ப விதுரர் அமர்ந்தார்.
சகுனி “தாங்கள் எப்போது விழைந்தாலும் நிறுத்திக் கொள்ளலாம், இந்திரபுரிக்கரசே” என்றார். தருமன் “நான் ஆடுகிறேன்” என்றார். “அச்சமிருந்தால் எளிய பந்தயங்களை வைக்கலாம். உங்கள் மேலாடையை, கச்சையை, கணையாழியை… எதை வேண்டுமென்றாலும்” என்றபின் நகைத்து “ஆனால் நான் வைப்பது அஸ்தினபுரியின் அரசையும் தலைநகரையும்… ஆம்” என்றார் சகுனி. தருமன் வெறிகொண்டவராக பகடைகளை கையிலெடுத்து உருட்டியபடி உரத்த குரலில் “இதோ இந்திரப்பிரஸ்தப் பெருநகரை, அதன் மேல் மின்கதிர் சூடி அமர்ந்த இந்திரன் பேராலயத்துடன் வெண்கொற்றக்குடையுடன் கோட்டைகளுடன் காவலருடன் நால்வகைப் பெரும்படையுடன் இப்பகடைக்களத்தில் பந்தயம் வைக்கிறேன்” என்றார்.
“நன்று” என்று புன்னகைத்த சகுனி துரியோதனனை நோக்கி திரும்ப துரியோதனன் எழுந்து கைகளைத் தூக்கி “இங்கு நிகழ்க இறுதிப்போர்!” என்றான். தருமன் பகடையை உருட்ட வசிஷ்டர் “அவன் முகம் ஏன் பெருவலி கொண்டவன் போலிருக்கிறது?” என்றார். “அது ஓர் உச்சம். உச்சங்களில் மானுடர் தங்கள் எல்லைகளை கண்டடைகிறார்கள். அதைக் கடந்து தங்களுள் உறையும் தெய்வங்களை முகம்கொள்கிறார்கள்” என்றார் விஸ்வாமித்திரர். “அதன்பொருட்டே வலியை துயரை சிறுமையை இறப்பை விரும்பி தேடிச்செல்கிறார்கள்.”
தருமனுக்கு பன்னிரண்டு விழுந்தது. அவர் கொண்டிருந்த மெல்லிய பதற்றம் அடங்க புன்னகையுடன் தன் படைகளை ஒருக்கினார். தனக்கு மூன்று விழுந்ததும் படைக்களத்தின் மூலையில் சகுனி ஒரு சிறு படையை அமைத்தார். மீண்டும் ஒரு பன்னிரண்டு விழுந்ததும் துணைப்படையை அமைத்தார் தருமன். அவர் கொண்டிருந்த கலக்கம் மறைய தாடியை நீவியபடி புன்னகையுடன் சகுனியை நோக்கினார். மறுமுறை சகுனிக்கு பன்னிரண்டு விழுந்தது. தருமனின் இடதுவிழி அனலில் விழுந்த வண்ணத்துப்பூச்சி என சுருங்கி அதிர்ந்தது. மீண்டுமொரு பன்னிரண்டு விழுந்ததும் சகுனியின் படை பெருகி பிறிதொரு பன்னிரண்டில் மும்மடங்காகியது. பிறிதொரு பன்னிரண்டில் பேருருவம் கொண்டது.
செயலற்றுப் போய் நடுங்கும் கைகளுடன் தருமன் உருட்டிய பகடையில் ஒன்று விழ அவர் தன் நெற்றி மையத்தை இருவிரலால் அழுத்திக்கொண்டு தலைகுனிந்தார். பிறிதொருமுறை பன்னிரண்டு விழுந்தபோது சகுனியின் படை அவரை முழுமையாக சூழ்ந்துகொண்டது. மீண்டும் இருமுறை பன்னிரண்டு விழுந்தபோது தருமனின் படைகள் களத்திலிருந்து முற்றிலும் விலக்கப்பட்டன. அவர் அரியணை மீது ஏறி நின்ற சகுனியின் வேல்வீரன் “வெற்றி” என்றான். “சகுனிதேவரின் படை வெற்றிகொண்டது” என கிருபர் அறிவித்தார்.
கைகால்கள் உயிரை இழந்தவைபோல் தளர தன் பீடத்தில் மடிந்து விழுந்திருந்தார் தருமன். அவைக்கூடத்தில் சுழன்ற காற்றில் அவர் குழல் தவிப்புடன் பறந்துகொண்டிருந்தது. ஒன்றும் நிகழாதது போல் தன் காய்களை ஒருங்கமைத்து மீசையை நீவி முன் செலுத்தியபடி திரும்பி ஏவலனை பார்த்தார் சகுனி. அவன் கொண்டு வந்த இன்நீரை சில மிடறுகள் அருந்தியபின் குவளையை திருப்பி அளித்தார்.
“அவன் தன் தவக்குடிலுக்கு மீள்கிறான்” என்றான் சோமன். “அங்குள்ள அமைதியை, குளிர் தென்றலை, தளிர்ப்பச்சை ஒளியை அறியத் தொடங்கிவிட்டான். இங்கிருந்து இனி அவன் ஆடமுடியாது.” தருமன் அருகே சென்று அவர் தலை மீது கைவைத்து யமன் சொன்னான் “மைந்தா, எழுக! இங்கு நிறுத்திக்கொண்டாலும் நீ மீளலாகும். போதும்! உன் எல்லையை கண்டுவிட்டாய்.” “ஆம், தந்தையே! இதற்கப்பால் இல்லை” என்றார்.
“இதுவா உன் எல்லை? மூடா, இவ்வளவா நீ?” என சீறியது நாகம். “நான்கு முறை பன்னிரண்டென பகடை புரண்டால் உன் கல்வியும் திறமும் தவமும் அழியுமா? நான்கு பகடைக்கு நிகரல்லவா நீ?” மெல்ல உடலசைத்து அவர் மடியில் உடல் வளைத்தெழுந்து முகத்துக்கு முன் படம் தூக்கி நின்ற இன்னொரு நாகம் கேட்டது. “அஞ்சுகிறாயா? எதை அஞ்சுகிறாய்? ஊழையா? உனது ஆற்றலின்மையையா?”
“அறியேன்” என்றார் தருமன். “அறிவிலியே, ஓர் ஆடலில் தோற்றதற்காக களம் விட்டு விலகுகையில் நீ இயற்றுவதென்ன என்று அறிவாயா? ஒற்றைக் காலடிக்கு அப்பால் உனக்கென காத்து நிற்பது எதுவென்று நீ எப்படி அறிந்தாய்? இத்தோல்விக்கு ஒரு கணம் முன்பு இதை அறிந்திருக்கவில்லை. வரும் வெற்றிக்கு ஒருகணம் முன்பும் நீ அறியாதிருக்கக்கூடும் என்று ஏன் எண்ணவில்லை? இனி ஒரு களம். ஆம், ஒற்றைக்களம். வென்றால் நீ இழந்தவை அனைத்தையும் மீட்டெடுக்க முடியும் என்றால் இக்கணத்தின் எண்ணங்களுக்கு என்ன பொருள்?”
தருமன் “அறியேன்” என்றார். “நீ அஞ்சியவை அகன்றவை எத்தனை பொருளிழந்தன காலத்தில் என்று கண்டிருப்பாய். இத்தருணமும் அதுவே. எடு பகடையை!” என்றது நாகம். தருமன் “ஆனால் நான் தோற்றால்…” என்றார். “ஏற்கெனவே தோற்றுவிட்டாய். முடியும் நாடும் இழந்த பின்னர் வெறும் தரையில் நின்றிருக்கிறாய். இழப்பதற்கு உன்னிடம் ஏதுமில்லை. எஞ்சுவதை வைத்து ஆடி வென்றால் அனைத்தையும் நீ அடையமுடியும் என்றால் அதைவிட்டு விலகுவாயா?” நாகம் விழியொளிரச் சீறியது. “அவ்வண்ணம் விலகியபின் அதை எண்ணி எண்ணி வாழ்நாளெல்லாம் வருந்துவாய்…”
சகுனி பகடையை தன் கைகளால் தொட்டபடி உரக்க “இந்திரப்பிரஸ்தத்தின் அரசே! இதோ, நான் மீண்டும் ஆட சித்தமாக இருக்கிறேன். இந்த பன்னிரு களமேடையில் தாங்கள் இழந்த அனைத்தையும் அஸ்தினபுரியின் அரசர் பந்தயம் வைக்கிறார். தன்னையும் உடன் பந்தயமென வைக்கிறார். தன் தம்பியரை சேர்க்கிறார். இதுவே அறைகூவல்களில் தலையாயது. ஆடுகிறீர்களா?” என்றார்.
தருமன் துலாமுள்ளென நின்று தடுமாற அவர் தோளைத்தொட்டு “மைந்தா, எழு! இது உன் களமல்ல. இங்கு நிகழ்வது என்னவென்று நீ அறியவில்லை” என்றான் யமன். மறுபுறம் தோன்றிய அனலோன் “உன் முன்னோர் எனக்கு அளித்த அவியின் பொருட்டு ஆணையிடுகிறேன்! இதற்கப்பால் செல்லாதே! இங்கு நிகழ்வது ஆடல் அல்ல. தன் விழைவே என கையை பயிற்றுவித்த ஒருவனின் பகடைகளுடன் நீ பொருதுகிறாய். நிறுத்து! எழுந்து விலகு!” என்றான்.
“அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை” என்றபடி எட்டு கைகளும் எரியும் விழிகளுமாக கரிய தெய்வமொன்று தோன்றியது. “ஏழு பாதாளங்களுக்கும் அடியில் இருக்கும் இன்மையெனும் கருவெளியின் தெய்வம் நான். பதினான்கு உலகங்களாலும் அழுத்தி உட்செலுத்தப்பட்டவை புதைந்துள்ள நிலம் அது. யுதிஷ்டிரா, இளமையிலிருந்து நீ வென்றுகடந்தவை அனைத்தும் இன்று என் கையில் உள்ளன. ஒவ்வொன்றாக பேருருக்கொண்டு அவை இப்போது உன்னிடம் வருகின்றன.” அதன் குழல் ஐந்து புரிகளாக தொங்கியது. கூந்தல் கரிமுனை அனலென பறந்து சீறியது.
தருமன் குளிர்கொண்டவராக நடுங்கினார். “காமமும் குரோதமும் மோகமும்” என்றது கரியதெய்வம். “ஆடுக! அறத்தோனாக அமர்ந்து நீ இழந்தவற்றை வெறும் களிமகனாக நின்று வெல்க!” தருமன் கைகள் நடுங்க “எங்கிருக்கிறீர், அன்னையே? இக்குரல் என்னுள் எழுவதா?” என்றார். “உன்முன் நின்று பேசுகிறேன். எத்தனை நாள்தான் அறத்தோனாக மேடை நடித்து சலிப்பாய்? கவசங்களையும் ஆடைகளையும் தசையையும் தோலையும் கழற்றி வீசு! நீயென இங்கு நில்! இருளென விழைவென வஞ்சமென தனிமையென ஓங்கு!”
“உண்மைக்கு பேராற்றல் உண்டென்று அறிக!” என்றது தெய்வம். “அறத்தோர் அனைவரும் ஒருகணமேனும் அமர்ந்து எழுந்த பீடம் ஒன்றுள்ளது, மைந்தா. அதுவே கீழ்மையின் உச்சம். நிகரற்ற வல்லமை கொண்டது அது. முற்றிருளுக்கு நிகரான படைக்கலம் பிறிதொன்றில்லை. ஒருபோதும் ஒளி அதை வெல்வதில்லை என்றுணர்க! எழுக!”
தருமன் பகடைக்காய்களைத் தொட்டு “என் நான்கு தம்பியரையும் அவர்களின் இளமைந்தர்களையும் இப்பன்னிரு பகடைக்களத்தில் பந்தயமென வைக்கிறேன்” என்றார். அவையில் அமர்ந்த ஒவ்வொருவரும் தங்கள் முதுகில் ஒரு சாட்டை அறைந்து சென்றதுபோல் அதை உணர்ந்தனர். சௌனகர் “அரசே..” என்றார். துரியோதனன் கைகளை தட்டிக்கொண்டு எழுந்து “சொல் எழுந்துவிட்டது. அவை கேட்டுவிட்டது. இனி அரசர் பின்சுவடு வைக்க மாட்டார் என்று நம்புகிறேன்” என்றான். “இல்லை” என்றார் தருமன். துரியோதனன் உரக்க சிரித்து “அஸ்தினபுரிக்கு தொழும்பர்கள் பெரிதும் தேவைப்படுகிறார்கள். ஆட்டம் நிகழட்டும்” என்றான்.
சகுனி பகடையை நோக்கி எடுத்துக்கொள்ளும்படி விழிகாட்ட தருமன் அவற்றை எடுத்து தன் நெஞ்சோடு சேர்த்து தலைகுனிந்து வேண்டினார். “எந்தையரே! தெய்வங்களே! எனக்காக அல்ல, இங்கு பிழைத்தது என்ன என்று அறிவேன். நான் இழைப்பவை எவையென்றும் தெளிந்துள்ளேன். இத்தனை தொலைவு வந்துவிட்டேன். இழந்து மீண்டு இழிவுறுவதைவிட அறியாத இவ்விருட்பாதையில் ஒற்றை அடி முன்னெடுத்து வைத்தால் ஒருவேளை கைவிட்டுச் சென்ற அனைத்தையும் வெல்ல முடியுமென்று எண்ணியே இதை ஆற்றுகிறேன். என் பிழை பொறுத்தருளுக! எந்தையர் செய்த தவத்தின் பொருட்டும் என் தம்பியரின் பேரன்பின் பொருட்டும் எனக்கு அருள்க! நான் வென்றாக வேண்டும்” என்றபின் பகடையை உருட்டினார்.
அதில் ஒன்று விழுந்தது. அவரால் நம்பவே முடியவில்லை. “ஒன்று” என குரல் ஒலித்தபோது குளிர் காற்றொன்று அறைக்குள் வந்து சுழன்று சென்றதுபோல கூடத்தில் அமர்ந்தவர்கள் சிலிர்த்தனர். ஒற்றை வீரனாக தருமனின் வில்லவன் களம் நின்றான். பன்னிரண்டு பெற்ற சகுனியின் படை பரல்மீன் கூட்டமென கிளம்பியது. இரண்டும் மூன்றும் மீண்டும் ஒன்றும் விழுந்தது தருமனுக்கு. ஓரிரு துணைவருடன் தனித்து அவர் படைவீரன் சகுனியை நோக்கி சென்றான். நான்கு முறையும் பன்னிரண்டு விழ சகுனி அவரை வென்று களம் நிறைத்தார்.
தருமன் விழிகள் நோக்கிழக்க எங்கிருக்கிறோமென்றே அறியாமல் அமர்ந்திருந்தார். பின்னர் விழித்துக்கொண்டு தன்னுள் திரும்பி ஓடினார். தன் தவக்குடிலை அடைந்து அங்கே தனித்த பாறைமேல் விழிமூடி அமர்ந்தார். அவர் முகம் தெளிவடைந்தது. இயல்பாக உடல் நீட்டினார். அவரில் எழுந்த அமைதியை அவை திகைப்புடன் நோக்கியது. பெருமூச்சுடன் இருகைகளையும் தூக்கி சோம்பல்முறித்து கையால் புண்பட்ட காலை தூக்கி அசைத்தமர்த்தி முனகிக் கொண்டார் சகுனி. முகத்திலோ விழிகளிலோ எவ்வுணர்வும் எஞ்சியிருக்கவில்லை. அவை ஓர் உயிர்கூட அங்கிலாததுபோல் முற்றிலும் அமைதியில் அமைந்திருந்தது. கண்களை மூடி குவித்த கைகளின் மேல் தாடியுடன் முகவாயை ஊன்றி ஆழ்துயிலிலென பீஷ்மர் அமர்ந்திருந்தார்.
தருமன் அருகே குனிந்து ஏவலன் “அரசே…” என்றான். அவர் திடுக்கிட்டு விழித்து “ஆம், ஆம்” என்றபடி கை நீட்ட பொற்குவளையிலிருந்து ஊற்றிய நீரை வாங்கி “அளித்தேன்! அளித்தேன்! அளித்தேன்!” என்று சொட்டினார். பீமனும் அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் தங்கள் பீடங்களிலிருந்து எழுந்தனர். மேலாடைகளை சீரமைத்தபடி நிரைவகுத்து அவைமுன் வந்து நின்றனர். அர்ஜுனன் ஒருகணம் விழிதூக்கி அவையை நோக்கியபின் தலைகவிழ்ந்தான். பீமன் செருகளத்தில் எதிர்மல்லனை நோக்கி நிற்கும் தோரணையில் இருபெரும் கைகளை விரித்து நெஞ்சை நிமிர்த்தி தலை தூக்கி தருக்கி நின்றான். ஏதும் நிகழாதவர்கள் போலிருந்தனர் நகுலசகதேவர்கள்.
துரியோதனன் நகைத்தபடி “தேர்ந்த தொழும்பர்கள்! எந்த அரசனுக்கும் நல்ல தொழும்பர் அருஞ்செல்வங்களே” என்றான். பீமனிடம் “அடேய் மல்லா, தொழும்பர்கள் மேலாடை அணியலாகாது என்று அறியமாட்டாயா?” என்றான். துச்சாதனன் “ஆம், அவர்கள் அணிபூணுவதும் ஒப்புக்கொள்ளப்படுவதில்லை” என்றான்.
“ஆம் அரசே, அறிவோம்” என்றபடி பீமன் தன் மேலாடையை எடுத்து இடையில் இறுக கட்டிக்கொண்டான். அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் தங்கள் மேலாடையை இடையில் சுற்றினர். காதணிகளையும் ஆரங்களையும் தோள்வளைகளையும் கங்கணங்களையும் கணையாழிகளையும் கழற்றி ஒரு வீரன் கொண்டுவந்து நீட்டிய தாலத்தில் வைத்தனர். துரியோதனன் “போர்க்களத்திலன்றி தொழும்பர்கள் காலணி அணிவதும் ஒப்புக்கொள்ளப்பட்டதல்ல” என்றான். பீமன் “ஆம், பொறுத்தருள்க!” என்றபடி தன் பாதக்குறடுகளை கழற்றினான். அவற்றை இரு ஏவலர்கள் இழுத்து அகற்றினர். திறந்த மார்புடன் நால்வரும் சென்று அவைமேடையின் இடப்பக்கமாக கைகட்டி நின்றனர்.