[ 11 ]
பன்னிரு பகடைக்களத்தில் அவையமர்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்த அஸ்தினபுரியின் முதற்குடிகள் காலையிலேயே வந்து முற்றத்தில் குழுமினர். ஏவலர் அவர்கள் அழைப்போலைகளை சீர்நோக்கி முகமன் உரைத்து அவைக்குள் அனுப்பினர். சூழ்ந்த நூற்றெட்டு தூண்களுக்குப் பின்னால் அமைந்த இருபத்துநான்கு படிகளில் நிரைவகுத்திருந்த பீடங்களில் அவர்கள் ஓசையின்றி வந்தமர்ந்து நிரம்பிக் கொண்டிருந்தனர். அவைக்களத்தில் எப்போதும் செறிந்திருந்த அமைதி அவர்கள் ஒவ்வொருவரையும் அமைதிகொள்ளச் செய்ததனால் ஆடிப்பரப்பில் பாவைப்பெருக்கு நிறைவதுபோல ஓசையின்றி அவர்கள் செறிந்தனர்.
இரண்டாம் சுற்றில் வணிகர்களும் ஷத்ரியர்களும் குடித்தலைவர்களும் அமரத்தொடங்கினர். ஒருவருக்கொருவர் விழிகளாலும் கைகளாலும் முகமன் உரைத்தனர். தங்கள் பீடங்களில் அமர்ந்ததும் அதுவரை கொண்டிருந்த உடலிறுக்கத்தை மெல்ல தளர்த்தி பெருமூச்சுவிட்டு இயல்படைந்தனர். உடல்கள் தசை தளரும்போது அத்தனை ஒலியெழும் என்பதை அவ்வமைதியின் நடுவில் நின்றிருந்த நிமித்திகர் நோக்கி வியந்தார்.
அரசகுடியினர் வந்து அமரத்தொடங்கினர். கௌரவர்களின் துணைவியரின் தந்தையரும் உடன்பிறந்தாரும் வரிசை முறைப்படி முகமன் உரைக்கப்பட்டு பீடம் காட்டி வரவறிவிப்புடன் அமரச்செய்யப்பட்டனர். முதன்மைநிரையில் ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் சல்யரும் சுபாகுவாலும் சகதேவனாலும் அழைத்துவரப்பட்டு அமர்ந்தனர். துர்மதனும் துச்சகனும் காந்தாரநாட்டு சுபலரையும் மைந்தரையும் அவையமர்த்தினர். சைப்யரும் காசிநாட்டரசரும் அருகே அமர்ந்தனர். துரோணரையும் கிருபரையும் விதுரர் தலைவணங்கி அழைத்துவந்து அமரச்செய்தார். நகுலனும் சுஜாதனும் இருபுறமும் நின்று பீஷ்மபிதாமகரை அழைத்து வந்து மையப்பீடத்தில் அமர்த்தினர். அஸ்தினபுரியில் இருந்த அரசகுடியினர் அனைவரும் வந்துகொண்டிருப்பதை அவையமர்ந்த நகர்மக்கள் நோக்கிக் கொண்டிருந்தனர்.
அவையமர்ந்த ஒவ்வொருவரும் விளங்காத அச்சத்தால் நிலையழிந்து அலையும் விழிகளுடன் தளர்ந்த தோள்களுடன் இருந்தனர். தேர்ந்தெடுத்து அழைக்கப்பட்டவர்கள் என்பதனால் அவர்கள் தோற்றங்களும் ஒன்றுபோல் இருந்தன. அவை நடுவே நின்று நோக்கிய நிமித்திகர் அவர்களின் மார்பணிகள் இணைந்து ஒரு வளைவுக் கோடாக சுற்றிவருவதை கண்டார். அதற்கு மேல் பற்களால் ஆன வெண்கோடு முல்லைச்சரம் போல தெரிந்தது. அதற்கு மேல் நீலமலர்ச்சரம் போல விழிகளின் கோடு தெரிவதை கண்டார். அதற்குமேல் தலைப்பாகைகளினாலான வண்ணச்சரம்.
அவர்களின் விழிகளும் உடையின் சரசரப்பொலிகளும் இணைந்த மெல்லிய முழக்கம் குவையில் பட்டு உச்சிக்குச் சென்று குவிந்து சங்குக்குள் காது வைத்தது போல் தலைக்குள் ரீங்கரித்தது. பகடைக்களத்தின் இருபக்கமும் தூண்களின் மேல் எழுந்திருந்த மகளிருக்கான உப்பரிகைகளில் அரசகுடியினர் தங்கள் அகம்படிச் சேடியருடன் வந்து அமரத்தொடங்கினர். திருதராஷ்டிரர் விழியின்மையால் அவ்வவைக்கு வரவில்லை. பேரரசர் வராமையால் காந்தாரியரும் வரவில்லை. கௌரவர்களின் துணைவிகள் ஒவ்வொருவராக வரவறிவிக்கப்பட்டு கொம்பொலியும் மங்கல இசையுமாக வந்து அமர்ந்தனர். இறுதியாக அசலையுடனும் கிருஷ்ணையுடனும் பானுமதி வந்து அவையமர்ந்தாள். திரௌபதியின் வரவறிவிக்கப்படவில்லை என்பதை அவையமர்ந்திருந்த ஒவ்வொருவரும் உணர்ந்தனர். அவள் குருதிநீக்கில் இருப்பதாக செய்தி உதடுகளில் இருந்து செவிகளுக்கென பரவி அவையில் சுழன்று வந்தது.
பாண்டவர்கள் ஐவரும் விதுரரால் வரவேற்கப்பட்டு அவைக்குள் நுழைந்தனர். சௌனகர் தொடர வந்த தருமன் அவையை நோக்கி தலைக்குமேல் கைகூப்பி வணங்கிவிட்டு இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர்கொடி நின்ற பீடத்தில் சென்று அமர்ந்தார். பின்னர் துச்சாதனன் துர்மதன் இருவரும் துணைவர கர்ணன் வந்து அவையமர்ந்தான். விகர்ணனும் துர்விமோசனும் அழைத்துவர சகுனி பெரிய பட்டுச்சால்வை தோளில் சரிய மெழுகுபோன்ற உணர்வற்ற முகத்துடன் அவைபுகுந்து தன் இருக்கையில் அமர்ந்தார். இரு ஏவலரால் தூக்கிவரப்பட்ட கணிகர் அவர் அருகே மரவுரிமெத்தையாலான தாழ்ந்த பீடத்தில் அமர்த்தப்பட்டார். அவர் உடலை மெல்லச் சுருட்டி அட்டை போல உருண்டு அசைவிழந்தார்.
வெளியே பெருமுரசுகள் முழங்கின. கொம்புகளும் சங்குகளும் ஆர்த்தன. மங்கல இசை கேட்டதும் அலையலையாக அப்பெரும் பகடைக்களம் எழுந்து நின்று கைகுவித்தது. துரோணரும் கிருபரும் பீஷ்மரும் அன்றி பிற அனைவரும் எழுந்து வணங்கினர். அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடியுடன் கொடிக்காரன் முன்னால் வந்தான். செங்கோலை ஏந்தி கவசவீரன் தொடர்ந்தான். மங்கலச்சூதரும் அணிச்சேடியரும் வந்தனர். தொடர்ந்து துரியோதனன் இருபுறமும் அமைச்சர்கள் சூழ, வெண்குடை மேலே நலுங்க கைகூப்பியபடி அரசப்பாதையினூடாக நடந்துவந்து அரியணையில் அமர்ந்தான்.
அஸ்தினபுரியின் மணிமுடி பொற்தாலத்தில் வந்தது. அதை அமைச்சர் கனகர் எடுத்தளிக்க அவன் சூடிக்கொண்டு கோலேந்தி அமர்ந்தான். அவையினர் ஒற்றைப் பெருங்குரலில் “குருகுலவேந்தர் வாழ்க! அஸ்தினபுரியின் அரசர் வாழ்க! தார்த்தராஷ்டிரர் வாழ்க! வெற்றி கொள் பெருவீரர் வாழ்க! குருகுலமுதல்வர் வெல்க!” என்று வாழ்த்தினர்.
நிமித்திகர் அறிவிப்பு மேடையில் எழுந்து தன் வெள்ளிக்கோலை மும்முறை சுழற்றியதும் அவை அலையலையென ஆடையொலியுடனும் அணியொலியுடனும் அமைந்து படிந்தது. தன் மேடையிலிருந்து நோக்கிய நிமித்திகர் பல்லாயிரம் விழிகளாலான சுழிஒன்றின் நடுவில் தான் நின்றிருப்பதை உணர்ந்தார். உரத்த குரலில் “வெற்றி சிறக்க! மூதாதையர் மகிழ்க! மூன்று தெய்வங்களும் அருள்க! அஸ்தினபுரி வெல்க! குருகுலம் தொடர்க! அரியணை அமர்ந்து காக்கும் அரசர் புகழ் செல்வம் வெற்றி புதல்வர் சொல் என ஐந்துபேறும் பெற்று நிறைக! மனைமாட்சி பொலிக! வயல் நிறைக! களஞ்சியங்கள் ததும்புக! கன்றுமடிகள் ஒழுகுக! அவி பெற்று அனல் எழுக! இங்கு வாழ்கிறது அறம் என்று தெய்வங்கள் அறிக! தேவர்கள் அறிக! ஓம்! அவ்வாறே ஆகுக!” என்று வாழ்த்தினார்.
நிமித்திகர் தன் வெள்ளிக்கோலை கிடைமட்டமாக மேலே தூக்கியபோது அனைத்து ஒலிகளும் அடங்கி அவை முற்றமைதி கொண்டது. அவர் இதழ்கள் ஒட்டிப்பிரியும் ஒலிகூட கேட்கும் அளவுக்கு அப்பெருங்கூடம் ஒலிக்கூர்மை கொண்டிருந்தது. மணிக்குரலில் “சான்றோரே, குடிமூத்தோரே, அவைமுதல்வரே, அஸ்தினபுரி அரியணை அமர்ந்த அரசரின் குரல் என இங்கு நின்று ஓர் அறிவிப்பை முன் வைக்க ஆணையிடப்பட்டுள்ளேன். இன்று இந்த அவையில் நிகழவிருப்பது ஒரு குடிக்களியாடல். தொல்புகழ் கொண்ட அஸ்தினபுரியின் இளவரசர்கள், குருகுலத்தோன்றல்கள், விசித்திரவீரியரின் பெயர்மைந்தர் தங்களுக்குள் இனிய ஆடல் ஒன்றை நிகழ்த்தவிருக்கிறார்கள்” என்றார். “அஸ்தினபுரியின் அரியணை அமர்ந்த மாமன்னர் துரியோதனரின் விழிமுன் இவ்வாடல் நிகழும்.”
“சான்றோரே, விசித்திரவீரியரின் மைந்தர்களாகிய பேரரசர் திருதராஷ்டிரருக்கும் விண்புகழ் கொண்ட அவரது இளையோன் பாண்டுவுக்கும் பிறந்த மைந்தர்களால் இந்நகர் பொலிவுற்றதென தெய்வங்கள் அறியும். அவர்களுக்குள் எழுந்த தெய்வங்களின் ஆணை பெருகுக, வளர்க, பரவுக என்று இருந்தது. அவ்வாறு பரவும் பொருட்டு அவர்கள் தங்கள் குடிநிலத்தை இருநாடுகளாக பகிர்ந்துகொண்டனர். பாரதவர்ஷமெங்கும் கிளைவிரித்துப் பரவும் இரு பெருமரங்களின் விதைகளென்றாயின இந்நகரங்கள். இந்திரப்பிரஸ்தமும் அஸ்தினபுரியும் குருகுலத்தின் இருவிழிகள். இருகைகளில் ஏந்திய படைக்கலங்கள். இருகால்கள் சொல்லும் பொருளும் என அமைந்த சித்தம். அவை வெல்க!”
“முன்னர் இந்திரப்பிரஸ்த நகரில் நிகழ்ந்த ராஜசூயத்தில் சத்ராஜித்தென அரியணை அமர்ந்து மணிமுடி சூடி பாரதவர்ஷத்தின் தலைமேல் தன் செங்கோலை நாட்டியவர் இக்குடி பிறந்த மூத்தோர் யுதிஷ்டிரர். அன்று அவர் காலடியில் தலைவணங்கினர் பாரதவர்ஷத்தை ஆளும் ஐம்பத்து ஐந்து ஷத்ரியர்கள். சிறுகுடி ஷத்ரியர்கள் நூற்றெண்மரும் நிஷாதர்களும் அசுரர்களும் அரக்கர்களும் நாகர்களும் என விரிந்த பாரதவர்ஷத்தின் ஆள்வோர் பெருநிரை அன்று முடிபணிந்து குடியென்றானது. அன்று அவ்வவையில் சென்றமர்ந்து முடிதாழ்த்தி வாழ்த்தி மீண்டவர் நம் அரசர்.”
“துலாவின் மறுபக்கமென அஸ்தினபுரி இருப்பதால் இங்கும் ஒரு ராஜசூயமும் அஸ்வமேதமும் நிகழவேண்டுமென அரசர் விழைந்தார். அதன் பொருட்டு பாரதவர்ஷத்தின் அரசர் அனைவருக்கும் செய்தி அனுப்பப்பட்டது. அப்போது எழுந்த முதல் இடர் என்பது ராஜசூயம் வேட்ட இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் இந்த ராஜசூயப்பந்தலில் எவரென அமர்ந்திருப்பார் என்பதே. சத்ராஜித்தென அமர்ந்தவர் பிறிதொரு வேள்விப்பந்தலில் இரண்டாம் இடத்தில் அமரலாகாது என்பது நெறி என்பதால் என்ன செய்வது என்று வினா எழுந்தது. இக்குடியின் மூத்தோரும் நிமித்திகரும் அமைச்சரும் கூடி எடுத்த முடிவென்பது மூப்பிளமை முடிவெடுக்க இவ்வண்ணம் ஒரு பன்னிரு பகடைக்களம் அமைப்பதே.”
“இது அஸ்தினபுரிக்கு புதிதல்ல. இங்கு மாமன்னர் ஹஸ்தி அமைத்த பன்னிரு பகடைக்களம் பல தலைமுறைக்காலம் பொன்றாப் புகழுடன் இருந்துள்ளது. பாரதவர்ஷத்தின் ஷத்ரிய அரசகுடியினர் அனைவரும் வந்தமர்ந்து பகடையாடி மகிழ்ந்த ஒலிகள் இங்குள்ள காற்றில் இன்னமும் உள்ளன என்கின்றன நூல்கள். அப்பன்னிரு பகடைக்களத்தைப் பற்றி எழுதப்பட்ட காவியங்களான த்யூத விலாசம், த்யூத கமலம், த்யூதிமதி பரிணயம் போன்ற காவியங்கள் இன்னும் இங்கு சூதர்களால் பாடப்படுகின்றன” என்றார் நிமித்திகர். “அந்நூல்கள் விரித்துரைத்த அவ்வண்ணமே கலிங்கச் சிற்பியான காளிகரின் தலைமையில் நூற்றெட்டு பெருந்தச்சர்களால் நூல்முறைப்படி அமைக்கப்பட்டது இப்பெரும் பகடைக்களம்.”
“இங்கு அவை நடுவே அமைந்துள்ள களமேடை என்பது என்றும் இங்கே இருந்ததென்று விண்ணிலிருந்து குனிந்து நோக்கும் மாமன்னர் ஹஸ்தியும் மூத்தோரும் எண்ணக்கடவார்களாக! அவையோரே! உடன் பிறந்தாரிடையே உரிமைப் பூசல் எழுகையில் குருதி சிந்தும் போரென்பது அறமல்ல என்றுணர்ந்த அஸ்தினபுரியின் மூதாதையரால் ஆணையிடப்பட்ட நிகரிப்போர் இது” என்று நிமித்திகர் தொடர்ந்தார். “இதுவும் படைக்களமே. இங்கு நிகழ்வதும் போரே. போருக்குரிய அறங்களனைத்தும் இங்கு செயல்படும். போர் வெற்றியென்றே இக்களத்தில் இறுதிநிற்றல் கருதப்படும். வென்றவர் தோற்றவர் மேல் முழுதுரிமை கொள்கிறார். இக்களத்தில் முன்வைக்கப்படும் வினவிற்கான விடை சொல்லும் தகுதியை அவருக்கு இக்களம் வெல்லல் அளிக்கும்.”
“பன்னிரு பகடைக்களம் தூயது. முன்பு முக்கண் இறைவன் தன் தலைவி உமையுடன் அமர்ந்து ஆடியது இது என்பது பராசர முனிவரின் புராண மாலிகையின் கதை. அன்னையும் அப்பனும் ஆடிய பகடைக்களமாடலைப் பற்றி புனையப்பட்ட கைலாச மகாத்மியம், பார்வதி பரிணயம், திரயம்பக விலாசம், மஹாருத்ர பிரகடனம் போன்ற காவியங்களை இவ்வகையில் நூல் கற்றோர் நினைவு கூர்வார்களாக!”
“அவையோரே, பகடைக்களத்தின் நெறிகளைப்பேசும் த்யூதரங்க சூக்தம், த்யூதஸ்மிருதி ஆகிய நூல்களின் அடிப்படையில் இங்குள்ள நெறிகள் வகுக்கப்பட்டுள்ளன. அவை நடுவராக அமர்ந்திருப்போர் அந்நெறிகளின் அடிப்படையில் இங்கு நிகழ்பவற்றை வகுத்துரைக்க வேண்டுமென்று அரசரின் ஆணைப்படி அடியேன் கோருகிறேன்” என்றார் நிமித்திகர். “அவர்களின் கூற்று இறுதி முடிவென்றாகவேண்டும். ஆடல்கள் அனைத்திலும் நெறியென்றாகும் மூவிழியன் இங்கு அனலென நின்றெழுக! ஆம், அவ்வாறே ஆகுக!”
நிமித்திகரின் சொற்களை அங்கிருந்த ஒவ்வொருவரும் குவை மாடத்தின் தெய்வப்பரப்பிலிருந்து ஏதோ ஒரு முகம் செவியருகே அணுகி சொல்வதுபோல் உணர்ந்தார்கள். சிலர் தேவர்களால் சிலர் அசுரர்களால் சொல்லப்பட்டார்கள். அவையில் கணிகர் கண்மூடி துயில்பவர்போல் தன் தாழ்ந்த பீடத்தில் உடல் தளர்ந்து சுருண்டிருந்தார். பன்னிரு பகடைக்களத்தின் மையத்தில் அமைந்த ஆடுகளைத்தை நோக்கி விழியசையாது மடியில் கைகோத்து சற்றே தொய்ந்த தோள்களும் மயிருதிர்ந்த வெண்தாடியும் சுடர்வெண்மை கொண்ட முதிய உடலுமாக சகுனி அமர்ந்திருந்தார். இரு கைகளை கூப்பியபடி எவரென்று நோக்காது நிமிர்ந்த உடலுடன் யுதிஷ்டிரர் பீடம்கொண்டிருந்தார்.
நிமித்திகர் “அவையீர் அறிக! இக்களமாடலுக்கு அறைகூவல் விடுத்தது அஸ்தினபுரியின் அரசரும் குருகுலத்தோன்றலுமாகிய மாமன்னர் துரியோதனர். அவருக்கு பிதாமகர் பீஷ்மரும் பேரரசர் திருதராஷ்டிரரும் ஒப்புதல் அளித்தனர். ஆசிரியர்கள் துரோணரும் கிருபரும் வாழ்த்துரைத்தனர். அவ்வொப்புதலை பேரமைச்சர் விதுரர் நேரில்சென்று இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரருக்கு அறிவித்தார். அது ஒரு மணிமுடியின் போர்க்கூவலும் கூட” என்றார்.
“அவ்வழைப்பை இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் ஏற்று களமாட ஏற்பளித்தார். பேரரசி குந்தியும் குலப்புரோகிதரான தௌம்யரும் உறுதுணையாகிய துவாரகையின் தலைவர் கிருஷ்ணனும் அவருக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். அதன்படி தம்பியருடனும் அமைச்சருடனும் தேவியுடனும் அவர் இந்நகர் புகுந்து இந்த அவையமர்ந்துள்ளார்” என்றார் நிமித்திகர். “அஸ்தினபுரியின் அரசர் தரப்பிலிருந்து இக்களம்நின்று ஆடுவதற்கு அரசரின் மாதுலரும் அஸ்தினபுரியின் காவலருமான காந்தார இளவரசர் சகுனி அழைக்கப்பட்டுள்ளார். அவ்வழைப்பை ஏற்று அவர் பன்னிரு பகடைக்களத்தின் இடப்பக்கத்தில் இருந்து ஆடுவார். இந்திரப்பிரஸ்தத்தின் தரப்பில் அறைகூவல் விடப்பட்ட யுதிஷ்டிரரே களம் அமைத்து வலப்பக்கம் அமர்ந்து ஆடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு தெய்வங்களுக்கு உகந்த போர் நிகழ்க! எத்துலாவிலும் நடுமுள்ளென நின்றிருக்கும் பேரறம் இங்கும் திகழ்க! ஓம்! அவ்வாறே ஆகுக!”
நிமித்திகர் வெள்ளிக்கோல் தாழ்த்தி அமைய அம்மேடைக்குக் கீழே இருபுறமும் அமைந்திருந்த இரு சிறுமுரசுகளையும் அறைவோர் கோல்சுழற்றி முழக்கினர். ஏழு கொம்பூதிகள் எழுந்து ஒற்றை பிளிறலென ஓசை எழுப்பி தலை தாழ்த்தி அமைந்தனர். சகுனி தன் பீடத்தின் கைப்பிடியை வலக்கையால் பற்றி ஊன்றி மெல்ல எழுந்து புண்பட்ட காலை நீட்டி இழுத்தபடி இரண்டடி எடுத்துவைத்து குனிந்து தாழ்வான பீடத்தில் அமர்ந்திருந்த கணிகரின் மெலிந்த கால்களைத் தொட்டு சென்னி சூடினார். கணிகர் அரைப்பங்கு மூடிய விழிகளுடன் கனவிலென அமர்ந்திருந்தார். வாழ்த்து உரைக்கவோ கைகளை தூக்கவோ செய்யவில்லை.
சகுனி திரும்பி அவையை வணங்கிவிட்டு உடல் கோணலாக அசைய நடந்து படியிறங்கி களமுற்றத்தின் இடப்பக்கத்தில் போடப்பட்டிருந்த மேடையை அடைந்து நின்றார். குனிந்து பன்னிரு பகடைக்களம் விரிக்கப்பட்ட நடுவட்ட குறுமேடையைத் தொட்டு தலையில் வைத்து வணங்கி பீடத்தில் அமர்ந்தார். அவரது ஏவலன் சேக்கைமெத்தை போடப்பட்ட குறுபீடமொன்றை கொண்டு வந்து அவரது காலருகே வைத்தான். புண்பட்ட காலை பல்லைக்கடித்தபடி முகம் சுளித்து மெல்ல தூக்கி அதன்மேல் வைத்து பெருமூச்சுடன் கையால் நீவிக்கொண்டார்.
தருமன் எழுந்து கைகூப்பி அவையை வணங்கினார். நெஞ்சில் கூப்பிய கை அமைந்திருக்க சென்று பீஷ்மரின் காலைத் தொட்டு வணங்க அவர் தருமன் தலையில் கைவைத்து வாழ்த்துக்களை முணுமுணுத்தார். கிருபரையும் துரோணரையும் வணங்கிவிட்டு துரியோதனனை நோக்கி தலைதாழ்த்தி முகமன் உரைத்தார். கூப்பிய கரங்களுடன் நிமிர்ந்த நடையில் படியிறங்கி பன்னிரு பகடைக்களம் விரிக்கப்பட்ட மேடையில் வலப்பக்கமாக அமைந்திருந்த பீடத்தில் சென்று அமர்ந்தார்.
அமைச்சர் கனகர் “அவையீர் அறிக! மூதாதையர் கேட்கக்கடவது! தேவர்கள் நோக்கு திகழ்க! தெய்வங்கள் உணர்க! இதோ பன்னிருபகடைக்களம் எழுகிறது” என்றார். முரசுகளும் கொம்புகளும் எழுந்தமைய அனைவரது விழிகளும் ஆடற்களத்தை நோக்கி குவிந்தன.
[ 12 ]
பன்னிரு பகடைக்களம் தொடங்குவதற்காக கொம்பு ஒலித்தமைந்தது. சகுனி மெல்லிய குரலில் தருமனுக்கு வாழ்த்துரைத்தார். தருமன் மறுமுகமன் சொல்லி வாழ்த்து சொன்னார். பொற்பேழையில் பகடைகள் கொண்டு வந்து வைக்கப்பட்டன. களநடுவராக வலப்பக்கம் கிருபரும் இடப்பக்கம் துரோணரும் தங்கள் பீடங்களில் அமர்ந்தனர். ஒவ்வொருவராக தங்கள் எண்ணப்பெருக்கிலிருந்து உதிர்ந்து சித்தம் குவிந்து நோக்கத்தொடங்கினர்.
சகுனி உரத்த குரலில் “இந்திரப்பிரஸ்தத்தின் அரசரை அஸ்தினபுரியின் அரசரின் சார்பில் இந்நிகரிப்போருக்கு அறைகூவுகிறேன். இப்போரில் எவர் வென்றாலும் அது போர்வெற்றியென்றே கொள்ளப்படும் என்று அறிக!” என்றார். தருமன் தலைவணங்கி “அவ்வறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன். இதை நிகரிப்போர் எனவே கொள்கிறேன்” என்றார். “இது பந்தயம் வைத்து ஆடும் ஆடல்!” என்றார் சகுனி. “அதை அறிந்திருப்பீர், அரசே.” யுதிஷ்டிரர் குழப்பத்துடன் “தனித்தனியாக பந்தயம் வைத்து ஆடுவது என்று என்னிடம் சொல்லப்படவில்லை. எனது வெற்றியையோ தோல்வியையோ பந்தயமாக வைப்பது என்றே நான் புரிந்து கொண்டிருந்தேன்” என்றார்.
“அவ்வண்ணமில்லை” என்று சகுனி புன்னகையுடன் சொன்னார். “இவ்வாடற்களத்தின் நெறிகளை முன்னரே தங்களுக்கு அனுப்பியிருந்தோம். இது ஒவ்வொரு ஆடலுக்கும் ஒரு பந்தயமென வைத்து ஆடுவது.” “இல்லை, அது எனக்கு சொல்லப்படவில்லை” என்றார் தருமன். “அஞ்சுகிறீர்களா?” என்றார் சகுனி. “அச்சமில்லை… நான் அஞ்சுவதற்கொன்றுமில்லை” என்றார் தருமன்.
“இதோ, முதல் ஆடலுக்கு அஸ்தினபுரியின் கருவூலத்தின் அனல் என சுடர்விட்டுக் கொண்டிருக்கும் ஹஸ்தியின் பொன்றாப் புகழ்கொண்ட மணிமுடியை பந்தயமாக வைக்கிறேன். நிகரென ஒன்றை பந்தயமாக வைத்து ஆடுக!” என்றார் சகுனி. தருமன் திகைத்து “அது எங்கள் குலமூதாதை அணிந்த மணிமுடியல்லவா? அதை எவர் பந்தயமென்று இங்கு வைக்கமுடியும்?” என்றார்.
“அஸ்தினபுரியின் அரசர் அதன் கருவூலத்திற்கு உரிமையானவர். தன்னிடமுள்ள முதன்மை செல்வத்தை வைத்து ஆட அவருக்கு நூலொப்புதல் உண்டு” என்றார் சகுனி. பெருமூச்சுடன் தருமன் “அதற்கிணையாக நான் வைக்கக்கூடுவது இந்திரப்பிரஸ்தத்தின் மணிமுடியையும் செங்கோலையும் பொற்தேரையும் மட்டுமே” என்றார். “நன்று!” என்றபடி பகடையை நோக்கி கைகாட்டினார் சகுனி.
தருமன் பகடைக்காய்களை எடுத்து தன் கைகளில் மும்முறை உருட்டி பரப்பினார். அவை சூழ்ந்திருந்த அத்தனை தலைகளும் எண்களை பார்ப்பதற்காக சற்றே முன்னகர்ந்தன. எண்களைப் பார்த்து அறிவிக்கும் இடத்தில் நின்றிருந்த நிமித்திகன் உரத்த குரலில் “ஆறு!” என்றான். தருமன் தன் படைவீரர்களை பருந்துச்சூழ்கை என அமைத்து புரவித்தலைவனை முன் அமைத்தார்.
சகுனி பகடைகளை உருட்டியபோது இரண்டு விழுந்தது. நிமித்திகன் “இரண்டு” என அறிவித்தபோது அவையெங்கும் மெல்லிய புன்னகையொன்று பரவுவதை விழிதிருப்பாமலேயே யுதிஷ்டிரர் கண்டார். தன் யானைகளை முன் நகர்த்தி நடுவே கதாயுதமேந்திய மல்லனை அமைத்தார் சகுனி. தருமனுக்கு பன்னிரண்டு விழுந்தது. அவன் பருந்துப்படை சிறகு முன்னோக்கி குவிந்து அணுகியது. சகுனி தன் காலாள் படைகளை ஒருங்கமைத்து நடுவே தனது கதைமல்லனை பாதுகாப்பாக நிறுத்தி வைத்தார்.
இரு படையோனும் முகம் நோக்கி நின்றனர். “தங்கள் முறை, மாதுலரே” என்று புன்னகையுடன் சொன்னபடி தருமன் சகுனியை நோக்கி பகடைகளை நீட்டினார். அவர் அதை வாங்கி கண்களைச் சுருக்கி ஒருகணம் தன்னிலாழ்ந்து பின்பு மெல்ல உருட்டினார். அவர் உடலில் ஒரு நடுக்கம் இருந்து கொண்டிருப்பதை தருமன் கண்டார்.
பகடைகள் உருண்டு மூன்று என மீண்டும் விழுந்தன. மூன்று என்று உரக்க அறிவித்தான் நிமித்திகன். அதிர்ந்து கொண்டிருந்த இருவிரல்களால் மூன்று காய்களை முன்னிறுத்தி தனது தலைமல்லனை பாதுகாத்தார் சகுனி. தருமனின் முகமெங்கும் புன்னகை பரவியிருந்தது. வலக்கையால் தன் குழலை மெல்ல தள்ளி தோளுக்குபின் இட்டபடி பகடைக்காக கை நீட்டினார். பகடையை வாங்கி சகுனியை கூர்ந்து நோக்கியபடி மெல்ல உருட்டி பரப்பினார். பன்னிரண்டு என்று நிமித்திகன் அறிவித்தபோது அவை ஒற்றைப்பெருமூச்சொன்றை எழுப்பியது.
மீண்டும் பகடை உருண்டபோது பன்னிரு வீரர்களால் சூழப்பட்ட தருமனின் மல்லனால் சகுனியின் மல்லன் வீழ்த்தப்பட்டான். அவன் படைசூழ்கை சிதறடிக்கப்பட்டது. தன் மல்லனை முதலில் நிறுத்தி ஒழிந்த பகடைக்களத்தை நோக்கி புன்னகைத்தபின் விழிதூக்கி கிருபரை பார்த்தார் தருமன். கிருபர் “முதல் ஆட்டத்தில் இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரர் வென்றார் என்று அறிவிக்கப்படுகிறது” என்றார். துரோணர் “ஆம், இந்திரப்பிரஸ்தத்தின் அரசரின் வெற்றி உறுதி செய்யப்படுகிறது” என்றார்.
சகுனி மயிர் உதிர்ந்த வெண்தாடியை கழுத்திலிருந்து மேலே நீவி பற்றி இறுக்கி மெல்ல கசக்கியபடி தலைகுனிந்து அமர்ந்திருக்க துரியோதனன் எழுந்து “இந்திரப்பிரஸ்தத்தின் அரசே, கருவூலத்தில் காவலில் இருக்கும் ஹஸ்தியின் மணிமுடி தங்களுக்குரியதாகுக!” என்றான். ஏவலர் வந்து சிறு பொற்கெண்டியில் நீர் ஊற்ற அதை கையில் விட்டு மும்முறை தரையில் சொட்டி “அளித்தேன்! அளித்தேன்! அளித்தேன்!” என்றான். புன்னகையுடன் திரும்பி தன் இளையோரை நோக்கியபின் “அடுத்த சுற்றுக்கு நான் சித்தம்” என்றார் தருமன்.