பத்மவியூகம்: கடிதம்

1

அன்புள்ள ஜெ சார் அவர்களுக்கு,

“பத்மவியூகம்” என்னைப் பதறவைத்தபடியே என் மனதைப் புரட்டிப்போட்டுவிட்டது. கடக்க முடியா புத்திரசோகத்தையும் கடந்து ஏதோ ஒரு இறுக்கமான அமைதி குடிகொண்டதை பத்மவியூகம் சிறுகதையைப் படித்துமுடிக்கையில் உணர்ந்தேன்.       “என் குழந்தைக்கு அவன் விதியிலிருந்து மீளும் வழி தெரியவில்லையே….” என்று சுபத்ரை குமுற, அதற்கு அவள் அண்ணன் கிருஷ்ணன், “யாருக்குத் தெரியும் அது? உனக்குத் தெரியுமா? வழி தெரிந்தா நீ உள்ளே நுழைந்தாய்?” என்று பதிலுரைக்கையில் நானும் உறைந்து நின்றேன். ஏனெனில் எனக்குள் குடைந்துகொண்டிருந்த சில கேள்விகளுக்கு பதில் கிடைத்திருந்தது.

மனிதமனம் ஒரு கணம் கூட ஒருநிலையில் இருப்பதில்லை. மகனை இழந்து ஆற்றவொண்ணாத்துயரை அனுபவித்துக் கொண்டிருக்கையில்கூட அதற்கு சற்றும் பொருந்தா மனநிலையாகிய இன்ப உணர்வையும் அனுபவிக்கிறது. அபிமன்யு இறந்துவிட்டான்; வருந்துகின்றாள் அன்னை சுபத்ரை. ஆனால் அதேசமயத்தில் அதற்குக் காரணம் அர்ச்சுனந்தான் என்று தேடித்தேடி சொல்லம்புகளைத் தொடுத்து அவனுடைய இதயத்தைக் குத்திக்கிழித்து அவன் வலிகண்டு இன்பமடைகிறாள். அடுத்தவரின் வேதனையில்தான் நம் மனம் ஆறுதலடைகிறது. இந்த மனித மனத்திற்குத்தான் எத்தனை குரூர புத்தி! எல்லாவற்றையும் இந்த பரந்தவெளியுலகனைத்தையும் மாற்றி அமைத்துவிடலாம் என்ற அகங்காரம்! ஆனால் இந்த அகங்காரத்திற்கும் சரியான பதிலடி இருக்கிறது இந்த பத்ம வியூகத்தினுள். “நம் அகங்காரம் சிலசமயம் கூறும். அதன்படி நாம் இயங்குவோம். பிறகு தெரியும் நமது இயக்கம் கூட நியதியின் விளையாட்டுதான் என்று”. இது போதும் இது ஒன்று போதும்.

பகவத்கீதையின் சாராம்சத்தை தெரிந்துகொள்ள விழைபவர்கள் இப் “பத்மவியூகம்” படித்தாலே  போதும்.  கட்டுப்பாடற்று அலைபாய்ந்து காரணகாரியங்களைத் தேடிக்கொண்டிருந்த என் மனதில் இப்போது இதுவரையில்லாத தெளிவும் தைரியமும் குடிகொண்டு ததும்பி வழிவதை பெருமிதத்தோடு உணர்கிறேன். இந்தத் தத்துவ விசாரத்தை அறிந்துகொண்ட கணம்  நான் இந்த உலகையே வென்றுவிட்டதாக எனக்குள்ளே புன்னகைத்துக் கொண்டேன். என் சிந்தனைக்கு முதிர்ச்சியையும் ஆத்மார்த்தமான மனநிறைவினையும் தந்த பத்மவியூகத்திற்கு என் நன்றிகள்!

 

இப்படிக்கு,
தங்கள் அன்புள்ள,
கிறிஸ்டி.

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 82
அடுத்த கட்டுரைமுழுடிக்கெட்!