அ.கா.பெருமாள் கருத்தரங்கு, உரிய முன்பதற்றங்கள்

அ.கா.பெருமாள் அவர்கள் கருத்தரங்கு இன்று மாலை ஆறு மணிக்கு. நாகர்கோயிலில் என்ன சிக்கல் என்றால் எல்லாவற்றையும் நானே செய்யவேண்டும். எனக்கு எழுதுவது தவிர எதையும் சரியாகச்செய்ய முடியாது. குண்டூசியைக்கூட மூச்சுப்பிடித்து தூக்க வேண்டும். இடம் பதிவுசெய்ததும் ஓர் அச்சம் ஏற்பட்டது. ஆனால் கூடவே அஜிதன் இருந்ததனால் ஒரு தைரியம். அவன் பிளஸ் ஒன் படிக்கிறான். இல்லாவிட்டால் அவனையே எல்லாவற்றுக்கும் அனுப்பலாம். வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டி வண்டியில் ஏற்றி கொண்டுவருகிற பயல் அவன்.

தக்கலையில் ஓர் அச்சகத்தில் அழைப்பிதழ் அடிக்கக் கொடுத்தேன். ”ஒழுங்காக புரூப் பாரு ஜெயன், கோட்டை விட்டுராதே” என்று அருண்மொழி பலமுறை சொன்னாள். ”அப்பா போனவாட்டி புரோக்ராம் நேரம் அச்சில விட்டுப்போச்சுல்லா” என்றாள் சைதன்யா. ஆகவே இம்முறை நாலைந்து முறை அவற்றை சரிபார்த்தேன். அச்சுக்குக் கொடுத்துவிட்டு வந்து அருண்மொழியிடம் நாலுமுறை புரூஃப் பார்த்தேன் அருணா என்றேன். ”சரிதான்…”என்று சந்தேகமாக இழுத்தாள்

மறுநாள் அழைப்பிதழை பணம் கொடுத்து வாங்கிக் கொண்டுவந்து அலுவலகத்தில் வைத்து பிரித்துப் பார்த்தால் எடுத்த எடுப்பிலேயே கண்ணில்பட்ட பிழை, ”நாஞ்சில்நாடான்” என்று இருந்தது. கன்யாகுமரிமாவட்டத்தில் சதிக்கலவரம் தொடங்க அதுவே போதும். வேதசகாய குமார் ”இருகக்ட்டுமே ஒரு நாலு மாலை ஜாஸ்தி விழுமே ”என்றார் ஃபோனில். அவர்சரமாக ஓடி அச்சக உரிமையாளரிடம் கெஞ்சினால் ‘நீங்கதானே நாலு புரூஃப் பாத்தீங்க’என்றார். வேறு வழி இல்லை. மீண்டும் பணம் கொடுத்து அச்சிட்டேன்

நெய்தல் கிருஷ்ணனிடம் பெற்ற விலாசங்களை ஒட்டி அழைப்பிதழை உறைக்குள் போட்டு அனுப்புவது பெரிய வேலை. உறைக்குள் ஒரு கார்டை வைப்பது எளிய வேலை என்று தோன்றும் 200 உறை என்றால் பொறுமை போய்விடும். அதிலும் என்னால் இம்மாதிரி வேலைகளை எண்ணங்கள் வேறு திக்கில் செல்லாமல் செய்யவே முடியாது. உறைகள் உள்ளே ஒட்டிக்கொன்டிருந்ததனால் ஒட்டிமுடிப்பதற்குள் வெறி ஏறிவிட்டது

நடுவே பயணங்கள் என்பதனால் ஒருவாரம் முன்னதாகவே அழைப்பிதழ்களை அனுப்பிவிட்டேன். திரிச்சூரில் இருக்கும்போது ஒரு தொலைபேசி அழைப்பு. கூப்பிட்டவர் கவிஞர் என்.டி.ராஜ்குமார். ”இப்போது ஏ.பி.என் பிளாஸாவில் இருக்கிறேன். இங்கே யாருமே இல்லையே, கூட்டம் இல்லையா”‘ என்று கேட்டார். ”ஐயோ கூட்டம் அடுத்த ஞாயிற்றுக்கிழமை அல்லவா?” என்றேன். ”சாரி தெரியாம அனுப்பிட்டேன்” என்று சொல்ல அவர் ”பரவாயில்லை” என்றார்.

ஒரு வினைல் போர்டு எழுதலாமென்று திட்டம். பத்து நாட்களாக அனேகமாக தினமும் கிளம்பி ஒத்திப்போட்டேன். கடுமையான மழை வேறு. வினைல் போர்டு அச்சிடும் இடத்துக்கு பஸ்ஸில் இருந்து இறங்கி நடக்க வேண்டும். இருசக்கரம் ஓட்டத்தெரியாததன் சிக்கலை நான் உணர்வது இம்மாதிரி தருணங்களில்தான்.

கடைசியாக இன்று காலை கிளம்பி வந்து வினைல்போர்டு எழுதும் கடைக்குப்போனேன்.
‘கரென்ட் இலெலென்னா போர்டு கெடையாது சார்” என்ரார் உரிமையாளர். மலர் மாலைக்கு ஆர்டர் கொடுத்தேன். டீக்கு சொன்னேன். கூடத்தை [ஏ.பி.என் பிளாஸா,செட்டிகுளம்]  இன்னொருதடவை பார்த்தேன். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில். நாகர்கோயில் முழுக்க நடந்து விட்டேன். காலையில் மொத்த நகரமே பிராய்லர் கோழி வாங்கிக் கொண்டுசென்றுகொன்டிருப்பது போல ஒரு பிரமை ஏற்பட்டது

பேச்சாளர்கள் அனைவரையும் ஃபோன்செய்து நினைவூட்டினேன்.மாலையில் மழை வராமல் இருக்கவேன்டும். நல்ல முகூர்த்த நாள் வேறு. நிகழ்ச்சி நடந்து முடிவது வரை பதற்றம்தான். இம்மாதிரி நேரங்களில்தான் நான் அன்புவை நினைத்துக்கொள்வது. சென்னையில் சோழமண்டல் நிதி நிறுவன ஊழியரான அன்பு ஜெயகாந்தனின் மகனைப்போல நெருக்கமானவர். எனக்கு நண்பருக்கும் மேலே என்று சொல்லவேண்டும். சென்னையில் இருந்தேன் என்றால் அன்புவிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு சும்மா வீட்டிலேயே இருந்துகொள்ளலாம்

இனி ஒரு நிகழ்ச்சி என்றால் சென்னையில்தான்.

முந்தைய கட்டுரைநகைச்சுவை : இன்னும் சில கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅ.கா.பெருமாள் 60-நிகழ்ச்சி