‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 81

[ 9 ]

துரியோதனன் மிகவும் சோர்ந்திருந்தான். சாய்வு பீடத்தில் தன் உடலைச் சாய்த்து இருகைகளையும் கைப்பிடிமேல் வைத்தபடி தலையை பின்னுக்குச் சரித்து அமர்ந்தான். “படைப்புறப்பாட்டுக்கு முன்னர் கூட இத்தனை களைத்ததில்லை, அங்கரே” என்றான். கர்ணன் அவன் அருகே பீடத்தில் அமர்ந்து கலைந்த தன் தலையை இருகைகளாலும் கோதி பின்னுக்கு கொண்டுசென்று நாடாவால் முடிந்தபடி “உள்ளம் மிக விரைந்து முன்னால் செல்கிறதல்லவா?” என்றான். “உள்ளவிரைவு இத்தனை களைப்படையச் செய்யும் என்று இன்றுதான் உணர்ந்தேன்” என்றான் துரியோதனன்.

துச்சாதனன் வாயிலருகே தூண்சாய்ந்து நின்றான். துரியோதனனிடமிருந்து மெல்லிய குறட்டை ஒலி கேட்கத்தொடங்கியது. கர்ணன் திரும்பி துச்சாதனனிடம் “நீ சென்று படுத்துக்கொள், இளையோனே!” என்றான். “நான்…” என்று அவன் தொடங்க “நான் அரசருடன் இருக்கிறேன். நீ சென்று படுத்துக்கொள்” என்று மீண்டும் சொன்னான். தலை தாழ்த்தி கதவைத் திறந்து துச்சாதனன் நடந்து மறைந்தான். துயிலும் துரியோதனனை பார்த்தபடி கர்ணன் அமர்ந்திருந்தான். அவனை எழுந்து மஞ்சத்தில் படுத்துக்கொள்ளச் சொல்லலாமா என்று எண்ணினான். பின்பு அவனே விழிக்கட்டும் என்று முடிவு செய்து ஓசையற்ற காலடிகளுடன் எழுந்துசென்று சாளரத்துக் கதவைத் திறந்து வெளியே இருளை நோக்கியபடி நின்றான்.

மேற்குவாயிலில் மாளிகை நிரைகளுக்கும் மரக்கிளைகளுக்கும் அப்பால் ஏரியின் மீது மெல்லிய இரவொளியின் நெளிவு தெரிந்தது. வடக்குக் கோட்டத்தில் களிறொன்று பிளிறியது. குளிர் அடங்கத் தொடங்கியிருப்பது காற்றில் மெல்லிய தூசு மணமும் வெம்மை நிறைந்த ஆவியும் கலந்திருப்பதிலிருந்து தெரிந்தது. இரவணைந்த பறவைகள் சில எழுந்து சிறகடித்து மீண்டும் அமைந்தன. வானத்தில் மெல்லிய சாம்பல் ஒளிப்பரப்பின் பகைப்புலத்தில் பறவைக்கூட்டங்கள் நீரில் மிதந்துசெல்லும் சருகுப்படலமென வலசை சென்றுகொண்டிருப்பதை காணமுடிந்தது.

துரியோதனன் ஏதோ சொன்னது போல் இருந்தது. அவன் திரும்பிப் பார்த்தபோது வாயை சப்புக்கொட்டியபின் அவன் அசைந்து அமர்ந்து மீண்டும் குறட்டைவிடத் தொடங்கியதை கண்டான். பானுமதியின் பெயரா என்று எண்ணிக்கொண்டான். பல மாதங்களாக பானுமதியை துரியோதனன் சந்திக்கவேயில்லை. மூன்று முறை லட்சுமணை மட்டும் வந்து அவனை பார்த்துச் சென்றாள். அவளைக் கண்டதுமே அறியாது சற்று கனிந்து அக்கனிவை தானே உணர்ந்து உடனே இறுகி முறைமைச் சொல் உரைத்து திருப்பி அனுப்பினான் துரியோதனன்.

“தந்தைக்கு என்ன ஆயிற்று, மூத்த தந்தையே? அவர் பிறிதொருவராக மாறிவிட்டாரென்று மகளிர் மாளிகையில் சொல்கிறார்களே?” என்றாள் லட்சுமணை. கர்ணன் புன்னகைத்தபடி “ஆம், ஆனால் சில நாட்களில் அவர் திரும்பிவிடுவார். பொறு” என்றான். அவள் அவன் கையை பற்றியபடி “மூத்த தந்தையே, அஸ்தினபுரிக்கு இந்திரப்பிரஸ்தத்தின் அரசி வருகிறார்கள் என்றார்கள். என்றைக்கு வருகிறார்கள்?” என்றாள். “வருவாள்” என்றான் கர்ணன். “நான் அவர்களை பார்க்க விழைகிறேன்.” “ஏன்?” என்றான் கர்ணன். அவள் கரிய கன்னங்களில் நாணம் சிவக்க “என்னைப்போலவே அவர்களும் கிருஷ்ணை அல்லவா?” என்றாள். பின்பு விழிகள் மாற “அவர்கள் பெயரை ஏன் எனக்கு இட்டார் தந்தை?” என்றாள்.

கர்ணன் நகைத்து “நீயும் கரியவள் என்பதனால்” என்றான். “ஆம். அப்படித்தான் சொல்கிறார்கள்” என்றபின் அவள் வெண்பற்கள் ஒளிவிடச் சிரித்து “அவர்களை எனக்குப் பிடிக்காதென்றுதான் அன்னையிடமும் பிறரிடமும் சொல்லிவந்தேன். அவர்கள் நகர் நுழைவதை அறிந்ததிலிருந்து அவர்களை எனக்குப் பிடிக்கும் என்பதை மறைக்கவே முடியவில்லை” என்றாள். “ஏன் மறைக்கவேண்டும்?” என்றான் கர்ணன். “என்னைப்போல் ஒருவர் எனக்கு முன்னரே இருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய குறை?” என்றாள். “அது பெருமையல்லவா?” என்றான். “என்ன பெருமை? நான் வளர்ந்து அமரவேண்டிய அனைத்து இருக்கைகளிலும் அவர்கள் முன்னரே அமர்ந்துவிட்டார்கள்” என்றாள்.

கர்ணன் உரக்க சிரித்துவிட்டான். அவள் குழலை வருடி “அதனாலென்ன? அதைவிட பெரிய அரியணை உனக்காகக் காத்திருக்கும்” என்றான். “என்ன அரியணை? அவர்கள்தான் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினி. அதற்குமேல் உலகத்தின் சக்ரவர்த்தினியாக நான் ஆவதா?” என்றாள். “ஆக முடியும். பாரதவர்ஷத்திற்கு அப்பால் கிழக்கிலும் மேற்கிலும் எத்தனை நாடுகள் உள்ளன? உனது தந்தை அஸ்வமேதமும் ராஜசூயமும் இயற்றியபின் நீ அரியணை அமர்ந்தால் இந்திரப்பிரஸ்தத்தின் கிருஷ்ணையை விட பெரியவளாவாய்” என்றான் கர்ணன்.

அவள் சிரித்தபடி “சரிதான், பார்ப்போம்” என்றாள். பின்பு அவனைவிட்டு சிறுதுள்ளலுடன் ஓடினாள். அவள் செல்வதை அவன் புன்னகையுடன் நோக்கி நின்றான். எப்போது சிறுமியிலிருந்து பெண் எழுகிறாள்? எப்போது பெண்ணிலிருந்து சிறுமி எழுகிறாள் என்பதை அறியமுடியாதது போலத்தான். வாசல் கதவை எவரோ தட்டுவதுபோல் உணர்ந்து கர்ணன் திரும்பி நோக்குவதற்குள் கதவு விரியத்திறந்து விதுரர் உள்ளே வந்தார்.   எவராலோ துரத்திவரப்பட்டவர் போல மூச்சிரைத்தார்.

கர்ணன் திகைப்புடன் “வணங்குகிறேன், அமைச்சரே” என்று தலைவணங்க அவர் அடைத்தகுரலில் “பேரரசர்” என்றார். ஒன்றும் புரியாமல் “யார்?” என்றான் கர்ணன். “பேரரசர், திருதராஷ்டிரர்” என்று விதுரர் அழுந்திய குரலில் சொன்னார். கர்ணன் திடுக்கிடலுடன் துரியோதனனை அணுகி அவன் தோளைத் தட்டி “அரசே! எழுங்கள் அரசே!” என்றான். அதற்குள் சஞ்சயனின் தோள்பற்றி திருதராஷ்டிரர் தலைகுனிந்து உள்ளே வந்தார். அவரது பேருடல் வாசலை முழுக்க மூடியது.

தலையை சற்றே திருப்பியபடி “அறையில் வேறெவரும் இருந்தால் வெளியே போகலாம்” என்றார் திருதராஷ்டிரர். துரியோதனன் பாய்ந்து எழுந்து “யார்?” என்றான். “பேரரசர்” என்றான் கர்ணன். துரியோதனன் கண்களைக் கசக்கியபடி திருதராஷ்டிரரைப் பார்த்து ஒருகணம் சொல்லிழந்து, உடனே மீண்டு “வணங்குகிறேன், தந்தையே” என்றான். “விதுரா, நீ வெளியே செல்லலாம்” என்றார் திருதராஷ்டிரர். விதுரர்  தலைவணங்கி சஞ்சயனுடன் வெளியே சென்று கதவை இழுத்து மூடினார்.

கர்ணன் தானும் கடந்துசெல்ல முயல அவர் கைநீட்டி “நீ இங்கிருக்கலாம், மூத்தவனே. நீ என் குருதி” என்றார். சிறிய திடுக்கிடலுடன் கர்ணன் “தந்தையே!” என்றான். “நீ இவன் உடலின் மறுபாதி. நான் இவனிடம் பேசவந்ததை நீயும் கேட்கவேண்டும்” என்றார். “நான் அங்கு வந்திருப்பேனே, தந்தையே” என்றான் துரியோதனன். “பலமுறை உன்னை அழைத்தேன். நீ வரவில்லை” என்றார் திருதராஷ்டிரர். தயங்கி கர்ணனை நோக்கிவிட்டு “ஆம். பணிகள்” என்றான் துரியோதனன்.

திருதராஷ்டிரர் “இன்றிரவு இதை வந்து சொல்லவேண்டுமென்று தோன்றியது. இதைக் கடந்தால் ஒருவேளை சொல்ல முடியாது போகலாம்” என்றார். அவன் “சொல்லுங்கள், தந்தையே” என்றான். “மைந்தா, இது வேண்டாம். இச்சூதால் எந்த நலனும் நிகழப்போவதில்லை. இன்று என் விழியிழந்த உள்ளத்தால் காலத்தின் நெடுந்தொலைவை பார்க்கிறேன். வழிவழியாக இங்கு பிறந்து வரும் ஒவ்வொரு தலைமுறையும் உன் பெயர் சொல்லி பழியுரைக்கும். நீ இழிபுகழுடன் என்றும் நூல்களில் வாழ்வாய். இது வஞ்சத்தின் வெளிப்பாடு. அரசன் நிலம் விழைவது அறம். ஆனால் குலம் கோத்து கிளைவிரிப்பது அவனது பேரறம். பேரரசனாக அல்ல. உன் தந்தையாக இதை கோருகிறேன். அழுக்காறை விட்டுவிடு!” என்றார்.

துரியோதனன் எரிச்சலுடன் “தந்தையே, தாங்கள் இப்போது வந்து இதை சொல்கிறீர்கள்…” என்றான். “இப்போது மட்டுமே இதை சொல்லமுடியும். நாம் அறியாத பெருவல்லமை கொண்ட எவரோ நம்மை இக்களத்தில் இயக்குகிறார்கள். கனவிலென அவர்களுக்கு நாம் அடிமைப்பட்டிருக்கிறோம். அரைக்கணம் எழும் விழிப்பில் திமிறி விலகிக்கொண்டால் நாம் தப்ப முடியும். இது அந்தக் கணம். அருள் கூர்ந்து நான் சொல்வதை புரிந்து கொள், மைந்தா! தருமன் மீது நீ கொண்ட காழ்ப்பு பொருளற்றது. அவன் தன்னியல்பாலேயே பேரறத்தான். நாமனைவரும் அவனுக்கு முன் மிகச்சிறியோர். எளிய விழைவுகளாலும் வஞ்சத்தாலும் அலைக்கழிக்கப்படும் மானுடர். அவனோ நிலைபெயராமை கொண்ட நெஞ்சத்தால் என்றும் முனிவர்களால் வாழ்த்தப்படப் போகிறவன்.”

“அவன் புகழைச் சொல்லவா இங்கு வந்தீர்கள்?” என்று துரியோதனன் உரக்க கேட்டான். “ஆம், அவன் புகழைச் சொல்லவே வந்தேன். அத்துடன் உன் இழிவைக் குறிப்பிடவும்தான். இத்தருணம் வரை உன் விழிநோக்கி அதை நான் சொல்ல முடியவில்லை. என் இளையோனின் மைந்தரைக் கொல்ல நீ அரக்கு மாளிகை அமைத்ததை மூன்றாம் உள்ளத்தால் நான் அறிவேன். பல்லாயிரம் சொற்களையும் பலகோடிக் கனவுகளையும் அள்ளி அள்ளிக் குவித்து மூடியும் அது என் உள்ளத்தின் ஆழத்தில் எங்கோ துளிவிதையென நீர்காத்து உறைந்தது.”

துரியோதனன் உடல் நடுங்க “தந்தையே!” என்றான். “இழிமகனே, இத்தனைநாள் என் விழிப்புக்கும் கனவுக்கும் அது சிக்காது ஆக்கினேன். அதை விப்ரரிடமிருந்து மட்டுமே என்னால் ஒளிக்கமுடியவில்லை. சற்று முன் அவர் என் கனவில் வந்தார். உன்னிடம் வந்து பேசும்படி சொன்னார்” என்றார் திருதராஷ்டிரர் “விழியால் அறிவதைவிட நுட்பமாக விழியின்மையால் அறியமுடியும், அறிவிலியே. நீ யாரென்று எனக்குத் தெரியும். ஏனெனில் நான் நீ. உன் வடிவில் எழுந்து நின்றாடும் இத்தீமை விழியிழந்த என் இருள் உள்ளத்தில் எங்கோ ஒளிந்து கிடந்தது. மூதாதையர் அருளால் ஒவ்வொரு கணமும் அதை வென்று இதுநாள் வரை அறம் பிழையாது வாழ்ந்தேன். உன் பொருட்டு நெறியழிந்தேன் என்னும் இழிசொல்லுடன் நான் நூல்களிலும் நினைவுகளிலும் வாழலாகாது.”

கைநீட்டி பெருங்குரலில் அவர் சொன்னார் “அப்பேரறத்தான் நீ இழைத்த பழியைப் பொறுத்து தந்தையென உன்னை நான் வெறுக்கலாகாதென்று அறிவுறுத்தி எனக்கு எழுதிய ஓலையை சற்றுமுன் கனவில் விப்ரர் எனக்கு வாசித்துக் காட்டினார். நெஞ்சில் அறைந்து கண்ணீர்விட்டு அழுதபடி விழித்துக்கொண்டேன். அவன் கால்களில் என் தலையை வைத்து பன்னிருமுறை பொறுத்தருளும்படி கோரினேன்.” அவர் முகம் உணர்வெழுச்சியால் நெளிந்தது. “மைந்தா, நீ இழைக்கப்போவது அதற்கு நிகரான பிறிதொரு இழிசெயல். சூது எவருக்கும் மேன்மை தந்ததில்லை. நச்சுக்கடல் கடைந்து எவரும் அமுதம் எடுக்கப்போவதில்லை.”

“நெறி நூல்களை நானும் அறிவேன். சொற்களில் சலிப்புற்று என்றோ விலகிவிட்டேன்” என்று துரியோதனன் பற்களை நெரித்தபடி  சொன்னான். “எவ்வகையிலும் ஒரு அணுவிடைகூட நான் பின்காலெடுத்து வைக்கமாட்டேன். தந்தையே, நான் முடிவு செய்துவிட்டேன். நாளை புலரியில் பன்னிருகளம் கூடும். மாதுலர் என் பொருட்டு பகடை உருட்டுவார். நான் வெல்வேன். அக்கீழ்மகனின் முடித்தலைமேல் என் கால் வைப்பேன். அவ்விழிமகளை இழுத்து வந்து என் அவை முன் நிறுத்துவேன்.”

“நிறுத்து! அதே அவையில் உன் தலைகொய்து தெற்கு நோக்கி கொண்டுசெல்ல என்னால் ஆணையிட முடியும்” என்றார் திருதராஷ்டிரர். “முடியுமென்றால் அதை செய்யுங்கள். இரண்டு வழிகளே என் முன் உள்ளன, தந்தையே. ஒன்று, நான் எண்ணியபடி செல்லல். பிறிதொன்று உங்கள் கையால் இறத்தல். மூன்றாவதொன்றை என்னிடம் பேசவேண்டியதில்லை” என்றான் துரியோதனன்.

“மைந்தா…” என்று தழுதழுத்த குரலில் திருதராஷ்டிரர் கைநீட்டினார். பின்னடைந்து கையை நீட்டி அவரை விலக்கியபடி துரியோதனன் சொன்னான் “தெய்வங்களே வந்து சொன்னாலும் இனி என் உள்ளம் விலகாது. நான் அடைந்த இழிவுகளைக் கடந்து இனி ஒரு சொல்லும் என் சித்தம் ஏற்காது. அறவுரைகள் போதும். தாங்கள் செல்லலாம்!” திருதராஷ்டிரர் “மூடா, இவனொருவனை நம்பியா நீ போருக்கு அறைகூவுகிறாய்? இச்சூதுக்களத்தில் அனைத்தும் முடியுமென்றா எண்ணுகிறாய்? தொடங்குவதனைத்தும் அழிவதிலேயே முடியும் என்பதே இயற்கையின் நெறி. போர் வரும். வந்தே தீரும்” என்றார் திருதராஷ்டிரர்.

“போர் சூழும் என்றால் எதிர்நிற்பவன் எதிரற்ற படையாழி ஏந்திய இளைய யாதவன் என்றுணர்க! அவனுடன் இணைந்தவனோ பாரதவர்ஷத்தை வென்று வந்த விஜயன். பீமனுக்கு ஒருபோதும் நீ இணையானவன் அல்ல” என்றார் திருதராஷ்டிரர். கர்ணனைச் சுட்டி “ஆம், இவன் வெல்லக்கூடும். ஆனால் இவன் பிறப்பு இவனுக்குக் கீழே ஷத்ரியர்களை அணிதிரட்ட விடாது. இவன் உன் களத்தில் இருந்தாலும் பயனற்றவனே. நீ செல்வது உன் இறப்பின் களத்திற்கென்று உணர். மைந்தா, அதை நன்கு என் விழிகளுக்குள் காண்கிறேன். ஒரு காட்டுக்குளத்தருகே நீ உடல் சிதைந்து கிடப்பதை பலமுறை கனவில் கண்டிருக்கிறேன். இத்தனை நாள் அஞ்சி அஞ்சி உன்னை நான் அணைகட்டி நிறுத்தியது அதன் பொருட்டே” என்றார்.

அவர் அறைக்குள் அறியாது நின்றிருந்த வேறெவரிடமோ பேசுவதுபோல தலைதிருப்பியிருந்தார். “என் உள்ளத்தில் இருந்து விப்ரர் மறைந்த ஒரு கணத்தில் இப்பன்னிரு படைக்களத்திற்கு நான் ஒப்புதல் அளித்தேன். மீண்டெழுந்து வந்து அவர் இறுதியில் அறிவுறுத்தியதும் இங்கு வந்தேன். வேண்டாம்! பிறிதெவருக்குமாக இதை சொல்லவில்லை… உனக்காக சொல்கிறேன்” என்றார்.

துரியோதனன் முற்றிலும் அடங்கி குரல் தழைந்தான். “தந்தையே, தாங்கள் செய்வதற்கொன்றே உள்ளது” என்றபின் திரும்பி நோக்கி அறைமூலையில் இருந்த கதாயுதத்தை எடுத்து அவரை நோக்கி வீசினான்.  அவர் இயல்பாக அதை பற்றிக்கொள்ள முழந்தாளிட்டு அவர் எதிரில் அமர்ந்து தன் தலையை காட்டினான். “இத்தனை சொற்களுக்கு மாற்றாக ஒரே அடியில் என் தலை பிளந்து தள்ளிவிட்டு நீங்கள் திரும்பிச் செல்லலாம். பிறிதொரு வழியும் உங்களுக்கில்லை.”

திருதராஷ்டிரர் கதாயுதத்தை தரையில் வீசினார். அவரது கைகள் தளர்ந்தவையென இருபக்கமும் விழுந்தன. நீண்ட மூச்சில் கரிய பெருநெஞ்சு எழுந்தமைந்தது. “ஆம். வெல்லற்கரியது. நிற்றற்கரியது. கடத்தற்கரியது. காலம் தோறும் மானுடர் அதன் முன் நின்று கதறுகிறார்கள். ஓங்கித் தலையுடைத்து மடிகிறார்கள். அது மானுடரை அறிவதே இல்லை” என்றார்.

அவர் நெஞ்சு விம்மிக்கொண்டே இருந்தது. தனக்கென எழுந்த குரலில் “எளியவனென்று முற்றிலும் கைவிடப்பட்டவனென்று முன்னரே வகுத்த பாதையில் செல்லும் துளியென்று உணரும் தருணம் ஒன்று ஒவ்வொருவருக்கும் உண்டு. இது அது. இன்று இறந்தேன்” என்றபின் திரும்பி நடந்தார்.

கதவை அவரே திறந்து வெளியே செல்ல விதுரர் அவர் கைகளை பற்றிக்கொண்டார். துரியோதனன் திரும்பி விழிதூக்கி அருகே நின்றிருந்த கர்ணனிடம் “என்ன எண்ணுகிறீர், அங்கரே? தந்தையின் சொற்களில் ஒன்றை நீங்களும்  நினைத்துக்கொண்டால்… அதோ கிடக்கிறது கதாயுதம். எடுத்து என் தலையை சிதறடியுங்கள். அதனுள் கொப்பளிக்கும் அமிலத்தின் அனலிலிருந்து அவ்வண்ணமேனும் நான் விடுதலை கொள்கிறேன்” என்றான்.

கர்ணன் தணிந்த உறுதியான குரலில் “என்றும் நான் உங்களுடன் இருப்பேன், அரசே. ஒரு சொல்லும் ஓர் எண்ணமும்  மாற்றில்லை” என்றான்.

[ 10 ]

பின்னிரவின் வெம்மையைச் சுமந்து காற்று வீசத்தொடங்கியபோது பீடத்தில் கால்நீட்டி அமர்ந்து அரைத்துயிலில் இருந்த நகுலன் விழித்துக்கொண்டான். கருந்திரி எழுந்து அகல்விளக்குச் சுடர் எண்ணைக்குள் இறங்கியிருந்தது. பட்டாம்பூச்சியின் இறுதித்துடிப்பு அதில் தெரிந்தது. அறையின் இரு தூண்களும் அதற்கேற்ப நடமிட்டன. மூடிய விழிகளுக்குள்ளேயே அவ்வசைவைக் கண்டுதான் அவன் விழித்துக்கொண்டான் என்று எண்ணினான். எழுந்து ஆடையை சீர்செய்தபடி கதவைத் திறந்து இடைநாழியில் வந்து ஒளியேந்திய மாளிகைகளின் ரீங்கரிக்கும் பரப்பாகத் தெரிந்த அஸ்தினபுரியை நோக்கிக் கொண்டிருந்தான்.

மாளிகைமுற்றத்தில் பல்லக்கு வந்து நிற்பதை கண்டான். மூன்று எண்ணைப் பந்தங்களை ஏந்திய காவலர்கள் முதலில் அணைந்து அவற்றை தூண்களில் பொருத்தினர். கொம்பூதியும் வரவறிவிப்போனும் தொடர்ந்துவர பாஞ்சாலத்தின் விற்கொடி பறந்த பல்லக்கு எட்டு போகிகளால் சுமக்கப்பட்டு நீரிலென தத்தித் தத்தி மேலேறி வந்தது. செந்நிற ஒளியில் அதன் செம்பட்டுத் திரைச்சீலை நிறமற்றதுபோல் தோன்றியது. அதைத் திறந்து வெளியே வந்த திரௌபதி தன் ஆடையை இழுத்து முகத்தை மறைத்து மெல்ல நடந்தாள். பல்லக்கில் அவளுடன் வந்த அணுக்கத்தோழி மூங்கில் கூடையையும் தாலத்தையும் எடுத்துக்கொண்டு அவளைத் தொடர்ந்தாள்.

கீழே வீரர்கள் அவளை வாழ்த்துவதும் ஸ்தானிகருடன் அவள் உரையாடுவதும் கேட்டது. மரப்படிகளில் அவள் காலடி ஓசை எழுந்தபோது அவன் திரும்பி அவள் வரவை நோக்கி நின்றான். இறுதிப்படிகளில் ஏறி திரும்பி நோக்கி ஸ்தானிகரிடம் “அணைந்ததுமே என்னிடம் செய்தியை அறிவியுங்கள்” என்றபின் அவள் அவனை நோக்கி புன்னகைத்தாள். அவளுக்குப் பின்னால் ஏறிவந்த சேடியிடம் “தாலங்களை மஞ்சத்தறையில் வை” என்று சொல்லிவிட்டு அவனிடம் “துயிலாதிருந்தீர்களா?” என்றாள்.

“ஆம். நீ முன்னரே வருவாய் என்று நினைத்தேன்” என்றான். “அங்கு மகளிர் மாளிகையில் அன்னையரும் நூற்றுவரின் துணைவியரும் துச்சளையுமாக பெருங்கொண்டாட்டமாக இருந்தது” என்று அவள் சொன்னாள். “என்ன செய்தீர்கள்?” என்று அவன் புன்னகையுடன் கேட்டான். “அதை மட்டும் எந்தச் சொல்லாலும் சொல்ல முடியாது” என்று வெண்பற்களைக்காட்டி அவள் சிரித்தாள். “உண்மையில் ஒன்றுமே செய்யவில்லை.”

“பேசிக் கொண்டிருந்தீர்களா?” என்றான் நகுலன். “சொல்லப்போனால் பேசிக்கொண்டும் இருக்கவில்லை. ஒன்றுமே நிகழவில்லை. வீணாகச் சிரித்தோம்,  ஒருவரை ஒருவர் துரத்தினோம், மலரள்ளி வீசிக்கொண்டோம். குழந்தைகளை கொஞ்சினோம். மாலைமுதல் இதுவரை மகிழ்ந்திருந்தோம் என்பது மட்டுமே சொல்லமுடியும்” என்றாள் திரௌபதி. “பொருளின்றி மகிழ்ந்திருக்க குழந்தைகளால்தான் முடியும்” என்றான் நகுலன். “குழந்தைகளாகும் கலை பெண்களுக்குத் தெரியும்” என்றாள் அவள். “அங்கு ஆண்கள் இருக்கக்கூடாது, அவ்வளவுதானே?” என்றான். “இருக்கலாம். சிறுவர்களாக…” என்றபடி திரும்பி “இருங்கள். நீராடி ஆடைமாற்றி வருகிறேன்” என்றாள்.

அவன் மஞ்சத்தறையின் உள்ளே சென்று அமர்ந்தான். ஏவலன் உள்ளே வந்து அகலுக்கு எண்ணை ஊற்றி புதுத்திரியிட்டு சுடரேற்றிவிட்டுச் சென்றான். அவளுடைய பட்டாடையின் சரசரப்பு கேட்பதுவரை அவன் காத்திருந்தான். இந்திரப்பிரஸ்தத்திலிருந்து கிளம்பும்போது அவளிடமிருந்த அமைதியும் இறுக்கமும் முற்றாக விலகிவிட்டிருப்பதை உணர்ந்தான். அவள் முகத்திலிருந்த புன்னகை தன் முகத்தில் பற்றிக்கொண்டு ஒளிகொண்டு எரிவதை அறிந்தான்.

அவள் உள்ளே வந்து “என்ன சிரிப்பு?” என்றாள். “புன்னகைப்பதற்குத்தான் எவ்வளவு தசைகள் பணியாற்ற வேண்டியிருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்தேன்” என்றான். “அதைவிட உள்ளம் பணியாற்ற வேண்டியிருக்கிறது” என்றபடி அவள் அறைக்குள்ளிருந்த ஆடியில் தன் முகத்தை நோக்கி முன் நெற்றி மயிரை கைகளால் நீவி காதுகளுக்குப்பின் ஒதுக்கினாள். மேலாடையை சீரமைத்தபடி அவன் முன் வந்து “நாளை பகடைக்களம் அல்லவா?” என்றாள். “ஆமாம்” என்றான்.

“நல்லவேளை, மங்கல நிகழ்வொன்றும் அதைத் தொடர்ந்து இருக்காது. வெற்றி எனினும் தோல்வி எனினும் அது அங்கு ஆண்களுடன் முடியும்” என்றாள். “ஏன்?” என்றான் நகுலன். “நான் விலக்காகியிருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். “ஒருவேளை ஆடல் முடிந்தபின் ஆலயத்திற்குச் செல்ல வேண்டியிருந்தால்…?” என்று நகுலன் கேட்டான். “நான் கலந்துகொள்ள முடியாது. அதை சேடியிடம் சொல்லி அறிவிக்க வேண்டியதுதான்” என்றாள். “உண்மையில் நான் அங்கு வரவிரும்பவில்லை. சொல்வதற்கு இனி இது உள்ளது. நன்று.”

நகுலன் “தனியறைக்கு செல்லவிருக்கிறாயா?” என்றான். அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவ்விரவில் அவளுடன் இருக்க விழைந்தான். அதை அவள் உணராமல் “ஆம். அதைச் சொல்லிவிட்டு செல்லலாம் என்றுதான் வந்தேன். நீங்கள் துயிலலாம்” என்றாள். “நீ அஞ்சவில்லையா?” என்றான் நகுலன். “எதை?” என்று அவள் கேட்டாள். “நாளை நிகழவிருக்கும் பகடையாட்டத்தை?” என்றான். அவள் “அதற்கு நான் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆவது அணைக!” என்றாள்.

“நான் அஞ்சுகிறேன். மீளமுடியாத சேற்றுக்குழி ஒன்றை நோக்கி மூத்தவர் சென்று கொண்டிருப்பதைப்போல் தோன்றுகிறது” என்றான். அவள் விழிகள் மாறுபட்டன. தலையை மறுபக்கம் திருப்பியபடி “அது அவர் ஊழென்றால் எவர் என்ன செய்ய முடியும்?” என்றாள். “அவரது ஊழ் மட்டுமல்ல. உடன்பிறந்தாரின் ஊழ். உனது ஊழ். நமது மைந்தரின் நகரத்தின் குடிகளின் ஊழ்” என்றான் நகுலன். “ஆம். அனைத்தும் பகடைக்காய்களின் உருளலில் தீர்மானிக்கப்படுகிறது.” உடனே தொண்டை அசைய தலைசரித்து சிரித்து “எவ்வண்ணமாயினும் அது ஒரு பகடையாட்டத்தினால் முடிவாவதே” என்றாள்.

“என்ன சொல்கிறாய்?” என்று அவன் கேட்டான். “ஒரு மூங்கில் பாலம் சரிந்ததனால் முன்பு பிரக்ஜ்யோதிஷம் நூறாண்டுகாலம் அடிமைப்பட நேர்ந்தது என்பார்கள்.” அவன் “இத்தனை எளிதாக இதை எடுத்துக்கொள்வாய் என்று நான் எண்ணவில்லை” என்றான். “எளியது அவ்வண்ணமே எடுத்துக் கொள்ளத்தக்கது” என்றாள்.

பின்பு எழுந்து “நன்று. துயில்நீப்பு எவ்வகையிலும் தேவையானதல்ல. ஓய்வெடுங்கள்” என்றாள். நகுலன் “நீ துயில் நீப்பாய் என்று எண்ணினேன்” என்றான். “நானா? இங்கு வரும்போதே களைப்பில் என்னுடல் இடப்பக்கமாக சரிந்துகொண்டிருந்தது. குருதிவிலக்கு ஆனபின்பு கண்களை திறக்கவே முடியாதென்று தோன்றுகிறது. நல்லவேளையாக நாளை காலை நான் ஆற்றவேண்டிய அரசபணிகள் ஏதுமில்லை. நன்கு விடியும்வரை ஒதுக்கறையில் துயிலலாம்” என்றாள் திரௌபதி.

அவள் அறையைவிட்டு வெளியே செல்ல அவன் உடன் வந்தான். அவள் இடைநாழியில் நின்றபடி “இன்று மகளிரறையில் அரசரின் மகள் லட்சுமணையை பார்த்தேன். பார்க்க என்னைப்போலவே கரியவள். தந்தையும் தாயும் கிருஷ்ணை என்றே அழைக்கிறார்கள் அவளை” என்றாள். “உன்னைப்போலவே பேரரசியாகட்டும்” என்றான். “அவள் குழப்பத்தில் இருக்கிறாள். பேரரசியாக அரியணை அமர்வதா, விறலியாக யாழுடன் அலைந்து திரிவதா என்று. என்னைப் பார்ப்பது வரை விறலி என்றே முடிவு செய்திருந்தாள்.”

முகம் மலர, கண்கள் சுருங்க சிரித்தபடி “கன்னித்தன்மையின் தூய்மை! அவள் கன்னங்களை தொட்டுத் தொட்டு எனக்கு சலிக்கவில்லை” என்றாள். நகுலன் அவள் சிரிப்பையே நோக்கிக்கொண்டிருந்தான். “வருகிறேன்” என்று தலையசைத்தபடி கால்சிலம்புகள் ஒலிக்க நடந்து மறைந்தாள். நகுலன் அவளை நோக்கிக் கொண்டிருக்கையில் தன் முகம் புன்னகையில் விரிந்திருக்கையிலும் புகைசூழ்வது போல் உள்ளத்தில் வந்து நிறைந்த அறியாத்துயர் ஒன்றை உணர்ந்தான்.

முந்தைய கட்டுரைகுறுங்கதை வடிவம்
அடுத்த கட்டுரைவாசிப்பு அன்றும் இன்றும்