கதைகள், கடிதங்கள்.

அன்புள்ள ஜெ,

             நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். சமீபத்தில்  ரப்பர் நாவலை வாசித்தேன். வீழ்தலின் பதற்றம், நன்றாக வாழ்ந்த குடும்பங்கள் வீழும்போது சமூகத்தை எதிர்கொள்ள தயங்கும் தவிப்புகள் நாவல் முழக்க நிறைந்திருக்கிறது. எது உழைப்பதை தடுக்கிறது? என்ற பிரான்சிஸின் கேள்வியை மிக நெருக்கமாக உணர்ந்துகொண்டேன். நாவலில் மாலை பொழுதின் வர்ணணையில் சிவப்பு நதி என வருகிறது சோனாவின் தோற்றமாக அது இருக்கலாம். இளமை கால திரேஸ் நடாஷாவை நினைவூட்டினாள். பொன்னு பெருவட்டார், செல்லையா, திரேஸ், பிரான்சிஸ், கண்டன்காணி, குளம்கோரி, தங்கம், லிவி போன்ற கதா பாத்திரங்களும் குணாதிசயங்களும் நாவலின் மிக குறைந்த இடத்திலும் மின்னும் நட்சத்திரங்களாகி  விடுகின்றன. இறுதியாக நம்பிக்கையின் ஒளியை பிரான்சிஸிற்கு தந்து விட்டு பொன்னு பெருவட்டார் அணைந்து விடுகிறார்.

அன்புடன்
விஷ்ணு

8

ஜெ,

நதி வாசித்தேன். கண்களின் கண்ணீரை தவிர்க்க முடியவில்லை. புதிய மரங்களுக்கு இடம் விட்டு நிறைய தென்னை மரங்கள் பட்டு போகத்தான் செய்கின்றன. இடுப்பளவு ஆழம் கூட இல்லாத ஆற்றுக்கு பல்லாயிரம் மைல் ஆழமிருப்பதாக உணர்ந்தவர்கள் உடம்பு நடுங்கி சிலிர்ப்பதுடன் நகர்ந்துவிடுகிறார்கள். பாவம் இடுப்பளவிற்கு ஆழம் உணர்ந்தவர்கள்தான் நதியினால் அடித்துச்செல்லப் படுகிறார்கள்.
அன்புடன்,
பழனிவேல் ராஜா
கத்தார்.
அன்புள்ள ஜெ
வெண்கடல் தொகுதியில் கிறுக்கன் ஆசாரியைப்பற்றிய கதையை [அம்மையப்பம்] முதலில் உற்சாகமான ஒரு வாசிப்பனுபவமாகவே வாசித்தேன். இரண்டாம் வாசிப்பில்தான் அது கிரியேட்டிவிட்டி என்னும் வரமும் சாபமுமான ஒன்றைப்பற்றிப் பேசுகிறது என்று தெரிந்தது. மறுகணமே ஏணியின் கணக்குக்கும் கணக்குகளுக்கு அப்பாற்பட்ட சிற்பத்தின் நுட்பத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு புரிந்தது. மிகப்பெரிய அனுபவம் அது. நீங்கள் எழுதிய மிக முக்கியமான சிறுகதை என்று சொல்வேன்
ஜெயப்பிரகாஷ்
முந்தைய கட்டுரைவெண்முரசு கலந்துரையாடல் – ஜூன் 2016
அடுத்த கட்டுரைகுளறுபடிகள், கடிதம்