‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 80

[ 7 ]

அஸ்தினபுரியின் அரண்மனை வளாகத்தில் வடமேற்கு மூலையில் கலிங்கச்சிற்பி காளிகர் தலைமையில் நூற்றெட்டு பெருந்தச்சர்கள் தங்கள் ஆயிரம் மாணவர்களோடு நாற்பத்தெட்டு நாட்கள் இரவும் பகலுமென பணிபுரிந்து பன்னிரு படைக்களத்தை அமைத்து முடித்திருந்தனர். ஒன்றன்மேல் ஒன்று கவிழ்ந்த ஏழு குவைமுகடுகளுடன் இமயமலைச்சாரலில் முதிர்ந்த தேவதாரு மரத்தைப் போன்று வடிவு கொண்டிருந்தது அப்பெருங்கூடம். நான்கு பெருமுற்றங்களும் சுற்றிச்செல்லும் இடைநாழிகளும் கொண்டிருந்தது. கிழக்கு முகப்பில் இரு முரசுமேடைகள் எழுந்திருந்தன.

பழுதற்ற வட்ட வடிவமாக அதன் உட்புறம் அமைக்கப்பட்டிருந்தது. நூற்றெட்டு தூண்கள் அதன் கூரையைத் தாங்கியபடி நிரை கொண்டிருந்தன. சரிந்து சென்று வளைந்து தாமரை இதழென விளிம்பு சுருண்ட மரப்பட்டைக் கூரைக்கு அடியில் தூண்களுக்குப் பின்னால் இருபத்துநான்கு படிகளாக  எழுந்து சென்ற வளைவில் அஸ்தினபுரியின் குடிகள் மூவாயிரம்பேர் அமர்ந்து  பகடைக்களத்தைப் பார்ப்பதற்கு பீடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தூண்களை ஒட்டி  இன்னுணவும் மெல்பொருளும் கொண்டுசெல்லும் ஏவலரும் அடைப்பக்காரர்களும் செல்வதற்கான இடையளவு ஆழம் கொண்ட ஓடை போன்ற பாதை ஒன்று பன்னிரு படைக்களத்தை சுற்றி வந்தது.  அதிலிருந்து பிரிந்த சிறிய ஓடைவழிகள் ஒவ்வொரு பீடநிரைக்கும் அருகே சென்று முடிந்தன. கூடத்தின் அடித்தளத்திற்குள்ளிருந்து எழுந்து வந்த ஏழு சுரங்கப்பாதைகள் அதில் வந்து இணைந்தன. அப்பாதைகள் அனைத்தும் அப்பாலிருந்த அடுமனைக்கும் ஏவலர்கூடத்திற்கும் சென்று வாய்திறந்தன.

தூண்நிரைகளுக்குள் முதலில் பன்னிரண்டு பீட வரிசைகளாக அமைச்சர்களும் பெருவணிகர்களும் படைத்தலைவர்களும் அமரும் பகுதி இருந்தது. மீண்டும் ஒரு ஓடைப்பாதை சுற்றி வர அவ்வட்டத்திற்குள் ஏழு நிரைகளாக அரசகுடியினர் அமரும் பீடங்கள் போடப்பட்டிருந்தன. நடுவே பலகைகளால் அமைக்கப்பட்ட தரைமேல் செந்நிற மரவுரி விரித்த வட்ட வடிவ ஆடுகளம் அமைந்திருந்தது. அதற்கு வலப்பக்கமாக அரசர் அமர்வதற்கான அரியணை மேடை இருந்தது. இடப்பக்கம் நிமித்திகன் எழுந்து அறிவிப்புகளை அளிப்பதற்கான முறை மேடை. அதன் அருகே இருபுறமும் சிறுமுரசுகளுக்கான கட்டில்கள் இருந்தன.

மாளிகையில் பேரரசரும் அரசரும் வருவதற்கான செந்நிற மரவுரி மெத்தையால் மூடப்பட்டிருந்த பாதை கிழக்குப் பெருவாயிலில் இருந்து வலப்பக்கமாக வந்தது.  இடப்புறம் பிற அரசகுடியினர் வந்து அமர்வதற்கான பாதை அதே வடிவில் வழிந்து வந்தது. மேற்குப் பெருவாயில் வணிகர்களும் குடித்தலைவர்களும் வருவதற்குரியதாக அமைக்கப்பட்டிருந்தது. தெற்குப் பெருவாயில் நகர்குடிகள் வந்து அமர்வதற்குரியதாகவும் வடக்குப் பெருவாயில் காவல் வீரர்களுக்குரியதாகவும் ஒதுக்கப்பட்டிருந்தது.

அவைக்கு நடுவே பன்னிரு பகடைக்களம் விரிப்பதற்காக வட்டமாக அமைந்திருந்த தாழ்வான மரமேடைக்கு நேர் உச்சியில் படைக்களத்தின் குவைக்கூரையின் மையம் அமைந்திருந்தது. குடை போல கவிந்து வளைந்திறங்கிய கூரைக்கு அடியில் என நூற்றெட்டு சாளரங்கள் ஒவ்வொரு தூண் இடைவெளியிலும் வெளி நோக்கித் திறந்து ஒளியை உள்ளே பெருக்கின. ஒவ்வொரு சாளரத்திற்கும் நடுவே மான்கண் பலகணிகள் காற்றை உள்ளே ஊதி தூண்களில் முட்ட வைத்து பிரித்து அவைக்களம் முழுக்க சுழன்று வீச வைத்தன.

பகடைக்களம் அமைந்த மையத்தை நோக்கியபடி இருபக்கமும் தூண்களுக்குமேல் அரசமகளிர் அமர்வதற்குரிய அரைவட்ட உப்பரிகைகள் திறந்திருந்தன. அவர்கள் கிழக்கு முற்றத்திலிருந்தே இரண்டு மரப்படிக்கட்டுகளின் வழியாக ஏறி அந்த உப்பரிகைகளை அடைய முடியும். உப்பரிகை முகப்புகளில் அரசமகளிரை பிற விழிகளில் இருந்து மறைப்பதற்காக பீதர்நாட்டு மென்பட்டுத் திரைச்சீலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவர்களின் செய்தியை அவைக்கு அறிவிக்கும் நிமித்திகன் நிற்பதற்காக இரு சிறு அகல்வடிவ நீட்சிகள் உப்பரிகைகளின் வலது ஓரத்தில் கட்டப்பட்டிருந்தன.

அரசகுடியினருக்குரிய சிம்மக்கால் பீடங்கள் செந்நிறப்பட்டு உறைகள் போடப்பட்டிருந்தன. படைத்தலைவர்களுக்கும் குடித்தலைவர்களுக்கும் பெருவணிகர்களுக்கும் உரிய  மான்கால் பீடங்கள் வெண்பட்டு உறையால் மூடப்பட்டிருக்க குடிமக்களுக்குரிய கூர்கால் பீடங்கள் இளநீல மரவுரியால் மூடப்பட்டிருந்தன.

களத்தின் சுவரோரமாக படைக்கலமேந்திய காவலர் விழியறியாமல் நிற்பதற்கான  ஆயிரத்தெட்டு கரவு வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு தூணும் கூரையைச் சென்றடையும் இடத்தில் மூன்று வில்வீரர்கள் நிற்பதற்குரிய இடத்துடன் ஏந்திய கிண்ணம் போன்ற உப்பரிகைகள் இருந்தன. அவர்களை கட்டுப்படுத்தும் படைத்தலைவன் கொடிகளுடன் நிற்பதற்கு கிழக்குக் கூரைச்சரிவில் சிறிய உப்பரிகை ஒன்று அகல்விளக்குபோல நீண்டிருந்தது.

தரையில் ஏழு வட்டங்களாக பீடிகைகள் அமைந்து அவற்றின்மேல்  பழுத்த செந்தேக்கினாலான தூண்கள் ஊன்றிப்பதிந்து எழுந்து மெழுகுப்பூச்சுடன் கன்னித்தோல் வளைவென ஒளிகொண்டிருந்தன. ஏழு வளையங்களாக விரிந்து கூரையைத் தாங்கிய வேதிகைகளைச் சென்றடைந்து பொருந்தியிருந்தன. குவைக்கூரையின் வளைவுகளில் வெண்சுண்ணம் பூசப்பட்டு  உடல்கொண்டு உடல்நிரப்பி பரப்பென நிறைந்த தேவர் உருவங்கள் வரையப்பட்டிருந்தன. வலப்பக்கம் தேவர்களும் இடப்பக்கம் அசுரர்களும் அணிவகுத்து நடுவே வெண்நுரைவட்டத்துடன் அலைகொண்டிருந்த பாற்கடலில் அமுது கடைந்து கொண்டிருந்தனர்.

வாசுகியின் செவ்விழிகள் எரிந்த பெருந்தலை முக்கண்ணன் அருகே வாய்திறந்திருந்தது.  அவனருகே சற்று அஞ்சியவனாக அவன் துணை நின்றிருந்தான். வாசுகியின் உடலின் முதல்வளைவை இந்திரன் பற்றியிருந்தான். முடிவுச்சுருளை அனலோன் பிடித்திருந்தான்.  உச்சகட்ட விசையுடன் உடல் திமிறிய தேவர்கள் பெரும்பரப்பென அவ்வரைவட்டத்தை நிறைத்திருந்தனர். அவர்களுக்கு நடுவே கருவண்ணக் கோல நெளிவுபோல வாசுகியின் உடல் புகுந்து வளைந்து வந்தது. மறுபக்கம் கருநீலநிற உடல் கொண்ட அசுரர்கள் வளைந்து தங்களுக்குள் புகுந்து கரந்து எழுந்து நிறைந்த வாசுகியின் வாலை பற்றியிருந்தனர். குவைக்கூரை முகடின் மையக்குமிழி மேரு மலையெனத் தெரிந்தது.

ஒவ்வொரு தூணுக்கு மேலும் ஏற்றப்பட்டிருந்த விளக்குகளின் ஒளி அவ்வோவியத்தின் மேல் விழும்படியாக அவற்றுக்குக் கீழ் மலர்ந்த அரைவட்டமாக உள்ளே வெள்ளி பூசப்பட்ட ஆடிக்கிண்ணங்கள் அமைந்திருந்தன. முற்றிலும் ஒலி கட்டுப்படுத்தப்பட்ட பகடைக்களத்தில் நடமாடும் வீரர்களின் காலடி ஓசைகளும் செருமல்களும்கூட தெளிவாக ஒலித்தன. எனவே அவைக்களம் முழுக்க தரைமேல் அழுத்தமான மரவுரி மெத்தை மூடியிருந்தது. அங்கு நுழைபவர்கள் மரவுரி காலணியணிந்து மட்டுமே நுழையவேண்டும் என்று வகுக்கப்பட்டிருந்தது.

நூற்றெட்டு தூண்களில் தேவர்களின் உருவங்கள் கைகோத்து உடல் நெளிந்து நிறைந்திருந்தன. எட்டு திசைக்காவலர் தூண்களின்மேல் புடைத்து எழுந்து ஆடுகளத்தை நோக்கி விழிவிரித்திருந்தனர். மையக்களத்தின் வலப்பக்கம்  மோகினி  அமுதுடன் புன்னகைத்து நின்றிருக்க இடப்பக்கம் தட்சன் நஞ்சுக் கலத்துடன் சீறி எழுந்திருந்தான். நடுவே  துலாக்கோல் ஒன்று ஊசிமுனையில் நின்று காற்றின் அசைவுக்கேற்ப ஆடிக்கொண்டிருந்தது.

பன்னிரு படைக்களத்தின் இறுதிப்பணி முடிந்த அன்று  முதற்காலைப் பொழுதில் தலைமைச்சிற்பி காளிகர் தன் இல்லத்திலிருந்து அதை பார்வையிடுவதற்காக வந்தார். வலக்காலெடுத்து முற்றத்தில் வைத்ததுமே உடல் நடுங்கி கைகூப்பி நின்றார். பெருந்தச்சர்களும் மாணவர்களும் அவரை நோக்கி திகைத்து விழிவிரித்தனர். அவர் விழிதிறந்து மேல்மூச்சுவிட்டு “செல்வோம்” என்றார்.

தன்னந்தனிமையிலென கடுகி நடந்து கிழக்கு வாயிலினூடாக பன்னிரு பகடைக்களத்துக்குள் நுழைந்தார். பிறர் தயங்கி வெளியே நின்றுவிட அவர் மட்டும் முகில்மேல் தேவனென கால்வைத்து கள மையத்துக்கு வந்து நின்றார். முற்றிலும் ஒழிந்து அவரைச் சூழ்ந்திருந்தது பன்னிரு படைக்களம். இதழ்களை விரித்து அவரை உள்வாங்கிய பெருந்தாமரை மூடிக்கொண்டது போல் இருந்தது. பின்பு முதல் நோக்குணர்வை அடைந்தார். திகைத்து விழிதூக்கிப் பார்த்து மெல்ல சுழன்றபோது தன்னை நோக்கி அங்கே நிறைந்திருந்த அனைவரையும் கண்டார்.  இருகைகளையும் தலைக்கு மேல் கூப்பி “யான் எளியேன்!” என்றார்.

உடல்நடுங்க மேற்கு வாயிலினூடாக நடந்து வெளியேறினார். பன்னிரு படைக்களத்தைச் சுற்றி ஓடிவந்த அவரது மாணவர்களும் தச்சர்களும் அவரைச் சூழ்ந்தனர். “பிழையற்றிருக்கிறது” என்றார். “பிழையற்றவை தெய்வங்களின் களம். இனி எவரும் அதை பார்க்கவேண்டியதில்லை. பன்னிரு படைக்களம் சூழும் நாளில் இதை திறந்தால் போதும். வாயில்களை மூடுங்கள்” என்றார். “அவ்வாறே” என்றார் தலைமைத்தச்சர்.

எவரையும் நோக்காமல் திரும்பி நடந்து சென்ற காளிகர் தன் மாளிகைக்குச் செல்லாமல் அஸ்தினபுரியின் பெருவீதியை அடைந்தார். அவர் எங்கு செல்கிறார் என்று தெரியாமல் தச்சர்கள் அவரைத் தொடர்ந்து சென்றனர். தலைமைச்சிற்பி நடந்து செல்வதைக்கண்டு சாலையின் இருபுறமும் மக்கள் கூடினர். தனக்கென முன்பே வகுக்கப்பட்ட வழியில் நடந்து கோட்டை முகப்பை அடைந்து வெளியே சென்றார். அங்கு அவரருகே வந்து நின்ற தேரை விலகச்சொல்லிவிட்டு நடந்து சென்று மறைந்தார். கங்கைப் படகொன்றில் ஏறி “செல்க!” என்று அவர் ஆணையிட்டதும் அப்படகு ஒழுக்கிலேறி மறைந்ததாக ஒற்றர்கள் சொன்னார்கள். அவர் கலிங்கத்தையும் சென்றடையவில்லை.

[ 8 ]

முதற்பொழுதிற்கான பறவைக்குரல் எழுந்தபோது பன்னிரு பகடைக்களம் கூடுவதற்காக தருமன் முற்றிலும் சித்தமாக தன் அறையில் அமர்ந்திருந்தார். நறுமண நீராடி இளஞ்செம்பட்டாடை அணிந்து, மணிச்சரம் சுற்றிய தலைப்பாகை சூடி,   அரசமணியாரம் மார்பில் தவழ, செந்நிற இடைக்கச்சையில் வைரங்கள் பதிக்கப்பட்ட பிடிகொண்ட குத்துவாள் செருகி அரசணிக்கோலத்தில் இருந்தார். நெய்ப்பூச்சில் தாடி மின்னியது. குழற்சுருள்கள் தோளில் விழுந்துகிடந்தன.

முந்தையநாள் இரவு ஆலயப்பூசனைகள் முடித்து திரும்புகையில் அர்ஜுனன் அவரிடம் “மூத்தவரே, நாளைய ஆடலில் தங்கள் உள்ளம் தெளிவுற அமைந்தாக வேண்டியுள்ளது. எனவே இன்றிரவு தாங்கள் முற்றிலும் அமைந்து துயிலல் வேண்டும்” என்றான். “ஆம்” என்றார் தருமன். “தாங்கள் நிலைமறக்கச் செய்யும் கடுங்கள் அருந்தா நெறி கொண்டவர் என்று அறிவேன். இன்றிரவு தாங்கள் சற்றே அதை அருந்துவதில் பிழையில்லை. நல்ல துயில் நாளை உங்களை புத்துணர்ச்சியுடன் களமாடச்செய்யும்” என்றான். “நன்று சூழ்வதற்காக சிறு நெறிபிழை ஒன்றை ஆற்றலாம் என்று நெறிநூல்களும் சொல்கின்றன.”

தருமன் புன்னகையுடன் நோக்கி “இளையோனே, நெறியென்றால் என்னவென்று எண்ணுகின்றாய்? நன்றென நாம் உணரும் ஒன்றின் பொருட்டு எப்போது வேண்டுமானாலும் சுருட்டி வைத்துக் கொள்ளத்தக்க பட்டாடையா அது?” என்றார். “அது மணிமுடியல்ல, காலணி. முள்ளும் கல்லும் நிறைந்த பாதையில்தான் காலில் இருந்தாக வேண்டும்.”

“நான் சொல்லாட விழையவில்லை. தாங்கள் துயின்றாக வேண்டும்” என்றான் அர்ஜுனன். “நான் துயிலமாட்டேன் என்று எண்ணுகிறாயா?” என்றார் தருமன். அர்ஜுனன் “ஆம், அவ்வாறே எண்ணுகிறேன்” என்றான். “ஏனெனில் ஒவ்வொருநாளும் தங்கள் விழிகள் சிவந்திருக்கின்றன. பல நாட்களாக தொடர்ந்து துயில் நீப்பதன் தடங்கள் உங்கள் முகம் முழுக்க இருக்கின்றன. மூத்தவரே, இச்சில நாட்களுக்குள் எத்தனை முதிர்ந்துவிட்டீர்கள் என்று அறிவீர்களா?”

“ஆம்” என்று தருமன் தன் தாடியை தடவியபடி சொன்னார். “ஆனால் நான் வெல்ல வேண்டுமென்று எந்தையர் விரும்பினால் என்னை துயில வைக்கட்டும். அதன் பொருட்டு நெறிமீறலைச் செய்ய விரும்பவில்லை” என்றார். “இளையோனே, என் வாழ்வின் முதற்பெருங்களம் இது. இதை ஒரு நெறிப்பிழையுடன் தொடங்குவது எனக்கு உகந்ததல்ல.” அர்ஜுனன் “தங்கள் விருப்பம்” என்று சொல்லி நிறுத்திக்கொண்டான்.

தருமன் தன் மாளிகைக்குத் திரும்பியபோது அங்கே விதுரர் அவருக்காக காத்திருந்தார். முகமன் சொல்லி அவர் வணங்கியபோது மறுமொழி சொல்லி தலைவணங்கினார். “நாளைக்கென சித்தமாகுங்கள், அரசே. அதை சொல்லிச் செல்லவே வந்தேன்” என்றார். தருமன் அவரை நோக்க “தாங்கள் சின்னாட்களாகவே மிகவும் நிலையழிந்திருக்கிறீர்கள். துயில் நீப்பினால் விளைந்த நடுக்கம் விரல்களிலும் இதழ்களிலும் இருந்துகொண்டே உள்ளது. சொற்களும் குழறுகின்றன. இந்நிலையில் தாங்கள் களம் நிற்பது எளிதல்ல” என்றார் விதுரர்.

“ஆம், பகல் முழுக்க ஒவ்வொன்றும் தெளிவாக தங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றன. இரவு அனைத்தையும் ஒன்றாக குழப்பிவிடுகிறது. இருளுக்குள் முற்றிலும் தனியனாக இருக்கிறேன்” என்றார் தருமன். “தாங்கள் துயின்றாக வேண்டும். தேவையென்றால்…” என்று அவர் சொல்ல வாயெடுக்க தருமன் “சற்று முன்னர்தான் இளையவனும் நான் கடும்மது அருந்தலாம் என்று சொன்னான்” என்றார்.

விதுரர் “ஆம்” என்றார். “இல்லை. உள்ளம்பிழைக்க மதுவருந்துவதில்லை என்பது என் நெறி. நெறிப்பிழையுடன் களம் புக விரும்பவில்லை. அதை என் தெய்வங்களும் விரும்பாது” என்றார் தருமன். “அரசே, நாளை நிகழவிருப்பதன் விரிவை உண்மையிலேயே தாங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?” என்றார் விதுரர். “ஏன், நான் தோற்பேன் என்று எண்ணுகிறீர்களா?” என்றார் தருமன்.

“அவ்வாறல்ல. களம் அமைவதற்குமுன் வெற்றிதோல்விகளை தெய்வங்களும் சொல்லமுடியாது. ஆனால் இதன் இறுதி என்ன என்று தாங்கள் சற்றேனும் உணர்ந்திருக்க வேண்டும்” என்றார் விதுரர். “என்ன? என் இளையவனுக்கு முன் சிறியவனாவேன், அவ்வளவுதானே? அது நிகழுமென்றால் தெய்வங்கள் எனக்கு வகுத்தளித்த இடமென்றே கொள்கிறேன். பிறகென்ன?” என்றார் தருமன்.

விதுரர் நீள்மூச்சுவிட்டு “நன்று!” என்றார். தருமன் புன்னகைத்து “ஏன் அமைச்சரே, இத்தருணத்தில் தாங்கள் சென்று சகுனியிடமும் இதை சொல்ல வேண்டுமல்லவா?” என்றார். “அவர் துயில் நீப்பதற்கு வழியில்லை” என்றார் விதுரர். “இப்படைக்களத்தை அமைப்பவர்கள் அவர்கள். சிலநாட்களாக எனக்குத் தோன்றிக்கொண்டிருக்கிறது, பல்லாண்டுகளுக்கு முன்னரே இதை நோக்கி அவர்கள் அனைத்தையும் நகர்த்திக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்று. மலை பிறக்கும் நதியொன்றை விரும்பிய வயலுக்கு கொண்டு செல்வது போல. உரிய இடங்களில் பாறைகளை அமைத்து, சிற்றணைகள் கட்டி, வாய்ப்புள்ள இடங்களில் கரையுடைத்து, வழியளித்து கொண்டுசென்றிருக்கிறார்கள். இன்று திரும்பிப்பார்க்கையில் ஒவ்வொரு நிகழ்வும் அவர்களால் வடிவமைக்கப்பட்டதாகத் தோன்றுகிறது.”

“அவர்களால் என்றால்…?” என்றார் தருமன். “உண்மையில் ஒருமையில் சொல்ல வேண்டும். கணிகரால்” என்றார் விதுரர். எரிச்சலுடன் கைவீசி “அவரை நீங்கள் மிகைப்படுத்தி எண்ணுகிறீர்கள்” என்றார் தருமன். “அரசே, பல்லாயிரம் கைகளுடன் பகடையாடிக் கொண்டிருப்பவர்களாக என் கற்பனையில் விரியும் உச்ச எல்லை வரை மிகைப்படுத்திக்கொள்ளும் இருவரில் ஒருவர் அவர்” என்றார் விதுரர்.

“அது உளமயக்கு” என்றார் தருமன். “ஒரு பெருநிகழ்வுக்குப் பிறகு திரும்பிப்பார்த்தால் ஒவ்வொன்றும் அதை நோக்கியே அனைத்தையும் உந்திச் செலுத்திக் கொண்டிருப்பதை அறிவோம். அது  நமது பார்வையின் கோணம் மட்டுமே. இங்கு நிகழும் ஊழின் ஆடல் அனைத்தையும் ஒருவரே ஆற்ற முடியும் என்றால் அவர் மானுடர் அல்ல, தெய்வம்.” விதுரர் “தெய்வம் அருள் கொண்டதாக மட்டும் இருக்கவேண்டும் என்பதில்லை. பெரும் மருள் வடிவமாகவும் இருக்கமுடியும்” என்றார்.

“எவ்வாறாயினும் நன்று. நாளை மாதுலர் சகுனி நன்கு துயின்று விழித்து புன்னகையுடன் களமாட வரட்டும். நானும் அவ்வாறே செல்கிறேன். அவரை வெல்கிறேன். பல லட்சம் படைகளைக் கொண்ட போர் ஒன்றை நடத்தி முடித்த மாமன்னனுக்கு நிகரான புகழை நானும் அடைவேன்” என்றார் தருமன். பெருமூச்சின் ஒலியில் “அவ்வண்ணமே ஆகுக!” என்றார் விதுரர்.

தருமன் திரும்பி பீமனிடம் “மந்தா, மடைப்பள்ளிக்குச் சென்றுவிட்டு விரைவிலேயே நீயும் மாளிகைக்கு திரும்பு. முன்னரே துயின்று எழு” என்றபின் படியில் ஏறி இடைநாழியில் நடந்து தன் மஞ்சத்தறை நோக்கி சென்றார். நீராடி உடைமாற்றி உணவருந்தி தன் அறைக்குள் புகுந்தார்.

தனிமையை அடைந்த மறுகணமே அன்றிரவும் தான் துயிலப்போவதில்லை என்று தோன்றியது. அச்சத்துடன் திரும்பி வெளியே சென்று ஏவலனை அழைத்து திரிகர்த்த மதுவுக்காக ஆணையிட ஒருகணம் உன்னி உடனே உளம் குவித்து அதை வென்று திரும்பினார். “ஆம், இன்றும் துயில் நீத்து மதிமழுங்கி நாளை களம் அமைவதே தெய்வங்களின் ஆணை என்றால் அவ்வண்ணமே ஆகுக! நான் பொருதுவது தெய்வங்களுடன்!” என்று தனக்குள் தானே சொல்லிக்கொண்டார்.

சாளரத்தை அடைந்து திறந்து வெளியே மெல்லிருள் பரவிய வானத்தின் பகைப்புலத்தில் அடரிருள் வடிவங்களாகத் தெரிந்த மரக்கிளைகளின் இலைவிளிம்புகளை நோக்கிக் கொண்டிருந்தார். மிகத்தொலைவில் ஒரு விண்மீன் சிமிட்டிக் கொண்டிருந்தது. சொல் சொல் சொல் என்று. அவர் அதையே நோக்கிக்கொண்டிருந்தார். அணுகி வந்து மிக அருகே நின்றது. தனித்த விண்மீன். அப்படியென்றால் அது என்ன? துருவ விண்மீனா? அது வடதிசையா?

பகடைக்களத்தை எடுத்துப் பரப்பி ஒருமுறை ஆடலாமா என்று எண்ணினார். சகுனி பரப்பப்போகும் களத்தின் அனைத்து வழிகளையும் முன்னரே பலமுறை அமைத்து அமைத்து பயின்றிருந்தார். அவற்றில் எழாத பிறிதொரு முறை எழக்கூடுமோ? ஆமையோட்டுப் பேழையைத் திறந்து நாற்களத்தை எடுத்து விரித்தார். காய்களைப்பரப்பி தந்தப்பேழையிலிருந்த பகடையை கையில் எடுத்தபோது ஒருநாளும் உணராத பெரும் சலிப்பொன்றை அறிந்தார்.  அவற்றை திரும்பவும் தந்தப்பேழைக்குள்ளிட்டு தூக்கி வீசினார். நாற்களப் பலகையை மடித்து அப்பால் இட்டபின் மஞ்சத்தில் கால் நீட்டி மல்லாந்து படுத்தார்.

ஒரு கணத்தில் பல்லாண்டுகளாக அவர் பயின்று வந்த நாற்களமாடல் அத்தனை பொருளற்றதாக மாறிய விந்தையை திரும்பி நோக்கினார். மீள மீள எண்களில் சிக்கி மதியிழந்து களிக்கும் மாயைதானா அது? பொருளின்மையை இரண்டு நூறு  கோடியென பகுத்து பகுத்தாடும் தவமா அது?

இத்தருணத்தில் இப்பெரும் விலக்கு ஏன் உருவாகவேண்டும்? நாளை களம் அமைவதற்கு முன்னரே சலிப்புற்று விலகி நின்று பார்த்திருக்கப் போகிறேனா? கண்களை மூடிக்கொண்டு அவ்வெண்ணங்களை விலக்க முயன்றார். ராஜசூயம் தொடங்குவதற்கு முன்பும் இதே சலிப்பை அடைந்ததை நினைவுகூர்ந்தார்.

நாளை நாளை என்று காத்து, இதோ இதோ என்று எண்ணி, அந்நிகழ்வு அணுகிய நாளின் முந்தைய இரவில் பெரும் சலிப்பையே அடைந்தார். கிளம்பி எங்காவது சென்றுவிட வேண்டுமென்று தோன்றியது. அறியாத காடொன்றில் அழகிய சுனைக்கரையில் ஒரு சிறு குடிலில் விழையவும் எய்தவும் கடக்கவும் ஏதுமின்றி காலத்தை அவ்வக்கணங்களாக உணர்ந்தபடி வாழ்வதை கற்பனை செய்தார். அவ்வெண்ணம் அளித்த குளிர் தென்றல் கண்ணை வருடிச்செல்ல கண்ணயர்ந்தார்.

மறுநாள் காலையில் ராஜசூயத்தின் பெருமுரசு ஒலிக்கக் கேட்டபடி விழிதிறந்து எழுந்தபோது உள்ளம் தெளிந்திருந்தது. ராஜசூயம் குறித்த எழுச்சிகளோ மயக்குகளோ ஏதுமின்றி வெறும் சடங்குத் தொடராக அது நிகழ்ந்தது. ஆடிக் கடந்தாகவேண்டிய அங்கத நாடகம்.  முடிசூடி அமர்ந்திருந்தார். வேள்விக்கு தலைமை வகித்தார். வைதிகருக்கு பொருளளித்தார். மன்னர் நிரை வந்து பணிய கோல் ஏந்தினார். அனைத்திற்கும் அப்பால் தூரத்தில் அந்த தனிக்குடிலில் அமர்ந்திருந்தார். அங்கு இனிய தென்றல் வீசிக் கொண்டிருந்தது. ஒரு சொல்லும் செவியில் விழாத அமைதி அவரை சூழ்ந்திருந்தது. அந்த அமைதியின் கவசத்தை சூடியே சத்ராஜித்தென அமர்ந்திருந்தார்.

அந்தச் சிறுகுடிலை தன் உள்ளத்தில் எழுப்பிக்கொள்ள அவர் முயன்றார். மரப்பட்டைக்கூரை வேய்ந்தது. எழுந்து நின்றால் தலை முட்டுவது. நீர் வைக்க ஒரு கலம். உணவு சமைக்க பிறிதொரு கலம். மரவுரிப் பாய் ஒன்று. ஒரு மாற்றாடை. உணவு திரட்ட கூர்முனை கொண்ட கழி ஒன்று. அதற்கப்பால் இப்புவியிலிருந்து அவர் பெறுவதற்கொன்றுமில்லை. இப்புவிக்கு அளிக்க உடலின் உப்புக்களன்றி பிறிதில்லை. கொடுப்பதும் பெறுவதும் குறைகையில் எளிதாகிறது இவ்வணிகம். அதையே தவமென்கிறார்கள்.

தவம் என்பது மகிழ்ந்து வாழ்தல். மகிழ்வை மறிக்கும் பிறிதொன்றையும் ஏற்காதிருத்தல். தவம் என்பது துயர் என்று எண்ணுபவன் உலகியலின் வெல்லப்பசைப் பிசுக்கில் சிக்கிச் சிறகோய்ந்தவன். உண்டு தீராத இனிமையை தன்னுள்ளிருந்து எடுத்துப் பரப்பி அதில் திளைப்பவன் அங்கிருந்து திரும்பி நோக்கி நகைத்துக் கொள்வான். அவ்வாறு நோக்குகையில் இந்தப் பன்னிரு பகடைக்களம் எப்படித் தோன்றும்?

அவர் விழிமூடியபடி புன்னகைத்தார். துயிலில் புதைந்து இறங்கிக் கொண்டிருக்கையில் மிக அருகே அவர் பாண்டுவை உணர்ந்தார். “தந்தையே!” என்றார். பாண்டு ஒன்றும் சொல்லாமல் அவர் அருகே நின்றிருந்தார். அவரும் ஒரு சொல்லின்றி அவர் அருகமைவை உணர்ந்தபடி படுத்திருந்தார். அவர் மடியிலென துயின்றழிந்தார். அவர் அருகே நின்றபடி துயிலும் அம்முதியவரை புன்னகையுடன் நோக்கிக்கொண்டிருந்தார்.

முந்தைய கட்டுரைசுஜாதாவின் நடையின் பாதிப்பு
அடுத்த கட்டுரைஅறம்செய விரும்பு -தகவல்கள்