கடிதங்கள்

அன்புள்ள ஜெ.,

அராத்து தன் கடிதத்தில் “குறுங்கதை” எழுதுவது தான் மட்டுமே என்று குறிப்பிடுகிறார்..  Google-ல தேடினால் எஸ்.ராமகிருஷ்ணன் உட்படப் பலர் இந்த வடிவில், பெயரில் எழுதியிருக்கிறார்கள்..

இவரைப் போன்ற சிலர் போலிப்பணிவோடு உங்களுக்கு/உங்களைப்பற்றி எழுதும் பகடிகள் மிகவும் எரிச்சலூட்டுகிறது. உங்கள் வெண்முரசு விழா பற்றி அராத்து எழுதிய கடிதம் மற்றொரு உதாரணம்..

இவர்கள் பாஷையில் சொல்வதானால், கொசுத்தொல்லை தாங்கமுடியலை..

நன்றி,
ரத்தன்

 

 

அன்புள்ள ஜெ

 

எந்தவகையான ஆக்கப்பூர்வமான விமர்சனமும் இல்லாமல் வெறும் நக்கல்கிண்டல்களாகவே உங்களைப்பற்றி முகநூலில் எவ்வளவு எழுதிக்குவிக்கப்படுகிறதென அறிந்திருக்கமாட்டீர்கள். அவதூறுகள் கருத்துத்திரிப்புகளைக் கடந்தே இன்றைய வாசகன் உங்களை அணுகவேண்டியிருக்கிறது.

 

அத்தகையவர்களே சந்தர்ப்பம் கிடைக்கும்போது உங்கள் முன் பணிவுடன் நின்றிருப்பதையும் நீங்களும் சகஜமாக பேசுவதையும் காண்கிறேன். நீங்கள் இதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்று தெரியவில்லை. வாசகர்களை இது மிகவும் சங்கடத்திலாழ்த்துகிறது

 

சிவராம்

 

 

அன்புள்ள  ரத்தன் ,சிவராம்,

 

கேலியோ கிண்டலோ ஒன்றும் பிழையல்ல. அவற்றில் சாரமில்லை என்றால் அவை எளிய விளையாட்டுக்கள், அவ்வளவுதான். நான் அவற்றை சாதாரணமாகக் கடந்துசெல்லவே முயல்கிறேன்.

 

அனைவருடனும் உரையாடலில் இருக்கவேண்டுமென்பதே என் எண்ணம்

 

ஜெ

 

அன்புள்ள ஜெ.
வணக்கம். ஓரளவு சென்ற தலைமுறை எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகத்தோடு வளரந்து இன்று இணையத் தலைமுறை பொதுமைப்படுத்தலில் சிக்கிக்கொண்ட எளிய வாசகன் நான். மழைக்குடைகளாக முட்டி முட்டி வளர்ந்துகொண்டிருக்கும் சமகால இணைய எழுத்துக்கள்,எழுத்தாளர்கள் நிரம்பிய பொருள்காட்சியில் கண்பிதுங்கி விழிப்பது தொடர்பான என் குழப்பத்துக்கு இப்போது உங்களை விட்டால் வேறு மருந்தகம் இல்லை.
போதுமான அளவு இவர்களைப் படித்துவிட்டுதான் கேட்கிறேன்.. சமகால இலக்கிய விடிவெள்ளிகள், நவீன எழுத்தின் போர்வாள்கள் என தூக்கிப் பிடிக்கப்படுவோரின் எழுத்துகளும் வாசகனிடத்தே அவர்கள் நிகழ்த்தும் பரிமாற்றங்களும் ஏன் இத்தனை பலவீனமாக இருக்கின்றன?
அதற்காக ஆதவனோ நாஞ்சில்நாடனோ வந்து ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் இட்டால்தான் நான் தூங்குவேன் என  கேட்கவில்லை. ஆனால் இணையத்தில் எழுதப்படும் மிக மேலோட்டமான, அகம் சார்ந்த தேடல்கள் ஏதுமற்ற எழுத்து கூட ஏன் பல தளங்களில் மிகமிக ஆக்ரோஷத்துடன் முன்வைக்கப்படுகிறது? மூன்று பத்திகள் கோர்வையாக எழுதுவதற்கே backspace தந்தியடிக்கும் பேஸ்புக் எழுத்தாளர்கள்தான் இன்று எல்லாத் தொலைக்காட்சிகளிலும் சிந்தனைச்சிற்பிகள். எவ்வித தருணங்களையும் நல்கிச் செல்லாத வேகாதவை நிரம்பியிருக்கும் அவர்தம் புத்தகங்கள்தான் கவர்ச்சிகரமான பிரதேசங்களில் நாவல் வெளியீட்டு விழாக்களாக அரங்கேறுகின்றன. ஏதோ ஒரு மகத்தானதை நோக்கி முன்னேறுவதைப் போன்ற பாவனையுடனே பலரும் இங்கு பரபரக்கின்றனர். கை கொடுத்துக்கொள்கின்றனர். வாழ்வில் உய்வடைய எமக்கு உபதேசம் செய்கின்றனர்.
என் கேள்வியும் அங்குதான் வருகிறது. போதுமான இலக்கியப்பயிற்சி இல்லாமல் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஓர் இனக்குழுவின் அறிவுப்போதாமையைப் பயன்படுத்தி mediocre எழுத்துகள் இங்கு சந்தைப்படுத்தப்படுகிறதாக உணர்கிறேன்.
இந்தத் தலைமுறையின் எழுத்தாக இணையத்தில் முன்னிறுத்தப்படும் முகங்கள் யாவும் – விதிவிலக்குகள் மிகச் சிலவே என விட்டுத்தள்ளினாலும் – எத்தகைய ஆழமும் உள்ளீடும் இன்றி ஜிகினாத்தாள்களாகவே இருக்கின்றனவே, இது அடுத்த தலைமுறை தமிழிலக்கியத்தின் மீது எத்தகைய சேதாரங்களை உண்டாக்கும் என நினைக்கிறீர்கள்? ஒரு வாசகன் இத்தகைய நிலைகுலைவுகளிலிருந்து தன்னை எங்ஙனம் காப்பாற்றிக்கொள்ளலாம்?
இப்படிப்பட்ட அவநம்பிக்கைச் சிந்தனைகள் தோன்ற காரணமாக இருந்ததையும் இணைத்துவிடுகிறேன். கீழ்க்கண்ட எழுத்தாளரின் பெயரை நீங்கள் இந்தத் தளத்தில் உச்சரித்தபிறகுதான் நான் அறிந்தேன். உங்களை விரிவாக பேட்டி கண்டவர் என்ற முறையிலோ என்னவோ, தவறான முன்முடிவுகள் ஏதுமற்றுதான் இச்சிறுகதையைப் படிக்கத் துவங்கினேன்.
நிமிரும்போது மிக அயர்ச்சியாக உணர்ந்தேன். ஓர் இலக்கியப்பிரதிக்கு உண்டான மொழிவளமோ உளவியல் முதிர்ச்சியோ ஆன்மச்சுத்தியோ எதுவும் தட்டுப்படாமல் மொத்தமாக இந்த எழுத்தே வாரமலர் தரத்தோடொத்துதான் என் கண்ணுக்குத் தெரிந்தது. இது நிஜமாகவே உருப்படியான படைப்புதானா  அல்லது சமகால இணைய இளைஞர்கள் வைத்துச் செல்லும் அகம்சார் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள எனக்குத்தான் பிரச்சினைகள் இருக்கின்றனவா?
தங்களின் மேலான கருத்துகளை தயவுசெய்து பகிர்ந்துகொள்ளவும்.
இப்படிக்கு
அருண்ராஜ்,
திருத்தணி.
அன்புள்ள அருண்ராஜ்
thiru kumaran என்னும் மின்னஞ்சலில் இருந்து எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் ஃபேஸ்புக்கில் செயல்படுபவராக இருக்கவேண்டும்
ஒரு கதையை, எழுத்தாளனை எதிர்கொள்ள இரண்டு வழிகள் உள்ளன. எவ்வகையிலும் பொருட்படுத்ததக்கவரல்ல என்றால் அப்படியே கடந்துசெல்லுங்கள். அப்படி எத்தனையோ பேர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்
அல்ல, அவர் அல்லது அப்படைப்பு ஏதோ ஒருவகையில் பேசத்தக்கது என்றால் உங்கள் விமர்சனத்தை காரண காரியத்துடன் முன்வையுங்கள். அவருக்கும் உங்களுக்கும் உதவியானது
ஜெ
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79
அடுத்த கட்டுரைசுஜாதாவின் நடையின் பாதிப்பு