‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 78

[ 4 ]

தருமனைக் கண்டதும் பீஷ்மர் ஒருகணம் விழிதூக்கி நோக்கிவிட்டு தலைகுனிந்து கையால் மார்பில் மூன்று புரிகளாக நீண்டுபரவிய தாடியை நீவியபடி அமர்ந்திருந்தார். நீண்டுமெலிந்த வெண்ணிற உடல் நுண்ணிய சுருக்கங்கள் பரவி மெழுகுத்தன்மை கொண்டிருந்தது. மடியில் கோக்கப்பட்டிருந்த கைகள் நரம்புகள் எழுந்து தசை வற்றி காய்ந்த கொடியென மாறிவிட்டிருந்தன. கால்களும் மிக மெலிந்து நரம்புகள் பின்னி வேர்த்தொகையென தோன்றின. சாளரத்தின் வழியாக வந்த காற்றில் வெண்ணிறத் தலைமயிர் பறந்தது. அவரது குழல்தொகை மிகவும் குறைந்திருந்தது. மூக்கு வளைந்து உதட்டின்மேல் நிழல் வீழ்த்தி தொங்கியது. கண்கள் பழுத்த அத்திப்பழங்கள் போலிருந்தன.

தொலைவில் ஏதோ கதவு திரும்பிக் கொண்டிருக்கும் ஓசை கேட்டது. சிலகணங்கள் அவர்கள் அவரை நோக்கி நின்றனர். சின்னாட்களுக்குள் அவர் மிகவும் முதுமை எய்திவிட்டிருந்தார். அவரது கைவிரல் நகங்கள் பழுப்பு நிறம்கொண்டு பறவையலகுகள் போலிருந்தன.  தருமன் சென்று பீஷ்மரின் கால்களைத் தொட்டு சென்னி சூடி “வணங்குகிறேன், பிதாமகரே” என்றார். ஒருசொல்லும் இல்லாமல் இடது கையை தூக்கி அவர் தலைமேல் வைத்துவிட்டு எடுத்துக் கொண்டார் பீஷ்மர்.

பீமனும் அர்ஜுனனும்  நகுலனும் சகதேவனும் சென்று அவர் பாதங்களில் உடலமைத்து வணங்கினர். அவரறியாதவர் போல் அவரது கை வந்து அவர்களின் தலையை தொட்டுச் சென்றது. பீஷ்மரின் முதல் மாணவர் விஸ்வசேனர் அவர்கள் அமர்வதற்காக பீடங்களை சுட்டிக் காட்டியபின் வெளியே சென்று கதவை மூடிக்கொண்டார். தருமன் மட்டுமே அமர்ந்தார். அவருக்குப் பின்னால் நகுலனும் சகதேவனும் நின்றிருக்க பீமனும் அர்ஜுனனும் சற்று அப்பால் சென்று தூணில் சாய்ந்து நின்றார்கள். பீஷ்மர் சொல்லெடுக்கட்டும் என்று தருமன் காத்திருந்தார்.

அவர் தன் உடலிலிருந்து அகன்று தொலைந்துவிட்டவர் போலிருந்தார். பொறுமையின்றி பீமன் உடலசைத்தபோதுதான் சற்று நேரம் ஆகியிருப்பதை தருமன் உணர்ந்தார். மெல்ல கனைத்து “தங்கள் ஆணையை தலைக்கொண்டு இங்கு வந்திருக்கிறோம், பிதாமகரே” என்றார். “ஆம்” என்றார் அவர். “போரைத் தவிர்க்க பிறிதொரு வழியில்லை என்பதை நான் உணர்ந்திருந்தேன். தங்களின் ஆணை ஒரு நற்கொடையெனத் தோன்றியது” என்றார் தருமன். பீஷ்மர் தலையசைத்தார். அத்துடன் சொல்லாடல் மீண்டும் அறுபட்டது.

பேசாமலிருப்பதன் பொருத்தமின்மையை உணர்ந்து பீஷ்மர் அசைந்து அமர்ந்து பீமனை நோக்கி “காடுகளில் அலைகிறாயா?” என்றார். “ஆம், பிதாமகரே” என்றான் பீமன். “தாங்களும் காடுகளில்தான் பெரும்பாலும் இருக்கிறீர்கள் என்றார்கள்” என்றான். பீஷ்மரின் முகத்தில் மெல்லிய புன்னகை எழுந்தது. “ஆம். அங்கு அடிக்கடி மாறும் நெறிகளும் அறமும் இல்லை” என்றார். “அதையே நானும் உணர்கிறேன்” என்றான் பீமன். பின்பு “அது காட்டுவிலங்குகளுக்கு பேசும் மொழி இல்லை என்பதனால் இருக்கலாம்” என்றான்.

பீஷ்மர் சிரித்துவிட்டார். திரும்பி அதே சிரிப்பொலியுடன் தருமனிடம் “இங்கு நிகழவிருப்பது ஒரு எளிய குலவிளையாட்டென்று எடுத்துக்கொள், மைந்தா! இதில் வென்றாலும் தோற்றாலும் இறுதியில் நீ வெல்வாய்” என்றார். ஒருகணம் அவர் விழிகளில் அறியாத ஒரு தத்தளிப்பு நிகழ்ந்து சென்றது. “எப்படியும் அறம் வெல்ல வேண்டும். இதுவரை வென்றிருக்கிறதா என்றால், அறியேன். வென்ற தருணங்களை மட்டுமே மானுடம் நினைவில் கொண்டிருக்கிறது. அவற்றை மட்டுமே இறுதி வெற்றி என்று எண்ணிக்கொள்கிறது. அந்நினைவுகளால் ஆன வரலாற்றை நம் காலடி மண்ணாக அமைத்திருக்கிறது. எனவே அறம் வெல்ல வேண்டும் என்றே விழைவோம். வெல்லாவிடில் நாம் நின்றிருக்க நிலமிருக்காது” என்றார்.

தருமன் “அறத்தின்மேல் நான் கொண்டுள்ள நம்பிக்கையென்பது அது வெல்லும் என்பதனால் அல்ல. அளிக்கும் என்பதனால் அல்ல. அழைத்துச் செல்லும் என்பதனாலும் அல்ல. அது எனக்கு உவப்பானது, அது ஒன்றே இயல்பானது என்பதனால்தான்” என்றார். பீஷ்மர் விழிகள் ஈரம் கொள்ள, நெகிழ்ந்து தொண்டை அசைய, கைநீட்டி அவர் கைகளை பற்றிக்கொண்டார். “அவ்வண்ணமே இரு, மைந்தா! இம்மண்ணில் எதுவும் உன்னை துயர்கொள்ளச் செய்யாதிருக்கட்டும்” என்றார். அவரது கைகள் தருமனின் கைகளுடன் சேர்ந்து நடுங்கின. “தங்கள் வாழ்த்து என்றும் என்னுடன் இருக்கும்” என்றார் தருமன்.

பீஷ்மரின் வலது கண்ணிலிருந்து நீர் வழியத்தொடங்கியது. முதியவர்களுக்குரிய வகையில் தலை நடுங்க தொண்டை நெகிழ்ந்தசைய அவர் விசும்பியழுதார். பின்பு மெல்ல எளிதாகி முகத்தை துடைத்தார். முகத்தில் இறுகியிருந்த தசைகள் ஒவ்வொன்றாக விடுபட்டன. “முதுமை!” என்றார். “எண்ணும்போதே அழுகை வந்துவிடுகிறது. அழுது முடித்ததும்தான் வாழ்க்கை இனிதெனத் தோன்றுகிறது.” தருமன் “அதை கனிவு என்பார்கள்” என்றார். “இறப்பு குறித்த அச்சம் என்பார்கள்” என்று பீஷ்மர் சிரித்தார். வாயின் பற்கள் பல உதிர்ந்திருந்தாலும் அவரது சிரிப்பு அழகாக இருந்தது. “வாழ்க்கையை புரிந்துகொள்ளாமையின் தவிப்பு என்று நான் சொல்வேன்” என்றார்.

தருமன் “இளமையில் நாம் புரிந்துகொள்ள ஒரு வாழ்க்கை மட்டுமே முன்னுள்ளது. முதுமையில் அது பல்கிப்பெருகிவிடுகிறது” என்றார். பீஷ்மர் “இருக்கலாம். ஒன்றையும் அறியாமல் விட்டுச்செல்வதுதான் அனைவருக்கும் இயன்றது. நான் என்றாவது அவரை பார்க்கவேண்டும். என் மூத்தவர். அவர் எழுதும் காவியத்தில் விடைகளென ஏதேனும் உள்ளதா என்று கேட்பேன்” என்றார். பீமன் “அவர் உரிய வினாக்களை முன்வைத்திருந்தாலே நன்று, பிதாமகரே” என்றான். பீஷ்மர் “ஆம்” என்றபின் உரக்க நகைத்தார்.

தருமனிடம் திரும்பி “இதுவரை நாற்களம் ஆடியதே இல்லை. அதன் நெறிகள் என்னவென்றும் வழிகள் என்னவென்றும் நான் அறிந்ததில்லை. திரும்பத் திரும்ப நான்கு பகடைகளை உருட்டி பன்னிரண்டு மடங்குகளையும் வகுபடல்களையும் கொண்டு ஆடுவது ஏன் இவர்களுக்கு சலிப்பூட்டவில்லை என்று எண்ணி வியந்திருக்கிறேன்” என்றார் பீஷ்மர்.

“ஆழ்ந்துவிட்டால் எதுவும் சலிப்பூட்டுவதில்லை, பிதாமகரே” என்றான் அர்ஜுனன். “அம்புமுனை கொண்டு நாம் அறிந்ததல்லவா அது?” அவனை விழிதூக்கி நோக்கியபின் “ஆம், உண்மை. இப்புவியில் பல்லாயிரம் ஆடல்களில் நம்மைக்குவித்து நம்மை கண்டடைகிறோம்” என்றார் பீஷ்மர். “ஆனால் அம்பென்பது பறவையின் தூயவடிவம். ஆகவே அது அழகியது” என்றார். “பகடை என்பது சொல்லின் தூய வடிவம்” என்றார் தருமன். அவரை புரியாமல் திரும்பி நோக்கியபின் சிரித்து “ஆம், அதனால்தான் அதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை போலும்” என்றார் பீஷ்மர்.

மிக விரைவிலேயே பீஷ்மர் மீண்டு நெடுநாட்களுக்குமுன் அவர்கள் அறிந்த பிதாமகராக ஆனார். தன் மேலிருந்து அழுத்திய  அனைத்தும் உதிர்ந்து விழ உடலில் குடியேறிய சிறு துள்ளலுடன் எழுந்து சென்று அறைமூலையில் இருந்த வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு அர்ஜுனனிடம் “வா, புதிதாக என்ன கற்றுக் கொண்டாய்?” என்றார். அர்ஜுனன் புன்னகைத்து “தாங்கள் கற்றுக் கொள்வதற்குரிய எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை, பிதாமகரே” என்றான்.

உரக்க நகைத்து “அதையும் பார்த்துவிடுவோம்” என்றார் பீஷ்மர். “நான் கற்றதென்ன என்று சொல்லவா? தோளில் அல்ல. அம்பின் கூரிலும் இறகிலும் அல்ல. காற்றிலும் அல்ல.  வளைவதில்தான் விற்கலையின் நுட்பம் உள்ளதென்று இப்போது கண்டுகொண்டேன். மூங்கில் வில்லோ இரும்பு வில்லோ அதில் கட்டப்படும் நாணில் உள்ளது விசையின் பொருள். அதை இழுக்கும் வகையில் அம்பின் மீது நம் தோள்விசையை செலுத்த முடியும். வீணையில் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும் தந்தியின் நீளம் இசையை வகுப்பது போல. காட்டுகிறேன் வா!” என்றார்.

பாண்டவர்களின் முகங்கள் மலர்ந்தன. அர்ஜுனன் “அதை தங்களிடமிருந்து கற்க விழைகிறேன், பிதாமகரே” என்றான். “கற்பிப்பது நன்று, மைந்தா. நாம் ஐயமறக் கற்பதற்கு அதுவே வழி” என்றார் பீஷ்மர். தருமன் “பிதாமகரே, நாங்கள் கிருபரையும் துரோணரையும் சந்தித்து வாழ்த்து பெற்றாகவேண்டும். அதன் பின் தந்தையையும் மூத்த அன்னையையும் பார்த்து வழிபட வேண்டும். பொழுது சாய்வதற்குள் இவற்றை முடித்தபின்னர் குடித்தெய்வங்களின் ஆலயங்களுக்குச் செல்வது முறை என்றார் சௌனகர்” என்றார்.

“நீ ஒரு மூடன்!” என்றார் பீஷ்மர் நகைத்தபடி. “நாளெல்லாம் அரசக் கடமைகளை செய்தபடி எப்படித்தான் உயிர் வாழ்கிறாய் என்று தெரியவில்லை. அரசர்களைப் பார்த்தால் தறியில் ஓடும் நாடாக்கழி போல் தோன்றுகிறார்கள். இரவும் பகலும் முன்னும் பின்னும் ஓடி ஒன்றையே நெய்துகொண்டு சலிப்பு என்பதை அவர்கள் அறிவதில்லை” என்றார். தருமன் “தான் நெய்யும் பட்டின் அழகை ரசிக்கத்தெரிந்த நாடாப்பட்டியல் சலிப்புறுவதில்லை, பிதாமகரே” என்றார்.

கையை ஓங்கி “எழுந்து போ, அறிவிலியே!” என்று சொல்லி உரக்க நகைத்தார் பீஷ்மர். “எதைச் சொன்னாலும் அணியும் ஒப்புமையுமாக மறுமொழி சொல்லக் கற்றுவிட்டால் நீ அரசு சூழ்தல் அறிந்தவன் என்று ஆகிவிடுவாயா?” தருமன் “போர்க்கலையின் உச்சம் தடுப்பதல்லவா?” என்றார். “வாழ்நாளெல்லாம் தடுத்துக்கொண்டிருப்பவன் நீ” என்றபின் அர்ஜுனனிடம் திரும்பி “அவர்கள் இருவரையும் இங்கு வரச்சொல்கிறேன். என் பயிற்சி சாலையில் நீ அவர்களிடம் வாழ்த்துப்பெறலாம். பிறகென்ன?” என்றார் பீஷ்மர்.

அர்ஜுனன் அவர் அருகே செல்ல அவர் அவன் கையை பற்றியபடி பீமனிடம் திரும்பி “உன்னிடம் இன்றொரு கதைப்போர் நிகழ்த்தலாமென எண்ணுகிறேன்” என்றார். பீமன் “இப்போது தங்கள் தோள்கள் கதைப்போருக்குரியவையல்ல என்று தோன்றுகிறது, பிதாமகரே” என்றான். “ஆம். முதுமையால் தோள் வல்லமை குன்றும்தோறும் குறைந்த விசையில் கதை சுழற்ற கற்றுக் கொண்டிருக்கிறேன். நீ ஏந்தும் கதையில் பத்தில் ஒருபங்கு எடைகூட என் கதைக்கில்லை. ஆனால் ஒருமுறை உன் கதை என் உடலில் படுமென்றால் நான் பிறகு கதையேந்துவதில்லை என்று வாக்களிக்கிறேன்” என்றார்.

பீமன் நகைத்து “நான் அத்தகைய அறைகூவல்களை ஏற்றுக் கொள்வதில்லை. அது அயலூர் குளத்தில் நம்பி இறங்குவது போல. இந்நாள்வரை காடுகளில் தாங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்று நானறியேனே!” என்றான். பீஷ்மர் நகைத்துக்கொண்டு அவனை அணுகி அவன் தோள்களில் தன் நீண்ட கைகளை இட்டு வளைத்து “பெருத்திருக்கிறாய். மல்லனுக்கு அது நன்று. ஆனால் கால் விரைவை குறைக்கும் அளவிற்கு இடை பெருக்காமல் இருக்க வேண்டும்” என்றார். “என் விரைவை யானைகளுடன் பொருதி தேர்ந்துகொண்டே இருக்கிறேன், பிதாமகரே” என்றான் பீமன்.

பீஷ்மர் “யாரது?” என்று தன் மாணவரை அழைத்தார். விஸ்வசேனர் வந்து வணங்க “துரோணரையும் கிருபரையும் இங்கு வரச்சொல். இளையோர் இங்கிருக்கிறார்கள் என்று அறிவி” என்றபின் இன்னொரு கையால் அர்ஜுனன் தோளை வளைத்து  அணைத்தபடி பயிற்சி சாலையை நோக்கி நடந்தார்.

நகுலன் தருமனிடம் “தாங்களும் வந்து படைக்கலப் பயிற்சியை பார்க்க விழைகிறீர்களா, மூத்தவரே?” என்றான். தருமன் “அதுதான் அங்கேயே இரவு பகலாக எந்நேரமும் நடந்து கொண்டிருக்கிறதே. மீண்டும் நோக்க என்ன இருக்கிறது? நீங்கள் செல்லுங்கள். நான் இங்கிருக்கிறேன். ஆசிரியர்கள் வரும்போது எதிர்கொண்டழைத்து பாதம் பணிய ஒருவராவது இங்கிருக்கவேண்டுமல்லவா?” என்றார்.  நகுலன் “நான் செல்கிறேன்” என்று அவர்களைத் தொடர்ந்து சென்றான்.

[ 5 ]

உளநிறைவுடன் கால்களை விரித்து கைகளை கைபீடத்தில் வைத்து தருமன் சாய்ந்துகொண்டார். கண்களை மூடி இனிய காற்றின் வருடலை தன் உடலில் உணர்ந்தார். கைகள் உள்ளமைந்த நாற்களமொன்றில் காயமைத்து ஆடின. இதழ்களில் அதன் சொற்கள் ஓசையின்றி அசைவுகொண்டன.

சகதேவன் வந்து தருமன் அருகே நின்றபடி “நான் தங்களுடன் இருக்கிறேன், மூத்தவரே” என்றான். தருமன் “பிதாமகர் உவகை கொண்டுவிட்டார். அனைத்தும் நன்றே முன் செல்கிறது அல்லவா, இளையோனே?” என்றார். “ஆனால் அவர் கவலை கொண்டிருந்தார். கவலை கொள்பவர்கள் அச்சுமையை உதறுவதற்கு ஒரு தருணத்தை எதிர்நோக்கியிருப்பார்கள். எங்கேனும் சிறு பழுது கிடைத்தால் அதிலிருந்து வெளியேறிவிடுவார்கள்” என்றான் சகதேவன். “வெளியேறிவிட்டமையினாலேயே அக்கவலைகள் அனைத்தும் சிறிதென ஆகிவிடும். கவலைகள் இறங்கிவிட்டதனாலேயே அத்தருணம் களியாட்டு நிறைந்ததாக ஆகிவிடும்” என்றான்.

தருமன் எரிச்சலுடன் “உங்களுக்கெல்லாம் என்ன ஆயிற்று? எந்நிலையிலும் உவகையோ நிறைவோ கொள்ளமாட்டோம் என்று உறுதி கொண்டுவிட்டுதான் இங்கு கிளம்பி வந்தீர்களா?” என்றார். “இல்லை, மூத்தவரே. இயல்பாகவே ஐயமும் கவலையும் கொண்டிருக்கிறோம்” என்றான். “ஏன்?” என்றார் தருமன். சகதேவன் “எண்ணத்தால் அல்ல. உள்ளிருக்கும் விலங்கின் ஐயம்” என்றான். “அவ்வண்ணம் எதை உணர்கிறாய்? சொல்!” என்றார் தருமன்.

சகதேவன் தயங்கிய குரலில் “இது அயலவர் நாடென்று தோன்றுகிறது. கங்கையிலிருந்து அஸ்தினபுரிக்கு வரும்வரை இருபுறமும் செறிந்த குறுங்காட்டுக்குள் பல்லாயிரம் நச்சம்புகள் என்னை நோக்கி குறி வைத்திருப்பதாக என் தோல் உணர்ந்தது. கரிய பெருந்திரையென அஸ்தினபுரியின் கோட்டையை பார்த்தபோது அச்சத்தில் உடல் நடுங்கினேன். இருளின் அலைபோல அது புரண்டு சுருண்டு என்னை நோக்கி வருவது போல் தோன்றியது. அறியாது ஒரு கணம் பின்னடைந்துவிட்டேன்” என்றான்.

“தாங்கள் இறங்கி புழுதியை எடுத்து நெற்றியில் சூடியபோது ஒரு கணம் என்ன நிகழ்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. பின்புதான் இந்நகரத்தில் மைந்தனாகப் பிறந்து இங்கு வளர்ந்தேன் என்று நினைவுகூர்ந்தேன். என் மூதாதையரின் நகர் இது. ஆனால் அந்த அஸ்தினபுரி மண்ணுக்குள் புதைந்து ஆழத்தில் எங்கோ மறைந்துவிட்டது. இன்றிருப்பது பிறிதொன்று” என்றான் சகதேவன்.

சினத்துடன் “நீ பித்தன். உன் உளமயக்கை என் மேல் சுமத்துகிறாய்” என்றார் தருமன். “அல்ல, மூத்தவரே. இந்நகரின் கோட்டைவளைவு, இல்லங்கள், தெருக்கள் அனைத்தும் மாறிவிட்டிருக்கின்றன. இவற்றின்மேல் கரிய நஞ்சொன்று படிந்து இன்றும் எஞ்சுவது போல. உண்மையிலேயே தூண் மடிப்புகளிலும் சிற்பப்பொருத்துகளின் இடுக்குகளிலும் கரிய தூள் போன்ற பாசிப்படிப்பு ஒன்றை காண்கிறேன். விரல் கொண்டு அதை தொட்டு எடுத்து பார்த்தபோது அருகே நின்ற கனகர் என்னிடம் அதை நாவில் வைக்கவேண்டாம் என்றார். முன்பு இங்கொரு நஞ்சு பரவி மறைந்துள்ளது. அதன் எச்சங்கள் அவை.”

“அவையனைத்தும் சூதர்கதைகள்” என்றார் தருமன். “சூதர்கள் ஒவ்வொருவருக்கும் ஓர் இயல்பை உருவாக்கி அளித்துவிடுகிறார்கள். பின்பு சொல்லிச் சொல்லி அவற்றை பெருக்குகிறார்கள். அந்தச் சித்திரத்திலிருந்து அதற்குரியவர்கள் எந்நிலையிலும் தப்ப முடியாது.” உரக்க நகைத்து “ஐம்பெரும் பழிகள் இயற்றினாலும்கூட என்னை அறத்தான் என்றே அவர்கள் சொல்வார்கள்” என்றார். சகதேவன் ஒன்றும் சொல்லவில்லை. தருமன் “சரி, சொல். நீ என்ன உணருகிறாய்?” என்றார்.

“நஞ்சு இந்நகர் முழுக்க நிறைந்துள்ளது” என்றான் சகதேவன். தருமன் “இன்று காலை என் காலில் கண்ணீருடன் வந்து விழுந்த குடிமக்களின் உள்ளங்களிலுமா?” என்றார். “ஆம். அவ்வுள எழுச்சி உங்களுக்கு மிகையாகத் தோன்றவில்லையா?” என்றான் சகதேவன். தருமன் “உளறாதே! அவை எந்தை இங்கு வாழ்ந்த நாள்முதல் ஈட்டிய பேரன்பின் வெளிப்பாடுகள்” என்றார். சகதேவன் “அல்ல. இது அவர்கள் கொண்ட வஞ்சமும் காழ்ப்பும் மறுபுறமெனத் திரும்பி குற்றவுணர்வும் பேரன்புமாக திரும்பியிருக்கிறது. குற்றவுணர்வின்றி இப்பெரும் உளநெகிழ்வு நிகழாது என்று உணர்கிறேன்” என்றான்.

“உன்னிடம் பேசப்புகுந்தால் என் நெஞ்சில் இழிநம்பிக்கைகளை புகுத்திவிடுவாய். செல்!” என்றார் தருமன். “நான் எதையும் வகுத்துரைக்கவில்லை, மூத்தவரே. ஆனால் ஒவ்வொரு தருணத்திலும் அதை உணர்ந்து கொண்டிருக்கிறேன். இங்குள்ள ஒவ்வொரு விழியும் நீர்மை படிந்து கனிந்துள்ளது. ஒவ்வொரு இதழும் அன்பின் சொற்களால் துடித்துக் கொண்டிருக்கின்றது. மெல்ல விரல் தொட்டாலே தாவி அணைக்கும் தவிப்புடன் உள்ளன உடல்கள் அனைத்தும். அவற்றுக்கு அடியில் எங்கோ இங்கு பெய்த நஞ்சின் மிச்சங்கள் உள்ளன.”

“போதும்! நாம் இதைப்பற்றி மீண்டும் பேசவேண்டியதில்லை” என்றார் தருமன். “அவ்வாறே” என்று சகதேவன் தலைதாழ்த்தினான். இருவரும் ஒரு சொல் பேசாமல் ஒருவரை ஒருவர் உடலால் உணர்ந்தபடி அசைவிழந்து அமர்ந்திருந்தனர். நெடுநேரத்திற்குப்பின் தருமன் பெருமூச்சுவிட்டு “நீ என்ன நினைக்கிறாய்? இப்பகடைக்களத்தில் நான் வெல்வேனா?” என்றார். “தாங்கள் என்ன எண்ணுகிறீர்கள்?” “ஐயமே இல்லை, நான் வெல்வேன்” என்றார் தருமன். “அந்நம்பிக்கை துணையிருக்கட்டும்” என்றான் சகதேவன். தருமன் “அவ்வாறெனில், நான் வெல்ல மாட்டேன் என்கிறாயா?” என்றார்.

“மூத்தவரே, தாங்கள் ஆடப்போவது இங்கு ஊறி நிறைந்துள்ள நஞ்சுடன். அது விண்ணிலிருந்து பொழிந்தது. இம்மண்ணின் ஆழத்தில் ஊறி நிறைந்திருப்பது. மானுடரால் இது வெல்லப்பட முடியாது.” “பிறகு எப்படி அதை வெல்லலாம்?” என்றார் தருமன். “மண்ணிலுள்ள அனைத்து நஞ்சையும் கழுவிக்களையும் ஆற்றல் கொண்டவை அனலும் புனலும் மட்டுமே. குருதி என்பது அனல் கொண்ட புனலே.”

தருமன் அச்சொல்லில் இருந்த காலம் கடந்த தன்மையைக் கண்டு உடல் நடுங்கினார். “இளையோனே, ஒரு பேச்சுக்கெனவும் அதை சொல்லாதே. ஒவ்வொரு நாளும் நான் அஞ்சிக்கொண்டிருப்பது அக்குருதிப்புனலையே. அதை தவிர்க்கும் பொருட்டே களிமகனாக பகடையாட இங்கு வந்திருக்கிறேன். என் விழிமுன் ஒருபோதும் குருதி வீழலாகாது என்று ஒவ்வொரு நாளும் எந்தையையும் தெய்வங்களையும் வேண்டிக்கொள்கிறேன்.” சகதேவன் “நன்று சூழ்க!” என்று மட்டும் சொன்னான். மீண்டும் கல் சேற்றில் புதைவது போல அவர்கள் அமைதிக்குள் ஆழ்ந்தனர். தருமன் “எந்தையரே…” என்று பெருமூச்சுவிட்டார்.

முந்தைய கட்டுரைபுத்தகக் கண்காட்சி
அடுத்த கட்டுரை”இதான் ஒரிஜினல் சார்!”