குறுங்கதை வடிவம்

1

அன்புள்ள ஜெயமோகன்,

குறுங்கதைகள் என்னும் வடிவம் புதியதாக உருவாகி வந்தது என்பதைப்போல அராத்து பற்றிய குறிப்பில் நீங்கள் எழுதியிருந்தீர்கள். குறுங்கதை வடிவில் உலக அளவில் பல முக்கியமான படைப்பாளிகள் எழுதியிருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அது ஒன்றும் புதிய விஷயம் அல்ல

செல்வராஜ்

 

அன்புள்ள செல்வராஜ்,

நான் காஃப்காவின் குட்டிக்கதைகளைக்கூட அறிந்திராத அளவுக்கு வாசிப்பற்றவன் என்று நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். பரவாயில்லை, நம் அறிவு அப்படித்தானே நம்மால் நிரூபிக்கப்படுகிறது?

குட்டிக்கதைகள் என்பவை உலக இலக்கியத்தின் மிகமிக ஆரம்பகாலப் படைப்புகள். நாட்டார்கதைகளின் அடிப்படையே அவைதான். அவை தேவதைக்கதைகள் நீதிக்கதைகள் என பலவகை. அவற்றிலிருந்தே சிறுகதை என்னும் வடிவம் உருவாகிவந்தது.

சிறுகதையின் தனிவடிவம் உருவானபின்னர் குட்டிக்கதை என்னும் வடிவம் அடுத்தகட்ட வளர்ச்சியை அடைந்தது. உருவகத்தன்மை கொண்ட கவித்துவமான புனைவுத்துளி ஒருவகை. பகடியோ விளையாட்டோ கொண்ட சிறிய சித்தரிப்பு இன்னொரு வகை. முதல்வகைக்கு காஃப்காவின் குட்டிக்கதைகளையும் இரண்டாம் வகைக்கு ஜான் அப்டைக்கின் குட்டிக்கதைகளையும் உதாரணமாகச் சொல்லலாம்

Sudden fiction மற்றும் flash fiction என்ற பேரில் இவ்வெழுத்துமுறையின் பல்வேறு வகைமாதிரிகள் வெளிவந்துள்ளன. பெருந்தொகைகளாகவே பல உள்ளன. சுந்தர ராமசாமியின் கையெழுத்துடன் என்னிடம் இரு தொகுதிகள் உள்ளன.

மறைந்த சுஜாதா இரண்டாம் வகைக் குட்டிக்கதைகளுக்கு பெரிய ரசிகர். அவ்வடிவில் பல கதைகள் அவரால் தமிழுக்கு அறிமுகம்செய்யப்பட்டவை. ஒற்றைவரிக்கதைகள் [கரடிவேடம் போட்டவனின் கடைசி வரி ‘சுடாதே’] போன்றவற்றை அவர் எடுத்துரைத்திருக்கிறார்.

இன்று ஒரு புதியகலைவடிவமாக உருவாகிவரும் நுண்கதை அல்லது நுண்சித்தரிப்பு என்பது சற்று மாறுபட்ட அழகியல் கொண்டது. அது செவ்வியல் சிறுகதைக்கும், மேலே குறிப்பிட்ட உருவகக்கதைக்கும், விளையாட்டுக்கதைக்கும் பிறகு வந்த உருவாகி வந்துள்ள வடிவம்

அதன் இலக்கணத்தை, இதுவரை எழுதப்பட்டவற்றை வைத்து, ஓரளவு இப்படிச் சொல்லலாம்.

 

  1. படிமமோ உருவகமோ இன்றி சொல்லப்படுவது
  2. சொல்விளையாட்டோ மொழிச்சுழற்றலோ அற்ற சுருக்கமான நேரடியான கூற்று கொண்டது
  3. வாழ்க்கையின் ஒரு தருணத்தை அல்லது ஒரு நுண்மாறுதலை மட்டுமே குறிவைப்பது
  4. வளர்ந்துசெல்லும் தன்மை அற்றது.

ஒரு வியப்பு, கண்டடைதல், சீண்டல் கணத்தை மட்டுமே இலக்காக்கி, கூடுமானவரை விவரிக்காமல் சொல்லப்படும் கதைகள் இவை என்று சொல்லலாம். இவற்றில் உள்ள ஒரு வகையான மீறல், துடுக்குத்தனம் இவற்றின் அழகியலில் முக்கியமானது. ஆனால் இவற்றின் இலக்கியமதிப்பு இனிமேல்தான் உருவாகவேண்டும் என்பது என் எண்ணம்.

 

நான் சமீபத்தில் வாசித்த ஒரு மலையாள குறுங்கதை.

*

’நான் உன்னை விரும்புகிறேன். நாம் ஏன் சேர்ந்து வாழக்கூடாது?’

ரொம்ப ஸாரி, நான் ஒரு லெஸ்பியன். என் தோழியுடன் சேர்ந்து வாழ்கிறேன்

ஓக்கே ஓக்கே . அதில் வெட்கமோ தயக்கமோ கொள்ள ஒன்றுமே இல்லை. இன்றைய வாழ்க்கையில் இது மிகமிகச் சாதாரணமானது. எல்லா செக்ஸும் போலத்தான் அதுவும். நாம் நண்பர்களாகவே இருப்போம்

நன்றி. நீ இத்தனை முற்போக்காக இருப்பாய் என நான் நினைக்கவே இல்லை. எனக்கு அதில் வெட்கமெல்லாம் இல்லை

சரி , ஒரு சின்ன சந்தேகம். நீ  அதில் ஆண் பார்ட்னரா இல்லை பெண் பார்ட்னரா?

ச்சீ, நான் பெண்.

 

 

 

 

முந்தைய கட்டுரைஅறம்செய விரும்பு -தகவல்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 81