வாசிப்பு அன்றும் இன்றும்

Tamil_News_large_696867

 

1982ல் நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது அன்றைய வார இதழ் ஒன்றில் புதுமைப்பித்தனின் மனித இயந்திரம் என்னும் கதை மறுபிரசுரமாகியிருந்தது. உடன் ஒரு குறிப்பு, ‘இவர் பெயர் புதுமைப்பித்தன். இவர் தமிழின் முதன்மையான சிறுகதை ஆசிரியர். இவர் எழுதிய காஞ்சனை என்னும் தொகுப்பில் உள்ள கதை இது’

தமிழின் முதன்மையான இலக்கியமேதையை அவற் மறைந்து முப்பத்தைந்தான்டுகளுக்குப்பின் இப்படி அறிமுகம்செய்ய வேண்டிய நிலை அன்றிருந்தது. மௌனியின் சிறுகதைத்தொகுதியை அவரது நண்பர் கி.ஆ.சச்சிதானந்தம் என்பவர் பீக்காக் பதிப்பகம் என்னும் பெயரில் நூலாகக் கொண்டுவந்தார். இருபதாண்டுகளில் நூறுபிரதிகூட விற்கவில்லை.

தமிழின் மிகப்பெரும்பாலான வாசகர்களுக்கு அன்று இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாது. கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, லா.சரா, அசோகமித்திரன். சுந்தர ராமசாமி எவரையும் அறிமுகமில்லை. அது வார இதழ்களின் பொற்காலம். அதில் வரும் தொடர்கதைகளையே நாவல்களாக நினைத்துக்கொண்டிருந்தனர். அவற்றை எழுதுபவர்களே இலக்கியவாதிகளாகக் கருதப்பட்டனர்.

அன்றெல்லாம் புத்தகவிற்பனை மிகமிகக்குறைவு. கலைமகள் பிரசுராலயம். வானதி பதிப்பகம், மீனாட்சி புத்தகநிலையம் போல ஒருசில பதிப்பகங்கள்தான். தொடர்கதை தொகுதிகளையே நூல்களாக மக்கள் வாசித்துவந்தனர்.

மாற்றம் ஏற்பட்டது தொண்ணூறுகளில்தான். தினமணியின் தமிழ்மணி இணைப்புக்கு இலக்கியத்தை பரவலாக கொண்டுசென்றதில் முக்கியப்பங்களிப்பு உண்டு. வாசிக்கக்கூடிய புதிய தலைமுறை உருவாகி வந்தது.நவீன இயந்திரங்கள் புத்தக அச்சை எளிதாக்கின. இணையம் புத்தகங்களை பரவலாக அறிமுகம் செய்தது

இன்று தமிழில் புத்தகம் விற்பது மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில் மிகக்குறைவு. ஆனால் நேற்றைய நிலையுடன் ஒப்பிடுகையில் மிகப்பெரிய புரட்சி. இன்றைய புத்தகக் கண்காட்சியில் குவியும் வாசகர்களைக் கண்டால் பழைய எழுத்தாளர்கள் ஆனந்தக்கண்ணீர் வடிப்பார்கள்.

நேற்று பொழுதுபோக்கு ஊடகங்கள் அதிகமிருக்கவில்லை. சினிமா அபூர்வமாகவே பார்க்கப்பட்டது. வானொலி அரசுத்துறையாக இருந்தது. ஆகவே வாசிப்பே பொழுதுபோக்காக இருந்தது. வாசிப்புக்கு அறிவைத் தேடுதல், ஆழ்ந்த அனுபவங்களை அடைதல் என்னும் பயன்கள் உண்டு என்பதையே அன்றிருந்தோர் அறிந்திருக்கவில்லை. சுவாரசியமாக இருந்தால் நல்ல படைப்பு என நினைத்தனர்

இலக்கியம் சிற்றிதழ்களுக்குள் முந்நூறு பிரதிகள் அச்சிடப்பட்டு ஐயாயிரம் பேரால் மட்டும் வாசிக்கப்பட்டது. இன்று இலக்கிய வாசிப்பே ஓங்கி நிற்கிறது. பழைய இலக்கியவாதிகளின் நூல்களெல்லாமே மறு அச்சாகிவிட்டன. ஆனால் பழைய கேளிக்கை எழுத்தாளர்கள் கிட்டத்தட்ட மறைந்துவிட்டனர்.

இன்று பொழுதுபோக்குக்கான எழுத்தும் வாசிப்பும் மிகவும் குறைந்துள்ளது. இலக்கியமும் பயன்தரு எழுத்தும் பெருவாரியாக வாங்கி வாசிக்கப்படுகின்றன. இளையதலைமுறையினரில் உயர்படிப்புள்ளோர் தமிழில் வாசிக்கிறார்கள். கப்ரியேல் கார்ஸியா மார்க்யூஸின் நூறாண்டுகாலத் தனிமை என்னும் உலகப்புகழ்பெற்ற இலக்கியம் ஒருவருடத்தில் இருபதிப்புகள் வெளிவந்துள்ளது

 

வாசிப்பில் நிகழும் இந்த ஆக்கபூர்வமான மாறுதல் தொடரவேண்டும்.

 

[தினமணி நாளிதழுக்காக எழுதியது ]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 81
அடுத்த கட்டுரைஆடம்பரமும் நகலும்