ராஜராஜன், மேலும் கடிதங்கள்

ஜெ

மேற்கண்ட கட்டுரையை நினைக்க நினைக்க பிரமிப்பு! வெகு காலமாக இந்தியாவின் உண்மையான் நாகரீக வளர்ச்சிக்கு ஆதாரமாக என்னால் சோழத்தின் வரலாறை பொறுத்த முடியாமல் இருந்தேன் குடவாயில் பாலசுப்பிரமணியம் தஞ்சாவூர் புத்தகம் படிக்க கடினமாக இருப்பதாக தோன்றியது உங்கள் பார்வை உவகையாய் இருந்தது மிக்க நன்றி.

மேற்கண்ட பருவத்தில் அல்லது சமமான தங்க காலமாக குப்த அரசின் (வட இந்தியா) ஆட்சி இருப்பதாக கருதுகிறீர்களா?

ஏதாவது இழை கொடுத்தால் அல்லது எழுதும் எண்ணம் இருந்தாலும் தெரிவியுங்கள்

மிக்க நன்றி,
சஹ்ரிதயன்

அன்புள்ள சஹ்ருதயன்

என்னுடைய ஆர்வம் அதிகமும் தமிழக-கேரள வரலாறு சார்ந்தே. நான் ஆய்வுகள் செய்வதில்லை. எழுத்தாளனுக்கு எந்த அளவுக்கு தெரிந்திருக்கவேண்டுமோ அந்த அளவுக்கு தெரிந்துகொள்ள முயல்கிறேன். தமிழக வரலாற்றை அறிந்துகொள்ள தேவையான பின்னணி என்ற அளவிலேயே இந்திய வரலாறு

நீங்கள் சொல்வதுபோல குப்தர்களின் காலம் இந்திய நிலவுடைமைச்சமூகத்தின் ஓர் உச்சகாலகட்டம்தான். அவ்வகையில் சோழர் காலகட்டத்துடன் ஒப்பிடத்தக்கதே

ஜெ

அன்புள்ள ஜெ..

இந்த இரண்டு கட்டுரைகளையும் நேரடியாக ஒரு பாடபுத்தகத்தில் சேர்த்து விடலாம்.

அந்த காலத்தின் அறங்கள் இன்றிலிருந்து மிக மாறுபட்டவை என்பது மிக முக்கியமாக மனதில் கொள்ள வேண்டிய ஒன்று. தென் ஆப்பிரிக்க மக்கள் தலைவர் சமீபத்தில் 5 ஆவது (கணக்கு சரியா??) முறையாகத் திருமணம் செய்து கொண்டதை நாம் கேலியாகப் பார்த்த பார்வையில் உள்ள காமாலைத் தனத்தை உணர்தல் முக்கியம்.

சமீபத்தில் தசராக் கொண்டாட்டங்களின் போது எனது இளம் சகா ஒரு வினாவை எழுப்பினார்.. சார், தெற்கே, நீங்க எல்லாரும் ராவணனைக் கும்பிடுவீர்களாமே.. அவர் கேட்ட கேள்வியின் உள் குத்து என்னவெனில் – நீங்கள் பேட் பாய்ஸை கும்பிடுபவர்கள் என்பதே.. என்ன பதில் சொல்ல. சர்ச் மற்ற மதங்களை பகான் என்றும் டெமனிக் என்றும் சொல்வது போல். இந்த இளைஞனுக்கு யார் இப்படிச் சொல்லிக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.. இன்னும் எத்தனை பேர் இப்படி நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்று எண்ணும் போது அயர்ச்சியாக உள்ளது.

பாலா

அன்புள்ள பாலா,

பொதுவாக இம்மாதிரி விஷயங்களில் மக்கள் எது கற்பிக்கப்படுகிறதோ அதை அப்படியே எடுத்துக்கொள்கிறார்கள். மேலும் சென்று ஆராய்வதில்லை.

தென்னிந்தியாவில் கம்பராமாயணம் போன்ற செவ்வியல் படைப்புகள் ராவணனையும் மகத்தான கதாநாயகனாக நிறுவி கலைகள் வழியாக அச்சித்திரத்தை மக்களிடம் கொண்டுசென்றிருக்கின்றன. வடக்கே வான்மீகி ராமாயணத்தை துளசி ராமாயணமும் பிற பக்திராமாயணங்களும் மறைத்துவிட்டன. பொதுவாகப் பக்திக்கு செவ்வியல்தன்மை இல்லை. அது உணர்ச்சிகரமானது. ஒற்றைப்படையானது. அந்த ஒற்றைப்படைத்தன்மையில் இருந்து இயல்பாக வரும் கேள்வி அது. நீங்கள் பொறுமையாக நீண்ட பதில் சொல்லியிருக்கலாம்- என்னைப்போல. குறைந்தபட்சம் மேற்கொண்டு உங்கள் பக்கம் ஆசாமி வராமலாவது இருபபர்)))

ஜெ

வெகு நாட்களுக்கு பிறகு சோழர்கள் பற்றிய ஒரு நல்ல நடு நிலையான , ஆழ்ந்து சிந்தித்து, கருத்துகளை ஆராய்ந்து ,மிகத் தெளிவாக, பலருக்கும் புரியும் வண்ணம் அருமையாக படைத்துள்ளீர்கள். மூன்று முறை படித்தேன்.

வாழ்த்துக்கள்
விஜய்

http://www.poetryinstone.in
“Here the language of stone surpasses the language of man” – Nobel laureate, Rabindranath Tagore

அன்புள்ள ஜெ,

ராஜராஜன் குறித்து நீங்கள் எழுதியது வாசகனின் வரலாற்றுணர்வை செம்மைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. நன்றிகள் பல.

வரலாறோ தத்துவமோ இலக்கியமோ எதுவாயினும் அவற்றைத் தாங்கள் அணுகும் முறையே மலைக்க வைக்கிறது. இவற்றில் நாட்டம் கொண்ட வாசகனுக்குத் தாங்கள் ஒரு வழிகாட்டியாக, உற்ற துணைவனாகக் காட்சி அளிக்கிறீர்கள்.

வணக்கத்துடன்

ஸ்ரீனிவாசன்

அன்புள்ள ஸ்ரீனிவாசன்

நான் இக்கட்டுரையில் சித்தரித்திருப்பது ஓர் எளிய மார்க்ஸிய வரலாற்று விளக்கமே. இங்குள்ள மார்க்ஸியர்கள் வெற்றிக்கொண்டானிடமிருந்தும் தீப்பொறி ஆறுமுகத்திடமிருந்தும் வரலாறு கற்றுக்கொண்டு பேசிவருவதனால்தான் இது இத்தனை ஆச்சரியமாக படுகிறது))

ஜெ

his is with reference to Mr. Nirmal’s article on the age of RajaRajachozan and your reply to that. It was a very perceptive but short explanation of the economic systems not only in this part of the world but also elsewhere. From tribal economy to feudal systems under small group leaders to imperialism under one monarch was the experience of the world. Every change in the economic system benefits over all even though individually some groups or many groups may have suffered. There is nothing as golden age as far as equality of citizens are concerned.. Even in our Indian democracy there is no equality not even in United States of America. From the development of culture, literature and other fine arts one can understand that the system was gave peace and stability to the nation state.

I have only one concern in your reply. You said monarchs like Karikalan, Neduncheyian and Senguttavan were praised by the polity and went into the history. Were these monarchs honored and praised by the subsequent generations or by his friends and followers in the contemporary generation. In a recent speech a friend of the Chief Minister said that one thousand years after Karkalan was Rajarajachozzhan and one thousand years after Rajaraja Chozhan is the rule of ———————. Suppose this goes into history what would be the analysis of the present rule by the historians and economists of future generation? There is a danger that hagiographic speeches and writings of followers of kings, monarchs and even democratic leaders will go into historical writings.

Greetings

R.VENKATRAMAN

அன்புள்ள ஜெ,

சோழர் காலகட்டம் பற்றிய உங்கள் கட்டுரை வாசித்தவுடன் எழுதுகிறேன். என் சிந்தனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியவை ஜெயகாந்தனின் எழுத்துக்கள். குறிப்பாக அவருடைய முன்னுரைகள். (ஜெயகாந்தன் முன்னுரைகள் எப்போதும் என்னுடன் இருக்கின்ற புத்தகம்).

இருப்பினும் இத்தனை வருடங்களாக முறையான சிந்தனை வழி, ஆழமாக என்னை செலுத்திக் கொண்டதில்லை. (As J.Krishnamurthy says, our children are taught ‘What’ to think and not ‘How’ to think) உங்கள் வலைதளத்தின் தொடர் வாசிப்பு அதற்கு அடிப்படை அமைக்கிறது; முறையான சிந்தனை நோக்கி மனதைச் செலுத்துகிறது. உங்களின் வெற்றியும் அதுவேதான் என்று எண்ணுகிறேன். உங்களை நோக்கி ஈர்க்கப்படும் வாசகர்களை ஒரு தெளிந்த சிந்தனை வழி நோக்கி இட்டுச் செல்கிறீர்கள்.

நான் கவனித்த இன்னொரு விஷயம், சொல்லப்படுகின்ற எந்த விஷயத்திலும் நீங்கள் உங்களை முன்னிறுத்துவதில்லை; சொல்லப்படும் விஷயமே முன்னிற்கிறது. அதற்குத் தேவையான ஊட்டத்தை மட்டுமே நீங்கள் கொடுக்கிறீர்கள். இது உணர்வதற்கு எளிதான பக்குவம். நடைமுறையில் பெரும் அறிஞர்களும் தவறும் இடம் இது என்றே எண்ணுகிறேன்.

மனதினில் தோன்றும் நன்றி உணர்வு வெளிபடுகின்ற தருணம். உங்கள் நேரம் வீணாகி விடக்கூடாது என்கிற தயக்கம் தாண்டி இம்முறை பகிர்ந்து கொள்கிறேன். வெகுவாக நன்றி சொல்வதும் தூரத்தில் வைப்பதாக ஆகிவிடுகிறது…..

நட்புடன்,
வள்ளியப்பன்
சென்னை.

அன்புள்ள வள்ளியப்பன் அவர்களுக்கு

நன்றி. பொதுவாக எனக்கு வரும் வினாக்களை நான் வாசித்தறிந்த சூழலில் வைத்துக்கொண்டு தர்க்கபூர்வமாக விளக்கமுடியுமா என்று பார்க்கிறேன். இவற்றை சிந்திப்பதற்கான ஒரு தொடக்கமாகவே முன்வைக்கிறேன். பொதுவாக நம் சூழலில் கருத்து விவாதத்துக்கு இருக்கும் மனத்தடைகள், உணர்ச்சித்தடைகளை தாண்டி இந்த வெளியில் ஒரு விவாதம் மெல்லமெல்ல உருவாக இவை வழியமைக்குமென நினைக்கிறேன்

ஜெ

ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?

ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?–2

முந்தயவை : http://www.jeyamohan.in/?p=8818

 குடவாயில் பாலசுப்ரமணியம் 

முந்தைய கட்டுரைபவாவும் யோகியும் நானும்
அடுத்த கட்டுரைதஞ்சை தரிசனம் – 1