சோ.தர்மன்

writer-dharman

தூர்வை என்று ஒருநாவல் எனக்கு தபாலில் வந்தது. பிரித்ததுமே தெரிந்தது, அது அத்தியாயங்களாகப் பகுக்கப்படாத நாவல். ஒரு சோர்வுடன் தூக்கி ‘அந்தால’ வைத்துவிட்டேன். பின்னொருமுறை எடுத்து பிரித்து எதையோ வாசித்தபோது அதில்வரும் காடுவெட்டி முத்தையா ‘ஆங்கிலம்’ பேசும் பகுதி சிக்கியது. சிரித்துக் கொந்தளித்தேன். நாவலை வாசித்துமுடித்ததுமே சோ.தருமனுக்கு ஒரு நீண்ட கடிதம்போட்டேன். அதைப்பற்றி ஒரு மதிப்புரையும் எழுதினேன். இன்றுவரை சோ.தருமன் எனக்குப்பிடித்த எழுத்தாளர்.

சோ. தர்மனின் புனைவுலகம் அடித்தள மக்களைச் சார்ந்தது. ஆனால் கழிவிரக்கமோ அரசியல்சீற்றமோ அற்றது. இந்த தனித்தன்மையே அவரை முக்கியமான படைப்பாளியாக ஆக்குகிறது. கழிவிரக்கமும் அரசியல்சீற்றமும் இருக்கலாகாது என்றல்ல. ஆனால் அவை நிபந்தனைகள் அல்ல என்று, இலகுவான மனநிலையிலேயே அடித்தள மக்களின் வாழ்க்கையை எழுதமுடியும் என்றும் ஓர் எழுத்தாளர் கண்டுகொள்வதிலிருக்கும் அந்தரங்கமான பயணத்தையே நான் கொண்டாடினேன்

காடுவெட்டி முத்தையா என்னும் கதாபாத்திரத்தை வாசித்தபோது அடைந்த இனிமையின் காரணம் அதுவே. அடித்தள மக்களை பலியாடுகளாகவோ அரசியல் பேச்சாளர்களாகவோ மட்டுமே புனைவுலகில் பார்த்துவந்த எனக்கு அம்மக்களின் இயல்புகளில் ஒன்றான கேலியும் கிண்டலும் நிறைந்த காடுவெட்டி முத்தையா மிக அணுக்கமானவராகத் தெரிந்தார். இன்னும் சொல்லப்போனால் என் அப்பாவுக்கு அணுக்கச்சேவகனாகவும், அரசியல் விமர்சகனாகவும் திகழ்ந்த தங்கையனைப்போலிருந்தார் .

ஒருமுறை பூசைவைக்க பிள்ளையாருக்காக நான் அவசரமாக ஓடி சாணி கொண்டுவந்தேன். அதை உருட்டி வாழையிலையில் ஓரமாக வைத்து என் தாத்தாவுக்கு அப்பா படையலிட்டார். தங்கையன் “பிள்ளே, அது சாணிதானே? வெளையிலே இருந்து உருட்டி எடுத்ததாக்கும். மத்ததோண்ணு தோணுது கேட்டுதா“ என்றார். அப்பா கடுப்பாகி பின் சிரிப்பை அடக்கிக்கொண்டார். அந்தப்பகடி அடித்தளமக்களின் இயல்புகளில் ஒன்று. தமிழிலக்கியத்தில் அதை சோ.தருமனின் எழுத்தில் மட்டுமே காணமுடியும்.

தன்னை கோமாளியாக ஆக்கிக்கொண்டு தன்னை சூழ்ந்து நின்றிருக்கும் ஆதிக்கத்தை பகடிசெய்கிறார்கள் அவர்கள். நுணுக்கமாக தங்களுக்கு அளிக்கப்பட்ட எல்லைகளைக் கடந்துசெல்கிறார்கள். என் அப்பாவும் அம்மாவும் தற்கொலை செய்துகொண்டபின் வீடு இடிந்து கிடப்பதைப்பற்றி என்னிடம் குலசேகரம் சந்தையில் சந்தித்தபோது தங்கையன் சொன்னார் “உள்ள ரெண்டு ஆவியும் கெடந்து நல்ல சண்டையாக்கும் கேட்டுதா? கொன்னுபோடுவேன்னு சொல்லமுடியாது, அதுக்க வெறியாக்கும் எஜமானுக்கு”

பிற எங்கும் காணக்கிடைக்காத ஓர் உலகத்தை நம்பகமாக தன் புனைவுலகில் உருவாக்கியளிப்பவரே முக்கியமான புனைவெழுத்தாளர். சோ.தர்மனின் உலகம் அவரால் இந்த வாழ்க்கைவெளியில் இருந்து அள்ளித்திரட்டப்பட்டது. அவரது நடை நேரடியானது. அவரது வட்டாரவழக்கு ஆவணத்தன்மை கொண்டதல்ல, மாறாக நுணுக்கமான மொழிவெளிப்பாடாகவும் வேடிக்கை விளையாட்டாகவும் மாறக்கூடியது. அவரது கதாபாத்திரங்கள் நாம் எங்கும் காணக்கூடியவர்கள், அவர்களின் அகம் சோ.தர்மனால் மட்டுமே முன்வைக்கப்படுவது.

பூமணியின் மருகன் சோ.தர்மன். பூமணியின் இயல்புவாத அழகியலும் கி.ராஜநாராயணனின் நாட்டாரியல்கூறுகளும் கலந்த புனைவுலகம் அவருடையது. பூமணியின் கதாபாத்திரங்கள் ஒருவகை ஆவணத்தன்மையுடன் பதிவுபெறுபவை. கி.ராஜநாராயணனின் கதாபாத்திரங்கள் நம்முடன் விளையாடுபவை.

தமிழின் முக்கியமான புனைகதையெழுத்தாளர்களில் ஒருவரான சோ. தர்மன் பெரிதும் கவனிக்கப்பட்டவர் என்று சொல்லமுடியாது. அவரது தூர்வை, கூகை என்னும் இரு நாவல்களையும் தமிழில் எழுதப்பட்ட முக்கியமான ஆக்கங்கள் என ஐயமின்றிச் சொல்லமுடியும்

சோ தருமன் பேட்டிகளைப்பற்றி 

முந்தைய கட்டுரைஇங்கிலாந்து, ஐரோப்பா பயணம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77