மணம் கமழும் சிரிப்பு

1

துட்டி விசாரிக்க வருபவர் இழந்தவரின் அருகே அமர்கிறார். மறுதிசையை நோக்கிக்கொண்டு சற்றுநேரம் அமர்ந்திருக்கிறார். இவர் இந்தத்திசையை நோக்கி வெறுமையாக அமர்ந்திருக்கிறார். காலம் சொட்டிக்கொண்டிருக்கிறது. பிறகு ஒரு பெருமூச்சு. பதிலுக்கு ஒரு மறுமூச்சு. துட்டிகேட்பவர் எங்கோ நோக்கி “நல்லாத்தானே இருந்தாங்க?” என்று முனகுகிறார்.

இழந்தவர் உடனே திரும்பி தன் மகளை நோக்கி “ஏட்டி, அந்த வெத்திலச்செல்லத்த எடுத்தாடி செத்த சவமே” என்கிறார். கதைசொல்லப்போவதற்கு ஆற்றல் திரட்டல். நீவி, பூசி ,நறுக்கி, அடுக்கி, சுருட்டி, அதக்கி, மென்று ,நுரைத்து, கிறங்கி ,துப்பி சமனமடைகிறார். பெருமூச்சுடன் கதையை ஆரம்பிக்கிறார். “என்னண்ணு சொல்ல மாப்ள? அந்நா கெடக்க நாயி. அதான் நீங்க…”

தூரத்தையும் காலத்தையும் துல்லியமாகச் சொல்லும் கதைமுயற்சி. “…இந்நா இங்க கெடக்குத கூடை நான். இவ்ளவுதூரம்தான் கேட்டுக்கிடுங்க. அப்டியே விளுந்துபோட்டா. மாப்ள நீங்க சாவுறப்ப நேரம் என்னாண்ணு நினைக்கிறீக? காலம்பற பத்து பதினெட்டுல்லா?”

சுகா பிரதாப் பிளாஸா ஓட்டலில் என் அறையில் அமர்ந்து அவரது தென்காசிச் சித்தப்பா துக்கம் சொன்ன வயணத்தைச் சொல்லிக்கொண்டிருந்தார். நான் சிரித்து கண்ணீர்மல்கி மெத்தையில் உருண்டேன். உடனிருந்த ஒருவர் வயிற்றைப்பிடித்தபடி எழுந்து ஓடினார்.

சுகா நானறிந்த உச்சகட்ட கதைசொல்லிகளில் ஒருவர். கதைசொல்லும்போது முகம் படுதீவிரமாக இருக்கும். சூழ இருப்பவர்கள்தான் சிரித்துக்கொண்டிருப்பார்கள். அவர் “அதுமட்டுமில்ல…”என அடுத்த கதைக்குச் செல்வார்.

நாங்கள் காசியில் நான்கடவுள் படப்பிடிப்பில் இருந்தோம். ஒருமாதம் காசியில். எங்கள் இருவரின் மிகச்சிறந்த நாட்கள் அவை. பண்டார வேஷத்தில் எப்போதும் ஆரியாவும் உடனிருந்தார்.  “சுகா, நீங்கள் எழுதலாம்” என்றேன். “மோகன், நான் எழுத்தாளன் இல்லை. அப்டி நினைக்கவே இல்லை” என்றார். “இல்லை, இப்ப சொல்றீங்களே இதையே எழுதுங்க. இலக்கியத்துக்கு முதல் தேவையே மனிதர்களைக் கவனிக்கிறதுதான். மிச்சமெல்லாம் தானா வரும்” என்றேன்

சுகா அப்போது எழுதவில்லை. ஆனால் பின்னர் படித்துறை படம் எடுத்து அது வெளிவராத சூழல் அமைந்தபோது சோர்ந்திருந்தவரிடம் மீண்டும் அவர் எழுதலாமே என்றேன். பி கே சிவக்குமார் ஒருங்கிணைத்த இணையக்குழுமமான எழுத்தும் எண்ணமும் தளத்தில் அவர் சில குறிப்புகளை எழுதினார். அவை மிகவும் ரசிக்கப்பட்டன. அவருக்கும் அது ஆறுதலாக இருந்திருக்கலாம். அந்த தளத்தை கழுத்தும் கன்னமும் என அவர் பகடி செய்தார். அதில்தான் நான் தொப்பி ,திலகம் முதலிய காலத்தாலழியாத காவியங்களை எழுதி கல்லடிபட்டேன்.

சுகாவை எழுத்தாளராக ஆக்கியது எழுத்தும் எண்ணமும். அவரை விகடன் பரவலாக அறிமுகப்படுத்தியது. பொதுவாக கறாரான வாசகியான அருண்மொழி அவரது ’தாயார் சன்னிதி’ தொகுதியின் பரம ரசிகை. ”என்ன அருணா அப்டி ரசிக்கிறே?” என்று ஒருமுறை கேட்டேன். “நகைச்சுவையா இருக்குங்கிறதனாலயா?’

“சிரிப்பு இருக்குங்கிறதனால இல்ல ஜெயன். எதையும் திருகிக்காட்டாமலேயே நகைச்சுவையாத்தான் வாழ்க்கை இருக்குன்னு காட்டுறார்ல , அதனால” என்றாள். மிகமுக்கியமான அவதானிப்பு அது என்று நினைத்துக்கொண்டேன். நகைச்சுவை இக்கட்டுகளில் உருவாகவேண்டியதில்லை. அபத்தங்களாக வெளிப்படவேண்டியதில்லை. சும்மா திருவண்ணாமலைக்குப் போய்வந்த அனுபவமாகவே இருக்கலாம் அது.

‘பஷீரியன்’ என்று இந்த அழகியலை மலையாளத்தில் சொல்வார்கள்.இயல்பிலேயே வாழ்க்கை ஒரு வேடிக்கைதான் என எண்ணும் ஓர் இலகுத்தன்மையை சாராம்சமாகக் கொண்ட எழுத்து அது. சற்றேனும் அந்த இலகுத்தன்மை தன்னுள் இல்லாதவர்களுக்கு இதில் என்ன இருக்கிறது என்றே தோன்றும். பஷீரை பல அதிதீவிரப்புரட்சியர்களும் கலகர்களும் தத்துவர்களும் அப்படிச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர்களுக்குச் சாமி மலையேறுவது வரை மீட்பில்லை.

ஆங்கிலத்தில் வில்லியம் சரோயனின் அராம் கதைகளை நினைவுபடுத்திக் கொள்ளலாம். அசோகமித்திரனின் லான்ஸர் பாரக் கதைகளை எண்ணிக் கொள்ளலாம். புதுமைப்பித்தனின் பூசணிக்காய் அம்பியில் இதன் முன்வடிவை காணலாம். மொழியின் நுட்பமான ஒரு இடம், பண்பாட்டுக் குறிப்புணர்த்தல்களால் ஆன ஒரு தளம் இது.

சுகா இலக்கியச்சூழலில் வளர்ந்தவர். அவர் குடும்பத்தில் எப்போதும் புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும்  உடனிருந்திருக்கிறார்கள். அவரது இளமைப்பருவ வாசிப்பு மொழியை தேர்ச்சி தெரியாமல் கையாளப் பயிற்சியை அளித்திருக்கிறது. டி.கே.சிதம்பரநாத முதலியாரின் வட்டத்தொட்டி நிகழ்ந்த வீட்டுக்கு அருகேதான் அவரது வீடு. டி.கெ.சியின்  ‘பேரப்புள்ளை’ அவர். மணமுள்ள நெல்லையை அவர் எழுத்தில் வாசிக்கமுடிகிறது. விஞ்சை விலாசும் இருட்டுக்கடையும் கொண்டுள்ள மணம் அது.

சுகாவின் இக்கட்டுரைகளை நான் அவை இணையத்திலும் இதழ்களிலும் வெளிவந்தபோதே வாசித்திருக்கிறேன். பலகட்டுரைகளில் நானும் நடித்திருக்கிறேன். இதில் வரும் ஜெயமோகன் எனக்கு இன்னமும் பிடித்திருக்கிறார். நல்லவர் மட்டும் அல்ல, நகைச்சுவை உணர்ச்சி கொண்டவரும்கூட. இடங்கள், மனிதர்கள் , நிகழ்வுகள் என விரியும் இக்குறிப்புகளில் அனைத்தையும் எளிதாகக் கடந்துசெல்லும் ஒரு நெல்லைக்காரரை காணமுடிகிறது. என்னுடன் எத்தனையோ இரவுகளில் ‘என்னத்தைச் சொல்ல!” என்று சிரித்த நண்பர் அவர்

[தடம் பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் சுகாவின் உபச்சாரம் தொகுதிக்கான முன்னுரை]

 வேணுவனம்

இரு சந்திப்புகள் 

முந்தைய கட்டுரை”இதான் ஒரிஜினல் சார்!”
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79