பகுதி பதினொன்று : மாசி
[ 1 ]
மாசி முதல் நாள் படைப்போன்பொழுதில் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து அரச அகம்படியினரும் அணிப்படையினரும் அஸ்தினபுரி நோக்கி எழவேண்டுமென்பது ஒருக்கப்பட்டிருந்தது. சௌனகரும் சிற்றமைச்சர்கள் சுரேசரும் சுஷமரும் அமைச்சு மாளிகையில் அதற்கான ஆணைகளை விடுத்துக்கொண்டிருக்க அரண்மனை முற்றங்களில் தேர்கள் அணிகொண்டன. படைவீரர்கள் கவசங்களும் படைக்கலங்களுமாக நிரைவகுத்து கோட்டை முகப்பில் கூடினர். பரிசும் வரிசையும் கொண்ட பெட்டகங்கள் வண்டிகளில் ஏற்றப்பட்டு படகுகளில் அடுக்கப்பட்டன. யமுனையில் பதினெட்டு அணிப்பெரும்படகுகள் அரசக்கொடிகளுடன் துறையணைந்திருந்தன.
இரவெல்லாம் தருமன் தன் மஞ்சத்தறையில் துயிலாதிருந்தார். முன்னிரவில் இந்திரப்பிரஸ்தத்தின் நகர் மையத்தில் அமைந்த மின்கதிரோன் ஆலயத்தில் வணங்கி மலர்பெற்று வெளிவந்தபோது சௌனகர் “புலரியில் குடித்தெய்வங்களையும் காவல் தெய்வங்களையும் வணங்கி விடைகொள்ள பொழுதிருக்காது, அரசே. இப்போதே அச்சடங்குகளை முடித்துவிடுவது நன்று” என்றார். “ஆம், நானும் அவ்வாறே எண்ணினேன். இளையோர் எங்கே?” என்றார். “நகுல சகதேவர் ஆலயத்திற்கு கிளம்பிவிட்டனர்” என்றார் சௌனகர். “பிறர்?” என்றார். அவர் ஒன்றும் சொல்லவில்லை. தருமன் தலையசைத்துவிட்டு நடந்தார்.
வைதிகர் குழுவுடனும் அமைச்சர்களுடனும் சென்று ஏழு எல்லைக் கொற்றவை ஆலயங்களிலும் எட்டு திசைக்காவலர் ஆலயங்களிலும் பதினாறு உருத்திரர்களின் ஆலயங்களிலும் பூசை முறைகளை முடித்து நள்ளிரவில்தான் அரண்மனைக்கு மீண்டார். களைத்துப் போய் உணவருந்த அமர்ந்தார். சௌனகரிடம் “பீமனையும் அர்ஜுனனையும் சென்று பார்த்து காலையில் அவர்கள் சித்தமாக இருக்கவேண்டுமென்று மீண்டுமொருமுறை சொல்லிவையுங்கள். ஓலைகள் எதுவென்றாலும் என்னிடம் கொண்டுவரத் தயங்கவேண்டியதில்லை” என்றார்.
“மூன்று நாழிகைப் பொழுது தாங்கள் துயில முடியும், அரசே” என்றார் சௌனகர். “ஆம், நான் உடனே மஞ்சத்திற்கு செல்லவேண்டும். படகில் என்னால் சீராக துயிலமுடிவதில்லை” என்றார் தருமன். மஞ்சத்தறையில் நுழைந்தபோது மறுகணமே துயின்றுவிடுவோம் என்றே எண்ணினார். வெண்பட்டு விரிப்புடன் இறகுச்சேக்கை மஞ்சம் புதுமணல்பரப்பென காத்திருந்தது. திறந்த சாளரத்தினூடாக காற்று திரையசைத்து உள்ளே வந்தது. தனிச்சுடர் அமைதி என நின்றசைந்தது. மஞ்சத்தில் அமர்ந்து கால்களை நீட்டிக்கொண்டு எப்போதுமென பாண்டுவின் பாதங்களை விழிக்குள் நிறுத்தி “தந்தையே! தெய்வங்களே!” என்று நீள்மூச்செறிந்தபின் படுத்தார்.
வெகுநாட்களாக தன் மஞ்சத்தறையில் தனித்து உறங்குவதே அவர் வழக்கம். திரௌபதி அவருடனிருக்கும் மாதங்களிலும்கூட தன் இரவின் தனிமையை பேணிக்கொண்டார். தனிமை அமைதியென்றாகி சூழ்ந்துகொள்கையிலேயே துயில் அவர் மேல் படரும். பெரும்பாலான நாட்களில் பின்னிரவின் குளிர் உடலை தொடும்வரை நூல்தேரவோ தனக்குத்தானே என நாற்களமாடவோ செய்வது அவர் வழக்கம். பகடையற்ற யவனநாற்களமே அவருக்கு உகந்தது.
பனி அறையில் மரத்தூண்களை குளிர்ந்து விறைக்கச் செய்திருந்தது. அனைத்து மரப்பரப்புகளும் ஈரமாக இருப்பதைப்போன்ற மயக்கு எழுந்தது. வெளியே மரங்களில் இலைகளிலிருந்து பனித்துளிகள் சொட்டிக் கொண்டிருக்கும் ஒலி கேட்டது. பிரம்மாண்ட பேருருக் கொண்ட அன்னை விலங்கின் அடிவயிற்றில் ஒட்டி அதன் நரம்புத்துடிப்புகளை கேட்டுக் கொண்டிருப்பது போல. கரிய விலங்கு. ஒளிரும் பல்லாயிரம் விழிகள் கொண்டது. அவ்வப்போது உடல் சிலிர்த்து அசைந்து வெம்மூச்சு விடுவது.
இருளில் நெடுந்தொலைவுவரை கேட்ட ஒலிகளை செவி கூர்ந்தார். நகரம் எப்போதும் முழுமையாக துயில்வதில்லை. இரவடங்குகையில் அதன் ஒலிகள் மாறுபட்டபடியே செல்லும். பின்னிரவில்தான் அங்காடிகளுக்குரிய பொதி வண்டிகள் நகர் நுழைவது வழக்கம். அத்திரிகளின் குளம்போசை நகரத்தின் கல்பாவிய தெருக்களில் எழுந்தபடியே இருக்கும். இரவில் நகரில் அமைந்த பல்லாயிரம் கொடிகள் காற்றில் படபடக்கும் ஒலி தெளிவாக கேட்கும். இரவு மட்டுமே எழும் பெரும் சிறைப்பறவை கூட்டம் போல.
எண்ணிக் கொண்டது என யமுனையிலிருந்து எழுந்து நகர்மேல் சூழப்பறக்கும் காற்று புழுதிகலந்த பாசிமணத்தை காற்றில் நிறைக்கும். அங்காடிகளிலிருந்தென்றால் மட்கிய மலர்களும் தழைகளும் மடித்த எண்ணையும் சுண்ணமும் கலந்த மணம். சுழன்று ஆலயங்களிலிருந்து வந்ததென்றால் அகிலும் அரக்கும் கலந்த தூப மணம்.
அங்காடி வெளி முழுக்க கட்டப்பட்டிருக்கும் தோற்கூரைகளை காற்று உந்தி எழுப்ப அவை உருண்டு புடைத்து பின் அமையும் ஒலி. அரண்மனையின் பல நூறு தாழ்கள் குலுங்கும் ஒலி. கதவுகள் முனகி திகிரியில் சுழன்றமையும் வலியோசை. மிகத் தொலைவில் யமுனையின் அலைகள் கரையை அறையும் ஒலிகூட கேட்பது போல் தோன்றியது. களிறின் பிளிறல் போல கொம்போசை எழுப்பியபடி கலம் ஒன்று படித்துறையில் இருந்து கிளம்பியது.
அதன் பெரும்பாய்கள் ஒவ்வொன்றும் எழுந்து புடைத்து கயிறுகளை இழுத்து விம்மி அதிர்வதை கேட்டார். அதன் கொடிகள் காற்றில் எழுந்து துடித்தன. அவற்றின் மேல் சேக்கை அடைந்திருந்த பறவைகள் கலைந்து இருளில் எழுந்து சிறகடித்து குழம்பி கரை நோக்கி சென்றன. அது விலகிய இடத்தில் அடுத்த கலம் இறங்குமுகத்தில் பிளிறியபடி அணைந்தது. அதிலிருந்த மாலுமிகளின் குரல்களை கேட்க முடிந்தது. சிறிய கொம்புகளும் சங்குகளும் ஒலித்தன. களிறுகள் இழுத்துச் சுழற்றும் எடைத்துலாக்களின் புரிமுள் உறுமியது.
ஒலிவடிவில் மொத்த நகரத்தையே அவர் பார்த்துக் கொண்டிருந்தார். செவியறியாத ஒலிகள். கேட்கும் ஒலித்துளிகளை நெஞ்சுக்குள் எஞ்சிய ஒலியால் நிரப்பி முழுமை செய்து அவர் வரைந்தெடுத்து பரப்பிய அப்பெருநகரம் உண்மையில் எங்குள்ளது? எத்தனை நகரங்களாக அது ஆடிப்பரப்பிலென தன்னை பெருக்கிக்கொண்டிருக்கிறது இப்போது?
எழுந்து சென்று சாளரம் வழியாக வெளியே தெரிந்த அரண்மனையின் செண்டுவெளி முற்றத்தை நோக்கி நின்றார். அதன் மறுஎல்லையில் கொற்றவை ஆலயத்தின் மேல் முப்புரிவேல் பதித்த செம்மஞ்சள் கொடி பறந்து கொண்டிருந்தது. அதன் முகப்பின் பெருவாயில் மூடப்பட்டு அதன் இருபக்கமும் வெண்கலத்தால் உருக்கிச் செய்து பொறிக்கப்பட்ட உக்ர சண்டிகை, ஊர்ஜ சண்டிகை இருவரின் முகங்களும் இருபக்கமும் எரிந்த பந்தத்தீயின் வெளிச்சத்தில் உருகித் ததும்பும் உலோகத்துளிகள் போல தெரிந்தன. மேலும் மேலும் விழி கூர்ந்து அவற்றின் விழிகளைக்கூட சந்தித்துவிடலாமெனத் தோன்றியது.
செண்டுவெளி முழுக்க அந்தியில் கூடியிருந்த மக்களின் கைகளிலிருந்து உதிர்ந்த சிறு பொருட்கள் விழுந்து கிடந்தன. மகளிர் குழலுதிர்ந்த மலர்மாலைகள், குழந்தைகள் ஆடிய பாவைகள், சிற்றுணவு பொதிந்த இலைகள். பந்தங்களின் செவ்வொளியில் செம்மண் பரப்பில் பதிந்து சென்ற அத்திரிகளின் கால் குளம்புகளின் சுவடுகளை விழிதொட்டு மீட்டு விடலாமென்று தோன்றியது.
ஏன் நிலையழிந்திருக்கிறோம் என்று தருமன் தன்னைத்தானே கேட்டுக் கொண்டார். அகம் சிதறிப்பறக்கையில் வெளி நோக்கி விழி திருப்பும்போது புற உலகம் பருப்பொருளால் ஆனது என்பது அளிக்கும் ஆறுதலைப்போல அழுத்தமான பிடி பிறிதொன்றில்லை. எண்ணங்களைப்போலன்றி தங்கள் வடிவை எந்நிலையிலும் காத்துக்கொள்ளும் தகைமையுடன் புறப்பொருட்களை அமைத்திருப்பதன் பெருங்கருணையை அவர் எண்ணிக் கொண்டார். இவையும் அணுகினால் அகல்பவையாக, தொட்டால் உருமாறுபவையாக, கணம் ஒன்றென பிறந்து கணம்தோறும் பிரிந்து பெருகுபவையாக, காணாதிருக்கையில் அகல்பவையாக இருந்தன என்றால் மானுடனுக்கு சித்தமென்றே ஒன்றிருக்குமா?
சித்தமென்பது புழுதி. புற உலகெனும் பருவெளிமேல் அது படிந்து தன் உருவை அடைந்து தானென்று ஓர் உலகு சமைக்கிறது. அடியிலுள்ளது மாறா வடிவப்பருப்பெருக்கு. இந்த மாளிகை இவ்வடிவிலேயே ஊழியின் இறுதிவரை இருக்க உறுதி பூண்டது. பிறிதொரு பருப்பொருள் ஒன்று மோதி மாற்றாமல் அது உருவழிவதில்லை. இந்தத் தூண் என்றுமென நின்றிருக்கிறது. அந்தப் புரவி புரவியென்றே தன்னை முற்றாக வரையறுத்துக் கொள்கிறது.
தெய்வங்களே என்ன எண்ணிக் கொண்டிருக்கிறேன்! என் எண்ணங்களை வெறும் கொந்தளிப்பென்று உணர்கிறேன். அவை ஒவ்வொன்றையும் இப்பருப்பொருட்களுடன் முற்றாகப் பிணைக்க விரும்புகிறேன். துள்ளும் புரவியை தறியில் கட்டுவதுபோல. பருப்பொருளால் ஆனது அகம். என் நூல்கள், என் அறங்கள், என் உணர்வுகள். அனலென புனலென அலைபாய்பவையும் பருப்பொருட்கள் அல்லவா? ஆடிப்பாவையில் நெளிபவையும் பருப்பொருட்கள்தானே? ஒருவேளை புறவெளியென விரிந்திருக்கும் இப்பருப்பொருள் வெளியும் வெறும் அலையோ அதிர்வோதானா? எளியவனென இங்கிருக்கும் என் விழிமூக்குசெவிதோல்நாக்கில் அளிக்கும் மயக்குதானா?
இருள் சூழ்ந்துள்ள இப்புடவி என்பது ஒரு பெருக்கு. அண்ட வெளியின் ஆழத்தில் எவர் விழியும் தொடாமல் சுடர்ந்து கொண்டிருக்கும் பல்லாயிரம் கோடி ஆதித்யர்களுடன் அதை பிணைக்கிறது இவ்விருள். எந்த ஆதித்யனின் ஒளியாலும் தொடப்படாத பல்லாயிரம் கோடி கோள்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது இங்குள்ள ஒவ்வொரு மணல்பருவும். பகலில் உருதிரட்டி வரும் ஒவ்வொன்றும் இருளில் ஒளி அழிந்து ஒற்றைப் பெரும்பரப்பென ஒன்றாகி விடுகின்றன. இரவு பகலை கரைத்தழிக்கிறது. புள்ளியிட்டு கோடிணைத்து விரிந்த பெருங்கோலத்தை மிதித்துக் கலைக்கின்றன கரிய யானையின் கால்கள். யானை தோல்நலுங்க நடக்கிறது. மின்னுகின்றன ஒளிகொண்ட இருள்துளியென விழிகள்.
நீள்மூச்சுடன் அவர் திரும்பி வந்து மஞ்சத்தில் படுத்தார். உடல் ஓய்வை நாடுகையில் உள்ளம் எப்படி திமிறி எழமுடியுமென்று வியந்தார். ஒவ்வொரு தசையும் களைப்பை இனிய உளைச்சலென உணர்ந்து எலும்பின் இழுவிசைகளிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு தளர்ந்தது. இருபாதங்களும் இருபக்கமும் தொய்ந்தன. கைகள் உயிரிழந்தவை போல் சேக்கை மேல் படிந்தன. நுரை இறகை என சேக்கை அவரை உள்வாங்கிக் கொண்டது. விழுவது போல் உணர்ந்தார். உதிர்ந்த பட்டுச்சரடென நெளிந்து அவரை அணுகி அகன்ற பாதையில் ஒரு கால் நடந்து செல்வதுபோல் கண்டார். அறிந்த கால்கள். சிலம்பணிந்தவை. அவள்தான்! அவர் விழிதூக்கி அவளை நோக்கியதும் செவி அருகே சிரிப்பை கேட்டார்.
உடலதிர எழுந்து அமர்ந்தார். எழுந்தமர்ந்தது சித்தமே என்றும் உடல் இன்னமும் சேக்கையிலேயே கிடப்பதையும் உணர்ந்தார். கையூன்றி உடலை உந்தி எழுந்தார். மெல்லிய நடுக்கத்தை உணர்ந்தபடி எதை பார்த்தோம் என்று எண்ணினார். எதையோ ஒன்றை. இந்நாட்கள் புரியாத கனவுகளால் அலைக்கழிக்கப்படுகின்றன. உள்ளிருந்து எதுவோ ஒன்று மொழியோ ஓசையோ உணர்வோ இன்றி கூவி அழைத்துக்கொண்டே இருக்கிறது. தீங்கு ஒன்று நிகழும் என்ற எச்சரிக்கையா? அவ்வண்ணம் தோன்றவில்லை. அச்சமா? அதுவுமில்லை. பிறிதென்ன?
விதுரர் இந்திரப்பிரஸ்தத்திற்கு வந்து அவைமுகமன் பெற்றபின் அவரை மந்தண அறையில் சந்தித்து பீஷ்மரும் துரோணரும் கிருபரும் திருதராஷ்டிரரும் ஒப்புக்கொண்ட வழி என்று பன்னிரு பகடைக்களம் ஆடுவதைக் குறித்து சொன்னதும் மறு எண்ணம் இல்லாமல் உவகைப்பெருக்குடன் அவர் கைகளை பற்றிக்கொண்டு “ஆம், மூத்தோரின் சொல். அதுவே எனக்கு இறையாணை” என்றார். அது ஊழின் கணம். ஒரு துளியேனும் எண்ணம்பிறழாமல் எடுத்த முடிவு. வாழ்வில் ஒரு முறை கூட அத்தகைய ஒரு உடன்முடிவை எடுத்ததில்லை.
அதன் பின் நூறு கோணங்களில் எண்ணி சூழ்ந்த பின்னரும் அம்முடிவன்றி பிறிதெதும் உகந்ததென்று தோன்றவுமில்லை. அன்னையும் அவரிடம் சொன்னாள் அதுவே அவர் வழி என்று. திரௌபதி அவர் விருப்பம் அதுவென்றால் அவளுக்கும் அதுவே என்றாள். உடன்பிறந்தோர் நால்வரும் பிறிதொன்று சொல்லவில்லை. ஐயத்துடன் குழம்பிக் கொண்டிருந்த சௌனகராலும் மாற்று என ஒன்றை சொல்ல இயலவில்லை. அவ்வண்ணமெனில் எஞ்சுவது என்ன?
முடிவை இளையோரிடம் பேசியபோது நகுலன் “இளைய யாதவரிடம் சொல்சூழ்ந்த பின்னர் முடிவெடுத்திருக்கலாம், மூத்தவரே. எனினும் எடுத்த முடிவு இந்திரப்பிரஸ்தத்தின் அரசாணை. அவ்வண்ணமே ஆகட்டும்” என்றான். “பிறிதென்ன வழியை இளைய யாதவர் சொல்லியிருக்கக்கூடும், இளையோனே?” என்றார் தருமன். நகுலன் “அறியேன்” என்று மட்டும் சொன்னான். அன்றே துவாரகைக்கு ஒரு பறவைச் செய்தியை அனுப்பினார்.
ராஜசூயம் முடிந்ததுமே இளைய யாதவரை தேரிலேற்றி அர்ஜுனனே நகர்த் தெருக்களினூடாக ஓட்டிச் சென்று துவாரகைக்கு வழியனுப்பியதைப்பற்றி துவாரகா கமனம் என்னும் குறுங்காவியத்தை சாரதர் என்னும் புலவர் இயற்ற சூதர் அதை பாடிப்பரப்பினர். நீலவிழி திறந்த பீலி முடியும், அந்திப்பொன் பட்டாடையும் அணிந்து எப்போதுமுள்ள இன்சிரிப்புடன் இளைய யாதவர் தன் அரண்மனை விட்டு வெளிவந்தபோது அவரும் தம்பியரும் அரண்மனை வாயிலில் காத்து நின்றிருந்தனர். அவர் தலைவணங்கி “வருக, துவாரகைக்கரசே. இன்று நீங்கள் நகர் நீங்குகிறீர்கள். பல்லாயிரம் மடங்கு பெரிதாக உங்கள் நினைவு இங்கே நின்றிருக்கும்” என்றார்.
இளைய யாதவர் புன்னகைத்து “மூத்தவரே, தாங்கள் பாரத வர்ஷத்தின் சக்ரவர்த்தி. தங்கள் அவைக்கு வந்து விடை கொண்டு செல்ல வேண்டியதுதான் முறைமை” என்றார். “இங்கு வந்தது எங்கள் குலம் காக்கும் தெய்வத்தை வழிபடுவதற்கு உரிய உள நிலையில், யாதவரே” என்றார் யுதிஷ்டிரர். “சொல் சூழ தங்களுக்கு சொல்லித்தர வேண்டியதில்லை” என்று புன்னகைத்தார் இளைய யாதவர்.
ஐவரும் அவரை அரண்மனைக் கூடத்திற்கு அழைத்துக்கொண்டு சென்றனர். அங்கு குந்தியும், திரௌபதியும், சுபத்திரையும், பலந்தரையும், தேவிகையும், விஜயையும், கரேணுமதியும் சேடியர் சூழ காத்து நின்றிருந்தனர். அவர்களை நோக்கி சென்று குந்தியை வணங்கி “அத்தை, அரண்மனை விட்டு தாங்கள் வருவது முறையே அல்ல. நான் அங்கே வந்திருப்பேன்” என்றார். “இத்தனை காலம் இங்கிருந்தாய். உன்னை பார்க்கவேயில்லை என்று படுகிறது” என்றாள் அவள். திரௌபதியையும் பிறரையும் நோக்கி புன்னகைத்து “அரசியரும் வருவீர்கள் என்று எண்ணவே இல்லை” என்றார்.
“அனைத்து முறைமைகளையும் கைவிட்டு இங்கு வரவேண்டுமென்பது எனது ஆணை” என்றார் தருமன். “இந்நாள் ஒவ்வொருவரின் கண்களிலும் எஞ்சவேண்டும், யாதவரே. இனியவை அனைவருக்கும் உரியவையல்லவா?” இளைய யாதவர் “சென்றதுமே மீள்வதைப்பற்றித்தான் எண்ணுவேன்” என்றார். பீமன் “இளையோன் துவாரகைக்கு வரப்போவதாகச் சொல்கிறான்” என்றான். இளைய யாதவர் அர்ஜுனனை நோக்கிவிட்டு புன்னகைத்தார்.
குந்தி தேனும் பாலும் பழச்சாறும் கலந்த மதுபர்க்கத்தை பொற்கிண்ணத்தில் அவருக்கு அளித்தாள். அவர் இரு கைகளாலும் வாங்கி ஒருமுறை உறிஞ்சி உண்டார். “வருகையில் அளித்த மதுபர்க்கம் அளவுக்கு இதுவும் இனியதே” என்றார். “இன்னும் நூறு மதுபர்க்கங்கள் தங்களுக்கு அளிக்க எங்களை வாழ்த்தவேண்டும்” என்றாள் திரௌபதி. அவள் பொற்கிண்ணத்தில் அளித்த தேனமுதை வாங்கி ஒருவாய் குடித்து “இது அனலென சுவைகொண்டுள்ளது” என நகைத்தார்.
அரசியர் ஒவ்வொருவரும் முகமன் உரைத்து தேனமுதளித்தனர். நகுலனும் சகதேவனும் அவர் காலடிகளைத் தொட்டு சென்னி சூடினர். உபபாண்டவர்கள் அபிமன்யுவும் பிரதிவிந்தியனும் சுருதசோமனும் சுருதகர்மனும் சதானீகனும் சுருதசேனனும் யௌதேயனும் சார்வாகனும் நிரமித்ரனும் சுகோத்ரனும் வந்து அவர் கால்கள் தொட்டு வணங்கினர். வாழ்த்துகளும் முகமன்களும் முடிந்து அவர் அரண்மனை முற்றத்திற்கு வந்தபோது அங்கிருந்த வைதிகர் அவரை வாழ்த்தி கங்கைநீரும் அரிமஞ்சளும் சொரிந்தனர். மங்கல இசை முழங்கியது.
அமைச்சர் சௌனகர் கைகாட்ட அரசத்தேர் வந்து நின்றது. அதன் பொன்வளைவுகளில் அரண்மனையின் வெண்ணிறத் தூண்களும் செம்பட்டுக் கொடிகளும் பட்டுப்பாவட்டாக்களும் எதிரொளித்தன. “இது பட்டத்துத் தேரல்லவா?” என்றார். “ஆம். தங்களுக்கு இங்கு அனைத்தும் முதன்மையானதே அளிக்கப்படும்” என்றார் சௌனகர். இளைய யாதவர் வாயெடுப்பதற்குள் யுதிஷ்டிரர் “அனைத்து முறைமைகளையும் கடந்து விட்டோம்” என்றார். இளைய யாதவர் நகைத்தபடி “நன்று” என்று சொல்லி மீண்டும் ஒருமுறை அனைவரையும் நோக்கி புன்னகைத்து கைகூப்பி தேரிலேறி அமர்ந்தார்.
அரண்மனைப் பெண்கள் அருகணைந்து ஒருவர் தோளை ஒருவர் பற்றிக்கொண்டு விழிகனிந்து அவரை நோக்கி நின்றனர். பார்த்தன் பொற்பட்டுத்தலைப்பாகையுடன் பீடத்திலமர்ந்திருந்த பாகனுக்கு கைகாட்ட அவன் கடிவாளத்தை வைத்துவிட்டு இறங்கினான். பார்த்தன் ஏறி பாகனுக்குரிய பீடத்தில் அமர்ந்து கடிவாளங்களை தன் இடது கையில் பற்றி வலது கையில் சம்மட்டியை எடுத்துக் கொண்டான். இளைய யாதவர் உரக்க நகைத்து “நன்று! நன்று!” என்றார்.
அவர் “செல்க!” என்று கைகாட்டியதும் அர்ஜுனன் கடிவாளத்தைச் சுண்டி இழுக்க ஏழு வெண்புரவிகளும் நுரையெழுந்த அலையென ஒன்றாக காலெடுத்து வைத்தன. தேர் இளங்காற்றில் மிதந்தெழும் இறகுபோல ஓசையின்றி முன் சென்றது. இளைய யாதவர் புன்னகையுடன் திரும்பி “நல்லூழ் தொடர்க, அரசே! பாரதவர்ஷத்தின் மணிமுடி என்றும் தங்கள் தலைமேல் ஒளிவிடுக!” என்றார். “தங்கள் அருளிருக்கையில் என்றும் அவ்வண்ணமே” என்றார் தருமன்.
“ஆம், என்றும் அது அவ்வாறே இருக்கும்” என்றபின் அவர் விழிகள் சற்று மாறுபட்டன. “அரசே, நாடாள்பவன் துறவிக்கு இணையானவன். துறந்து துறந்து அடைவதே அவன் பீடம் என்றறிக! விழைவுகளை, உறவுகளை, உணர்வுகளை துறக்கவேண்டும் அவன். மாமுனிவர்களோ அறங்களையும் தெய்வங்களையும் துறந்தவர்கள்” என்றபின் திரும்பி அர்ஜுனனிடம் செல்லும்படி கைகாட்டினார்.
தேர் சென்று மறைவது வரை கூப்பிய கைகளுடன் நோக்கி நின்ற யுதிஷ்டிரர் அதன் பின்னரே அவர் சொன்னதற்கு என்ன பொருள் என்று எண்ணினார். அதைப்பற்றி எவரிடமாவது பேச வேண்டுமென்று உளம் எழுந்தபோது நெஞ்சடக்கி அதை கடந்தார். பேசப்படாததால் அச்சொல் அவருள் புதைந்து மறைந்தது. தனிமையில் பலமடங்காக அது திரும்பி வந்தது. உறவுகளை, விழைவுகளை, உணர்வுகளை கடப்பது முறை. அறங்களையும் தெய்வங்களையும் கடந்து அடையும் பீடமென்பதன் பொருள் என்ன?
இத்தருணத்தில் அறங்களைக் கடக்காது நின்றுவிட்டேனா? தெய்வங்களை அஞ்சிவிட்டேனா? உறவுகளையே கடக்க இயலவில்லை. விழைவுகளை, உணர்வுகளை கடப்பதும் கடினமாகத்தான் இருக்கிறது. விதுரர் வந்து கைபற்றி கோரியபோது பன்னிரு பகடைக்களம் கூடுவதென எடுத்த முடிவு சத்ரபதி என்று நின்று அடைந்தது அல்ல. அரசன் என்றுகூட அல்ல. நூற்றைவருக்கு மூத்தவன் என்ற வகையில் மட்டுமே.
“ஆம்” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். அதை பிழை என்று இளைய யாதவர் சொல்லக்கூடும். பன்னிரு பகடைக்கு முடிவெடுத்ததை அவருக்கு எழுதி அனுப்புகையில்தான் அவர் இறுதியாக சொல்லிச் சென்ற அவ்வரி நினைவில் எழுந்தது. “எதையும் துறக்க என்னால் இயலவில்லை, யாதவரே. அனைத்தையும் அள்ளிச் சேர்த்து ஆவி தழுவி நின்றிருக்கும் பெருந்தந்தையாகவே இம்முடிவை எடுத்தேன். பிழையென்று தோன்றவில்லை. எனவே உகந்ததென்று உணர்கிறேன். உங்கள் வாழ்த்தொன்றை கோருகிறேன்” என்று எழுதியிருந்தார்.
துவாரகையிலிருந்து மறுமொழி நோக்கி ஒவ்வொரு நாளும் காலை எழுந்தார். பறவைத் தூது சென்றுமீள நாளாகவில்லை என்று சிலநாட்கள். வந்துவிடும் வந்துவிடும் என்று சில நாட்கள். பிறிதொன்று வர வாய்ப்பில்லை என்று மேலும் சில நாட்கள். கைவிடமாட்டார் என்று எஞ்சிய நாட்கள். அஸ்தினபுரிக்குச் செல்லும் நாள் அணைந்தபோது அர்ஜுனன் “இளைய யாதவரிடமிருந்து ஒரு சொல் எழாது செல்வதெப்படி, மூத்தவரே?” என்றான். “வந்துவிடும். பிறிதொரு சொல் வரவாய்ப்பில்லை” என்றார் தருமன்.
கிளம்புவதற்கு மூன்று நாட்களுக்கு முன் துவாரகையிலிருந்து பறவைச்செய்தி வந்தது. இளைய யாதவரின் முத்திரையுடன் அக்ரூரர் அமைத்த சொற்களில் அரச முறைப்படி ஒரு வாழ்த்து. “இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் எடுத்த முடிவு நலம் பயக்குமென்று துவாரகை விரும்புகிறது. பன்னிரு பகடைக்களமும் போரே. போர் அனைத்திலும் வெற்றி கொள்பவரே சத்ராஜித் என அழைக்கப்படுவார். இப்போரிலும் அரசரின் ஆண்மையும் அறமும் வெல்வதாக!” ஓலையை வாசித்தபின் சௌனகரிடம் அளித்துவிட்டு தருமன் எண்ணச்சுமைகொண்டு தலை குனிந்து அமர்ந்திருந்தார்.
“அரசமுறைமைச் சொற்கள்” என்றான் அர்ஜுனன். “ஆம், இது போர் என்பதால் போருக்குரிய முறையில் முறைமைச் சொற்கள் எழுதப்பட்டுள்ளன” என்றார் சௌனகர். “இளைய யாதவர் ஒருபோதும் முறைமைச் சொற்கள் அனுப்புவதில்லை” என்றான் அர்ஜுனன். “இத்தருணத்தில் பிறிதொன்றை அனுப்ப இயலாதே” என்றார் சௌனகர். தருமன் எழுந்து “அவரது சொல் வந்துவிட்டது, அதுவே போதும்” என்றார்.
ஆனால் தன் அறைக்குத் திரும்புவது வரை வெந்தசைக்குள் புகுந்த முள்மேல் நெருடுவது போல அதையே உழற்றிக் கொண்டிருந்தார். அதில் ஒவ்வொரு சொல்லையும் எடுத்து பிறிதொரு பொருளுண்டா என நோக்கினார். ஆண்மை, அறம் – என்ன பொருள் அதற்கு? சட்டென்று சினம் தொற்றிக் கொள்ள திருமுக எழுத்தனை அழைத்து ஓலை எழுதச்சொன்னார். உணர்வெழுச்சியில் நடுங்கும் குரலுடன் சொல்லிக்கொண்டே சென்றார்.
“ஆம், ஆண்மை பிறழ்ந்தவன்தான், யாதவரே. கோழை. நூற்றைந்து தம்பியரையும் எண்ணுகையில் என் கைகள் தளர்கின்றன. எதற்காகவும் கொலைவாளின் கூர்கொள்ள என்னால் இயலவில்லை. என் அறமென்பது குடியறமே. மானுடம் கடந்த பேரறம் இன்றுவரை என் உள்ளத்தில் எழவில்லை. மைந்தரை தோளெங்கும் சுமந்து கனிமரமென சதசிருங்கத்தில் நின்ற பாண்டுவே என் உள்ளத்தில் தெய்வமாக நின்றிருக்கிறார். அவர் மைந்தனென நின்றே இம்முடிவை எடுத்தேன். அவ்வண்ணமே அமைந்து களமாடவிருக்கிறேன். அவர் அருளால் வெல்வேன் என்று எண்ணுகிறேன்.”
எழுத்தர் ஓலையைச் சுருட்டி குழலிலிட்டு முத்திரை இடும்போது குறுபீடத்தில் அமர்ந்து முகவாயைத் தடவியபடி அதை பார்த்துக்கொண்டிருந்தார். “இன்றே செய்தி சென்றுவிடும், அரசே” என்று திருமுகத்தன் தலைவணங்கியதும் “வேண்டாம்” என்றார். அவன் விழிதூக்கி நோக்க “அதை அனுப்ப வேண்டியதில்லை. கொடு” என்று சொல்லி வாங்கினார். தன் சிற்றறையைத் திறந்து அதற்குள் இட்டு, அவன் செல்லலாம் என்று தலையசைத்தார்.
தருமன் தன் சிற்றறையைத் திறந்து அந்தத் திருமுகத்தை பார்த்தார். உருளை வடிவ பகடை போல சிற்றறை இழுப்பை திறந்தபோது உருண்டு அவரை நோக்கி வந்தது. சிலகணங்கள் நோக்கிவிட்டு அதை மூடினார். மீண்டும் மஞ்சத்தில் சென்று படுத்து கண்களை மூடிக் கொண்டார். ஆயிரம் கைகள் நீட்டி கவ்வ வரும் நண்டு போல ஒலிவடிவமாக நகரம் எழுந்து அவரை சூழ்ந்தது. குறைகும்பத்தின் கார்வை நிறைந்த நகரம்.
எழுந்து நீரருந்தினார். பெட்டியைத் திறந்து பன்னிருகளத்தை எடுத்து மஞ்சத்தில் பரப்பி தந்தங்களால் ஆன பகடைக் காய்களை வெளியே எடுத்தார். கையிலிட்டுச் சுழற்றி விரித்து எண் சூழ்ந்து காய் நகர்த்தினார். பதினெட்டு முறை தன்னை தான் வென்று முடித்தபோது அறை வாயிலை மெல்ல ஏவலன் தட்டும் ஒலி கேட்டது. “வருக!” என்றார் தருமன். கதவு திறந்த மெய்க்காவலன் “அமைச்சர் சௌனகர்” என்றான்.
சௌனகர் உள்ளே வந்து வாழ்த்துரைத்து “இளைய யாதவரின் சொல்” என்றார். பதற்றத்துடன் “புதிய ஓலையா?” என்றபடி அவர் எழுந்து அருகே வந்தார். “ஆம்” என்று அவர் சொன்னார். அதை நடுங்கும் கைகளுடன் வாங்கி விரித்து எழுதப்பட்டிருந்த சொற்களை படித்தார். முதலில் ஒரு சொல்லும் பொருளாகவில்லை. விழிமயங்க எழுத்துக்கள் கலைந்து அலையடித்தன. பின் நெஞ்சறைதலை மெல்ல அடக்கி மீண்டும் வாசித்தார்.
“அனைத்தும் நன்றே என்றுணர்க! இறுதி வெற்றி உடனுறையும் என்பதில் ஐயம் கொள்ளற்க! என்றும் உங்களுடன் என் படையாழி நின்றிருக்கும். நன்று சூழ்க!” என்று இளைய யாதவர் தன் கைப்பட எழுதியிருந்தார். மந்தணக் குறி எழுத்துக்களில் அமைந்த அச்செய்தியை வாசிக்க வாசிக்க மீண்டும் விருப்பு எழுந்தது. விழிகளால் வாசித்து தீராது கைகளால் தொட்டு வாசித்தார். அதை நெஞ்சோடு அணைத்துக் கொள்ளவேண்டும் என்று தோன்றியது. உளம் பொங்கி விழிகளில் நீரெழுந்தது. சௌனகரிடம் “செல்வோம், அமைச்சரே. இனி ஒன்றும் கவலை கொள்ள வேண்டியதில்லை” என்றார்.