ஸ்பிடி சமவெளி, சென்னை – எத்தனை குளறுபடிகள், எத்தனைமோசடிகள்!

bell11417699916823

 

ஸ்பிட்டி சமவெளியிலிருந்து நேற்று முன்தினம் சென்னைக்கு வந்தேன். ஜேம்ஸ்பாண்ட் சினிமாவின் கடைசிக்காட்சி போல ஆகிவிட்டது பயணம். சண்டிகரில் நண்பர் இளையராஜா என்ற ராக்கெட் ராஜாவின் இல்லத்திற்கு இரவு  ஒன்பது மணிக்கு வந்தோம். அங்கிருந்து முன்காலையில் கிளம்பி டெல்லிக்குச் சென்று ஏர்  இந்தியா விமானத்தில் சென்னை திரும்புவதாக திட்டம்.

 

பதினொரு மணிக்குப் படுத்தும் ஒன்றரை மணிக்கு எழுந்து இரண்டு மணிக்குக் கிளம்பினோம். ஐந்து மணிநேரம் காரில் பயணம். வழியில் ஆறு இடங்களில் விபத்துக்கள் நடந்து கார்கள் கவிழ்ந்து எரிந்துகொண்டிருந்தன. சேவிங் பிரைவேட் ரயான் படத்தில் போர்க்களத்தில் செல்லும்  காட்சியைப்போலிருந்தது அப்பயணம். ஓட்டுநர்களுக்கு எந்த முறைமையும் இல்லை. வரிமாறுவதெல்லாம் நினைத்தது போல. எங்கள் ஓட்டுநரும்தான்.

 

டெல்லி விமானநிலையம் வந்தோம். ஒன்பதரை மணிக்கு ஏர் இந்தியா விமானம். எழுநூறு நூபாய் லாபம் இருக்கிறது என்று போட்ட பதிவு. பதினொரு மணிக்குத்தான் உள்ளே அனுப்பினார்கள். ஒன்றரை மணிநேரம் நான் தூங்கினேன். விழித்தபோது விமானம் அங்கேயே நின்றிருந்தது. டயர் பஞ்சர். திரும்ப இறங்கி மீண்டும் பாதுகாப்புச்சோதனைகளை முடித்து அடுத்த விமானத்தில் ஏறி சென்னை வந்துசேர்ந்தபோது மாலை ஐந்தரை மணி.

 

நான் கூடுமானவரை ஏர் இந்தியா விமானங்களில் ஏறுவதில்லை. அவை வானில் பறப்பதே அதிசயம். அரசுத்துறையில் வேலைபார்த்தவன் என்பதனால் எனக்கு எந்த அரசுத்துறையும் நேர்மையுடனும் திறமையுடனும் நடைபெற முடியும் என்னும் நம்பிக்கையே இல்லை. பிற அனைத்துக்கும் மேலாக முதன்மைக்காரணம் அதிகாரிகள்தான். அவர்கள் பதவிபெற்றதுமே குறுநிலமன்னர்களாக உணர்கிறார்கள். அதன்பின்  ஊழல்,தீனி, குடி, பெண் தவிர எதிலும் ஆர்வமிருப்பதில்லை. இருபத்துநான்கு மணிநேரமும் அடிபணிவோரும் துதிபாடிகளும் சூழ்ந்திருக்கவேண்டும். எதற்கும் பொறுப்பேற்கவும் மாட்டார்கள். திறமையான அதிகாரிகள் இருக்கலாம், இருந்தாகத்தானே வேண்டும். அவர்களிடம் அதிகாரம் இருக்காது.

 

சென்னையில் மறுநாள் சினிமாவேலைகள். அன்று மாலை இன்னொரு விடுதியறையை பதிவிடச்சொல்லியிருந்தேன். மேக் மை டிரிப் என்னும் இணையதளம் வழியாக ஓர் அறையை நண்பர் முன்பதிவுசெய்திருந்தார். பெல் ஓட்டல் என்னும் விடுதி.அது ஒரு ஸ்டார் ஓட்டல் என்று இணையதளம் சொன்னது. வாடகை 5000 ரூபாய். எனக்கு இருந்த தள்ளுபடி தவிர 2500 அளித்தேன். மாலை அங்கே சென்று பார்த்தால் டீக்கடை போன்ற விடுதி. கார் பார்க்கிங் கூட இல்லை. சாலையோரமாக ஒரு அசைவ உணவகத்தின் மேலே அமைந்திருந்தது. புழுதி படிந்த அறைகள். இடிந்த படிக்கட்டு

 

”இதுவா ஸ்டார் ஓட்டல்? ”என்றேன். “இது த்ரீ ஸ்டார் ஓட்டல் ” என்றார் அங்கிருந்தவர். “இதற்கா ஐயாயிரம் ரூபாய் வாடகை?” என்று கத்தினேன். “அது இணையதளத்தில். நேரில் ஆயிரத்தைநூறு ரூபாய்தான்” என்று கார்டைக் காட்டினார். என்ன செய்வதென்று தெரியவில்லை. சினிமா தயாரிப்பு நிர்வாகி ஒருவரைக்கூப்பிட்டு இன்னொரு அறையை அவசரமாக போடச்சொல்லி இரவு பத்து மணிக்கு திநகர் ரெசிடென்ஸி டவர்ஸ் ஓட்டலுக்குச் சென்று தங்கினேன். அந்த இணைய தளத்திற்குச் சென்று புகார் செய்தால் அது ‘உங்கள் புகாரை பதிவுசெய்ய முடியாது மன்னிக்கவும்’ என்று திரும்பத்திரும்பச் சொன்னது. பணம் போனதுபோனதுதான்.

 

சென்னையில் வேலைகளை முடித்துக்கொண்டு திருவனந்தபுரம் செல்லவேண்டும். விமானநிலையம்  வரை சென்றிறங்கியபோதுதான் என்னிடம் பணமில்லை என்பதைக் கண்டேன்.  சென்னை உள்நாட்டு முனையத்தில் நான்கு ஏடிஎம் இயந்திரங்கள். நான்குமே பழுது. கனரா வங்கியின் ஏடிஎம் இயந்திரங்களில் வங்கி வாசலில்கூட பணமிருப்பதில்லை என்பதை பலமுறை கண்டிருக்கிறேன். வங்கிக்குள்ளேயே சென்று மேலாளரிடம் புகார்செய்திருக்கிறேன்.  ‘ஆளில்லை சார்’ என காதுகுடைந்தபடி சொல்வார்கள். ஒரு விமானநிலையத்தில் அத்தனை ஏடிஎம்களும் இயங்காமலிருக்கும் தேசம் பிறிதொன்று ஆப்ரிக்காவில்தான் இருக்கமுடியும். இந்தியாவில் ஏடிஎம் கார்டுகளை நம்பி எங்கும் பயணம்செய்யமுடியாது.

 

பன்னாட்டு முனையம் வந்தேன். அங்கே நல்லவேளையாக பணமிருந்தது. நான் செல்லவேண்டியதும் பன்னாட்டு முனையத்திலிருந்து கிளம்பும் அபுதாபி விமானத்தில்தான். பதினாறாம் வாசல். அப்பகுதியில் எங்கும் குடிநீர் இல்லை. குழாய் பழுது என வருந்தியிருந்தன. பன்னாட்டுமுனையத்தின் மூன்று குடிநீர் ஊற்றுக்களும் பழுது. ஒரு புட்டி குடிநீர் வாங்கினேன் எண்பது ரூபாய்.

 

ஒருவழியாக விமானம். இதுவும் ஏர் இந்தியா. சென்று சேரும் என நம்பிக்கை கொண்டேன். எனென்றால் தனியாரின் மோசடி அரசுத்துறையின் வெட்டித்தனம் இரண்டுக்கும் நடுவே இன்றும் தங்கிவாழும் ஒரு அபூர்வ சமூகம் அல்லவா நாம்?

முந்தைய கட்டுரைகுறுங்கதைகள், அராத்து,கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 76