அன்புள்ள ஜெயமோகன்
விகடன் தடம் இதழில் என் பெயரையும் குறிப்பிட்டு இருந்தீர்கள். மிக்க நன்றி. எங்கும் என் பெயரையெல்லாம் மெனக்கெட்டு குறிப்பிட மாட்டார்கள் :-) தேவையுமில்லை என்பதும் உண்மைதான் !
அதிலும் 100 ஆண்டுகால தமிழ் சிறுகதை கட்டுரையில் கடைசியில் என் பெயர் இடம் பெறுவது எல்லாம் பனைமரத்து அடியில் அமர்ந்து மூச்சு விட பனம்பழம் விழுந்த கதைதான். உங்களின் பெருந்தன்மை அல்லது நீங்கள் கறாராக ப்ராக்டீஸ் செய்யும் அறம் மட்டுமே காரணமாக இருக்க முடியும் .
“அராத்து போன்றவர்களின் கதைகளும் இத்தகையவையே ” என்று எழுதி இருக்கிறீர்கள் . அராத்து ” போன்றவர்கள் ” யாரும் இல்லை :-)
போகன் சங்கர் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் எழுதுகிறார். நான் சிறுகதை வடிவத்தில் நான்கைந்து சிறுகதைகள் எழுதி உள்ளேன்.
“அவர்கள் இதை குறுங்கதைகள் என்னும் வடிவமாகச் சொல்கிறார்கள் ” என்று எழுதி இருக்கிறீர்கள். எனக்குத் தெரிந்து நான் மட்டுமே குறுங்கதைகள் என தலைப்பிட்டு “தற்கொலை குறுங்கதைகள் ” எழுதினேன். பின் சயனைட் குறுங்கதைகள் , பிரேக் அப் குறுங்கதைகள் என எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
விகடனில் ஜெயகாந்தனிடம் பேட்டி எடுக்கும்போதும் , இப்போதெல்லாம் சிலர் குறுங்கதைகள் என எழுதுகிறார்களே என கேள்வி கேட்டனர். சரி , என்னையே “சிலர் ” என பலர்பாலாக ஆக்கி விட்டார்கள் என சந்தோஷப்பட்டேன் :-)
இதை உங்களுக்கு எழுத காரணம் , எனக்கோ என் கதைகளுக்கோ இலக்கிய அந்தஸ்து போராடி பெற வேண்டி அல்ல. ஏதோ ஒரு செயல் சின்னதோ பெருசோ , அதை நான் செய்து இருந்தால் , நான் செய்தேன் என்றுதானே கூற வேண்டும் என்பது மட்டுமே காரணம். யதேச்சையாக ஒரு கொலை செய்து விடுகிறோம் , அந்த கொலையிலும் அடையாளம் தெரியாத பலர் பங்கு கேட்டால் எப்படி ? கொலை கூட கெத்தாக இருக்கிறதா ? சரி ஒரு முட்டு சந்தில் சிறுநீர் கழித்ததாக வைத்துக்கொள்வோம் :-(
நீங்கள் சோஷியல் நெட்வொர்க்கிங்கில் இல்லை என சொல்லி வருவதால் , இங்கே எழுதப்படுபவை எல்லாம் யார் மூலமாகவோதான் உங்களுக்கு வந்து சேர வேண்டி உள்ளது. அதனால் ஏற்படும் தகவல் பிழையை களைய இதையெல்லாம் சொல்கிறேன்.
மட்டுமன்றி , என்னைப்”போன்றவர்கள்” யாரும் இல்லை என்பதையும் உங்களுக்கு நானே தெரிவித்துக்கொள்ளவுமே இந்த கடிதம் :-)
சிரில் ஓரிரு முறை வாங்களேன் சந்திக்கலாம் என அழைத்து இருந்தார். மது இல்லாமல் பெண்களை மட்டுமே சந்தித்து பழக்கப்பட்டு இருந்ததால் , துணிவில்லாமல் விட்டு விட்டேன். எப்போதேனும் விடிகாலை வேளையில் சந்தித்து விடலாம்.
அன்புடன்
அராத்து
அன்புள்ள அராத்து,
பொதுவாக அக்கட்டுரையில் பொதுப்போக்குகளை அடையாளம் கண்டு அவற்றை இணைத்து ஒரு சித்திரத்தை உருவாக்க முயன்றேன். அத்துடன் ஒரு பரிசோதனை முயற்சியும் செய்தேன். வெறும் முப்பது நிமிடத்தில் அக்கட்டுரையை சொல்லி தட்டச்சு செய்வித்தேன். அந்த அரைமணிநேரத்தில் இயல்பாக நினைவுக்குவரும் சித்திரமும் அதிலுள்ள பெயர்களும்தான் ஒருவகையில் ‘நினைவில் நின்றவை’. சென்ற முப்பதாண்டுக்காலமாக தமிழிலக்கியத்துடனேயே வாழ்க்கையை அமைத்துக்கொண்ட எனக்குள் எஞ்சுபவையே என் வகையில் முக்கியமானவை. இதுதான் என் கணிப்பு. கட்டுரையை உண்மையில் இன்னமும் நான் வாசித்துக்கூட பார்க்கவில்லை
இப்போது பார்க்கையில் ஒன்று தெரிகிறது. பொதுப்போக்குகளை நாம் உலகளாவிய சூழலில்தான் தேடுகிறோம். அதன் நீட்சியை இங்கும் கண்டடைகிறோம். உண்மையில் இந்த பார்வை தவறானதாக ஆனதே இல்லை. நவீன இலக்கியம் என ஒன்று உலகளாவத்தான் உருவாகியது. அதிலுள்ள அத்தனை போக்குகளும் உலகளாவியவை. எந்த ஒரு பண்பாடும் முற்றிலும் வேறிட்ட ஓர் இலக்கிய அலையை உருவாக்கிக்கொண்டதே இல்லை.
வணிகக்கலையிலும் இப்படித்தான். ராக் அன்ட் ரோல், டிவிஸ்ட், பிரேக் என எல்லா கலைவடிவங்களும் உலகளாவ உருவாகின்றன. சமீபமாக உடை மற்றும் பாவனைகள் கூட உலகளாவ ஒன்றே.
ஆகவே இன்று உலகளாவிய தளத்தில் வந்துகொண்டிருக்கும் குறுஞ்சித்தரிப்பு [மைக்ரோ நெரேஷன்] தமிழில் எவ்வகையில் உள்ளது என்று பார்த்தேன். முகுந்த் நாகராஜன் அதை கவிதையில் வெற்றிகரமாகத் தொடங்கிவைத்தார். இசை உள்ளிட்ட இன்றைய கவிஞர்கள் படிமங்களில் இருந்து குறுஞ்சித்தரிப்புக்குச் சென்றுள்ளனர். [குமரகுருபரன் அதிலிருந்து வெளியேறியிருக்கிறார்]
புனைகதையில் அப்படி ஒரு டிரெண்டுக்காகத் தேடும்போது நீங்கள் நினைவுக்கு வந்தீர்கள். போகன் சங்கர் அனுபவக்குறிப்பு, கவிதை, குறுங்கதை என்னும் வடிவில் எழுதியவை புனைவுகள் என்றே நினைவுக்கு வந்தன. அவருடன் அவ்வடிவைப்பற்றி ஒருமுறை முச்சந்தியில் நின்று பேசிக்கொண்டிருந்ததும் நினைவுக்கு வந்தது. அவருக்கு குறுங்கதை வடிவில் எழுதவே இயல்பாக வருகிறது , விரித்தெழுதுவதைவிட என்று சொன்னார்.
அராத்து போன்றவர்கள் எனச் சொல்லியது இது ஒரு புது ’டிரெண்டாக’ ஃபேஸ்புக்கில் இருக்கக்கூடும், நானறியாமல் இந்தப்போக்கை முன்னெடுக்கும் பிறரும் இருக்கக்கூடும், என்னும் அனுமானத்தால் மட்டுமே. ஓரிரு கதைகளை அவ்வகையில் நான் வாசித்துமிருக்கிறேன்.
அதை ஒரு தனி வடிவமாக நீங்கள் முன்னெடுப்பதாகப் புரிந்துகொள்கிறேன். எந்த ஒரு வடிவமும் அடிப்படையில் பிறவடிவங்களால் ஆகாத ஒன்றை தொட்டு எடுத்து ஒரு வாழ்க்கையைக் காட்டும்போதே பொருள்படுகிறது. வாழ்த்துக்கள்
தருணம் அமையும்போது சந்திப்போம்
ஜெ