நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் – ஒரு வாசிப்பு

NTA

 

அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு,
பொருளடக்கத்தைப் பார்த்த கணமே நான் நவீனத் தமிழிலக்கிய அறிமுகத்தையும் தாண்டி உள்ளேயே போய்விட்டேன். வாசிப்பு வாசிப்பு என்கிறார்களே, வாசிப்பு என்றால் என்ன? வாசிப்பனுபவம் என்றால் என்ன? வாசித்து வாசித்து என்னதான் அறிந்தாய்? என்று இந்நூலைப் படிக்க ஆரம்பிக்கும்வரை ஒன்றும் அறியாமலும் கேட்பவர்களுக்கு ஒரு மனநிறைவான பதிலைக் கூற இயலாமலும் இருந்தேன். பல சிறுகதைகள், பல நாவல்கள் படித்திருந்தாலும் அனைத்தையும் படித்த படித்த அக்கணமே மறந்துவிடும் எனக்கு. ஏனெனில் அனைத்தும் ஒரு பொழுதுபோக்குக்காக படிக்கப்பட்டவை. எதையும் ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்டு யோசித்ததில்லை.

 

அதனால் அத்தனை படித்திருந்தாலும் அதனால் ஒரு நல்விளைவுகளும் ஏற்படவில்லை. என் சிந்தனையிலும் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. படிக்கும்போது உண்டாகும் கிளர்ச்சியை மட்டுமே அனுபவித்திருக்கிறேன். இந்தக் கருத்து சமீப காலங்களில் நான் படித்த தங்கள் அறத்துக்கும் கொற்றவைக்கும் காடுக்கும் முதற்கனலுக்கும் கிடையாது. அவற்றை ஆராயாமல் படித்தேனே தவிர அவற்றால் நான் எவ்வாறு உடலாலும் உள்ளத்தாலும் பாதிக்கப்பட்டேன் என்றும் அவற்றால் தோன்றிய சிந்தனைகளையும் ஏற்கெனவே நான் கொண்டிருந்த எண்ணங்களில் ஏற்பட்ட மாற்றங்களையும்  விரிவாகத் தெரிவித்திருக்கிறேன்.

 

 

ஆனால் இப்போது கூடுதலாக, தங்கள் நவீனத் தமிழிலக்கிய அறிமுக நூலைப் படிக்கப் படிக்க தங்களது படைப்புகளையே ஆராயத் தொடங்கிவிட்டேன், காடு நாவல் இவ்வரலாற்றுச் சூழலில் என்ன பங்காற்றுகிறது, வெண்முரசு இவ்வரலாற்றுச் சூழலில் என்ன பங்காற்றுகிறது என.

 

 

பொருளடக்கத்தில் அடங்கியுள்ள அறிமுகத்திலுள்ள “இலக்கியத்தை எதிர்கொள்ளுதலிலிருந்து கடைசி அத்தியாயத்திலுள்ள இதுவரை எனக்கு தெரியாத விளங்காத மார்க்ஸியக் கோட்பாடை ” மிக எளிதாகப் புரியவைத்தது வரை மிகவும் வியந்து ஆழ்ந்து படித்துக்கொண்டேயிருந்தேன். உண்மையைச் சொல்லப்போனால் தங்கள் இந்த தமிழிலக்கிய நூலிலிருந்து அறிவியலையும் வரலாறையும் அறிந்தேன் என்று சொன்னால் அது மிகையாகாது.

 

 

இந்நூலில் தாங்கள் படித்த புத்தகங்களை விமர்சித்திருக்கிறீர்கள். அந்நூல்களில் சிலவற்றையாவது நானும் வாசிக்கவேண்டும் என்று என் டைரியில் குறிப்பெடுக்க ஆரம்பித்தால் அது மட்டுமே பத்து பக்கங்களைத் தாண்டுகிறது. ஒவ்வொன்றையும் படித்து அவற்றை மதிப்பீடு செய்து தாங்கள் அளித்திருக்கும் இந்நூல் மிக மகத்தானது. ஒவ்வொரு தமிழனும் அவன் படைப்பாளியோ வாசகனோ கட்டாயம் இதைப் படிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஒரு படைப்பானது வெறுமனே அதைப் படித்து ரசிக்க மட்டும் அல்ல; அந்தப் படைப்பு எந்த வரலாற்றுச் சூழலில் எழுதப்பட்டது; அது இவ்வரலாற்றுச் சூழலில் என்ன பங்காற்றுகிறது என்று பார்க்கவேண்டும் என்று கடைசியாக தாங்கள் ஆணியடித்ததுமாதிரிக் கூறியது என் நெஞ்சில் பசுமரத்தாணிபோல பதிந்துவிட்டது.

 

தங்களின் இந்நூலைப் படித்துமுடிக்குமுன்பே எனக்கு தாங்கள் கூறியபடி எல்லாவகைக் கோணங்களிலிருந்தும் இன்னும் அதிகமாய் புத்தகங்களை வாங்கி வாசித்து ஆராயவேண்டும் என்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனையை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகமும் உருவாகிவிட்டது. இதைப் படிப்போர் நெஞ்சத்தில் எளிமையாக, மிக நுட்பமாக வாசகனுக்கு வாசிக்கும் ஆர்வத்தையும் படைப்பாளிக்கு எழுதும் ஆர்வத்தையும் தூண்டியிருக்கிறீர்கள். தங்களின் இந்தக்கொடை தமிழுக்கு ஆற்றப்பட்டுள்ள மாபெரும் சேவையென்றே எண்ணுகிறேன்.

 

 

நவீன தமிழிலக்கிய முன்னோடியாக சுப்ரமணிய பாரதி முதல் ஐந்து தலைமுறைகளையும் தாண்டி இன்றைய இலக்கியம் வரை பல எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புகளையும்  ஒரு படைப்பாளியாகவும் ஒரு விமர்சகனாகவும் அறிமுகப்படுத்தியும் அவை அமையும் வாதங்களையும்  கோட்பாடுகளையும் நுணுக்கமாக ஆராய்ந்தும் எளிய வகையில் புரியவைத்துள்ள இந்நூலின் மீதான வியப்பை சொல்லிக்கொண்டேயிருக்க விழைகிறேன். இருந்தாலும்  என்னைப் போன்றோர்க்கு புரியாதவற்றைத் தெளிவுபடுத்த மேலும் மேலும் சிறந்த படைப்புகளை வழங்கிட எல்லாம் வல்ல இறைவனிடம் தங்களுக்கு நல்ல உடல் நலத்தைத் தந்தருளும்படி வேண்டி நிறைவு செய்துகொள்கிறேன்.

 

 

இப்படிக்கு,
தங்கள் அன்புள்ள வாசகி,
பி. மேரி எர்னஸ்ட் கிறிஸ்டி.

 

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 73
அடுத்த கட்டுரை”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்!”