கடிதங்கள்

மகாமகோகிருமி பற்றி…

அன்புள்ள ஜெ!
நானும் மருத்துவன்தான் .எனினும் மகாமகோ கிருமி (மகாமகக் குளத்தில் இருந்து வந்திருக்குமோ?)-யை ரசித்துச் சிரித்தேன்.பொதுவாக டாக்டர்கள் டாக்டர் சம்பந்தமான ஜோக்குகளை ரசிக்கத்தான் செய்கிறார்கள்.ஆனால் தன் நோயாளி விளக்கம் கேட்டால் தான் பலருக்குக் கோபம் வருகிறது.இங்குள்ள மருத்துவர்கள் மிகத் திறமை சாலிகள் தான்.

ஆனால் நுகர்வு கலாச்சாரத்தில் மருத்துவமும் சிக்கி வணிகமயமானது பெரும் சோகம்.நம் அரசுகள் தானியஙளை அழுக விடும்.தன் மக்களை அழவிடும்.சுகாதாரத்தை அரசு கிட்டத்தட்ட கை கழுவிய சூழலில் ஒரு சாதாரண கூலித்தொழிலாளி கான்சர்,சிறுநீரக பாதிப்பு போன்ற நோய்கள் வந்தால் படும் பாட்டைப் பல முறை நேரடியாய்ப் பார்த்திருக்கிறேன்.பிழை மருத்துவத்தில் இல்லை.நிர்வாகத்தில்.

பெரும்பாலான மருத்துவர்கள் பள்ளியில் தங்களை விடப் பெரும்பாலும் குறைவாகவோ அல்லது இணையாகவோ மதிப்பெண்கள் பெற்று தற்சமயம் வள்மாய் இருக்கும் கணினித்துறையினரை ஒப்பிட்டுப் பார்த்து அவர்களின் வாழ்க்கைத்தரத்திற்கு உயர எல்லாவித முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர்.

மருத்துவர்கள்,குறைந்த பட்சம் அரசு மருத்துவர்கள், தாங்கள் அன்றாடம் சந்திப்பது எளிய,விளிம்பு நிலை மக்களை என்பதையும் தங்கள் வேலை குளிரூட்டப் பட்ட அறை வேலை அல்ல என்பதயும் நோய்,வேதனை,வலி,இறப்பு போன்றவை அன்றாடம் முகத்தில் அறைவதையும் மறந்திடக் கூடாது.it is a holy shit job!
அன்புடன்
ராம்

அன்புள்ள ராம்

நான் நம் மருத்துவர்களில் ஒருசாரார் அளிக்கும் சேவையைப்பற்றி எப்போதும் பெருமதிப்புள்ளவன். நீங்கள் சொல்வது உண்மை. மருத்துவம் என்பதில் ஒரு கலாச்சார உள்ளடக்கம் இருக்கிறது. மருத்துவத்தை ஒரு சமூகம் எப்படி பார்க்கிறது, சமூகத்துக்கும் மருத்துவருக்கும்நடுவே உள்ள உரையாடல் என்ன என்பது மிக முக்கியமானது

ஜெ
+++++++++++++

ந.பிச்சமூர்த்தி[அழியாச்சுடர்கள்] பற்றி

அன்புள்ள ஜெ..

ஆறாம் வகுப்பு படிக்கும் போது, எனது குக்கிராமத்துக்கு அருகில் உள்ள ஜம்பை என்னும் ஊரில் உள்ள நூலகத்தில் பிச்சமூர்த்தியின் வழித்துணையைப் படித்தேன்.

பல்லாண்டு பல்லாண்டாய் பாண்டங்கள் பல செய்து

பழுத்த விரல் படைத்த பண்டைப் பழங்குயவன்

என்னும் அக்கவிதையின் ஆரம்ப வரிகள் இன்னும் நினைவிருக்கின்றன.

பின்னர் ரமணர் ஆசிரம்த்துக் கதைகளுள் ஒன்றாக, பிச்ச மூர்த்தி அவரைச் சந்திக்கச் சென்ற நிகழ்வையும் படித்த பின்பு ஒரு வேளை அச்சந்திப்பே இக்கவிதையின் பின்புலமாக இருந்திருக்குமோ என்று நினைத்துக் கொண்டேன். ரமணரிடம் கேட்டாராம், இச்சைகளை விட முடியவில்லையே என்று.. அதற்கு ரமணர் சொன்னாராம் – பழம் பழுத்தால் தானே விழும்.. பின்னர் கர்மயோகம் பற்றி ஒரு வினாவை எழுப்பியிருக்கிறார். ஒன்றும் சொல்லாமல் எழுந்த ரமணர் – செல்லும் வழியில் ஒரு மரக் கொம்பை எடுத்து, நீண்ட நேரம் செதுக்கி அதை மொழு மொழுவென்று ஆக்கி அதை எதிர்ப்பட்ட ஆட்டிடையனிடம் கொடுத்துச் சென்றார் என்று போகிறது கதை.

அவர் பற்றி உங்களிடம் பேச நினைத்தேன். ஏனெனில் அவர் பற்றிய விவாதங்கள் உங்களை அறிந்த இந்த இரண்டாண்டுகளில் உங்கள் பக்கங்களில் காணவில்லை. ஆனால் நீங்கள் பேசியிருப்பீர்கள் என்று அழியாச் சுடரில் தேடினேன். உங்களதும், சு.ராவினதும் கிடைத்தன. இரண்டும் இரண்டு கோணங்கள்.

அதில் ஹெமிங்வே பற்றி நீங்கள் சொன்ன மாதிரி நானும் உணர்ந்தேன். கடலும் கிழவனையும் விட கடல்புரத்தில் எனக்கு மேலான ஒன்றாகத் தெரிகிறது

மிக மேலோட்டமான ஒரு வழியில் இருந்து, வேலையை ஈடுபாட்டோடு செய்ய – அதில் மனம் அமிழ்ந்து சந்தோஷமாகச் செய்யத் தூண்டிய காரணிகளில் ஒன்று வழித்துணை கவிதை. ஜோனதன் லிவிங்ஸ்டன் ஸீகல் இரண்டாவது..

சிறு வயதில், சாலையில் செல்லும் போது ஒரு நாள் எங்கள் ஊர் வயதான தாத்தா என்னை வழிமறித்து, “கண்ணு.. ரோட்டில போகையில, பீச்சாங்கைப் பக்கமாத்தான் போகோணும்.. தார் ரோட்டில நடக்காம, மண்ணுலதேன் நடக்கோணும்..” என்று அறிவுறுத்தினார். அப்படி ஒரு தாத்தாவாக அவரை வரித்துக் கொள்கிறது மனம்.. என்ன அழகான தாடி அவருக்கு!!!

பாலா

அன்புள்ள பாலா

சுந்தர ராமசாமியின் நூலில் ந.பிச்சமூர்த்தியைப்பற்றி நீங்கள் அளித்துள்ள அதே பார்வைதான் இருக்கிறது. மரபில் கனிந்த ஒரு மனமாகவே அவரைப் பார்க்கிறார் சுரா

ந.பிச்சமூர்த்தி பற்றி நான் ஒரு நீளமான கட்டுரை எழுதியிருக்கிறேன். இலக்கியமுன்னோடிகள் வரிசை நூலில்

ஜெ

++++++++++++

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நாஞ்சில் நாடனைப் பற்றிய ஆழமான விவரணை அடங்கிய இந்த கட்டுரை அற்புதமாக அமைந்திருக்கிறது. பல இடங்களில் நக்கலடிப்பதில் நீங்கள் நாஞ்சில் நாடனை விஞ்சி விட்டீர்கள். வரிதோறும் தெறிக்கும் அங்கதம் வயிறு வலிக்க சிரிக்க வைத்த அதே சமயம், நாஞ்சில் என்ற அரிய மனிதரை மீண்டும் மீண்டும் சிந்திக்க வைக்கிறது. சைவமும் சாரைப் பாம்பும்”, “சாலப் பரிந்து”,” ஆசை என்னும் நாய்கள்”, மிதவை, ‘அம்பாரி மீது ஒரு ஆடு’, போன்று கதைகளில் மட்டுமே கண்டு வந்த நாஞ்சிலை நேரில் கண்டு பழகியதைப் போன்ற உணர்வை அளித்தது உங்கள் கட்டுரை.

 

மிக்க அன்புடன்,
கணேஷ்
சிங்கப்பூர்

அன்புள்ள கணேஷ்

நாஞ்சில்நாடனின் இணையதளம் மிக சுவாரசியமாக உள்ளது. அவரது பரந்துபட்ட பார்வையும் நகைச்சுவையுணர்ச்சியும் அற்புதமானவை

இதே கட்டுரை என் இணையதளத்திலும் உள்ளது

ஜெ

திரு.ஜே.மோ,

நாத்திக இயக்கங்களின் எல்லை என்ன? என்ற உங்கள் கட்டுரையில் தெளிவாக திராவிடம் என்பது “எதிர்-மதவாதம்” என்பதைச் சொல்லியதற்கு மிகவும் நன்றி.
ஆனால் மடல் அதைப்பற்றியது அல்ல. நீங்கள் ஓர் இடத்தில் உபயோகப்படுத்திய “கழுவியநீரில் பிள்ளையையும் அள்ளிக்கொட்டக்கூடியவரா” என்ற சொலவாடை பற்றியது. அது ஆங்கிலத்தின் “Throwing out the baby with the bathwater” என்ற சொலவாடையை மொழிபெயர்த்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. உண்மையில் இந்தியாவில் உள்ள எந்த மொழியில் அதை அப்படியே மொழி பெயர்த்தால் அது ஆங்கிலம் தெரிந்தவருக்கு மட்டுமே விளங்கும் என்பது என் கருத்து.

அந்த சொலவாடையின் மூலம் ஜெர்மன் மொழியில் உள்ளது. குளிர்பிரதேசமான ஐரோப்பாவில் கூழானாலும் குளித்துக் குடிக்கும் கலாச்சாரம் என்னவோ மிகவும் சமீபத்தில் தான் தோன்றியது எனலாம். அப்படியே குளிர் காலத்தில் குளிப்பதென்றால் குடும்பமே ஒரே bathtub வென்னீரைப் பயன்படுத்தும். ஐஸ் விழுந்துகொண்டிருக்கும் போது வென்னீரைத் தயார் செய்ய எக்கச்செக்க விறகு செலவாகும், ஆகவே இப்படி ஏற்பாடு. குடும்பமே ஒரே bathwater ஐப் பயன்படுத்திக் குளித்தபின் சிறு குழந்தையை கடைசியில் குளிப்பாட்டுவார்களாம். அப்பொழுது அழுக்குத் தண்ணீரில் குழந்தை இருப்பதே தெரியாது. அப்படியே தூக்கிக்கொட்டினால்….Throwing out the baby with bath water தான்.

இதை அப்படியே மொழிபெயர்த்துப் பயன்படுத்தினால் நம் சிந்தனையில் பொதுவாக எட்டாத ஒன்றாகவே இருக்கும். புரியாத மாதிரியே எழுதுறார் என்று பெயர் கிடைக்கும். தீயவையை விலக்க நல்லவற்றையையும் சேர்த்து தூக்கிவீசுவதற்கு தமிழில் நல்ல சொலவாடையை இப்படி “இறக்குமதி” செய்வதைவிட வேறு வழி இல்லையா ?

அன்புடன்
ஷங்கர்.

அன்புLள சங்கர்

அந்த பழமொழி இங்கே குமரிமாவட்டத்தில் சாதாரணமாக புழக்கத்தில் இருக்கக்கூடியது. நாஞ்சில்நாடன்கூட எழுதியிருக்கிறார். இங்கே பிறந்த குழந்தையை உடனே குளிப்பாட்டும் பேறுகாரியின் செயலாகச் சொல்லப்படுகிறது

அதன் மூலம் நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது

நன்றி

ஜெ

முந்தைய கட்டுரைகுணங்குடி-நாஞ்சில்
அடுத்த கட்டுரைஅ.முவின் நாட்கள்