‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 71

[ 15 ]

பீஷ்மர் விதுரர் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே கூச்சலிடத் தொடங்கிவிட்டார். கையிலிருந்த அம்பை வீசிவிட்டு அவரை நோக்கி விரைந்து காலடி எடுத்துவைத்து “என்ன சொல்கிறாய்? மூடா! இதையா அந்த முடவன் உன்னிடம் சொல்லியனுப்பினான்? என்னவென்று நினைத்தான்? அஸ்தினபுரியின் அரசகுலத்துடன் விளையாடுகிறானா அவன்?” என்று கூவினார். “இல்லை, இது ஒருபோதும் நிகழப்போவதில்லை. குருவின் குருதிவழிவந்தவர்கள் களிமகன்கள் போல் சூதாடி இழிவுசூடமாட்டார்கள்” என்றார்.

“அப்படியென்றால் போர்தான். நான் அனைத்து வழிகளையும் எண்ணிவிட்டேன்” என்றார் விதுரர். பீஷ்மர் தோள்தளர “ஆனால், சூதாடுவதென்பது…” என்றபின் பெருஞ்சினத்துடன் அப்பால் நின்றிருந்த ஏவலனிடம் “அம்புகளைப் பொறுக்கி அடுக்கு மூடா! என்ன செய்கிறாய்?” என கையை ஓங்கியபடி சென்றார். அவன் பதறி பின்னால் ஓடினான். அருகிலிருந்த பீடத்தில் வைக்கப்பட்டிருந்த மரக்குவளையைத் தட்டி ஓசையுடன் உருளவிட்டார். திரும்பி “விதுரா, சூதாடுவதென்றால் என்னவென்றறிவாயா?” என்றார். “ஆம் அறிவேன். ஆனால் சூதாட்டத்தில் அஸ்தினபுரிக்கு ஒரு தொல்மரபு உள்ளது. ஹஸ்தி அமைத்த பன்னிரு படைக்களம் இங்கே இருந்திருக்கிறது.”

“அதை பிரதீபர் இடித்தழித்தார்” என்று பீஷ்மர் கூவினார். “ஆம், நான் பகடையாடுவது சிறப்பு என்று சொல்லவரவில்லை. ஆனால் மீண்டும் ஆடும்போது அது நாம் தொடங்கிய புதியவழக்கம் என்று எவரும் சொல்லமுடியாது என்று சொல்கிறேன்” என்றார் விதுரர். “வேண்டுமென்றால் ஒரு பூசகன் வெறியாட்டெழுந்து சொல்லட்டும். தன் மைந்தர் பூசலிடுவதை ஹஸ்தி விரும்பவில்லை என்று. பன்னிருபடைக்களத்தை மீண்டும் அமைத்து பகடையாட்டம் நிகழும்படி அவர் ஆணையிடட்டும்.” பீஷ்மர் “வெறும் சூழ்ச்சிகள். நான் அதை சொல்லவில்லை” என்றார். ஆனால் அவரது குரல் தணிந்துவிட்டது.

“நம்முன் வேறுவழியில்லை. வேறு எந்தப் போட்டி என்றாலும் அது பீமனும் துரியோதனனும் நேரில் மோதிக்கொள்வதாகவே அமையும்” என்றார் விதுரர். “இருவரில் எவர் உயிரிழந்தாலும் அது தீரா வஞ்சமாகவே எஞ்சும்.” பீஷ்மர் “அதற்காக மாவீரர் வழிவந்த நம் குடியினர் வணிகர்களைப்போல அமர்ந்து பகடையாடுவதா? இழிவு…” என்றார். “அது சூதர் பாடலாக வாழும். நம் கொடிவழியினர் நம்மை அதன்பொருட்டு வெறுப்பார்கள்.” விதுரர் “போர் நிகழ்ந்து உடன்பிறந்தார் கொலையுண்டால் அதைவிடப்பெரிய இழிவு நம்மை சூழும். நம் கொடிவழியினர் மூதாதையரின் பழிசுமந்து வாழ்வார்கள்” என்றார்.

பீஷ்மர் கால்தளர்ந்து ஒரு பீடத்தில் அமர்ந்தார். “பிறிதொரு வழியை சகுனி சொன்னார்” என அவர் விழிகளை நோக்கி சொன்னார் விதுரர். “நீங்கள் தருமனிடம் சென்று அவன் அஸ்தினபுரியின் வேள்விப்புரவியை வணங்கி திறையளிக்கவேண்டுமென ஆணையிடலாம். அனைத்தும் முடிந்துவிடும் என்றார்.” ஒரு கணம் பீஷ்மர் கண்களில் சினம் எழுந்தணைந்தது. கைவீசி அதை விலக்கிவிட்டு தன்னுள் ஆழ்ந்தார். “ஒருவேளை உங்கள் ஆணையை தருமன் ஏற்கலாம்” என்றார் விதுரர். சினத்துடன் தலைதூக்கி “அறிவிலியே, ஏற்கவேண்டியவன் அவனா என்ன? அவள் அல்லவா?” என்றார்.

“ஆம்… திரௌபதி ஏற்கமாட்டாள்” என்றார் விதுரர். “திரௌபதி ஏற்றாலும் பிருதை ஏற்கமாட்டாள்” என்றார் பீஷ்மர். விதுரர் அவர் அவள் பெயரை அப்படி சொன்னதைக்கேட்டு ஓர் ஒவ்வாமை தன்னுள் எழுவதை உணர்ந்தபடி பேசாமல் நின்றார். “மேலும் இவன் கொள்ளும் இந்தக்கொந்தளிப்பு எதற்காக? வெறும் முறைமைக்காக இந்திரப்பிரஸ்தத்தின் அரசனும் இளவரசர்களும் வந்து வணங்கி நிற்கவேண்டும் என்பதா இவன் விழைவு? அதை அவர்கள் ராஜசூயப்பந்தலில் பலமுறை செய்துவிட்டனர். இவன் விழைவது பாஞ்சாலி வந்து இவன் அவையில் குறுநிலத்து அரசியாக ஒடுங்கி நிற்கவேண்டும் என்பதல்லவா? அவளை சிறுமைசெய்து செருக்கி எழவேண்டும் என்றுதான் அங்கனும் விழைகிறான்…”

“ஆம்” என்றார் விதுரர். “அது நிகழாது…” என்றார் பீஷ்மர். “இளைய யாதவன் அதை ஒப்பமாட்டான். இவர்கள் சற்றே அடங்கவேண்டும், வேறு வழியே இல்லை.” விதுரர் “போர்முரசுகள் சித்தமாகிவிட்டிருக்கின்றன. இத்தருணத்தில் எவர் சென்று சொல்லமுடியும்? எந்த அடிப்படையில்?” என்றார். “ஒரே அடிப்படைதான். இந்திரப்பிரஸ்தம் அஸ்தினபுரியைவிட வல்லமை மிக்கது. எவ்வகையிலும் அவர்களுக்கு இவன் நிகரல்ல. யாதவர்களின் செல்வமும் பெரும்படையும் இந்திரப்பிரஸ்தத்துடன் இணைந்துள்ளன. ஒருபோர் நிகழ்ந்தால் அஸ்தினபுரி வெல்லாது, ஐயமே இல்லை” என்றார் பீஷ்மர்.

“விதுரா, இந்த ஷத்ரியர் எவரும் புதியநாடுகளை புரிந்துகொண்டவர்கள் அல்ல. நான் அந்நிலங்களில் அலைந்திருக்கிறேன். அவர்களுக்கு மண்ணும் கடலும் வழங்கிய வாய்ப்புகள் எளியவை அல்ல. அந்நாடுகள் அப்பெயலை வேர்களால் உண்டு எழுந்து தழைத்து பேருருவாக நின்றிருக்கின்றன. போர் என்பது முதன்மையாக கருவூலங்களால் செய்யப்படுவது. அவர்களின் கருவூலங்கள் நீர்ஒழியா ஊற்றுபோன்றவை” என்றார் பீஷ்மர். “யவனநாட்டுப் படைக்கலங்களும் பீதர்நாட்டு எரிகலங்களும் அவர்களிடம் சேர்ந்துள்ளன. தொலைநிலங்களில் உதிரிகளாக சிதறிவாழ்ந்த பல்லாயிரம் தொல்குடிகள் சென்ற ஐம்பதாண்டுகாலத்தில் மெல்லமெல்ல படைகளாக திரண்டுள்ளனர். இந்தப்புதிய மன்னர்கள் எவரும் நம்மைவிட பெரிய படையை திரட்டிவிடமுடியும்.”

“மாறாக ஷத்ரியர் பலநூறாண்டுகளாக தங்கள் வாயில்களை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். சுற்றி நோக்கினால் தெரியும் உண்மைநிலை தங்களை சிறுமையும் துயரும் கொள்ளவைக்கும் என்பதனாலேயே அவற்றை அறியாமலிருக்கிறார்கள். அவ்வறியாமையை அவைப்பாடகர் போற்றி வளர்க்கிறார்கள். இந்தச் சிறுமக்களின் வீண்பேச்சுக்கு அளவே இல்லை. வேள்விப்பந்தலில் கோசலன் என்னிடம் சொன்னான், ஒரு ஷத்ரியன் ஆயிரம் நிஷாதர்களுக்கு நிகரானவன் என்பதனால் அவனிடம் இருக்கும் படை இங்குள்ள அனைத்து நிஷாதர்களின் படைகளை விடப்பெரியது என்று. என்ன சொல்வது? ஒருவனைக்கொல்ல ஓர் அம்புதான் கோசலனே என்றேன். அம்மூடனுக்கு புரியவில்லை.”

“போர் நிகழ்ந்தால் அஸ்தினபுரி அழியும். இவன் தன் தம்பியருடன் குருதிக் களத்தில் கிடப்பான்…” என்று பீஷ்மர் சொன்னார். “அத்துடன், அனைத்துக்கும் மேலான ஒன்றும் உள்ளது. இளைய யாதவனை மானுடர் எவரும் வெல்லமுடியாது.” விதுரர் “ஆம், அதையே நானும் உணர்கிறேன்” என்றார். “இந்த அப்பட்டமான உண்மையை அஸ்தினபுரியின் அரசன் உணர்ந்தாகவேண்டும். அது மட்டுமே இப்போது நிகழவேண்டியது” என்றார் பீஷ்மர். “உணர்ந்தால் அவர் தலைதாழ்த்தவேண்டும்” என்றார் விதுரர். “ஆம், வேறுவழியில்லை. ஆனால் அதை தனிப்பட்ட சிறுமை ஏதும் இல்லாமல் இனிய குலமுறைச்சடங்காகவே செய்து முடிக்க முடியும்” என்றார் பீஷ்மர்.

“அப்படியென்றால் இனி பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி யுதிஷ்டிரன் மட்டுமே. துரியோதனனுக்கு வாய்ப்பே இல்லை” என்றார் விதுரர். பீஷ்மர் “ஆம், அது உண்மை” என்றார். “ஆனால் உண்மைகளை ஏற்றுக்கொண்டுதானே ஆகவேண்டும்?” விதுரர் புன்னகைத்து “பிதாமகரே, அவர் பிறந்ததே பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தியென அமர்வதற்காக என எண்ணுபவர். அவரில் அவ்வெண்ணத்தை நாட்டியபடி இங்கே அறுபதாண்டுகாலமாக அமர்ந்திருக்கிறார் சகுனி. அந்தத் தவத்திற்கு இணையாக இங்கே பிறிது எதுவும் நிகழவில்லை” என்றார். “ஆம்” என்று பீஷ்மர் பெருமூச்சுவிட்டார்.

“இவ்வுண்மையை பிறிதிலாது உணர்ந்தால் அக்கணம் அவர்களிடம் போரிட்டு அக்களத்தில் இறக்கவே அரசர் முடிவெடுப்பார். ஐயமே வேண்டியதில்லை” என்றார் விதுரர். “தன்னியல்பிலேயே தலைவணங்காதவன் அவன்” என்றார் பீஷ்மர். “ஆற்றுவதற்கொன்றுமில்லை” என்று சொல்லி கைவிரித்து தலையை அசைத்தார். “ஆகவேதான் பன்னிருபடைக்களத்தை அமைக்கலாமென்கிறேன்” என்றார் விதுரர். பீஷ்மர் “மீண்டும் அதையே சொல்கிறாயா?” என்றார். விதுரர் “பகடைக்களம் நிகழுமென்றால் அதில் அஸ்தினபுரியே வெல்லும்” என்றார். “ஏனென்றால் அறுபதாண்டுகாலமாக சகுனி ஆற்றிய தவம் நிகழ்ந்தது பகடைக்களத்திலேயே. அவர் எண்ணுவதும் கனவுகாண்பதும் பகடைகளின் வழியாகத்தான். அவரை எவரும் வெல்லமுடியாது.”

“வென்றால்…” என்றார் பீஷ்மர். “ஒரு சடங்காக யுதிஷ்டிரன் முடிதாழ்த்தவேண்டியிருக்கும். அஸ்தினபுரி ஒரு ராஜசூயத்தையும் அஸ்வமேதத்தையும் ஆற்றும். பாரதவர்ஷத்தின் சத்ராபதி என்று துரியோதனன் முடிசூடமுடியும். சகுனி சூள் முடித்து காந்தாரத்திற்கு மீள்வார். கணிகரும் உடன் செல்வார்” என்றார் விதுரர். “ஆனால் அது வெறும் சடங்கே. போரில் வெல்லாத வரை இந்திரப்பிரஸ்தத்தை வென்றதாக பொருள் இல்லை. அதை அனைவருமறிந்திருப்பர். அகவே இளைய யாதவர் எண்ணியிருப்பவை எவற்றுக்கும் தடையில்லை. ஒருமுறை சடங்குக்காக முடிதாழ்த்தியதை தவிர்த்தால் பாரதவர்ஷத்தை உண்மையில் ஆளும் நாடாக இந்திரப்பிரஸ்தமே நீடிக்கும்.”

“ஆனால் இந்த முரண்பாடு எங்கோ மோதலாக மாறியாக வேண்டுமே?” என்றார் பீஷ்மர். “ஆம், ஆகவேண்டும். ஆனால் அதை இருபதாண்டுகாலம் ஒத்திப்போடலாம். அதற்குள் துரியோதனருக்கு வயது ஏறிவிடும். அவர் வனம்புகக் கூடும். லட்சுமணன் முடிகொள்வான் என்றால் அனைத்தும் சீராகிவிடும். அவன் ஆணவமற்றவன். யுதிஷ்டிரனைப் போலவே அறத்தில் நிற்பவன். திருதராஷ்டிரரைப்போல உள்ளம் கனிந்தவன்” என்றார் விதுரர். “அங்கே மறுபக்கம் யுதிஷ்டிரன் முடிதுறக்கலாம். திரௌபதி தன் விழைவை ஒடுக்கி உடன் செல்லலாம். தருமனின் மைந்தன் பிரதிவிந்தியன் எளிய உள்ளம் கொண்டவன். வேதம்கற்று வேள்விகளில் உள்ளம் தோய்பவன். பிதாமகரே, இந்த வஞ்சமும் விழைவும் எல்லாம் இந்தத் தலைமுறைக்குரியது. அடுத்து வருபவர்கள் கனிந்தவர்கள். அவர்கள் தோள்தழுவிக்கொள்வார்கள். ஐயமே இல்லை.”

“ஆம், அதில் உண்மை உள்ளது” என்றார் பீஷ்மர். மீண்டும் தனக்குத்தானே என தலையை அசைத்தபடி “ஆனால் பகடையாடல் என்பது ஊழுடன் ஆடுவது. எல்லையின்மைகளை சீண்ட மானுடனுக்கு உரிமையில்லை” என்றார். விதுரர் மெல்லிய எரிச்சல் ஒன்றை தன்னுள் உணர்ந்தார். “கணிகர் சொன்னார் உங்கள் அச்சம் அவருக்குத் தெரியும் என்று” என்றார், பீஷ்மர் வெறுமனே நோக்க “காசிநாட்டரசியை நினைவுறுத்தினார்” என்றார். அதைச் சொன்னதுமே அத்தனை எல்லைக்கு சென்றிருக்கலாகாதோ என்னும் பதைப்பை விதுரர் அடைந்தார். தந்தையரிடம் மைந்தர் பெறும் இடம் என்பது அவர்கள் அளிப்பதாகவே இருக்கவேண்டும் என்ற ஸ்மிருதிச்சொற்றொடர் நினைவில் எழுந்தது.

பீஷ்மர் பெருமூச்சுடன் “ஆம், நான் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றார். விதுரர் “தங்கள் விருப்பத்தை மீறி…” என சொல்லத்தொடங்க “என் விருப்பம் என ஏதுமில்லை. அனைத்தையும் நான் அடைந்தாகவேண்டும்” என்றார் பீஷ்மர். பின்பு ஓர் அம்பை கையில் எடுத்துக்கொண்டு பயிற்சிமுற்றம் நோக்கி சென்றார். விதுரர் அவரை நோக்கி நின்றார்.

[ 16 ]

திருதராஷ்டிரர் சினந்து எழுவார் என்பதை விதுரர் எதிர்பார்த்திருந்தார். ஆகவே அவர் தாடைகள் இறுக விழிக்குழிகளில் குருதிக்குமிழிகள் ததும்ப “ம்” என உறுமியபோது மேற்கொண்டு சொல்லில்லாது அமர்ந்திருந்தார். “சொல்!” என்றார் திருதராஷ்டிரர். விதுரர் அப்பால் நின்றிருந்த சஞ்சயனை நோக்கினார். பின்னர் “எனக்கும் இதுவே உகந்த வழி எனத் தோன்றுகிறது…” என்றார். தன் மேல் விப்ரரின் விழியூன்றலை உணர்ந்தார்.

தலையை அசைத்து பற்கள் அரைபட திருதராஷ்டிரர் “பீஷ்மபிதாமகருக்கும் ஒப்புதல் என்றால் நான் என்ன சொல்வது?” என்றார். கதவருகே நின்றிருந்த விப்ரர் உரத்தகுரலில் “இதிலென்ன எண்ணிச் சொல்ல இருக்கிறது? பேரரசர் ஒருபோதும் தன் மைந்தர் அவையமர்ந்து சூதாட ஒப்புக்கொள்ளப் போவதில்லை” என்றார். “சூதாடுதல் இழிகுலத்தார் செயல் என வகுத்தவர் அவரது பெருந்தந்தை பிரதீபர். அவர் அதை ஒருபோதும் மீறப்போவதில்லை.”

“ஆம்” என்றார் திருதராஷ்டிரர். “நான் விண்மீளும் நாளுக்கென காத்திருப்பவன். அங்கே என் தந்தையரை சந்திக்கையில் என்ன சொல்வேன் என்பதே என் வினா.” விதுரர் “சூது தீங்கென்பதில் ஐயமில்லை மூத்தவரே. ஆனால் போரைத்தவிர்க்க அதுவன்றி வேறுவழியே இல்லை என்னும்போது…” என்றதுமே விப்ரர் அங்கிருந்து கைநீட்டி “சூது உள்ளத்தால் நிகழ்த்தப்படும் போர். உள்ளத்தில் நிகழ்த்தப்பட்ட ஒன்று பருவெளியில் உருப்பெற்று வந்தே தீரும்…” என்றார்.

விதுரர் எரிச்சலுடன் “தத்துவத்தை எல்லாம் நானும் அறிவேன். பிறிதொரு வழி இன்றில்லை. இருந்தால் அதை சொல்லுங்கள்” என்றார். “வழி ஒன்றே. இரு உடன்பிறந்தாரும் தங்கள் தலைக்குமேல் குடைகொண்டுள்ள வானில் வாழும் மூதாதையரை எண்ணி தோள்தழுவிக்கொள்ளட்டும். இணைந்து நீரளிக்கட்டும். மானுடவாழ்வென்பது நேற்றிருந்தோரின் நீட்சி. நாளைவருபவர்களின் தொடக்கம். அதை அறிந்து வாழ்பவர்களே முழுமையாக வாழ்கிறார்கள். தானென்று எண்ணி தன்னதென்று இவ்வாழ்வை காண்பவன் துயரை அன்றி பிறிதை அடைவதில்லை. அதை அவர்களிடம் சொல்வதே உங்களைப் போன்றவர்களின் கடன்” என்று விப்ரர் சொன்னார்.

மூச்சிரைக்க வளைந்த உடல் ஊசலாட திருதராஷ்டிரரை நோக்கி வந்தபடி விப்ரர் சொன்னார் “இது அவரது இறுதிக்காலம். பெருந்தாதையென அமர்ந்த அரியணையாலேயே இன்றுவரை பேரரசர் சிறப்புற்றார். இனியும் அவ்வண்ணமே நீடிப்பார்.” இடையில் கைவைத்து நின்று “ஒருவேளை அவருக்கு கைநிறைய மைந்தரை அளித்த தெய்வங்கள் அவர் அதற்குத் தகுதியானவரா என்று பார்க்கும் ஆடலாகக்கூட இருக்கலாம் இதெல்லாம்” என்றார்.

“என் சொற்களை சொல்லிவிட்டேன். அவை முற்றிலும் மதிசூழ்ந்து அமைக்கப்பட்டவை. அவற்றை ஏற்பதும் புறந்தள்ளுவதும் அரசரின் தேர்வு.” விப்ரர் “அமைச்சரே, நீங்கள் கற்றது நெறிநூல்களை. நான் அறிந்தவை மானுட உள்ளங்களை. சொல்லுங்கள், பகடைக்கென காய்களை கையிலெடுத்தபின் அதில் கள்ளம் இயற்றாமல் களமாடி முடித்த மானுடர் எவரேனும் உண்டா?”

விதுரர் சினத்துடன் “இங்கே பன்னிரு படைக்களம் அமைந்திருக்கிறது முன்பு… மாமன்னர்களான ஹஸ்தியும் குருவும் ஆடியிருக்கிறார்கள்” என்றார். “அவர்கள் மானுடர்களும்கூட என்றால் கள்ளம் கலந்தே ஆடியிருப்பார்கள். ஆகவேதான் தெய்வமானபின் வந்து பிரதீபரிடம் அக்களத்தை அழிக்கும்படி ஆணையிட்டனர்” என்றார் விப்ரர். “நான் சொல்லாட விரும்பவில்லை. இது என் மதிசூழ்கை. இப்போது அணுகிவருவது குருதிபெருகக்கூடும் பெரும்போர். அதை கடந்து செல்ல ஒரே வழி இதுவே” என்றார் விதுரர்.

திருதராஷ்டிரரிடம் “அரசே, நாம் தவிர்க்க எண்ணும் அப்போர் வெறுமனே உடன்பிறந்தாரின் அரியணைப்பூசல் அல்ல. பாரதவர்ஷம் தன்னை உருக்கி பிறிதொன்றாக ஆக்கிக்கொள்வதற்காக புகவிருக்கும் உலை. அது நம் மைந்தர் குருதியினூடாக நிகழவேண்டியதில்லை என்பது மட்டுமே நம் இறைவேண்டுதல். வரலாறென்றாகி எழுந்து சூழ்ந்துள்ள ஊழின் விசைகளை நம்மைச்சுற்றிலும் காண்கிறேன். நம் எளிய அச்சங்களும் கொள்கைகளும் அதன்முன் பயனற்றவை” என்றார்.

“எதற்காக இதை என்னிடம் வந்து சொல்கிறாய்? நான் என்ன செய்யவேண்டும்?” என்றார் திருதராஷ்டிரர். “நீங்கள் உங்கள் ஒப்புதலை அளிக்கவேண்டும்” என்றார் விதுரர். “இன்று அதற்கான தேவை என்ன?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “தெளிவாகவே சொல்லிவிடுகிறேன். இது போரல்ல, குடும்பத்தார் கூடி மகிழும் நகைவிளையாட்டே என்ற தோற்றத்தை குடிகளிடம் அளிக்கவேண்டியிருக்கிறது. நீங்களும் பீஷ்மரும் அமர்ந்த அவையில் பகடையாட்டம் நிகழுமென்றால் மட்டுமே அவ்வண்ணம் எண்ணப்படும்.”

திருதராஷ்டிரர் கசப்புடன் சிரித்து “ஷத்ரியர்களுக்கு போர், குடிகளுக்கு விளையாட்டு… இல்லையா?” என்றார். “ஆம், அவ்வாறே” என்றார் விதுரர். “நான் மறுத்தால் என்ன ஆகும்?” என்றார் திருதராஷ்டிரர். “அஸ்தினபுரியின் மக்களையும் படைகளையும் நான் ஆள்கிறேனா இன்று?”

விதுரர் நேராக அவரை நோக்கி “உண்மையை சொல்லப்போனால் இல்லை. உங்கள் சொல்லுக்கு குலமுறைமை சார்ந்தும் குருதியுறவு சார்ந்தும் மட்டுமே இடமிருந்தது. அவற்றை அரசர் மீறினாரென்றால் நீங்கள் செய்யக்கூடுவது ஒன்றே. குலத்தலைவர்களைத் திரட்டி உங்களை ஆதரிக்கும் படைகளுடன் சென்று அரசரிடம் போரிடலாம். வென்று முடிநீக்கம் செய்து உங்கள் மைந்தரில் ஒருவனை அரசனாக்கலாம்.”

“நீ சொல்வது புரிகிறது. எல்லா பொருளிலும்…” என்று திருதராஷ்டிரர் ஆழ்ந்த குரலில் சொன்னார். “ஆனால் நான் ஒன்று செய்யமுடியும். அவன் அரியணை அமர்ந்துள்ள அவையில் சென்று நின்று அவனை போருக்கழைக்கலாம். மற்போருக்கோ கதைப்போருக்கோ. அவன் நெஞ்சைக்கிழித்து இட்டு மிதித்து அவன் மணிமுடியை நான் பெறுவேன். அதை யுயுத்ஸுவுக்கு அளிக்கிறேன். இந்த முரட்டு மூடனல்ல, அவனே இவ்வரியணையில் அமரத்தகுதியனாவன். அவன் அமரட்டும்.”

விதுரர் தன்னுள் ஒரு தசைப்புரளல் போல உணர்வசைவை உணர்ந்தார். திருதராஷ்டிரர் உரத்த குரலில் “ஆம் அவன்தான். அவன்தான் அரியணைக்குரியவன். இதோ நான் சொல்கிறேன். அஸ்தினபுரியை யுயுத்ஸு ஆளட்டும்” என்றார். விதுரர் “மூத்தவரே, சொற்களில் வாழும் தெய்வங்களை எண்ணாது பேசுதலாகாது என்பது அரசர்களுக்குரிய நெறி” என்றார். “அதிலும் பெற்றோர் தன் மைந்தரைப்பற்றி பேசும்போது கருமி வைரங்களைத் தொட்டு எடுப்பதுபோல சொல்சூழவேண்டும். என்றோ ஒருநாள் ஏனிது என்று நாம் திகைத்து வினவுகையில் உன் சொல்லில் எழுந்ததே இது என்று தெய்வமொன்று எழுந்து நம்மிடம் சொல்லும்படி ஆகலாம்.”

திருதராஷ்டிரர் திடுக்கிட்டவர் போல அவரை நோக்கி முகம் திருப்பினார். விழிகள் தத்தளிக்க உதடு இறுகியது. உடனே வெறியுடன் தன் நெஞ்சில் ஓங்கி அறைந்து “ஆம்! அவனை களத்துக்கு அழைக்கிறேன். என்னைக்கொன்றால் அவன் விருப்பப்படி இந்நகரை ஆளட்டும்” என்று கூவினார். “நானறிந்த நெறிநூல்களனைத்தும் சொல்வது இதுவே. அரசனை அறைகூவ ஷத்ரியன் எவனுக்கும் உரிமையுண்டு. அவனோ அவன் சொல்பெற்ற பிறனோ என்னுடன் களம்நிற்கட்டும்.” மூச்சிரைக்க அவரை நோக்கி வந்து “சொல், அவ்வாறு நெறியுள்ளதா இல்லையா? சொல்!” என்றார்.

“உண்டு” என்றார் விதுரர். “ஆனால் அந்நெறிக்கு சில விலக்குகளும் உண்டு. நோய்கொண்டவர், உறுப்புகுறைந்தவர், சித்தம்பிறழ்ந்தவர், தீயதெய்வத்தை உபாசிப்பவர், மாயம் அறிந்தவர், குலமுறையும் குருவழியும் வெளிப்படுத்தாதவர் என்னும் அறுவரை அரசன் தவிர்த்துவிடலாம். அவர்களை படைகொண்டு கொல்லலாம். சிறையிடலாம்.” திருதராஷ்டிரரின் உதடுகள் ஏதோ சொல்ல விழைபவை போல அசைந்தன. தன் தலையை கையால் வருடியபடி கால்மாற்றினார். அவர் உடலில் தசைகள் நெளிந்தன. பின்னர் பெருமூச்சுடன் தளர்ந்து “ஆம், அதையும் செய்வான். இன்று அவனுடனிருப்பவர்கள் அவர்கள்…” என்றார்.

“கணிகர் இதை சொல்லிவிட்டதனால் இனி சகுனி பிறிதொன்றை எண்ணப்போவதில்லை. அரசர் தன் மாமனின் மடிக்குழவியென்று இருக்கிறார்” என்றார் விதுரர். “அவன் எங்கே மூத்தவன்? அவனை வரச்சொல்! நான் அவனிடம் பேசுகிறேன்” என்றார் திருதராஷ்டிரர். “அங்கரும் அரசரும் இன்று முற்றிலும் இணைந்துவிட்டிருக்கின்றனர். அவர்களை இன்று தெய்வங்களால்கூட பிரிக்க முடியாது” என்றார் விதுரர். “மூத்தவரே, வஞ்சத்தால் இணைபவர்கள் மட்டுமே அவ்வாறு முழுமையாக ஒன்றாகிறார்கள்.”

திருதராஷ்டிரர் பெருமூச்சுடன் மெல்ல தளர்ந்து சுற்றிலும் நோக்கினார். சஞ்சயன் அருகணைந்து பீடத்தை இழுத்துப் போட அதிலமர்ந்தார். அவரிடமிருந்து பெருமூச்சுகள் வந்துகொண்டிருந்தன. காற்றில் சீறும் அனல்குவை போலிருந்தார் திருதராஷ்டிரர். விதுரர் அவரே கனன்று அணையட்டும் என காத்திருந்தார்.

“ஒன்று செய்யலாம்” என்றார் விப்ரர். “தன்னை ஏற்காத மைந்தரின் அன்னத்தை முற்றிலும் துறக்க தந்தையருக்கு உரிமை உண்டு. இதோ இத்தருணம் முதல் நீங்கள் உணவை மறுக்கலாம். பசித்து உடல் வற்றி இறக்கலாம். விண்புகுந்தபின்னரும் இவர்கள் அளிக்கும் அன்னத்தையும் நீரையும் ஏற்காமலிருக்கலாம்.”

திருதராஷ்டிரர் இரு கைகளையும் விரித்துக்கொண்டு எழுந்து “ஆம், அதுவே ஒரே வழி… அதுவே நான் செய்யக்கூடுவது” என்றார். “மூதாதையரே, இதோ நீங்கள் கேட்பதாக! நான் தந்தையென்றே வாழ்ந்தேன். தந்தையென்றே இறக்கிறேன். நான் மண் மறையும்போது என்னைச்சூழ்ந்து என் சிறுமைந்தரும் பெயர்மைந்தரும் சூழ்ந்திருக்கட்டும்…”

“மூத்தவரே, அதனால் ஆகப்போவதொன்றுமில்லை… அத்தகைய கட்டாயங்களை மைந்தருக்கு அளிப்பது எவ்வகையிலும் அறமல்ல” என்றார் விதுரர். “கட்டாயமல்ல. எனக்கு வேறுவழி இல்லை. என் மைந்தர் பகடையாடுவதை ஒப்புக்கொண்டவனாக விண்ணேறுவதைவிட உண்ணாநோன்பிருந்து உடலையும் ஆன்மாவையும் தூய்மைசெய்து மேலேறுவது எனக்கு மாண்பு… ஆம், அதுவே உகந்த வழி.”

“மூத்தவரே, இது என்ன எதையும் காணாத வெறி? அரசருக்கு அழகா இது?” என்றார் விதுரர். “ஆம், நான் விழியிழந்தவன். வெருண்டெழும் கண்ணற்ற பன்றி. எனக்கு என் மணங்களும் ஒலிகளுமே உலகம். அங்கே சொற்களில்லை. நூல்களுமில்லை. நான் பெற்ற உள்மணம் சொல்வது இதையே” என்றார் திருதராஷ்டிரர். “இதோ… இது என் ஆணை. துரியோதனன் உடனே படைப்புறப்பாட்டை நிறுத்தவேண்டும். கர்ணனும் ஜயத்ரதனும் தங்கள் நாடு மீளவேண்டும். உடன்பிறந்தார் தோள்தழுவ வேண்டும். பகடையாடலோ போரோ நிகழுமென்றால் நான் வடக்கிருந்து இறப்பேன். என் பழிச்சொல் இக்குலத்தின்மேல் என்றும் அழியாமல் நின்றிருக்கும். சென்று சொல் உன் அரசனிடம்!”

“மூத்தவரே…” என மேலும் சொல்லவந்த விதுரர் விப்ரரை நோக்கினார். அவரது ஒளியற்ற பழுத்த விழிகள் ஏற்கனவே விண்புகுந்து தெய்வமாகிவிட்டவை போல தெரிந்தன. பெருமூச்சுடன் “ஆணை!” என தலைவணங்கி திரும்பி நடந்தார். “சஞ்சயா, யுயுத்ஸுவை அழைத்து வா! நான் வடக்கிருக்கவிருப்பதை அவனிடம் சொல்! ஆவன செய்ய நான் ஆணையிட்டேன் என்று கூறு” என்றார் திருதராஷ்டிரர்.

முந்தைய கட்டுரைநித்ய சைதன்ய யதி
அடுத்த கட்டுரைபோரும் வாழ்வும் – முதல் வாசிப்பனுபவம், சுரேஷ் பிரதீப்