போரும் வாழ்வும் – முதல் வாசிப்பனுபவம், சுரேஷ் பிரதீப்

MTE5NTU2MzI0OTQxMDA2MzQ3

 

அன்புடன் ஆசிரியருக்கு

புதுமைப்பித்தன்  சிறுகதைகள்  பலவற்றை சில வருடங்களுக்கு  முன்பே  படித்திருந்த  போதிலும்  திரு. எம். வேதசகாயகுமார் அவர்கள்  குறித்து  நீங்கள்  எழுதிய  ஒரு கட்டுரையை  படித்த பின்பு அவர்  தொகுப்பித்த “103 புதுமைப்பித்தன்  சிறுகதைகள்” என்ற நூலினை படித்தேன். அதற்கு  முன்பு  சிறுகதை  தொகுப்புகளை படிப்பதில்  பெரிதாக  ஆர்வம்  இருந்ததில்லை.

ஆனால்  அத்தொகுப்பு காலத்தில்  பின் சென்ற ஒரு படைப்பாளியை மிக அருகில்  உணரச்  செய்தது. திரு . வேதசகாயகுமார்  அத்தொகுப்பிற்கு எழுதியிருந்த  முன்னுரையும் கால வரிசைப்படி படைப்புகளை அடுக்கி  இருந்ததும் அச்சிறுகதைகளின் வழியாக  அப்படைப்பாளியை அவர் படைப்புகள் செயல்பட்ட  சமூகத்  தளத்தை அந்த   சமூகத்தின் வரலாற்றினை அக்கால  மக்களின்  உளநிலையை  திறனாய்வு  செய்திருந்ததும் பெரும்  உழைப்பினை கோரியிருக்கும் அரும்பணியே.

அறத்துடன் நண்பர்களுக்கு  பரிந்துரைப்பதிலும் பரிசளிப்பதிலும் இந்த  நூலையும்  இணைத்துக்  கொண்டுள்ளேன். அச்சிறுகதை தொகுப்பின் வழியாக  நான்  உணர்ந்தவற்றில் தலையாயது பெரும்  படைப்புகள்  எல்லாக்  காலங்களிலும்  தாக்கத்தை  ஏற்படுத்தக் கூடியவை என்பதே. “ச்சே அந்தக்  காலத்திலேயே என்னமா  எழுதியிருக்கான் பாரு” என்பது அபத்தமான புகழ்ச்சியாக தோன்றத் தொடங்கியது  அத்தொகுப்பினை படித்த  பிறகுதான்.

போரும்  வாழ்வும்  படிக்கத்  தொடங்கியபோது பின்னாட்களில் வெளிவந்த பெரு நாவல் முயற்சிகளுக்கு  அது முன்னோடி என்றோ நூற்றைம்பது  வருடங்களுக்கு  முன்னர்  எழுதப்பட்டது என்றோ  எனக்குள்  எதுவித  எண்ணமும்  உருவாகி இருக்கவில்லை. ஆங்கிலப்  பிரதியில் சில அத்தியாயங்கள்  படித்த பின்பு  தமிழில்  அந்நூலினை வாசிக்க  வேண்டுமென்ற ஆவல் எழுந்தது. டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களின்  மொழிபெயர்ப்பு சில அத்தியாயங்களிலேயே வாசித்துக் கொண்டிருப்பது ஒரு மொழிபெயர்ப்பு நாவல் என்பதை மறக்கடித்துவிட்டது.

பிரெஞ்சு  கலாச்சாரம்  வலுவாக  ஊடுருவிய ரஷ்ய  உயர்குடியை பகடி செய்தவாறே நெப்போலியனுக்கு எதிராக  ரஷ்யா  நடத்தப்  போகும்  போருக்கான ஆயத்தங்களுடனும் போரில் கலந்து கொள்ளக் கூடிய உயர்  வகுப்பு இளைஞர்களுடனும் அவர்களின்  குடும்பங்களுடனும் தொடங்குகிறது. பீயரும் பால்கோன்ஸ்கிகளும் ராஸ்டோவ்களும் குராகின்களும் டோலாகாவும் விருந்துகளின் வழியாகவும் உரையாடல்கள்  வழியாகவும் அறிமுகமாகின்றனர். அவர்கள்  குறித்த  ஒரு சித்திரம் உருவான பின்பு போர் நோக்கி  நகர்கிறது.

இரண்டு  படைப்பிரிவுகளாக பிரிந்து நின்று  சண்டையிடும் வகைப்  போர்களையே உருவகப் படுத்தியிருந்த மனதிற்கு  டால்ஸ்டாய்  அறிமுகம்  செய்யும்  போர்க்களம் அதிர்ச்சி  தரவே செய்கிறது. தளபதியின்  கட்டுப்பாட்டில் அனைத்தும்  இருப்பதாக  நம்பும்  ஆண்ட்ரூ யுத்தம்  செல்லும்  போக்கிற்கு ஏற்றவாறு  பாக்ரேஷன் அளிக்கும்  உத்தரவுகளை  கண்டு ஆச்சரியம்  கொள்வதும் இளமைத் துடிப்பில் முன்னேறி காயம்படும் நிக்கலஸ் ஒற்றை பீரங்கிப் படையுடன்  எதிர்த்து நிற்கும்  டூஷின் வீரத்துடன்  சண்டையிட்டு போரின் அன்றைய  நாள் முடியும்  போது தாங்கள்  கைப்பற்றிய பதக்கங்களுடனும் உடுப்புகளுடனும் பதவி உயர்வுக்காக கெஞ்சும்  வீரர்கள்  என போர் குறித்த ஒவ்வொரு  பிம்பத்தையும் சிதறடிக்கிறது முதற் போர்களம்.

மேலும்  நடக்காதவற்றை  நடந்ததாக  நம்பி அதனையே உண்மையாக ஏற்று அதை மேலு‌ம்  பெருக்கிச் சொல்லுவதையும் நுண்மையாக  பகடி செய்கிறது.

சார் மன்னர் அலெக்சாண்டரை ஒரு பரிதாபமான  சூழலில்  நிக்கலஸ்  பார்ப்பதும்  மனோகரமான இயற்கைக்கு முன் அதுவரை  பேருருவமாக ஆண்ட்ரூ  மதித்த  நெப்போலியன் சிறுத்துப் போவதும் மனதில்  எஞ்சியிருந்த பிம்பங்கள் குறித்த கற்பனையையும்  இல்லாமல்  ஆக்குகின்றன.

ஒவ்வொருவர் மீதும்  அன்பு பொழியும் சிறுமியாக அறிமுகமாகும் நட்டாஷா போரிஸின் விலகலை உணர்ந்து  வருந்தாததும் டெனைசாவிற்காக அவள் அம்மாவிடம் குழப்பத்தோடு வருந்துவதும் நடன அரங்கில்  முதலில்  தனித்து  விடப்பட்டு பின் அனைவர்  மனதையும்  ஈர்ப்பதும் ஆண்ட்ரூவிடம் காதல்  கொள்வதும்  என உற்சாகம்  மிக்கவளாய் வலம் வருகிறாள். ஆண்ட்ரூவின் குடும்பத்தை சந்தித்த பிறகு  மாஸ்கோ நாடக  அரங்கில்  அனடோலினால் நட்டாஷாவின் மனதினுள் நடப்பதை நாடகம்  வழியாகவே நுண்மையாக  விவரிப்பது  அவளைப் போலவே பரிதவிக்கச் செய்கிறது.

நிக்கலஸ்  பால்கோன்ஸ்கி மேரியின்  மீதான  அன்பை  எரிச்சலாகவே  வெளிப்படுத்துவதும் லிசா இறக்கும்  சமயத்தில்   ஆண்ட்ரூ  அவளைப் பார்ப்பதும்  நிக்கலஸ்  ராஸ்டோவை போர்  முடிந்து வரும்போது அவர் குடும்பம்  வரவேற்பதும் வெவ்வேறு  வகையான  தொடர்பே இல்லாத  உணர்வுகளை  தோற்றுவிக்கின்றன.

பீயரின் ஆன்மீக  மலர்ச்சி உத்வேகமும்  நம்பிக்கையும் தருகிறது. பீயர் ப்ரீமேசன் சங்கத்தில்  சேர்ந்து  நன்மை செய்வதாக நினைத்து  பணத்தை வாரி இறைக்கும்  போது  அது போல் அல்லாமல் ஆண்ட்ரூ  தன் அடிமைகளை விடுதலை செய்வதற்கு முன்  அவர் சிறுத்துப் போகிறார். ஆனால்  அதன் பிறகு  மற்ற பிரபுக்கள்  போருக்கு நிதியும்  ஆட்களும் தருவதாகக் கூறிய  பிறகு ஏன் அவ்வாறு  கூறினோம் எனத் தவிக்கும்  போது ஆட்களும்  நிதியும்  தந்ததோடு போர்  முனையில்  சிறுவனைப் போல்  ஆர்வத்துடன்  நிற்பதும்  பிரெஞ்சு  ராணுவத்தால்  கைது  செய்யப்பட்டு  வதைபடுவதும் பிளாட்டோனின் கள்ளமற்ற தன்மையை வியப்பதும் வதைகளின் ஊடாகவே தன்னுடைய  மகிழ்ச்சியைக்  கண்டு கொள்வதும் என அவர்  ஒவ்வொரு  படியாக  மேலேறுகிறார். சோரபுத்திரனாக அறிமுகமாவது தைரியமும்  பெருந்தன்மை உடையவராக எளிதில்  மனம்  இரங்குவது பெரிய  உருவம் பெற்றவராக இருப்பது  என பீயர்  அடிக்கடி  கர்ணனை நினைவுறுத்துகிறார்.

அனடோலினைப் பற்றி அறிந்த பிறகு  ஆண்ட்ரூவை நட்டாஷா விலகிய பின் பீயருக்கு அவள் மீது தோன்றும்  அன்பினை வெளிப்படுத்தும் இடம் உச்சம்.

ஆஸ்டர்லிட்ஜில் தோற்ற பின்  நெப்போலியனுடன் அலெக்சாண்டர்  சமாதானம்  செய்து கொள்கிறார். மீண்டும்  ஸ்மாலென்ஸ்கை நெப்போலியன் கைப்பற்றுவதும் அது நடைபெறும்  விதமும்  மாஸ்கோ வரை ரஷ்யத்  துருப்புகள்  கைப்பற்றுவதும் “திட்டங்கள்”  வழியாக அல்லாமல்  அவற்றை மீறிய  ஒன்றினால்  என்பது தெளிவாகிறது. ஒரு சக்ரவர்த்திக்கு ஜலதோஷம் பிடிப்பது  போரில்  தோற்பதற்கு காரணமாக முடியாது  என்பதை  விலக்குவதன் வழியாக காரணமறிய முடியாத  விசித்திரமான  சரித்திரப் போக்குகளை டால்ஸ்டாய்  விளக்குகிறார்.

மாஸ்கோவிற்குள் நெப்போலியன் “வெற்றி விஜயம்” செய்யும்  போது அது காலியாக இருப்பதைக்  கண்டு அடையும்  ஏமாற்றத்தை கிண்டல்  செய்கிறார். ரஷ்யத்  தளபதியான  குட்டுஜோவ் போரினை நடத்திச்  செல்லும்  விதத்தை விளக்கும் இடங்கள்  பிரமிக்க வைக்கின்றன. சிதறிய ராணுவ  வீரர்களும்  பொது மக்களும் கைவிடப்பட்ட  ஒரு நகரத்தில்  எவ்வகையான மனநிலையில்  இருப்பார்கள்  என்பதற்கு  ராஸ்டாப்சைன் பிரச்சினையை திசை திருப்புவதற்காக ஒரு குற்றவாளியை மக்களே  தண்டிக்கட்டும் என விடும்  போது நடைபெறுபவையே உதாரணம்.

ஆறு லட்சம்  பிரெஞ்சு  வீரர்களும் அதே அளவில் ரஷ்ய வீரர்களும்  பங்கேற்கும்  யுத்தம்  நடக்கிறது.  ஒரு மாநகர்  கைவிடப்படுகிறது . மக்கள்  இடம்  பெயர்கிறார்கள். இவ்வளவு  நடக்கும்  போதும்  எதையும்  வியக்காமலும் பரிதாபப்படாமலும் அந்த நாவல் சென்று கொண்டிருக்கிறது. ப்ளாட்டோன்  மீது பீயர்  எவ்வளவு  அன்பு  கொண்ட போதிலும் அவனுக்கு  ஏற்படும்  காய்ச்சல்  கடுமையான  போர்ச் சூழலில்  தனக்கு தொற்றிவிடக் கூடாது  என்பதில்  கவனம்  கொள்கிறார் என்பது  போன்ற  சித்தரிப்புகள் வழியாகவே  எந்த  உறவும்  அதீத  நாடகத்  தன்மையை  தொட்டு விடுவதைத் தவிர்க்கிறார். கைவிடப்ட்ட மாஸ்கோவை விட்டு பிரெஞ்சு  துருப்புகள்  ஓடுவதும் அவர்களை ரஷ்யத்  துருப்புகள்  விரட்டுவதும் யார் கட்டுப்பாடுமின்றி நிகழ்பவை என்பதை  குட்டுஜோவ்  ஒருவரே அறிந்திருக்கிறார். பிரெஞ்சு  ராணுவம்  சிதைந்து  வெளியேறுகிறது.

ஆண்ட்ரூவின்  இறுதி நாட்களை மேரியும் நட்டாஷாவும் கடந்து  செல்வதும் நிக்கலஸ்  மேரியை திருமணம்  செய்த பின்னர்  சோனியாவின் நிலை அவள் வழியாக  சொல்லப்படாததும் அமைதியின்மையை விளைவிக்கின்றன.

சிலரை  ஆங்காங்கே  டால்ஸ்டாய்  விட்டுவிடுகிறார். ஜூலி போரிஸின் காதலை நுண்மையாக  பகடி செய்த பின் அனடோலை ஆண்ட்ரூ  மரணத்  தருவாயில்  பார்த்த பின்  அவர்கள்  அப்படியே  விடப்படுகின்றனர். ஹெலனுடைய இறப்பு ஒரு செய்தியாக  மட்டுமே  ஒலிக்கிறது. தேடலற்றவர்களை ஒழுக்கக் குறைவு உடையவர்களை அவர் பொருட்டாக எடுத்துக்  கொள்வதில்லை போலும். பீயரின்  மலர்வாகவே நாவல் நிறைவடைகிறது.

நிக்கலஸ்  ராஸ்டோவ் இறந்த  அவர் மாமனாரைப் போன்று மாறுகிறார். நட்டாஷா  அன்பும்  கண்டிப்பும்  நிறைந்து அன்னையாகிறாள். கொந்தளிப்பும் குழப்பங்களும் இலட்சியங்களும் நிறைந்த இளமை முடிந்து  அடுத்த தலைமுறை  எழுவதோடு நிறைவடைகிறது.

அதன்பின்  பின்னுரையாக விளக்கப்பட்டுள்ள சரித்திரத்தின் போக்குகள் அதுவரை  நிகழ்ந்தவற்றை தொகுக்க முயலாமல்  தீர்ப்பு  கூறாமல்  சம்பவத் தொடர்களின் வழியாக  தன்னிச்சையாக  ஒரு பெருநிகழ்வு நிகழ்ந்து விடுவதை உணர்த்துகின்றன. சரித்திரத்தில்  வாழ்ந்த அனுபவம் போரும்  வாழ்வும். இன்னும்  நிறைய  எழுதத்  தோன்றுகிறது. எழுத எழுத  ஒவ்வொருவரும்  விரிவடைகிறார்கள். சிரமப்பட்டு  நிறுத்துகிறேன்.

அன்புடன்

சுரேஷ்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 71
அடுத்த கட்டுரைவாழும் கணங்கள்