இலக்கியம், இருள்…

puye

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு, 

வாழ்க்கையின் மிக உணர்ச்சிகரமான அல்லது உணர்ச்சிகளே இற்றுப்போகக்கூடிய அளவு விரக்தி நிறைந்த ஒரு காலகட்டத்தைக் கடக்கும்போது உங்கள் எழுத்துகளைப் படிக்கக் கிடைத்ததை என் அதிர்ஷ்டம் என்றே சொல்லத் தோன்றுகிறது. 

எனக்கு சிறு வயதிலிருந்தே படிக்கும் பழக்கம் உண்டு. இரண்டு ஆண்டுகளுக்கு முன் என் தாயாரை இழந்தபோது சில நாட்கள் மனம் மிக மரத்திருந்த நாட்களில் மனதின் கனத்தைக் குறைப்பதற்காகவே படித்தேன். படிப்பில் களைத்து மனம் எதையும் யோசிக்கக்கூடாது என்ற ஒரே குறிக்கோளுடன் படித்தேன். அதுவரை கனமான இலக்கியங்கள்பால் கொஞ்சங்கொஞ்சமாக முன்னேறிக்கொண்டிருந்த நான் அதன்பின் சில காலம் என்ன படிக்கிறோம் என்ற வரைமுறையும் யோசனையும் இல்லாமல் ஆங்கிலத் துப்பறியும் நாவல்களும் ராஜேஷ் குமாரும் ரமணி சந்திரனுமாகப் படித்துக் கொண்டிருந்தேன். இதற்கு நடுவில்தான் முதல் முறையாக உங்கள் குறுநாவல் தொகுப்பு மூலம் உங்கள் புனைவெழுத்து அறிமுகமானது. அடுத்து ரப்பர். பின் விஷ்ணுபுரம். (விஷ்ணுபுரம் படித்ததும் மின்னஞ்சல் அனுப்பினேன்.) அடுத்தது ஏழாம் உலகம். 

என் தாயின் இழப்பைவிட என்னை மிகவும் பாதித்த விஷயம் அவர் அனுபவித்திருந்த துன்பங்கள். (மரணத்தில்தான் அவருக்கு அமைதி கிடைத்திருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.) ஆசாரமான பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்து அதே போன்ற குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டவர்களுக்கு எத்தனை துன்பங்கள் நேரலாமோ அவ்வளவு. மிகுந்த இலக்கியப் பற்றும் (எனது வாசிக்கும் பழக்கத்துக்கு வித்திட்டது அம்மாதான்.) நுண்ணுணர்வுகளும் ரசனைகளும் மிகுந்த நகைச்சுவை உணர்வும் நிறைந்தவர். இந்தத் தகுதிகள் எதுவும் இல்லாதஇவற்றில் அவர் எதிரே நிற்கக்கூடத் தகுதியற்றவர்களால்அவர்களைப் போன்ற அந்தஸ்து மற்றும் லௌகீக வெற்றிகள் பெறாத ஒரே காரணத்துக்காகத்  தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டவர். 

பிராமணக் குடும்பங்களில் மற்ற உழைக்கும் சாதிகளில் அதிகம் இருப்பது போல் தலைமுடியை இழுத்து அடிக்கும் பழக்கமில்லை. ஆனால் நுட்பமாக Subtle ஆக எத்தனையோ அவமானங்கள், கொடுமைகள். பார்ப்பனீயம் என்று இணையத்தில் வசைபாடப்படுவது இதுதானோ? இதைப் பார்ப்பனப் பெண்களைத்தவிர வேறு யாரால் முழுதாக உணர முடியும்? (நான் ஒன்றும் புரட்சியாளரோ புதுமையாளரோ அல்ல. சொந்த சாதி பற்றி ஒரு சிறிய சுய விமர்சனம் அவ்வளவுதான்.)

 என் அம்மா சிறு பெண்ணாக மனம் நிறையக் கனவுகளுடன் தனது வாழ்க்கையைத் துவங்கியபோது யாரெல்லாம் அவருக்கு அவமானமும் கொடுமைகளும் இழைத்தார்களோ அனைவரும் அவளது மரணம் நிகழ்ந்தபோதுசுமங்கலியாப் போய்ட்டா. தெய்வமா இருந்து காப்பாத்துவாஎன்றபோது அத்தனை துக்கத்துக்கு நடுவிலும் எனக்கு சிரிப்புதான் வந்தது. அவர்களுக்கும் வயதாகிவிட்டதல்லவா? வயதானால் ஆன்மீக வேடம் தானாகவே கனகச்சிதமாகப் பொருந்திவிடுகிறதல்லவா?

இந்த முன்னாள் கொடுமையாளர்களின் இந்நாள் ஆன்மிக வேடம் பற்றி மனம் கொதித்துப்போயிருந்த எனக்கு ஏழாம் உலகம் ஏதோ வலி நிவாரணி போலிருந்தது. அம்மாவின் வாழ்வு பற்றி நினைக்கும்போதெல்லாம் ஏற்பட்ட மனக்கசப்பின் ஆடிபிம்பம் போலிருந்தது இரப்பாளிகளின் உலகம் பற்றி அறிந்தபோது ஏற்பட்ட கசப்பு.

உயிரோடிருக்கும்போது என் அம்மாவைத் துன்புறுத்திவிட்டுக் கூச்சமில்லாமல் தெய்வம் என்றவர்களை நினைக்கும் போதெல்லாம்  அடப்பாவிகளா, உங்களுக்கெல்லாம் குற்ற உணர்வே கிடையாதா என்று அடிக்கடி தோன்றும் எனக்கு. ஏழாம் உலகத்தில் போத்திவேலுப் பண்டாரம் தான் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ததில்லை என்று மனமார உணர்ந்து புலம்பும் போது என் அம்மாவை இழந்த துக்கத்துக்கு நடுவே வந்த சிரிப்புபோல ஒரு கசந்த சிரிப்பு வந்தது. குற்றம், கொடுமை என்பதற்கெல்லாம் அவரவருக்கு அவரவர் நியாயங்கள் இருக்கும்போலும்! ஒவ்வொருவரும் வாழ்வில் அடுத்தவரை மிதித்தே வாழ வேண்டும்போலும். அதுதான் தான் மிதிபடாமல் இருப்பதற்கானநியாயமானவழிமுறையோ என்னவோ?

 விஷ்ணுபுரத்தில் கொலையும் செய்துவிட்டு கொலையுண்டவரை தெய்வமாக ஆக்கிப் புனைந்துவிடும் சூரியதத்தரின் தந்திரத்தை என் அம்மாவைத் துன்புறுத்தியவர்களுடன் பொருத்திப் பார்க்க முடிந்தபோது கொதித்துப் போயிருந்த மனது சற்றே ஆறி, கொதிப்பு கசப்பானது. காலங்காலமாக இதுதான் நடந்து வருகிறது. என் அம்மா ஒன்றும் தனி நபர் அல்ல, ஒருகலாசாரத்தின்பிரதிநிதி என்று புரிந்தபோது சற்றே ஆறுதலாக இருந்தது. 

கதைக்கும் இலக்கியத்துக்கும் உள்ள வேறுபாட்டை உங்கள் எழுத்துதான் எனக்குப் புரிய வைத்தது. இலக்கியம் வாழ்வையும் உணர்ச்சிகளையும் தனக்குள் பொதிந்து வைத்திருக்கும் காப்ஸ்யூல் மருந்து என்பது உங்கள் எழுத்துகளில் புரிகிறது. அது ரப்பரோ, விஷ்ணுபுபுரமோ குறுநாவல்களோ நூறு நாற்காலிகளோ எல்லாவற்றிலும் என் அம்மா போல ஒடுக்கப்பட்டவர்களின் குரலை என்னால் கேட்கமுடிகிறது. அவளைப்போல நியாயம் மறுக்கப்பட்டவர்களின், அன்புக்கு ஏங்குகிறவர்களின் துடிப்பையும் பதைப்பையும் உங்கள் எழுத்துகளில் ரத்தமும் சதையுமாகக் காண முடிகிறது. எல்லாரின் குரலையும் நியாயங்களையும் பதிவு செய்யும் உங்களுக்கு உங்கள் சொந்த வாழ்வில் இதுபோல் எவ்வளவு நிகழ்ந்திருக்குமோ தெரியவில்லை. 

அனுபவத்திலிருந்துதான் படைப்பு பிறக்கிறது. ஆனால் படைப்பாளி பண்படப்பட தான் அனுபவிக்காதவற்றையும் படைக்கும் சக்திபெற்றவனாகி விடுகிறான் என்று தோன்றுகிறது. அதனால்தான் உங்கள் எழுத்துகள் மிகவும் கூர்மையுடன் மனதின் அடியாழத்தைத் தொட்டு வாசகர்களுக்கு அந்தரங்க பாவத்தை ஏற்படுத்துகின்றன.

கடிதம் நீண்டதற்கு மன்னிக்கவும். இது சம்பிரதாயமான வாசகர் கடிதமல்ல. தட்டச்சு செய்யும்போது கண்ணீர் வந்து ஒவ்வொரு சொல்லையும் மறைக்கிறது. அநேகம் கோடி நன்றிகள்.

 வி

***

அன்புள்ள வி,

இலக்கியம் வாழ்க்கையைப்புரிந்துகொள்ள ஒரு முன்வரைவை அளிக்கிறது. அது விடைகளை அளிப்பதில்லை. இப்படியெல்லாம் யோசிக்கலாமே என்ற பலவகையான சாத்தியங்களைத் திறந்து அளிக்கிறது. இலக்கியவாசிப்பில்லாமலேயே அடையமுடியும் அதை. ஆனால் அதற்கு நாநூறு ஐநூறாண்டுக்காலம் வாழவேண்டும்.

மனிதர்களைப்பற்றி பொதுவாகவே இலக்கியம் எதிர்மறையாகவே சொல்கிறது என்று ஒரு கூற்று உண்டு. அது உண்மை. ஏனென்றால் அது மானுட அகத்தை கூர்ந்து நோக்கும்தோறும் காமகுரோதமோகம் என்னும் இருளையே காண்கிறது. அந்த இருளைக்கடந்துச் என்று அது காணும் ஒளி அதனாலேயே முக்கியமானது

ஏழாம் உலகம் அதன் அத்தனை இருட்டுடனும் மானுடமனம் அன்பின்மூலமும் அதையும் கடந்த சமநிலை மூலமும் அடையச்சாத்தியமான விடுதலையைப்பற்றியும் சொல்கிறது. இருளிலிருந்து ஒளிக்கு என்பதுதான் ரிக்வேத காலம் முதல் இலக்கியத்தின் பிரார்த்தனை

அதையே மீண்டும் சொல்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 70
அடுத்த கட்டுரைநித்ய சைதன்ய யதி