‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 69

[ 12 ]

சுருதையின் பதினாறாவதுநாள் நீர்க்கடன்களை முடித்து அமைச்சுநிலைக்கு திரும்பியபோதுதான் அஸ்தினபுரியின் அனைத்துப்படைகளும் போர் ஒருக்கம் கொண்டிருக்கும் செய்தியை விதுரர் அறிந்தார். பதினாறுநாட்கள் அவர் மண்ணென்றும் கல்லென்றும்  மரமென்றும் மானுடரென்றும் புலன்களால் அறியப்பட்ட  அஸ்தினபுரியில் இல்லை. நினைவென்றும் கனவென்றுமான பிறிதொரு அஸ்தினபுரியில் இருந்தார். அங்கே காலம் கரைந்து சுழன்றது. இருத்தலும் இன்மையும் முயங்கின. இருநிலையழிந்த சித்தவெளியில் மிதந்துகிடந்தார்.

பதினாறாம் நாள் காலை நீர்க்கடனுக்காக கங்கையில் இடைவரை நின்றிருக்கையில் ஒருகணத்தில் அனைத்தும் முடிந்துவிட்டன என்னும் உணர்வை அடைந்தார். குளிர்போல அவர் உடலை அவ்வெண்ணம் நடுக்கியது. கால் நீரொழுக்கில் இழுபட்டுச்செல்வது போலிருந்தது.

விழுந்துவிடப்போனவரை அவரது மைந்தன் சுபோத்யன் பற்றிக்கொண்டான். “மூழ்குங்கள், தந்தையே” என்று அவன் மெல்லிய குரலில் சொன்னான். “ஆம்” என்றபடி அவர் நீரில் மூழ்கி எழுந்தார். நீரின் அழுத்தம் மூச்சுத்திணறச் செய்தது. எழுந்து ஈர ஆடை சிக்கி கால்தடுக்க கரைக்கு வந்தார். இளைய மைந்தன் சுசரிதன் மரவுரியாடையை அளித்து “துடைத்துக்கொள்ளுங்கள்” என்றான்.

அவர் தலைதுவட்டிக்கொண்டிருக்கையில் கீழே கேட்டுக்கொண்டிருந்த நீத்தாருக்கான சொற்கள் நீருக்குள் என ஒலித்தன. காதைக்குடைந்து தலையை உலுக்கினார். மூச்சுத்திணறல் என அவர் உணர்ந்தது உள்ளத்தின் வெறுமையைத்தான் என்று சற்று பிந்தியே அறிந்தார்.

தேரில் அஸ்தினபுரி நோக்கி செல்கையில் மெல்ல எண்ணங்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்தன. பதினாறுநாட்கள் அவர்மேல் ஈரமான மரவுரிமூட்டைகள் போல ஏறியமர்ந்திருந்தவை அவை. வெறுமை மிகுந்தபடியே சென்றது. அரண்மனையை அடைந்தபோது உடலே இறகுபோல ஆகிவிட்டிருந்தது. படிகளை ஏறி தன் அறைக்குள் செல்லும் ஆற்றலே உடலில் எஞ்சியிருக்கவில்லை.

அறைக்குச் செல்லும்வழியில் மூடப்பட்டிருந்த சாளரம் ஒன்றை நோக்கியபடி நின்றார். நெஞ்சு ஏக்கம் கொண்டபடியே வந்தது.

ஏவலன் வந்து அருகே நின்றான். அந்தச்சாளரக் கதவை திறக்கும்படி சொன்னார்.  அவன் விழிகளில் வினாவுடன் நோக்க அவர் “ம்” என்றார். அவன் இன்னொரு ஏவலனுடன் வந்து  கதவை உடைத்துத் திறந்தான். பல்லாண்டுகாலமாக மூடப்பட்டிருந்த கதவின் பொருத்துக்களில் தூசி படிந்த தடம் தெரிந்தது. மறுபக்கம் ஒட்டடை படிந்திருந்தது. நெடுங்காலமான புண்வடு போல கதவுப்பொருத்து வெளுத்துத் தெரிந்தது.

அவர்கள் அதை தூய்மைசெய்வதை அவர் நோக்கிக்கொண்டு நின்றார். அவர்கள் அதை சித்தமாக்கியபின் விலகி நிற்க அவர் அதில் ஏறியமர்ந்து தெருவை நோக்கிக்கொண்டிருந்தார். வெளியே தெரிந்த தெரு அவர் முற்றிலும் அறியாத ஒன்றாக இருந்தது. அங்கே இரண்டு யானைகள் இரு  நீர்க்குமிழிகள் போல மிகமெல்ல ஒழுகிச்சென்றன. மனிதர்கள் பஞ்சுப்பிசிறுகள் போல சென்றனர். ஓசைகள் இல்லாத ஒரு மாய உலகம்.

அன்று பகல் முழுக்க அவர் அங்கேயே அமர்ந்திருந்தார். எண்ணங்கள் அனைத்தும் முழுமையாக அடங்கி உள்ளம் அசைவற்றுக் கிடந்தது. ஒரு மெல்லிய ஏக்கமாக மட்டுமே உள்ளத்தை, இருப்பை உணரமுடிந்தது. அவ்வுணர்வு எழுந்ததும் மெல்ல அசைந்து மூச்செறிந்து மீண்டும் அமர்ந்தார். ஓர் எண்ணத்துடன் இன்னொரு எண்ணம் கொண்டிருக்கும் தொடர்பே  சித்தம்  என்பது. கல்வியும் அறிவும் அனைத்தும் அந்தத் தொடர்பை மட்டும்தான் உருவாக்குகின்றன. அத்தொடர்பு முற்றிலும் அறுந்துவிடும்போது உள்ளம் மட்டுமே எஞ்சுகிறது. அறிவால் அறியப்படாத ஒன்று. பெயரிடப்படாத, அடையாளங்களற்ற ஒன்று.

மாலையில் சுபோத்யன் அவரிடம் வந்து “தாங்கள் அமைச்சுநிலைக்கு செல்லலாம், தந்தையே” என்றான். அவனுக்கு அப்பால் சுசரிதன் நின்றான். “என்னை நாற்பத்தெட்டாம் நீரூற்றுக்குப்பின் சென்றால் போதும் என்று சொன்னார் மூத்தவர்” என்றார் விதுரர். சுசரிதன் “நீங்கள் சென்றாகவேண்டும்… உங்கள் இடம் அதுவே” என்றான். விதுரர் அச்சொற்களை விளங்கிக்கொள்ளாதவராக பார்த்தார்.

“தந்தையே, நினைவறிந்த நாளிலிருந்து இந்த பதினாறுநாட்கள் மட்டுமே நீங்கள் அரசுசூழ்தலில் இருந்து விலகி நின்றிருக்கிறீர்கள்… செல்லுங்கள்!” என்றான். “தங்களால் அவ்வுலகிலல்லாமல் வாழமுடியாது. அங்குதான் உங்கள் புலன்கள் விழிப்புகொள்கின்றன.” விதுரர் பெருமூச்சுவிட்டார். “இனி இம்மாளிகையில் நீங்கள் இருக்கவேண்டியதில்லை, தந்தையே” என்றான் சுசரிதன். அவர் தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.

அவர் அவர்களால் செலுத்தப்பட்டு ஆடையணிந்து கிளம்பினார். அமைச்சுநிலை வரை சுசரிதன் வந்தான். அமைச்சுநிலை வாயிலில் அவரை எதிர்கொண்டழைத்த கனகர் வணங்கி வாழ்த்துரைத்தபின் “படைபுறப்பாடு முடிவடைந்துவிட்டது, அமைச்சரே. படைகள் முரசு காக்கின்றன” என்றார். “ஏன்?” என்றார் விதுரர். கனகர் திகைப்புடன் “அனைத்துச் செய்திகளையும் நான் தங்களுக்கு அறிவித்துக்கொண்டிருந்தேன்…” என்றார். அவர் தடுமாற்றத்துடன் “ஆம்…” என்றார்.

அவரது திகைப்பை பார்த்துவிட்டு கனகர் அனைத்தையும் சொன்னார். அஸ்தினபுரியின் அனைத்து படைப்பிரிவுகளும் போர் ஒருக்கம் கொண்டுவிட்டன. எல்லைகளில் படைநீக்கம் முடிவடைந்துவிட்டது. கர்ணனும் ஜயத்ரதனும் துச்சாதனனும் படைகளை இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். இரவுபகலாக துரியோதனர் அரசுசூழ் அறையிலிருந்தபடி அவர்களை பறவைச்செய்திகள் வழியாக வழிநடத்திக்கொண்டிருக்கிறார்.

விதுரர் எந்த உணர்ச்சியையும் அடையாதவராக நோக்கி நின்றார். “அனைத்து ஓலைகளையும் நானே கொண்டுவந்து அளித்தேன், அமைச்சரே” என்றார் கனகர்.  “நான் பார்க்கவில்லை” என்று விதுரர் மெல்லியகுரலில் சொன்னார். சுசரிதன் “தந்தை இன்றுதான் மீண்டு வந்தார். பதினாறுநாட்களும் ஈமச்சடங்குகளின் நிரை முடிவே இல்லாமல் இருந்தது…” என்றான். கனகர் “வருக!” என உள்ளே அழைத்துச்சென்றார்.

ஓலைகள் நடுவே அமர்ந்தபோதுதான் பதினாறுநாட்களில் நெடுந்தொலைவு விலகிச்சென்றுவிட்டிருப்பதை விதுரர் உணர்ந்தார். எந்த ஓலையும் பொருள்படவில்லை. அவற்றின் மந்தணமொழி அவர் சித்தத்துக்குமேல் தொடாமல் ஒழுகிச்சென்றது. அந்த இடமே புதியதாகத் தோன்றியது.  முதன்முறையாக பதின்மூன்றுவயதுச் சிறுவனாக அங்கு வந்து அமைச்சக உதவியாளனாக பொறுப்பேற்றதை நினைவுகூர்ந்தார்.

உள்ளம் ஏன் அசைவற்றுக் கிடக்கிறது? ஏன் பொருளே இல்லாமல் சத்யவதியின் சிற்றூருக்குச் சென்ற நினைவு எழுகிறது? சத்யவதியை அவர் அத்தனை அணுக்கமாக உணர்ந்திருக்கிறாரா?  காலம் அவளை மேலும் அருகே கொண்டுவருகிறது. அவள் அடைந்த முதுமையை அகற்றி நாணம் படிந்த கன்னங்களும் ஒளிரும் கண்களும் கொண்டவளாக காட்டுகிறது.

ஒரு திடுக்கிடலுடன் ஏன் சுருதையின் நினைவே எழவில்லை என நினைவுகூர்ந்தார். உடனே அவ்வெண்ணத்தை விலக்கினார். பதினாறுநாட்களும் அவளை விலக்கவே முயன்றுகொண்டிருந்தார். வாழ்ந்தபோதிருந்ததைவிட அவள் பலமடங்கு பேருருக்கொண்டிருந்தாள். எப்போதுமே அவள் அப்படித்தான் இருந்தாள். அவர் அவளை விட்டு விலகி உலாவ முடிந்தது முன்பு. இனி அவளிலேயே இருந்தாகவேண்டும். அவர் சலிப்புடன் ஓலைகளை அடுக்கி வைத்து கண்களை மூடிக்கொண்டார்.

“பிதாமகருக்கும் பேரரசருக்கும் பேரரசிக்கும் படைநீக்கச் செய்திகள் சென்றுகொண்டிருக்கின்றன. பிதாமகர் பலமுறை அரசரை கூப்பிட்டனுப்பினார். அரசர் செல்ல மறுத்துவிட்டார். அரசரை சந்திக்க வருவதாகச் சொல்லி செய்தியனுப்பினார். அதற்கும் அரசர் ஒப்பவில்லை. பேரரசர் இருமுறை நேரில் அரசரைப் பார்க்க வந்துவிட்டார். அரசர் பின்வாயில் வழியாக வெளியேறினார். அமைச்சரே, இன்று இவ்வரண்மனையே அவர்களின் சந்திப்பைத்தான் எதிர்நோக்கியிருக்கிறது…”

கனகர் அருகே நின்று சொல்லிக்கொண்டிருந்தார். அச்சொற்களும் அவருக்கு பொருள்படவில்லை. பீடத்தில் சாய்ந்து அமர்ந்து சற்று துயின்றார். விழித்தெழுந்தபோது அவர் எங்கிருக்கிறார் என்று உணரவே நெடுநேரமாகியது. கனகர் தன்னை அழைத்ததுபோல் உணர்ந்தார். கனகர் அவரை அழைத்திருந்தார்.

“பீஷ்மபிதாமகர் தங்களை அழைத்துவரச் சொல்லியிருக்கிறார்… உடனே கிளம்பும்படி ஆணை” என்றார் கனகர். “ஆம்” என்றபடி விதுரர் எழுந்தார். “நானும் வருகிறேன். தங்களால் எவ்வினாவுக்கும் மறுமொழி சொல்லமுடியாது…” என்றார் கனகர். “வேண்டியதில்லை” என்றபின் விதுரர் நடந்தார்.

திரும்பி இல்லத்திற்குச் செல்லவேண்டும் என்ற எண்ணமே வலுவாக எழுந்தது. அங்கே அந்தச் சாளரப்படியில் அமர்ந்தால் எண்ணங்கள் தொடர்பழிந்து பெருகிவழியும் அந்த  இனிய ஒழுக்கில் சென்றுகொண்டே இருக்கமுடியும். அவர் என ஏதும் எஞ்சுவதில்லை அங்கே. அந்தச் சாளரத்தை  எண்ணிக்கொண்டதுமே உள்ளம் ஓர் இனிமையை உணர்ந்தது. தன்னைப் பிடுங்கி அகற்றி பீஷ்மரின் படைக்கலச்சாலைக்கு கொண்டுசெல்லவேண்டியிருந்தது.

 

[ 13 ]

பீஷ்மர் அவரிடம் முகமனோ வாழ்த்தோ சொல்லவில்லை. கையில் கூரம்புடன் பயிற்சிசாலையில் நின்றவர் திரும்பி “என்ன நிகழ்கிறது? உங்கள் அரசன் என்னை மீறி படைகொண்டுசெல்ல விழைகிறானா?” என்றார். விதுரர் “ஆம்” என்றார். சினத்துடன் பற்களைக்கடித்து  ”மூடன்! ஒரே ஆணையால் படைகளனைத்தையும் மீண்டும் நிலைமீளச்செய்ய என்னால் முடியும். வேண்டுமென்றால் அவனை சிறையிடவும் ஆணையிடுவேன்” என்றார்.

“அதைத்தான் அவர் எதிர்பார்க்கிறார் போலும்” என்றார் விதுரர். “என்ன சொல்கிறாய்?” என்றார் பீஷ்மர். “ஒரு மோதலை…” என்று விதுரர் சொன்னார். கைபட்டு சீறி எழும் நாகம் போல ஒரே கணத்தில் அவரது அனைத்து அகச்சொற்களும் மீண்டு வந்தன. “எழுவது அஸ்தினபுரியின் பிதாமகரின் குரல் மட்டும் அல்ல, மலைக்கங்கர்குலத்தவரின் குரலும்கூட. ஒருமோதலெழுந்தால் அது அனைவருக்கும் தெளிவாகிவிடும்.”

பீஷ்மர் மெல்ல தளர்ந்தார். “சொல்!” என்றார். தான் அத்தனை ஓலைகளையும் வாசித்திருப்பதை, அவற்றின் ஒவ்வொரு சொல்லும் நினைவிலிருப்பதை விதுரர் உணர்ந்தார். அத்தருணத்தில் சொல்திரளுடன் அவ்வாறு ஓங்கி நின்றிருப்பதன் உவகை அவரை ஏந்திக்கொண்டது. “இங்கு நிகழ்ந்தவற்றை அறிந்திருக்கமாட்டீர்கள், பிதாமகரே. பாரதவர்ஷத்தின் தொன்மையான ஷத்ரிய குலங்கள் அனைத்திலிருந்தும் துரியோதனருக்கு ஓலைகள் வந்துகொண்டிருக்கின்றன. வேதத்திற்கும் வேதமறுப்பாளர்களுக்குமான போர் என இது இப்போதே உருப்பெற்றுவிட்டது…”

“நீங்கள் எத்தரப்பு என்பதே இன்று கேட்கப்படுகிறது. முறைமையோ மூப்போ அல்ல” என்று விதுரர் தொடர்ந்தார். “குலமிலியாகிய யாதவனால் வேதம் மறுக்கப்படுவதை ஏற்கிறீர்களா, வேதம் காக்க வாளேந்தி ஷத்ரியர்களின் பக்கம் நிற்கிறீர்களா?” பீஷ்மரின் பதைப்பு நிறைந்த விழிகளை நோக்கி புன்னகைத்து “இது குலமிலிகள் தங்களை ஷத்ரியர்களாக ஆக்கிக்கொள்ள ஒரு வாய்ப்பு. ஒருசொல்லும் வேதம் கேட்டிருக்காதவர்கள்கூட இன்று வேதத்திற்காக உயிர்விட எழுகிறார்கள்” என்றார்.

பீஷ்மர் அம்பின் கூர்முனையை வருடிக்கொண்டு கண்களைச் சுருக்கி தலைகுனிந்து நின்றார். “சொல், இன்று நான் ஆணையிட்டால் அஸ்தினபுரியின் படையினர் என்பொருட்டு  எழமாட்டார்களா என்ன?” என்றார். “எழக்கூடும். எழாமலும் போகக்கூடும். நாம் அதைத் தொட்டு உசுப்பிநோக்கும் நிலையில் இல்லை” என்றார் விதுரர். “அஸ்தினபுரியின் படைகளில் பாதிக்குமேல் காந்தாரர்கள். அவர்கள் சகுனிக்கே கட்டுப்பட்டவர்கள். வேதமே வினா என்பதனால் ஷத்ரியரில் ஒருசாரார் உங்களை மறுக்கக்கூடும்.”

“ஒரு பிளவுபோல பெருநோய் பிறிதில்லை இப்போது” என்றார் பீஷ்மர். “ஆகவேதான் அனைத்தையும் பார்த்தும் வாளாவிருக்கிறேன். நீ மீண்டு வரட்டும் என எண்ணினேன்.” விதுரர் “இருபத்தெட்டு ஷத்ரிய அரசர்கள் படையனுப்ப சித்தமாக இருக்கிறார்கள்…” என்றார். பீஷ்மர் “சிசுபாலனைக் கொன்றது மிகமிகப் பிழையான அரசுசூழ்ச்சி. அனைத்துமறிந்த அவன் எப்படி அதை செய்தான் என்றே விளங்கவில்லை” என்றார்.

“ஜராசந்தனிடமிருந்து ஷத்ரியரை மீட்டதை அவர் மிகையாக நம்பியிருக்கலாம்” என்றார் விதுரர். “அவர்கள் சிறுகுடி ஷத்ரியர். அரசர்கள் அவர்களை பொருட்டென எண்ணமாட்டார்கள். மேலும் ஷத்ரியர்கள் தாங்கள் யாதவப்படையால் காப்பாற்றப்பட்டதை ஓர் இழிவென்றே எண்ணுவர்… ஒரு போர் வழியாக அப்பழியை நீக்கவே முயல்வர்” என்றார்.

சினத்துடன் பீஷ்மர் “விதுரா, அந்தச் சூதன் மகன் இதில் என்ன செய்கிறான்? ஷத்ரியர்களின் படைகளை அவனா நடத்திச்செல்லவிருக்கிறான்?” என்றார். பற்களைக் கடித்து “இந்திரப்பிரஸ்தத்தில் அவன் நாகர்களை சந்தித்தான் என்றும் அவர்களின் வஞ்சத்தை ஏற்றான் என்றும் சொல்கிறார்கள். அவன் எதற்காகப் போரிடுகிறான், நாகவேதத்திற்காகவா?” என்றார்.

“நாகவேதமும் நால்வேதமும் முரண்படுவன அல்ல” என்றார் விதுரர். “காடாளத்தியான அன்னையின் தேவமைந்தர் நால்வர் என வேதங்களை வியாசர் சொல்கிறார். நாகவேதத்திற்கும் முதல் எதிரி அவன்தான்.” பீஷ்மர் “என்னால் இதெல்லாம் என்ன என்றே புரிந்துகொள்ள முடியவில்லை. யாதவர் அரசுகொள்வதை ஷத்ரியர் ஏற்கவில்லை என்பதை புரிந்துகொள்கிறேன். ஆனால் அவன் பேசுவது என்ன? அதை ஏன் இவர்கள் எதிர்க்கிறார்கள்…? ஒன்றும் தெளிவாக இல்லை.”

“எவருக்கும் தெளிவாக இல்லை. ஆனால் அமைந்து நிலைத்த ஒன்றை அவர் எதிர்க்கிறார் என்று மட்டும் புரிந்துகொள்கிறார்கள்  வைதிகரும் ஷத்ரியரும். சொல்லும் வில்லுமேந்தி அவர்கள் காத்து நின்றிருக்கும் ஒன்றை அழிக்கவிடக்கூடாதென வஞ்சினம் கொண்டிருக்கிறார்கள்.” பீஷ்மர் பெருமூச்சுடன் “நீ திருதராஷ்டிரனை பார்த்தாயா?” என்றார். “இல்லை” என்றார் விதுரர். “இங்கு என்னிடம் வந்து கொந்தளிக்கிறான். மைந்தனை போருக்கு அழைத்து கொல்லப்போவதாக நேற்று கூவினான்…”

“மைந்தனைப் போலவே தந்தையும் கொந்தளிப்பானவர். நான் சென்று பார்க்கிறேன்” என்றார் விதுரர்.  “அவனை நீ பார்ப்பதனால் பயனில்லை” என்று பீஷ்மர் சொன்னார். “நீ சகுனியை சென்று பார். அல்லது…” அவர் குரல் தழைந்தது. விழிகளை விலக்கி “கணிகரை பார்” என்றார்.

விதுரர் “ஆணை” என்றார். பீஷ்மர் மேலும் குரல் தழைய “நான் கோரினேன் என்று சொல். என் மைந்தர் போரிட்டழியக்கூடும் என்றெண்ணி கண்ணீர் வடிக்கிறேன் என்று சொல்…” என்றார். திரும்பி கண்களின் நீர்மை ஒளிர “நான் அவர் கால்களைப்பற்றி கோருகிறேன் என்று சொல்… என் மைந்தரை அவரால் மட்டுமே காக்க முடியும்” என்றார்.

“கணிகராலா?” என்றார் விதுரர். “மைந்தா, இங்கு இருவர் மட்டுமே எண்ணியவற்றை எய்துபவர்கள். இங்கு நிகழ்வனவற்றின் பொருளறிந்தவர்கள். அவனிடம் நான் கோரமுடியும். ஆனால் அவன் என்னை செவிகொள்வான் என தோன்றவில்லை. அவன் நெடுந்தொலைவுக்கு நோக்க உச்சிமுடியேறி நின்றிருக்கிறான். மானுடரும்  குடிகளும் குலங்களும் அவன் காலடியில் எறும்புகள். நகரங்களும் நாடுகளும் கூழாங்கற்கள்…”

பீஷ்மர் தலையை அசைத்து பெருமூச்சுவிட்டு “இவர் ஏதேனும் செய்யக்கூடும்… சற்று கருணை காட்டக்கூடும்” என்றார். “ஆனால் இவரும் மானுட உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர். கொலைப்படைக்கருவியின் இரக்கமற்ற கூரொளிகொண்டவர். ஆனால் ஒருவேளை என் நல்லூழால் ஏதேனும் ஒரு வழி அவர் உள்ளத்தில் எழக்கூடும். அவரது ஆடலுக்கு உகந்ததாகவே அது எனக்கு உதவுவதாக ஆகக்கூடும்” என்றார்.

விதுரர் “போரை நாம் தவிர்ப்போம்” என்றார். “நாமா?” என பீஷ்மர் கசப்புடன் சிரித்தார். “நாம் என்ன செய்ய முடியும்? நாம் எண்ணுகிறோம், சூழ்ந்துநோக்குகிறோம். அவை நாமறிந்த சிறிய வாழ்க்கையைக் கொண்டு நாம் செய்யும் எளிய பயிற்சிகள் மட்டுமே. இது பல்லாயிரம் கைகள் பல லட்சம் காய்களை நகர்த்தி ஆடிக்கொண்டிருக்கும் நாற்களம்.”

“நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனாலும் புழு இறுதிக்கணம் வரை நெளியத்தான் செய்கிறது. அதை செய்வோம். நீ கணிகரிடம் பேசு.” விதுரர் “ஆணை” என்று தலைவணங்கி வெளியே சென்றார். கணிகரைக் கண்டு பேசவேண்டிய சொற்களை அவர் உள்ளம் கோக்கத் தொடங்கியது.

பீஷ்மர் மீண்டும் ஒரு அம்பை எடுத்து வில்லில் பொருத்துவதை அப்பால் நின்று கூர்ந்து நோக்கினார். அவர் உடல் பதறுகிறதா? கை நடுங்குகிறதா? எதுவும் தெரியவில்லை. அவர் எப்போதும்போல வில்லம்புடன் தானுமொரு படைக்கலமென இணைந்தார். விதுரர் திரும்பும்போது அவர் நிழலை நோக்கினார். அது மெல்ல அதிர்ந்ததுபோல தோன்றியது.

வெளியே செல்லும்போது விதுரர் தன் உள்ளத்தைப்பற்றி எண்ணிக்கொண்டார். பீஷ்மரின் விழிநீரிலிருந்து அது முற்றிலும் அகன்று நின்றிருந்தது. ஒருவேளை ஒரு போர் நிகழக்கூடும். அனைத்து முயற்சிகளும் பயனற்று குருதிப்பெருக்கே எஞ்சக்கூடும். முதல்முறையாக நெஞ்சு நடுங்காமல் அவர் அதைப்பற்றி எண்ணினார்.

உண்மையில் அது ஒரு பொருட்டே அல்லவா? உடன்பிறந்தோர் போரில் களமெதிர் நின்றால் அவர் துயருறப்போவதில்லையா? இல்லை என்றே அவர் அகம் சொன்னது. அது நிகழ்ந்தால் அகன்று வெறுமை நிறைந்த விழிகளுடன் அவர் நோக்கி நிற்பார்.

அவ்வாறெனில் ஏன் இப்போது கணிகரை பார்க்கச்செல்கிறார்? இல்லம் மீண்டாலென்ன? இல்லை, இது ஒரு பணி. அவர் தன் எல்லையையும் வாய்ப்புகளையும் அறியும் களம். தன்னை உருவாக்கி தன்னை நிகழ்த்தி தன்னைக் கடந்துசெல்லும் வழி. பிறிதொன்றுமில்லை.

விதுரர் நின்று அஸ்தினபுரியின் அரண்மனைத்தொகுதியை ஏறிட்டு நோக்கி பெருமூச்சுவிட்டார். ஓங்கிய அதன் முகடுக்குமேல் வானம் ஒளியுடன் நிறைந்திருந்தது. சால்வையை சீரமைத்தபடி நடந்தார்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 68
அடுத்த கட்டுரைகாடு வாசிப்பனுபவம்