வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 66

[ 6 ]

துரியோதனனின் புரவி யமுனையை அடைந்ததும் நில்லாமல் பக்கவாட்டில் நீர்ப்பெருக்குக்கு இணையாகச் சென்ற பெருஞ்சாலையில் திரும்பி அங்கு கரைமுட்டி பெருகிச் சென்றுகொண்டிருந்த மக்கள்திரளில் மறைந்ததும் கர்ணன் தன் புரவியின் சேணத்தின்மேல் காலூன்றி எழுந்து தொலைவில் அவன் செல்வதை விழிகளால் குறித்துக் கொண்டு புரவியைத் தட்டி இருபக்கங்களிலும் அழுத்தி நெருக்கிய தோள்களையும் அத்திரிகளையும் விலக்கி தொடர்ந்தான்.

பல மாதங்களாக இந்திரப்பிரஸ்தத்தில் வந்து செறிந்திருந்த மக்கள் அனைவரும் அன்று ஒரு நாளிலேயே நகர்விட்டுச் செல்ல முயன்றமையால் விழிதொடும் இடமெங்கும் தலைகளும் ஆடைகளுமாக மக்கள் அலையடித்தனர். மன்னர்கள் செல்லும் பொருட்டு மூன்று நாள் பிறர் கலத்துறைகளை பயன்படுத்த தடை இருந்தது. ஈசல்புற்று வாயில்களைப்போல அனைத்துத் தெருக்களின் முனைகளும் திறந்து கொண்டன. எங்கும் வண்டிகளின் சகட ஓசைகளும் புரவிகளின் குளம்போசைகளும் மக்களின் குரலும் கலந்த இரைச்சல் மாமழை போல ஒலித்துச் சூழ்ந்து செவிகளை இன்மையென உணரவைத்தது.

படித்துறைகளில் நூற்றுக்கணக்கான வணிகப்படகுகளும் பயணியர் படகுகளும் மொய்த்திருந்தன. பலநூறு படகுகள் யமுனையின் பெருக்கில் அலைகளில் எழுந்தாடியபடி காத்து நின்றிருந்தன. தொலைவில் யமுனைக்கு குறுக்கே படகுகளை நிறுத்தி கட்டப்பட்டிருந்த பாலங்களினூடாக மக்கள் வண்ண ஒழுக்காக மறுகரைக்கு சென்று கொண்டிருந்தனர். கர்ணன் திரளினூடாக தன்னை வளைத்து வளைத்து செலுத்திக் கொண்டு தொலைவில் சென்று கொண்டிருந்த துரியோதனனின் புரவியின் மேல் விழிநட்டிருந்தான்.

காலைவெயில் நன்கு எழுந்த பின்னரே இந்திரகீலத்தின் பெருஞ்சிலையை அவர்களால் கடக்க முடிந்தது. அதன் பின் மையச்சாலை நான்கு கிளைகளாக பிரிந்தபோது கூட்டத்தின் நெரிசல் சற்று குறைந்தது. மேலும் நெடுந்தொலைவு சென்றபின்னர்தான் கர்ணனால் துரியோதனனை அணுக முடிந்தது. அங்கிருந்து நோக்கியபோது மரக்கிளைகளின் செறிவுக்கு ஊடாக இந்திரனின் தலை எழுந்து தெரிந்தது. அவன் கையிலிருந்த மின்கதிர் வானைத்தொடுவது போல் எழுந்திருந்தது.

கர்ணன் நெஞ்சு நிறைந்த அழுத்தத்துடன் ஒன்றை உணர்ந்தான், பிறகொருபோதும் அந்நகரத்தில் அவன் நுழையப்போவதில்லை. அவ்வுணர்வு ஏன் எழுகிறது என்று உடனே அவன் அகம் வியந்தது. ஆனால் அழுத்தம் கொண்ட எண்ணங்கள் காலத்திற்கிணையாகத் தாவுகையில் மிகுவிரைவு கொண்டு காலத்தையும் கடந்து சென்றுவிடுகின்றன. நாளையும் நாளைக்கு அப்பாலும் சென்றடைந்துவிடுகின்றன. “ஆம்” என்று அவன் எவரிடமோ தலையசைத்தான்.

நெஞ்சில் அந்த அழுத்தம் ஏன் நிறைந்துள்ளது என்று அவனுக்குத் தெரியவில்லை. தன் உடலில் திமிறியெழுந்த அறியாத சினம் ஒன்றால் உந்தப்பட்டு சம்மட்டியால் புரவியை அடித்து குதிமுள்ளால் அதை குத்தினான். வெருண்டு கால்தூக்கிக் கனைத்தபடி அது அவனுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த இரு அத்திரிகளையும் ஒரு பொதி வண்டியையும் முந்தி முன்னால் பாய்ந்தது. அதன் விரைந்த குளம்படி கேட்டு இருபக்கமும் மக்கள் பிளந்து வழிவிட அவன் மூச்சிரைக்க இடை புரவியின் முதுகில் படாமல் நின்று காற்றில் பாய்ந்தான்.

துரியோதனனை அணுகி அவனுக்கிணையாக புரவியை செலுத்தி மூச்சிரைத்தபடி அமர்ந்தான். துரியோதனனும் விரைந்து வந்தமையால் மூச்சிரைத்துக் கொண்டிருந்தான். அவன் எடை அப்புரவியை களைப்படையச்செய்து அதன் உடலெங்கும் வியர்வை ஊறி உருளச்செய்தது. ஆனால் அவன் கர்ணன் வருவதை அறிந்ததுபோல் தெரியவில்லை. கர்ணன் அவனை அழைக்கவும் இல்லை. இணையான விரைவில் இருவரும் அச்சாலையினூடாகச் சென்றனர்.

உச்சிப் பொழுதுக்குள் மேலும் ஆறேழு இடங்களில் சாலைகள் பிரிய கூட்டம் குறைந்தது. கூட்டம் குறையக்குறைய அவர்களின் விரைவும் குறைந்தது. தண்ணீர் பந்தலொன்று வழியோரமாக தென்பட கர்ணன் “அரசே, நீரருந்திவிட்டுச் செல்லலாம்” என்றான். அவன் யார் என்பதைப்போல துரியோதனன் திரும்பிப் பார்த்தான். “இன்று நீரின்மையால்தான் நோயுற்றிருந்தீர்கள். நீரருந்திவிட்டுச் செல்லலாம்” என்றான் கர்ணன் மீண்டும்.

தலையசைத்து துரியோதனன் புரவியை இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர்கொடி பறந்த தண்ணீர்பந்தலை நோக்கி செலுத்தினான். அதன் பெருமுற்றத்தில் இறங்கி புரவிகளை நீரருந்த விட்டனர். நீரைப்பார்த்ததும் பெருமூச்சுவிட்டு பிடரி சிலிர்த்து, தொடைத்தசைகள் விதிர்க்க, ஒற்றைப் பின்னங்காலைத் தூக்கி நின்று அவை நீரருந்தின. கர்ணன் இரு புரவிகளின் கடிவாளங்களையும் பற்றிக்கொண்டான். துரியோதனன் நீர்ப்பந்தலில் பெரிய பாளைத் தொன்னைகளில் அளிக்கப்பட்ட இன்நீரை வாங்கி அருந்தினான்.

நீரை கொண்டுபோக விரும்புபவர்களுக்காக பாளையால் செய்யப்பட்ட குடுவைகளில் நீரை அளித்தனர். கர்ணன் இரு குடுவைகளை வாங்கி தன் புரவியின் சேணத்தில் கட்டி தொங்கவிட்டான். புரவிகளை அங்கே நின்ற சாலமரத்தடியில் கொண்டு சென்று நிறுத்தி மரத்திலிருந்து தழைகளை பறித்துவந்து அவற்றின் கழுத்தையும் விலாவையும் பின்தொடைகளையும் வயிற்றையும் அழுத்தி நீவிவிட்டான். அவன் புரவிகளை நீவுவதைப் பார்த்தபடி அருகே இருந்த பாறையொன்றில் துரியோதனன் வந்து அமர்ந்தான்.

கர்ணன் சாலையைக் கடந்து மறுபக்கம் இறங்கிச் சென்று யமுனையின் நீர்க்கரை மணல் விளிம்பில் நின்று கைகளையும் முகத்தையும் கழுவிய பின்பு மேலே வந்தான். அவன் வருவதை துரியோதனன் எப்பொருளும் துலங்காத விழிகளால் நோக்கியிருந்தான். கர்ணன் வந்து துரியோதனன் அருகே இன்னொரு சிறு கல்லில் அமர்ந்தான். துரியோதனன் அவனிடமல்ல என்பது போல “படகில் செல்ல என்னால் இயலாதென்று தோன்றியது” என்றான். “அதன் அமைதியான ஒழுக்கு என் அகத்தை அலறச்செய்கிறது. வரும்போது பித்தெழுந்து நீரில் குதித்துவிடுவேன் என்றே அஞ்சினேன்.”

கர்ணன் “ஆம். புரவியில் வரும்போது நானும் அதை எண்ணிக் கொண்டேன்” என்றான். துரியோதனன் “ஆறு அசைவற்றிருப்பது போல் ஒரு உளச்சித்திரம் எழுகிறது படகில் இருக்கும்போது. எப்போதும் ‘விரைவு, மேலும் விரைவு’ என்று உள்ளம் கூவிக்கொண்டே இருக்கிறது. ஒருவகையில் புரவி படகைவிட விரைவு குறைவாகவே செல்கிறது. இருந்தாலும் புரவியில் செல்வது காலத்தில் விரைவதுபோல் தோன்றச்செய்கிறது” என்றான். கர்ணன் “ஆம்” என்றான்.

துரியோதனன் பேச விழைவது போல் தோன்றியது. நெடுநேரம் பேசாமல் இருப்பவர்களுக்கே உரிய முறையில் விரைவாக சொல்லடுக்கி ஆனால் கூரிய பொருளேதும் திரளாமல் அவன் பேசிக் கொண்டிருந்தான். “காலத்தில் நின்று கொண்டிருக்க விழைகின்றன அத்தனை பொருட்களும் என்று தோன்றுகிறது. இதோ இங்கிருக்கும் அத்தனை கற்களும் காலத்தில் நின்று கொண்டிருக்கின்றன. அவற்றுடன் ஒப்புநோக்குகையில் யமுனை விரைகிறது. ஆனால் அதுவும் காலத்தில் நின்று கொண்டுதான் இருக்கிறது.”

“அதன் விரைவு ஒரு பொய். அதன்மேல் பாய்விரித்து படகில் செல்பவன் தான் காலத்தில் நின்று கொண்டிருப்பதாக உணர்கிறான். அதுவும் பொய். நமது உடல்கள் காலத்தில் சென்றுகொண்டிருக்கின்றன… உடலில் குருதி ஓடுவது காலமே என்று ஒரு சூதர் சொல்லுண்டு. உள்ளமாக துடிப்பதும் உணவை எரிப்பதும் விழிகளாக அசைவதும் எண்ணங்களாக கொப்பளிப்பதும் காலமே என்பர். பொய்! காலத்தில் நாம் செல்வதில்லை. காலம் நம்மைச் சுற்றி பெரும்புயல்போல சுழன்றடித்துச் சென்று கொண்டிருக்கிறது. காலத்தில் செல்ல முடிந்தால் எந்தத் துயரும் இல்லை. காலப்பெருக்கின்முன் அசைவற்று நிற்பதுதான் துயர்.”

அவன் என்ன சொல்கிறான் என்று விளங்கிக்கொள்ள முயன்று பின் அதை சொற்களாகவே விட்டுவிட்டு கர்ணன் வெறுமனே நோக்கியிருந்தான். “நான் அஸ்தினபுரிக்கும் திரும்பிச்செல்ல விரும்பவில்லை, அங்கரே. உண்மையில் கிளம்பும்போது எங்காவது சென்றுவிட வேண்டுமென்று விழைந்தேன்” என்றான். கர்ணன் “இங்கு தங்களுக்கு என்ன நிகழ்ந்தது என்று எனக்குத் தெரியும். ஆகவேதான் தங்களுடன் வரவேண்டுமென்று முடிவு செய்தேன்” என்றான்.

“எனக்குத் தெரியும் இங்கு என்ன நிகழுமென்று. இங்கே வந்து அனைத்தையும் தீர்த்துக் கொள்ளலாமென்று தாங்கள் சொன்னபோது ஒருதுளியும் என் உள்ளம் அதை நம்பவில்லை. ஆனால் உங்கள் உணர்வுகளை நான் புரிந்து கொண்டேன். அத்தனை நம்பிக்கையுடன் என் விழிகளை நோக்கி நீங்கள் சொல்லும்போது அதை மறுக்க என்னால் இயலவில்லை. ஆனால் நான் அஸ்தினபுரியிலிருந்து கிளம்பும்போது இன்னும் பெரிய ஒன்றை எதிர்கொள்ளப் போகிறேன் என்று எனக்குத் தோன்றியது.”

“அங்கரே, இது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. அன்று இச்சிறுமகள் முன் நிலைதவறி விழும்போது அது ஒரு தொடக்கம் என்று என்னுள் எங்கோ ஓர் எண்ணம் வந்தது” என்று துரியோதனன் தொடர்ந்தான். “அன்று இங்கிருந்து கிளம்பி அஸ்தினபுரிக்குச் செல்லும்போது ஒவ்வொரு கணமும் அது வளர்ந்து ஒரு பெரும் அச்சமாகியது. இதைவிடப் பெரிதாக ஒன்று, இன்னும் பெரிய ஒன்று வரவிருக்கிறது என்ற அச்சமே என்னை சினமும் வெறியும் கொள்ளவைத்தது. என் நகரம் நோயில் மூழ்கி அழியும்போது என்னுள் அச்சத்தைத் தவிர்க்கவே சினத்தை நிரப்பிக் கொண்டு அங்கிருந்தேன்.”

“ஜராசந்தனின் இறப்புச் செய்தி காதில் விழுந்தகணம் மீண்டும் தோன்றியது இன்னும் பெரிய ஒன்று அணுகுகிறது என. எனக்குத் தெரியவில்லை, அதை வந்து என் செவியில் மெல்ல சொல்லும் தெய்வம் எது என்று. அங்கரே, நான் அதை அஞ்சுகிறேன். உங்களுடன் இந்திரப்பிரஸ்தத்தை நோக்கி படகேறும்போதும் என் செவியில் அத்தெய்வம் சொன்னது இன்னும் பெரிய ஒன்று என்று” துரியோதனன் சொன்னான்.

“எதுவும் நம் கையில் இல்லை” என்று கர்ணன் தளர்ந்த குரலில் சொன்னான். “பானுமதி இந்திரப்பிரஸ்தத்தின் அரசிக்கு எழுதிய ஓலையை எனக்குக் காட்டினாள். உங்களை பழைய துரியோதனராக மீட்டு தனக்கு அளிக்கும்படி அவள் கோரியிருந்தாள். எனக்குத் தெரியும், இந்திரப்பிரஸ்தத்தின் அரசி யாரென்று. கோரப்பட்ட எதையும் மறுக்கக்கூடியவள் அல்ல அவள். பேரரசியரால் அது இயலாது. இந்திரப்பிரஸ்தத்தையேகூட கோரி பெற்றுவிட முடியுமென்று தோன்றியது. ஆகவே நான் கிளம்பும்போது முற்றிலும் நம்பிக்கையுடன் இருந்தேன்.”

“உண்மையில் படகில் ஒவ்வொரு கணமும் இந்திரப்பிரஸ்தம் அணுகுவதை காத்திருந்தேன். நீங்கள் தனிமையும் துயரும் கொண்டிருப்பதையும் நிலைகொள்ளாது படகில் உலாவிக்கொண்டிருப்பதையும் பார்த்தேன். இன்னும் சற்று நேரம், இதோ அணுகிவிட்டது அனைத்தும் முடியும் மையம் என்றே என் உள்ளம் தாவிக் கொண்டிருந்தது” என்று கர்ணன் தொடர்ந்தான். “இப்போது எண்ணும்போது ஏக்கம் நிறைகிறது. எவ்வளவு எதிர்பார்ப்பு! எவ்வளவு நம்பிக்கை!”

அவன் பேச்சை நிறுத்தி கீழே கிடந்த சிறு குச்சியை எடுத்து தரையில் கோடுகளை இழுத்துக் கொண்டிருந்தான். துரியோதனன் அவன் சொல்வதை செவி கொள்ளாதவன் போல தொலைவில் ஓடிய யமுனையின் ஒளிமிக்க நீர்ப்பரப்பை நோக்கிக் கொண்டிருந்தான். “நான் எதிர்பார்த்தவை அனைத்தும் நடந்தன” என்று கர்ணன் தொடர்ந்தான். “பாண்டவர் ஐவரும் தங்கள் அரசியுடன் படித்துறைக்கு வந்து உங்களை வணங்கி எதிர்கொண்டனர். அவர்களின் ஐந்து மைந்தரும் வந்து உங்கள் கால்களைத் தொட்டு வணங்கி நகருக்குள் வரவேற்றனர். இந்திரப்பிரஸ்தத்தின் அரசி உங்களிடம் வந்து வணங்கி முகமன் உரைத்து இந்திரப்பிரஸ்தத்தை வாழ்த்தும்படி கோரினாள். உங்கள் முகமும் மலர்ந்ததை பார்த்தேன். உங்கள் தம்பியர் அனைவரும் விழிநீர் மல்கினர்.”

“தருமன் என்னிடம் அங்கரே தங்களால் எங்கள் குடி செழிக்க வேண்டுமென்று சொன்னபோது அக்கணம் எப்படி விழிநீரை கட்டுப்படுத்தினேன் என்பதே எனக்குத் தெரியவில்லை. பொற்தேர்களில் ஏறி இந்திரப்பிரஸ்தத்தின் சுழல்பாதைகளினூடாக மேலே சென்று கொண்டிருந்தபோது வான் நோக்கி பறந்தெழும் உணர்வையே அடைந்தேன். அரசே, அனைத்தும் எத்தனை எளிதாக முடிந்துவிட்டன என்று வியந்தேன். அனைத்தும் அத்தனை எளிதானவைதானா என்று எண்ணிக் கொண்டேன். உண்மையில் அவை அனைத்தும் எளிதானவைதான். இவற்றை தெய்வங்கள் தலையிடவில்லை என்றால் மனிதர்கள் மிக எளிதாக முடித்துக்கொள்ள முடியும்.”

“நம் அணிநிரை சென்று அரண்மனையின் வாயிலில் நிறைவுற்றபோது அங்கு உங்களை வரவேற்க இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசி தன் பிறநான்கு மருகிகளுடன் காத்திருந்ததைக் கண்டபோது இதற்குமேல் ஒன்றுமில்லை என்று எண்ணினேன். அவர் உங்கள் அருகே வந்து கைகூப்பி அவரோ, அவரது ஐந்து மைந்தர்களோ, மைந்தரின் துணைவியரோ, இந்திரப்பிரஸ்தத்தின் பிறிதெவருமோ உங்கள் உள்ளம் வருந்தும்படி எதையேனும் செய்திருந்தால் அன்னையென உங்கள் கைகளை பற்றிக்கொண்டு பொறுத்தருளும்படி கோருவதாகக் கூறினார். உணர்வெழுச்சியுடன் நீங்கள் குனிந்து அவர் கால்களைத் தொட்டு இச்சொற்களுக்காகவே மும்முறை உங்கள் கால் தூசியை தலையணிகிறேன் அன்னையே. தாங்கள் இதை சொல்லலாகாது என்று சொன்னீர்கள்.”

“உங்கள் விழிநீரை அன்று நான் பார்த்தேன். உங்கள் உடன்பிறந்தார் அனைவரும் விழிநீர் வழிய கைகூப்பி நின்றிருப்பதை கண்டேன். தருமன் மீண்டும் உங்கள் கைகளை பற்றிக்கொண்டு அறியாது நிகழ்ந்த பிழை. அப்பிழைக்கு இந்திரப்பிரஸ்தம் எவ்வகையிலும் ஈடு செய்யும் அரசே என்றபோது இருகைகளையும் விரித்து நீங்கள் அவரை ஆரத்தழுவிக்கொண்டீர்கள்” என்றான் கர்ணன். “அதற்கப்பால் ஒன்றும் சொல்வதற்கில்லை. அரசே, அதன் பின் அதைப்பற்றி ஒரு சொல் பேசக்கூடாதென எண்ணினேன். நீங்களும் பாண்டவரும் இணைந்து உரையாட வேண்டுமென்பதற்காகவே நான் உங்கள் தம்பியரை அழைத்துக்கொண்டு விலகிச்சென்றேன். உங்களை முழுமையாக தனிமையில் விட்டேன். உங்கள் உளமுருகட்டும் என துச்சாதனனிடம் சொன்னேன்.”

வேண்டாம் என்பது போல் துரியோதனன் கையை அசைத்தான். “பிறகென்ன நடந்தது?” என்று கர்ணன் மீண்டும் தொடங்கினான். “நூறுமுறை எனக்குள் ஓட்டிப்பார்த்துக் கொண்டேன். பிறகென்ன நடந்தது? ஒவ்வொன்றும் உகந்த முறையிலேயே அமைந்தது. வேள்விக்கான பணிகள் தொடங்கியபோது யுயுத்ஸுவையும் துச்சாதனனையும் அடுமனைப்பணிக்கு தருமன் அனுப்பினார். கௌரவ நூற்றுவரையும் அரசர்களை அரியணை அமர்த்தும் பணிகளுக்கு அனுப்பினார். விசித்திரவீரியரின் பெயரர்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டு நிகழ்ந்த பெருவிழாவாக அமைந்தது இந்த ராஜசூயம்.”

“அரசே, தாங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள். நாம் வந்த மறுநாள் பீஷ்மபிதாமகரும் பேரரசரும் அஸ்தினபுரியிலிருந்து அணிப்படகுகளில் இங்கு வந்தனர். அவர்களை வரவேற்க நானும் துர்மதனும் துச்சகனும் சுபாகுவும் சுஜாதனும் விகர்ணனும் சென்றிருந்தோம். படகிலிருந்து இறங்கிய பீஷ்மபிதாமகர் எங்களைக் கண்டு தொலைவிலிருந்தே இரு கைகளையும் விரித்தார். நாங்கள் அருகே சென்றதும் அவர் கண்களில் கண்ணீரை பார்த்தோம். நெடுநாட்களுக்கு முன்னரே இவை அனைத்திலிருந்தும் உதறி தன்னைப்பிரித்து உதிர்ந்துவிட்டவர் அவர் என்று எண்ணியிருந்தேன். இப்பிறவியில் அவருக்கு மைந்தர்ப் பெருந்திரளிலிருந்து விடுதலையே இல்லையென்று அப்போது அறிந்து கொண்டேன்.”

“கண்ணீருடன் தன் பெயர்மைந்தர்களை மாறிமாறி நெஞ்சோடணைத்துக் கொண்டார். பீமனையும் துச்சாதனனையும் இரு தோள்களையும் கைகளால் வளைத்து சுற்றித் தூக்கிச் சுழற்றி நிலத்திலிட்டார். உரக்க நகைத்தபோது அவர் முகத்தில் தெரிந்த அந்த உவகை நெளிவை வாழ்நாளில் எப்போதும் என்னால் மறக்க முடியாது” என்றான் கர்ணன். “அர்ஜுனனையும் நகுலனையும் தோள் தழுவினார். யுயுத்ஸுவையும் சகதேவனையும் இணைத்துப்பற்றி மாறி மாறி முத்தமிட்டார். அபிமன்யுவையும் விகர்ணனையும் சுபாகுவையும் தோளில் தூக்கிக்கொண்டு குதித்தார். ஒரு சொல் இல்லை. ஓர் அரிய நடனம் போலிருந்தது அக்காட்சி. அல்லது காட்டில் விலங்குகள் குட்டிகளுடன் களிகூர்வது போல.”

“நான் சுற்றிலும் பார்த்தபோது இந்திரப்பிரஸ்தத்தின் படகுத்துறைகளில் அனைத்துப் படைவீரர்களும் வணிகர்களும் குடிகளும் பெருந்திரளென வட்டமிட்டு அதை நோக்கக் கண்டேன். அனைவர் விழிகளிலிருந்தும் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தது. முதியோர் பலர் தலைக்கு மேல் கைகளைக் கூப்பி அழுதுகொண்டிருந்தனர். இவ்விரு நாடுகளின் ஒவ்வொரு குடியும் விழைவது அத்தருணம். நாம் சென்றடையும் உச்சம் அது. பீஷ்மர் துர்மதனையும் துச்சலனையும் அழைத்தபடி தேரில் நகர் நோக்கி சென்றார். நாங்கள் படகுக்குள்ளிருந்து சஞ்சயனால் அழைத்துக் கொண்டுவரப்பட்ட பேரரசரை அணுகினோம்.”

“பீமன் சென்று அவர் காலைத்தொட்டு வணங்கியபோது பெருங்குரலில் மந்தா என்றழைத்தபடி அவர் அவனை தழுவிக்கொண்டார். நகுலனும் சகதேவனும் அர்ஜுனனும் தருமனும் துச்சாதனனும் பிற கௌரவர்களும் அவரைச் சூழ்ந்தனர். ஒவ்வொருவரையாக தலையையும் தோளையும் காதுகளையும் தொட்டுத் தொட்டு வருடி அவர் நகைத்தார். விழிநீர் வழிய எழும் நகைப்புக்கிணையாக பேரருள் கொண்ட ஒரு முகத்தை தெய்வங்கள்கூட சூட முடியாது.”

“தன்னை தூக்கிக் கொண்டு செல்லும்படி பீமனிடம் சொன்னார். பீமனும் துச்சாதனனும் துச்சகனும் அர்ஜுனனுமாக அவரை தங்களது தோள்களில் தூக்கிக் கொண்டு தேர் நோக்கி சென்றனர். பிறர் கூவி நகைத்தபடி அவர்களை தொடர்ந்தனர். அப்பெருக்கிலிருந்து சற்றே பிரிந்து என் அருகே வந்த தருமன் என் இரு கைகளையும் பற்றிக்கொண்டு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் அங்கரே, தங்கள் தாள் தோய என் தலையை தாழ்த்துகிறேன். இத்தருணத்தை நீங்களே எனக்களித்தீர்கள் என்றார். இல்லை நாமனைவரும் விழைவது இது. விண்ணிலிருந்து நமது மூதாதையர் இவற்றை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்றேன். ஆம் என்றபின் இருகைகளாலும் தன் கண்களைத் துடைத்தபடி அவர் தன் தேர் நோக்கி சென்றார்.”

“அன்று நகர் வழியாக செல்லும்போது ஒவ்வொரு இலையும் மலராக மாறிவிட்டன என்று தோன்றியது. ஒவ்வொரு மாளிகையும் நிலவு பட்டது போல் ஒளி கொண்டிருந்தது. புன்னகை அற்ற ஒரு முகம் கூட என் கண்களில் படவில்லை. சில தருணங்களில்தான் மானுடனாக இருப்பதற்கு பேருவகையும் பெருமிதமும் கொள்கிறேன். அத்தகைய ஒரு தருணம்” என்றான் கர்ணன். “கொடியவை தெய்வங்கள். இருளுக்கு முன் பேரொளியை நம் விழிகளுக்குக் காட்டி விளையாடுகின்றன அவை.”

[ 7 ]

துரியோதனன் அச்சொற்களை செவிகொள்ளாதவன் போலவே அமர்ந்திருந்தான். முகத்தில் யமுனைநீரொளியும் அதிலாடும் மக்கள்நிரையின் நிழல்களும் ஆடிக்கொண்டிருந்தன. குதிரை செருக்கடித்தது. எங்கோ ஒரு சகடம் கல்லில் ஏறி அமைந்தது. பின்பு அவன் பெருமூச்சுடன் கலைந்தான். நிலத்தை நோக்கியபடி “ஆனால் அன்று அவ்வுணர்ச்சிக்கும் விழிநீருக்கும் அடியில் நான் மேலும் மேலும் உறைந்து குளிர்ந்து கொண்டிருந்தேன். இன்னும் பெரிதாக என்று அந்தக் குரல் என் செவியில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதையே அவர்கள் ஒவ்வொருவரும் தாங்களும் கேட்டிருக்கிறார்கள் என்று தோன்றியது. அவர்கள் கொண்ட உணர்ச்சிப்பெருக்கு அதன்பின் நிகழவிருக்கும் ஏதோ ஒன்று அவர்களை அச்சுறுத்துவதனால்தான் என்று எண்ணிக்கொண்டேன்” என்றான்.

“தேரிலேறி அரண்மனை வரை செல்லும் ஒவ்வொரு கணமும் அவ்வெண்ணத்தைக் கடந்து உவகைகொள்ள நான் முயன்று கொண்டிருந்தேன். ஒவ்வொரு தருணமும் என்னை கண்கரையச் செய்தது. மறுகணமே மேலும் பெரிதாக என்னும் சொல்லில் சென்று தலையறைந்து நின்றேன். பேரரசியைக் கண்டு வணங்கியபோது ஏதோ ஒன்று நிகழ்ந்து அனைத்தும் பொய்யென ஆகிவிடவேண்டும் என்று விழைவெழுந்தது. அதுவே விழிநீராக என்னில் வழிந்தது. ஆனால் அன்று மாலை என் அரண்மனைக்குச் சென்றபோது உணர்ந்தேன், ஒருகணமும் என்னுள் வாழும் அத்தெய்வம் அடங்கவில்லை என்று.”

“அங்கரே, அன்று படகுத்துறையில் இருகைகளையும் விரித்தபடி பீமன் என்னை நோக்கி வந்தபோது அத்தெய்வம் என் உடலென்னும் கவசத்திற்குள் உருதிமிறி போருக்கெழுந்தது. போரில் தோள்கோக்கும்போது நட்பு விழையும் இரு தெய்வங்கள் உள்ளே தழுவிக் கொள்கின்றன என்பதை உணர்ந்திருக்கிறேன். நட்புடன் தழுவிக் கொள்கையில் உள்ளே இரு தெய்வங்கள் போருக்கு சினந்தெழுவதை அங்கே கண்டேன். அவனும் அதை உணர்ந்திருப்பான். அன்று இரவு ஆடி முன் சென்று என் தோள்களை பார்த்துக் கொண்டேன், அவன் தோள்களுக்குச் சற்றேனும் ஆற்றல் குறைந்தவையா என்று. என்றேனும் ஒரு நாள் போர்க்கலையில் அவன் நெஞ்சைப்பிளந்து உயிர்க்குலையை எடுக்கும் ஆற்றல் என் கைகளுக்கு உண்டா என்று. அவ்வெண்ணமே என்னை வெறி கொள்ளச்செய்தது. உயர்ந்த யவன மது அளிக்கும் மிதப்பு தசைகளில் ஓடியது.”

“என் தோள்கள் ஜராசந்தனின் தோள்களைவிடப் பெரியவை என்று எண்ணிக் கொண்டேன். அவற்றை அவன் எளிதில் வெல்ல முடியாது. என் பயிற்சி அவனிடமில்லை. கதையுடன் அவனை எதிர்கொண்டேன் என்றால் அவன் தலையை ஒருநாள் கோழிமுட்டை போல் உடைப்பேன். மூளை வெண்நுரை போல் வழிந்தெங்கும் சிதற அவன் நெஞ்சை மிதித்து உடைத்து திறப்பேன். அவனைக் கொன்று குருதி அருந்துவதைப்பற்றி எண்ணி உடல் கிளற உள்ளம் கொந்தளிக்க அன்றிரவெல்லாம் அரண்மனைக்குள் சுற்றி வந்தேன்.”

கர்ணன் பெருமூச்சுடன் “எப்போதும் அப்படித்தான். சற்றே முன் நகர்ந்தால் பல மடங்கு பின்னகர்ந்துவிடுவோம்” என்றான். துரியோதனன் “ஏனெனில் அந்நெகிழ்வு பொய். அது என் உறுதியை சீர்நோக்க என் தெய்வம் செய்த ஆடல். அதில் நான் தோற்றுவிட்டேன். அவ்விழிமகன்கள் முன் விழிநீரும் விட்டுவிட்டேன். அதை செய்திருக்கலாகாது. அதற்காக அதன்பின் நூறுமுறை நாணினேன். ஆகவேதான் என் சினத்தை எண்ணி எண்ணி பெருக்கிக் கொண்டேன். மறுநாள் அவன் அவையில் அஸ்தினபுரியின் முடியணிந்து வந்து அரச நிரைகளில் அமர்ந்திருந்தபோது சினமே என் உடலாக இருந்தது. என் அருகில் அமர்ந்திருந்த ஒவ்வொருவரும் என் உடலில் அச்சினம் எரிவதை உணர்ந்திருக்க முடியும். எவ்வண்ணமோ அதை உணர்ந்தவர்கள்போல் ஐந்து பாண்டவர்களும் விலகிச் சென்றுவிட்டனர்” என்றான்.

துரியோதனன் பற்களைக் கடித்து தன் நெற்றியை தட்டிக்கொண்டான். “அந்தப் பெரிய ஒன்று என்ன என்பதை அப்போதே என் அகம் உணர்ந்துகொண்டிருந்தது. சிசுபாலனைக் கண்டபோது என் உள்ளத்துக்குள் ஒரு பதற்றம் ஏற்பட்டது. அவனை எதிர்கொண்டு சென்று முகமன் உரைத்திருக்கவேண்டும் நான். ஆனால் நான் திரும்பிக் கொண்டேன். அவன் என்னை அறியவே இல்லை என்பதைக்கண்டு ஆறுதல்கொண்டேன். பாண்டவ இளையோரும் தம்பியரும் நீங்களும் அவனை வரவேற்றபோது நான் அறியாதவன் போல் அமர்ந்திருந்தேன். அவன் என்னைக் கடந்து சென்றபோது என் காலும் கையும் மெல்லத்துடித்தன. அது ஏன் என்று அவன் கொல்லப்பட்ட பிறகுதான் அறிந்தேன்.”

“இப்போது அவனுடைய ஒவ்வொரு அசைவையும் நினைவில் என்னால் தீட்டிக் கொள்ள முடிகிறது. அப்படியென்றால் அவனை எனது விழிகளின் ஓரம் ஒவ்வொரு கணமும் நோக்கிக் கொண்டிருந்திருக்கிறது. அவனைச் சூழ்ந்தே நான் உளம் ஓட்டிக் கொண்டிருந்திருக்கிறேன்” என்றான் துரியோதனன். “ஏன்? இதெல்லாம் எதன்பொருட்டு நிகழ்கின்றன? ஜராசந்தன் இறந்ததை நான் காணவில்லை. இவன் என் கண்முன் தலையறுந்து விழுந்தான்.”

“நாம் செல்வோம்” என்று கர்ணன் அவன் தோளை தட்டினான். “ஆமாம், செல்ல வேண்டியதுதான்” என்றபடி துரியோதனன் எழுந்தான். புரவியின் அருகே சென்று கடிவாளத்தை அழுத்தி கால் சுழற்றி ஏறி அமர்ந்தான் கர்ணன். “புரவியிலேயே அஸ்தினபுரிக்கு சென்றுவிடலாம்” என்றான். “தெரியவில்லை. நான் அஸ்தினபுரிக்குதான் செல்வேனா என்றுகூட என்னால் இப்போது சொல்ல முடியாது” என்றான் துரியோதனன். “நாம் அங்குதான் செல்கிறோம்” என்று கர்ணன் உறுதியாகச் சொன்னான். துரியோதனன் புரவியின் கடிவாளத்தைப் பற்றியபடி தலைகுனிந்து எண்ணத்தில் ஆழ்ந்தபடி இருந்தான்.

“செல்வோம், அரசே” என்றான் கர்ணன். துரியோதனன் சேணத்தின் வளையத்தில் காலை வைத்து உடலைத்தூக்கி தாவி அமர்ந்தான். அவன் எடையில் புரவி சற்றே வளைந்து முன் நகர்ந்தது. “சிசுபாலன் எழுந்து குரலெடுத்தபோதே நான் அவன் தலை அறுபட்டுக் கிடப்பதை பார்த்துவிட்டேன்” என்றான் துரியோதனன். “முதலில் செயலற்று அமர்ந்திருந்தேன். பிறகு அப்படி அமர்வதே கோழைத்தனத்தால்தானோ என்று எண்ணியே அவனை துணை நிற்கவேண்டுமென்று பீஷ்மரிடம் மன்றாடினேன். அது ஒருபோதும் நிகழப்போவதில்லை என்று அறிந்திருந்தேன். என் கண்ணெதிரில் அவன் தலையற்று துடித்தான். அவன் தந்தை அவன் உடலுக்காக மன்றாடி கேட்டார். அப்போது உணர்ந்தேன், இருமுறை நான் இறந்து பிறந்துவிட்டேன் என்று. ஒருமுறை ஜராசந்தனாக, இன்னொருமுறை சிசுபாலனாக.”

“நாம் இவற்றை இனி அஸ்தினபுரிக்குச் சென்று பேசுவோமே” என்றான் கர்ணன். “ஆம். இப்போது இப்பேச்சை விடுவோம். இனி அஸ்தினபுரி வரை நாம் ஒரு சொல்லும் பேசவேண்டியதில்லை” என்றான் துரியோதனன். “ஆம், அதுவே நன்று” என்று கர்ணன் சொன்னான். துரியோதனன் தன் புரவியை இழுத்து நிறுத்தி திரும்பி கர்ணனிடம் “அனைத்து இலைகளையும் உதிர்த்தபின் எஞ்சும் தளிரிலை போல் ஒன்றே ஒன்று எஞ்சி நிற்கிறது, அங்கரே” என்றான். கர்ணன் அவனை நோக்கினான். “நான் இந்திரப்பிரஸ்தத்தை வென்றாக வேண்டும். அவர்கள் மணிமுடியை என் காலில் வைத்தாக வேண்டும். அவள் வந்து என் அவையில் நின்றாக வேண்டும். அன்றி ஒருபோதும் இது முடியாது” என்றான்.

முந்தைய கட்டுரையதா யதாய
அடுத்த கட்டுரைஆற்றூர்