[ 4 ]
எதிர்ப்படும் அனைத்தின் மீதும் கடும் சினத்துடன் கர்ணன் தன் அரண்மனைக்கு சென்றான். அவனால் அமரமுடியவில்லை. நிலையழிந்து சுற்றிக்கொண்டிருந்தான். ஏவலனை அனுப்பி திரிகர்த்த நாட்டு கடும் மதுவை வரவழைத்து அருந்தினான். மது உள்ளே சென்று அங்கிருந்த எண்ணங்களின் மீது நெய்யாக விழுந்து மேலும் பற்றிக்கொண்டது. உடல் தளர்ந்து கால்கள் தள்ளாடியபோதும் உள்ளம் எரிந்துகொண்டிருந்தது. ஏவலனை அனுப்பி இளைய அரசியின் அரண்மனையில் அரசர் இருக்கிறாரா என்று பார்க்கச் சொன்னான்.
அவன் திரும்பி வந்து அங்கு அரசர் சென்றபோது இளைய அரசி ஓடிச்சென்று உள்ளே தன் அறைக்குள் புகுந்து கதவை சார்த்திக்கொண்டதாகவும் அரசர் அங்கிருந்த வாசல்களை உடைத்து தூண்களை உதைத்து விரிசலிடச்செய்து கூச்சலிட்டபின் திரும்பி தன் அரண்மனைக்கே சென்றுவிட்டதாகவும் சொன்னான். சற்று நேரத்தில் இளைய அரசியின் செய்தியே வந்தது. அவள் கலிங்கத்துக்கே மீள விழைவதாக சொல்லியிருந்தாள்.
சற்று நேரத்தில் துர்மதன் ஓடிவந்து “மூத்தவரே, தாங்கள் வரவேண்டும். அரசரை தாங்கள்தான் கட்டுக்குள் நிறுத்தவேண்டும். துச்சாதனரையும் துர்முகரையும் சுபாகுவையும் அறைந்துவிட்டார். பீமபலன் அடிவாங்கி விழுந்து நினைவிழந்துவிட்டான். அவரை மருத்துவ அறைக்கு கொண்டு சென்றிருக்கிறோம்” என்றான். கர்ணன் சற்று நேரம் தன் தலையை தாங்கி அமர்ந்திருந்தபின் “என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை” என்றான். “குறைந்தது தாங்கள் அவரைப்பிடித்து நிறுத்தமுடியும். இழுத்துச் சென்று இன்றிரவுக்கு மட்டுமாவது எங்காவது அறைக்குள் அடைத்துவிட முடியும்” என்றான்.
“இத்தருணத்தில் நான் அவரை எதிர்கொள்ள விரும்பவில்லை” என்றான் கர்ணன். “இத்தருணத்தில்தான் தாங்கள் எங்களுக்குத் தேவை, மூத்தவரே” என்றான் துச்சலன். உரத்த குரலில் “அவரைப்போலவே நானும் இருக்கிறேன், மூடா. அதே நிலையில்தான் நானும் இருக்கிறேன். புரிகிறதா? செல்!” என்றான் கர்ணன். திகைத்து பார்த்த துச்சலன் வெளியே சென்ற சற்று நேரத்திலேயே துர்முகனும் விகர்ணனும் ஓடிவந்தனர். “மூத்தவரே, தாங்கள் வந்தாகவேண்டும். இல்லையேல் இன்றிரவு என்ன நடக்குமென்றே தெரியாது” என்றனர்.
கர்ணன் “என்ன சொல்கிறார்?” என்றான். “தந்தைக்குமுன் சென்று போருக்கு அறைகூவப்போவதாக சொல்கிறார். கதாயுதத்தை எடுப்பதற்காக பயிற்சிக்கூடத்திற்கு ஓடினார். அங்கே அவரைத் தடுத்த வீரர்களை அறைந்து வீழ்த்தினார்.” தலையை அசைத்து “அவர் செல்ல மாட்டார்” என்றான் கர்ணன். “செல்வார். இன்றிருக்கும் நிலையில் தந்தைக்கு முன் அவர் உறுதியாக சென்று நிற்பார். இப்போதிருக்கும் சொற்களுடன் அவர் சென்றால் தந்தையின் ஓர் அறையிலேயே உயிர்விடுவார். வாருங்கள் மூத்தவரே, இத்தருணத்தில் வராவிட்டால் பிறகு அவரை பார்க்கவே முடியாது போகலாம்” என்றான் விகர்ணன்.
கர்ணன் எழுந்து தன் சால்வையை எடுத்துப் போட்டபடி நடந்தான். அறைக்கு வெளியே வந்தவுடன் “இன்னும் சற்று மது கொண்டு வரச்சொல்” என்றான். “போதும், மூத்தவரே. தாங்கள் இப்போதே கால் தள்ளாடிக் கொண்டிருக்கிறீர்கள். தங்களால் நடக்க முடியாது” என்றான். “நீ எனக்கு சொல் சூழ வேண்டியதில்லை. விலகு, மூடா!” என்று கர்ணன் கையை ஓங்கினான். விகர்ணன் சற்று பின்னடைந்தான். கர்ணன் விகர்ணனைப் பார்த்து “உன்னை தோளில் தூக்கி நான் வளர்த்திருக்கிறேன். என் முன் சிறுவனாக அன்றி நீ நின்றதில்லை. நான் நடக்க முடியுமா இல்லையா என்று சொல்வதற்கு நீ யார்?” என்றான். விகர்ணன் “பிழைதான். பொறுத்தருளுங்கள், மூத்தவரே! விரைவில் வாருங்கள்! அரசர் எந்நிலையில் இருக்கிறாரென்றே தெரியவில்லை” என்றான்.
துரியோதனனின் மாளிகை முகப்பில் கௌரவர்கள் அனைவருமே நின்றிருந்தனர். கர்ணனைக் கண்டதும் அவர்களில் சிலர் அவனை நோக்கி ஓடி வந்தனர். சுஜாதன் கர்ணனின் கையை பற்றிக்கொண்டு “மூத்தவரே…” என்று அழுதான். “என்ன? என்ன?” என்றான் கர்ணன். “அவர் பிறிதொருவராக ஆகிவிட்டார். அவர் எங்கள் மூத்தவரே அல்ல. வேறு ஏதோ தெய்வம் அவருக்குள் குடியேறிவிட்டது” என்றான் சுஜாதன். கர்ணன் “பொறு பொறு” என்று அவன் தோளை தட்டியபடி முன்னால் நடந்தான். துர்மதன் “எதிர்ப்படும் அத்தனை பேரையும் அறைகிறார். தந்தையிடம் போர் புரியப்போவதாக அறைகூவுகிறார்” என்றான்.
“எங்கிருக்கிறார்?” என்றான் கர்ணன். துச்சாதனன் “படைக்கலச்சாலையில் கதை சுழற்றிக் கொண்டிருக்கிறார். தந்தையை போருக்கு அறைகூவுவதாகச் சொல்லி நான்கு வீரர்களை தூதனுப்பிவிட்டார். நால்வரையும் நாங்கள் தடுத்துவிட்டோம். தந்தை வரவில்லை என்று கண்டால் அவரே கதையுடன் கிளம்பி புஷ்பகோஷ்டத்துக்கு செல்லக்கூடும்” என்றான். கர்ணன் நின்று ஒரே கணத்தில் அந்தப்போரை கண்ணுக்குள் கண்டான். “ஆம், அவர் போருக்குத்தான் சித்தமாகிவிட்டிருக்கிறார்” என்றான். தம்பியர் உடல்தளர்வதை அவன் ஓரக்கண் கண்டது.
கர்ணன் வலச்சுற்றைக் கடந்து படைக்கலப் பயிற்சிசாலைக்கு சென்றான். நான்குபக்கமும் கதைப்பயிற்சிக்களத்தில் நிழல்களாடுவது சூழ்ந்திருந்த வலச்சுற்றின் சுதைத்தூண்களில் ஒளியாடலாகத் தெரிந்தது. அவன் படைக்கலப் பயிற்சிசாலைக்குள் நுழைந்தபோதே சாயும் வெயிலில் கதை சுழற்றிக் கொண்டிருந்த துரியோதனனை கண்டான். கதை காற்றில் உறுமியபடி சுழன்று காட்சியில் உருகி இரும்பாலான ஒரு நீள் சுழலாக மாறியது. விண்ணிலிருந்து ஒரு பாம்பு துரியோதனனைச் சுற்றி பிணைந்து சீறுவது போலிருந்தது. பெருக்கெடுத்தெழுந்த ஓடை ஒன்று அவனை அள்ளிச் சுழற்றிச் சென்றது போல.
அவனைப் பார்த்தபடி கர்ணன் செய்வதறியாது நின்றான். துர்மதன் “அருகே செல்ல வேண்டாம், மூத்தவரே” என்றான். “செல்வதென்றால் ஒரு கதையுடன் செல்லுங்கள்” என்றான் துர்முகன். கர்ணன் அவர்கள் இருவரையும் தட்டி விலக்கிவிட்டு களமுற்றத்தில் இறங்கினான். “வேண்டாம், மூத்தவரே” என்று சொன்னபடி விகர்ணன் மேலும் சற்று அணுக அப்பால் செல் என்பது போல் விழிகளை அசைத்து “ம்” என்றான். அவன் நின்றுவிட்டான். கர்ணன் துரியோதனனை நெருங்கினான்.
துரியோதனன் அவன் வந்ததை முதலில் பார்க்கவில்லை என்று தோன்றியது. பின்பு ஒரு கணம் அவன் நோக்கு வந்து தொட்டுச் சென்றது. அவன் கண்களில் இருந்த வெறி எந்த மனிதரையும் அடையாளம் காண்பதல்ல என்று புரிந்தது. சீரான காலடிகளுடன் கர்ணன் அவனை நெருங்கிச் சென்றான். அவனுக்குப் பின்னால் படைக்கலச்சாலையில் கௌரவர்கள் அனைவரும் கூடி உடல் விரைப்பு கொள்ள நின்றனர். துச்சாதனன் கர்ணனுக்குப் பின்னால் காலெடுத்து வைக்க துர்மதன் அவன் தோளை பற்றினான். அவன் கையை தட்டியபடி துச்சாதனன் கர்ணனுக்குப் பின்னால் சென்றான்.
கர்ணன் துரியோதனனின் கதை உருவாக்கிய சுழல் வளையத்தை ஒரு கணத்தில் கடந்து அவன் கையைப்பற்றி நிறுத்தினான். காலை அவன் இருகால்களுக்கு நடுவே கொண்டு வந்து உந்தி நிலையழியச் செய்து இன்னொரு கையால் அவன் இடைக்கச்சையைப் பற்றி தலைக்குமேல் தூக்கிச் சுழற்றி தரையில் ஓங்கி அறைந்தான். துரியோதனனின் கையிலிருந்த கதை உருண்டு தெறித்து அப்பால் சென்றது. இருகால்களையும் மடித்து துரியோதனனின் இரு தொடைகள் மேல் அழுத்தி மண்ணோடு பற்றிக்கொண்டு தன் இருகைகளாலும் அவன் இரு தோள்களையும் பற்றி நிலத்தில் அழுத்தி அசையாது நிறுத்தினான்.
வெறிகொண்ட பன்றி போல் உறுமியபடி துரியோதனன் கர்ணனின் பிடியிலிருந்து தப்பமுடியாமல் திமிறி நெளிந்தான். கர்ணன் குனிந்து அவன் விழிகளைப் பார்த்து “அஸ்தினபுரியின் அரசே! என் சொற்களை கேளுங்கள். நாம் இந்திரப்பிரஸ்தம் செல்வோம்” என்றான். அச்சொற்கள் புரியாதது போல் துரியோதனன் உறுமினான். “நாம் இந்திரப்பிரஸ்தத்திற்கு செல்வோம். அவளை பார்ப்போம். எதையும் பொறுத்தருளுவதற்காக நாம் செல்லவில்லை. அங்கு நாம் அடைந்த சிறுமைக்கு நிகர் செய்வோம்” என்றான். உச்ச இறுக்கத்தில் என நின்றிருந்த துரியோதனன் தசைகள் மெல்ல அசைந்தன. “ஆம், அதற்காகவே சொல்கிறேன். நாம் அங்கு செல்வோம். அவள் விழிகளைப் பார்த்து பேசுவோம், அதற்காக” என்றான் கர்ணன்.
[ 5 ]
கதவு மெல்லிய புறாக்குறுகலோசையுடன் திறக்க மருத்துவர் வெளியே வந்து “சீரடைந்து வருகிறார். ஏழுமுறை நீரருந்திவிட்டார், ஒருமுறை நீர் பிரிந்துவிட்டது” என்றார். “மேலும் இருமுறை உடல்நீர் பிரிந்துவிட்டால் வெம்மை குறையத்தொடங்கிவிடும். ஆனால் விழித்தெழுந்து மீண்டும் மதுவை கோரினாரென்றால் எதன் பொருட்டும் ஒரு துளிகூட உள்ளே அது செல்லக்கூடாது. அது என்னால் ஆகக்கூடியதல்ல. தாங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்” என்றார். கர்ணன் தலையசைத்தான்.
துச்சாதனன் “என்ன செய்வதென்று தெரியவில்லை, மூத்தவரே. நானோ நீங்களோ அவர் மது அருந்துவதை தடுக்க முடியுமா?” என்றான். கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை. கீழே தேர்கள் வந்து நிற்கும் ஓசை கேட்டது. “அவர்கள்தான்” என்றான் துச்சாதனன். கர்ணன் தன் அனைத்து உளச்சொற்களையும் திரட்டிக்கொண்டான். உடலை எளிதாக்குவதனூடாக உள்ளத்தையும் நிகர் நிலைப்படுத்தினான். ஆனால் அவனால் தன்னை முன்செலுத்த முடியவில்லை.
“நீ சென்று அவர்களை வரச்சொல்! நான் தொடர்ந்து வருகிறேன்” என்றான். துச்சாதனன் “இல்லை மூத்தவரே, என்னால் அவர்களை எதிர்கொள்ள முடியாது. தாங்கள் வாருங்கள்” என்றான். “நான் அரசரை ஒருமுறை பார்த்துவிட்டு வருகிறேன். நீ செல்! முகமன்கள் அனைத்தையும் சொல்!” என்று துச்சாதனின் தோளைத்தட்டி அனுப்பிவிட்டு அவன் துரியோதனன் அறைக்குள் நுழைந்தான்.
துரியோதனன் அப்போதும் கண்களை மூடி படுத்திருந்தான். அவன் அருகே இரு மருத்துவ உதவியாளர்களும் கையில் நீள்மூக்குக் கெண்டிகளுடன் நின்றிருந்தனர். துரியோதனன் வாயுமிழ்வது போல் சற்று ஓசை எழுப்ப “நெஞ்சை தடவுங்கள்” என்றார் மருத்துவர். அவன் நெஞ்சை தடவினான். மருத்துவர் அவன் இருகைகளையும் பிரித்துப்பார்த்து “உள்ளங்கைகளில் நீர்மை சற்று கூடியிருக்கிறது” என்றார்.
சுரைக்காய் குடுக்கை ஒன்று துரியோதனனின் இரு கால்களுக்கு நடுவே வைக்கப்பட்டிருந்தது. “நினைவு மீண்டுவிட்டாரா?” என்றான் கர்ணன். “நினைவு மீளவேண்டுமென்றால் உடல் வெம்மை குறைய வேண்டும். குறைந்து வருகிறது” என்றார் மருத்துவர். கர்ணன் இடையில் கைவைத்து துரியோதனனை நோக்கி நின்றான். இரு மருத்துவ உதவியாளர்களும் துரியோதனனை மெல்லத்தூக்கி அமர்வது போல நகர்த்தி மீண்டும் குடுவையை அவன் இடைநடுவே வைத்தனர்.
ஓங்கரித்து உடல் எம்பி எழுந்து துரியோதனன் குமட்டி குடித்தநீரை வாயுமிழ்ந்தான். “ஏன் நீர் வெளிவருகிறது?” என்று கர்ணன் கேட்டான். மருத்துவர் “உடல்நீர் பிரியவில்லை. உடல்நீர் பிரியாவிடில் குடிநீர் குமட்டும்” என்றார்.
“இத்தருணத்தில் அவரால் ஒரு பயணத்தை மேற்கொள்ள முடியுமா?” என்று கர்ணன் கேட்டான். “இருமுறை உடல் நீர் பிரிந்தால் எழுந்து நடக்கவே முடியும். சோர்விருக்கும், ஆனால் நடக்க முடியும்” என்றார் மருத்துவர். கர்ணன் “அவர் சித்தமானதும் எனக்கு தெரிவியுங்கள்” என்றபின் அறையைவிட்டு வெளியே வந்து படிகளில் இறங்கினான்.
கீழே கூடத்தில் அரசணிக்கோலத்தில் தருமனும் அணியாடையில் நான்கு தம்பியரும் நின்றிருந்தனர். கர்ணனைப் பார்த்ததும் தருமன் முன்னால் வந்து “எப்படி இருக்கிறார்?” என்றார். “சீரடைந்து வருகிறார்” என்றான் கர்ணன். “மதுவை சற்று மிகுதியாகக் குடித்துவிட்டார் என்று இளையவன் சொன்னான். இத்தனை நாள் இங்கு மதுக் களியாட்டு நடந்தது. அப்போதெல்லாம் அஸ்தினபுரி அரசர் மிகையாக அருந்தவில்லை. நேற்றென்ன நடந்தது?” என்றார் தருமன்.
“நேற்று தனிமையில் இருந்தார். சற்று களைப்பாக இருந்ததனால் நான் என் அரண்மனைக்குச் சென்று துயின்றுவிட்டேன்” என்றான் கர்ணன். “ஆம், தனிமை மதுவை மிகச்செய்கிறது” என்றார் தருமன். “எவராவது ஒருவர் இருந்திருக்கலாம். தாழ்வில்லை, மது அருந்தியதுதான் நோய்முதல் என்றால் ஒருநாழிகைக்குள் சரியாகிவிடுவார். மருத்துவர் இருக்கிறாரல்லவா?”
“ஆம்” என்றான் கர்ணன். தருமன் “இன்று அஸ்தினபுரியின் அரசர் கிளம்புவதாக சொன்னார்கள். மதுபர்க்கம் அளித்து அனைவருக்கும் விடைகொடுப்பதற்காக வந்தோம். இளையோர் அனைவரும் கிளம்பிச் சென்றுவிட்டதாக சொன்னார்கள்” என்றார். “ஆம். ஒரு விரிவான மதுபர்க்கச் சடங்கு நிகழ்த்துவதற்கு அரசரின் உடல் நிலை ஒத்துழைக்காதென்பதால் அவர்களை நான்தான் அனுப்பினேன்” என்றான் கர்ணன்.
“அவர்களுக்கு மதுபர்க்கம் அளித்திருக்கலாமே? அஸ்தினபுரியின் அரசர் தம்பியருடனும் மைந்தருடனும் துணைவியருடனும் இங்கு வந்திருப்பதுதான் உண்மையில் என்னை சத்ராஜித்தாக உணரச்செய்தது. பிறிதொருவருக்காக அல்ல. என் மூதாதையருக்காகவும் உடன் பிறந்தாருக்காகவும் இச்செங்கோலை ஏந்துகிறேன் என்று எண்ணிக் கொண்டேன்” என்று தருமன் சொன்னார்.
அவர் விழிகளைத் தவிர்த்து “வருக அரசே, அமர்வோம்!” என்றபடி கர்ணன் சென்று பீடத்தில் அமர தருமன் அவனருகே அமர்ந்தார். அர்ஜுனனும் பீமனும் நகுலனும் சகதேவனும் சற்று பின்னால் நின்றுகொண்டனர். துச்சாதனன் போய் அவர்களோடு இணைந்து நின்றான். பீமனின் விழிகள் அவன் விழிகளுடன் உரையாடுவதை கர்ணன் ஒரு கண விழியசைவில் கண்டான்.
தருமன் நீள்மூச்சுடன் “உண்மையில் அஸ்தினபுரியின் அரசர் வரக்கூடும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அவர் விரும்பவில்லை என்றும் பிதாமகரின் ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் அதை அவர் மீறக்கூடும் என்றும் எனக்குச் செய்தி வந்தது. அவர் வரவேண்டுமென்று என்னுடைய தெய்வங்களையும் மூதாதையரையும் வேண்டிக்கொண்டேன். அவரை அழைக்கும்பொருட்டு நானே தம்பியருடன் அஸ்தினபுரிக்கு வந்து பணிந்தால் என்ன என்றுகூட கேட்டேன். அது முறையல்ல. பிற அரசர்களும் அம்முறைமைகளை எதிர்ப்பார்க்கத் தொடங்கினால் நம்மால் அதை ஈடேற்ற முடியாது என்று அமைச்சர் சௌனகர் சொன்னார்” என்றார்.
“அப்படியென்றால் தனிப்பட்ட முறையில் ஓர் ஓலை அனுப்பலாம் என்று எண்ணினேன். அதற்குள் அவர் வர முடிவெடுத்துவிட்டதாக சொன்னார்கள். உண்மையில் அஸ்தினபுரியின் அரசப் படகு வந்து இங்கே படித்துறையில் நிற்பது வரைக்கும் நான் முள்முனையில் இருந்தேன். படகிலிருந்து அரசணிக்கோலத்தில் அஸ்தினபுரியின் அரசர் தோன்றியபோது என் நெஞ்சு நிறைந்தது. விழிநிறைய தெய்வங்களே என்று எனக்குள் கூவிவிட்டேன்” என்று தருமன் தொடர்ந்தார்.
“இங்கு அவர் வந்தது ஒவ்வொரு அரசரிடமும் உருவாக்கிய மாறுதலை பார்த்தேன். அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும் நடுவே ஒரு பூசல் நிகழும் என்பதே அவர்கள் இறுதி எதிர்பார்ப்பாக இருந்தது. நாம் போரிட்டு அழிவோம் என்றால் அதிலிருந்து தங்கள் வெற்றியை ஈட்டலாம் என்று அவர்கள் எண்ணியிருக்கிறார்கள் என்பதை ஒற்றர் செய்திகள் மூலம் நான் உணர்ந்தேன். வேள்விப்பந்தலின் முதல் அவையில் பீஷ்மபிதாமகரும் தந்தை திருதராஷ்டிரரும் இளையவர் துரியோதனனும் நூற்றுவரும் அமர்ந்திருக்கக் காண்கையில் அவர்களின் முகங்கள் இறுகின. பிறகு என்னிடம் பேசும் ஒவ்வொருவருடைய மொழியிலும் மாறுதல் வந்தது.”
அவர் உள்ளத்தினூடாக ஒரு நிழல் கடந்துசெல்வதை கர்ணன் அவர் முகத்தில் கண்டான். விழிகளை சரித்து “சிசுபாலரின் இறப்பு பிறிதொரு தருணத்தில் என்றால் ஷத்ரியர்களை கொதித்தெழச் செய்திருக்கும். அஸ்தினபுரியே எனக்கு அருகில் அரணாக அமர்ந்திருக்கையில் ஒரு சொல்லெடுக்கும் துணிவு எந்த ஷத்ரியருக்கும் வரவில்லை. இனி எப்போதும் எழப்போவதுமில்லை” என்றார் தருமன்.
“ஆம்” என்றான் கர்ணன். தருமன் முகம் மலர்ந்து திரும்பி துச்சாதனனின் கைகளைப் பற்றியபடி “உணவுச்சாலைக்குப் பொறுப்பேற்று இளையவன் துச்சாதனன் பணியாற்றியதைக்கண்டு நானடைந்த நிறைவுக்கு அளவே இல்லை” என்றார். உடனே அக்காட்சியை உளக்கண்ணில் கண்டு வாய்விட்டுச் சிரித்து “இந்த மல்லர்கள் அனைவரும் உள அளவில் நிகரானவர்கள். இவ்வேள்விச்சடங்கில் பெரும்பாலான நேரம் பீமனும் துச்சாதனனுடன் உணவறையில்தான் இருந்தான்” என்றார். கர்ணன் புன்னகைத்தான்.
மேலிருந்து இறங்கி வந்த மருத்துவ உதவியாளன் “விழித்துக் கொண்டார்” என்றான். “நான் பார்த்துவிட்டு வருகிறேன்” என்று கர்ணன் எழுந்தான். “நானும் வருகிறேனே?” என்றார் தருமன். “நான் பார்த்துவிட்டு அவர் விரும்பினால் மறுகணம் தங்களுக்குத் தெரிவிக்கிறேன்” என்றபடி கர்ணன் மேலே சென்றான்.
துரியோதனன் எழுந்து அமர்ந்திருந்தான். அவன் நீர் வெளியேற்றியிருப்பது குடுவையில் தெரிந்தது. மீண்டும் அவன் நீரருந்த வேண்டுமென்று குடுவையை நீட்டிய மருத்துவ உதவியாளரை விலகிச் செல்லும்படி சொல்லிவிட்டு “நாம் கிளம்ப வேண்டும், அங்கரே” என்றான். கர்ணன் “கீழே மதுபர்க்கச் சடங்கிற்காக வந்திருக்கிறார்கள்” என்றான். “ஆம். அறிந்தேன். ஆனால் அச்சடங்குக்கு நான் நிற்கப்போவதில்லை” என்றான்.
கர்ணன் “அரசரே வந்திருக்கிறார்” என்றான். “அவன் எனக்கு அரசனல்ல” என்று உரத்தகுரலில் துரியோதனன் சொன்னான். “ஆம், அதை நானும் அறிவேன். ஆயினும் இங்கு இவ்வளவு தொலைவுக்கு வந்திருக்கிறார். இளையவர் நால்வருடன் வந்திருக்கிறார்” என்றான் கர்ணன்.
“மதுபர்க்கச் சடங்கை புறக்கணித்து தம்பியர் சென்றதே அவருக்கு துயரளித்திருக்கிறது. நாம் இங்கு வந்ததே தனக்களிக்கப்பட்ட பெருமதிப்பாக எண்ணுகிறார். எளிய மனிதர்… அவரை நாம் துயருறச்செய்ய வேண்டியதில்லை. மிக எளிமையானது மதுபர்க்கச் சடங்கு. அரைநாழிகை நேரம் கூட ஆகாது. அவரளிக்கும் தேன்பாலமுதை உண்டு முறைப்படி விடைபெற்று நாம் கிளம்புகிறோம்” என்றான்.
துரியோதனன் உறுதியான குரலில் “இல்லை, நான் எவரையும் சந்திப்பதாக இல்லை” என்றான். “அது அலருக்கு இடமாகும். இப்போதுதான் அவர் சொல்லிக் கொண்டிருந்தார், அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் இணைந்திருப்பது ஷத்ரியர்களில் உருவாக்கிய அச்சத்தைப்பற்றி. இரு அரசுகளும் பூசலிடுவதை அனைவரும் எதிர்நோக்கியிருக்கிறார்கள்” என்றான் கர்ணன்.
சினத்துடன் “பூசல் தொடங்கிவிட்டதென்று அனைவருக்கும் தெரியட்டும்” என்று கூவி “போய் சொல்லுங்கள், அவர்களை திரும்பிப் போகும்படி! இன்னும் சற்று நேரத்தில் நான் இந்நகரில் இருந்து கிளம்புகிறேன். இங்கு நானிருக்கப்போவதில்லை ஒருகணமும்” என்றான். ஏவலரை அழைத்து “என் உடைகளை சித்தமாக்குங்கள். இன்னும் சற்று நேரத்தில் நான் கிளம்பவேண்டும்” என்றான்.
கர்ணன் “அரசே…” என்று சொல்லத்தொடங்க போதும் என்று கைகாட்டி “அவர்களிடம் சொல்லுங்கள்” என்றான். கர்ணன் “நன்று” என்று தலைதாழ்த்தி கீழே வந்தான். எப்படி எச்சொற்களில் அதை முன்னெடுப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவன் வருவதைக் கண்டதுமே தருமன் எழுந்து “என்ன சொல்கிறார்? நினைவு மீண்டுவிட்டதா?” என்றார். “நினைவு மீண்டுவிட்டது” என்றான் கர்ணன். “உடைமாற்றி வர சற்று பிந்தும்.”
“நான் காத்திருக்கிறேன். இன்று மதுபர்க்கச் சடங்குகள் பிறிதேதுமில்லை. இறுதியாக கிளம்பிச் செல்பவர்கள் இவர்களே” என்றார் தருமன். திரும்பி நகுலனிடம் “இளையோனே, மதுபர்க்கத்துக்குரிய அனைத்தும் அங்கு சித்தமாகட்டும். இசைச்சூதரும் மங்கலச்சேடியரும் ஒருங்குக!” என்றார்.
கர்ணன் அப்போதுதான் வெளிமுற்றத்தில் இசைச்சூதரும் மங்கலச்சேடியரும் வைதிகர்களும் அரசவைக்காவலரும் அகம்படியினரும் திரண்டிருப்பதை கண்டான். தயங்கியபிறகு “ஒரு பெரிய சடங்கிற்கு அவர் சித்தமாக இல்லை. அவர் உடல்நிலை சீர்கெட்டிருக்கிறது. தன் உடல்நிலை சீர்கெட்டிருப்பதை அனைவரும் பார்க்கவேண்டுமா என்று நினைக்கிறார். இங்கு இந்தக் கூடத்திலேயே எளிய முறையில் விடைபெறும் சடங்கை முடிப்போம்” என்றான்.
“இனியோர் வருகையிலும் செல்கையிலும் மதுபர்க்கம் நிகழவேண்டுமென்பது ஒரு முறைமை அல்லவா? ராஜசூயம் நிகழ்ந்தபிறகு மதுபர்க்கம் இன்றி அவர்கள் கிளம்பிச்சென்றால் அது எனக்கு மதிப்பு அளிப்பதல்ல” என்றார் தருமன். “மதுபர்க்கம் நிகழட்டும். தாங்கள் தேன்பழக்கூழை அவருக்கு அளியுங்கள். அவர் உண்டு ஐவரிடமும் விடைபெற்று வெளியே செல்வார்.”
பீமன் “அவர் நம் மூத்தவர். மங்கல வாழ்த்தும் இசையும் இன்றி அவர் எப்படி செல்லமுடியும்?” என்றான். கர்ணன் ஏதோ சொல்ல வாயெடுக்க அர்ஜுனன் “இவ்வழியாகத்தானே அவர் வெளியே செல்வார். செல்லும் வழியில் மங்கல இசையும் வாழ்த்துக்களும் எழட்டுமே!” என்றான். கர்ணன் அவன் விழிகளைப் பார்த்து பார்வையை திருப்பிக்கொண்டு “ஆம்” என்றான்.
மேலே சென்று துரியோதனனிடம் என்ன சொல்வது என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கையிலேயே படிகளில் துரியோதனன் விரைந்திறங்கி வரும் ஓசை கேட்டது. “அவர்தான் இளையோரே, துரியோதனர். பீமனின் காலடியோசை போன்றது அவரது காலடியோசை” என்றபடி தருமன் எழுந்தார். விரைந்த ஓசையுடன் படிகளில் இறங்கி வெளியே வந்த துரியோதனன் அவர்களை அணுகாமல் இடைநாழி வழியாகவே நடந்து கூடத்தை அடைந்து வெளியே சென்றான்.
“வெளியே செல்கிறார். வழி தவறிவிட்டார் போல” என்று சொல்லியபடி தருமன் எழுந்து அவனுக்குப் பின்னால் ஓடினார். “மூத்தவரே!” என்று பீமன் உரத்த குரலில் அழைத்தான். தருமன் நின்று “இங்கு உள்ளே வராமல் செல்கிறார். நாமிருப்பது தெரியாது போலிருக்கிறது” என்றார். “நில்லுங்கள், மூத்தவரே! தாங்கள் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி. எவர் பின்னாலும் தாங்கள் ஓட வேண்டியதில்லை” என்றான் பீமன் உரத்த குரலில். தருமன் “என்ன சொல்கிறாய்? அவர் வெளியே போய்விட்டார்” என்றார். “நில்லுங்கள், மூத்தவரே” என்றான் அர்ஜுனன்.
துரியோதனன் வெளியே சென்றதும் அங்கிருந்தவர்கள் என்ன செய்வது என்றறியாமல் குழம்பி எழுப்பிய ஒலிகள் கேட்டன. கர்ணன் அவருக்குப் பின்னால் செல்ல முயல தருமன் “அவரை நிற்கச் சொல்லுங்கள், அங்கரே! என்ன பிழை என்றாலும் நான் பொறுத்தருளும்படி கோருகிறேன் என்று சொல்லுங்கள்! மதுபர்க்கம் நிகழாது செல்லவேண்டாம் என்று சொல்லுங்கள், அங்கரே!” என்றபடி பின்னால் வந்தார்.
கர்ணன் வெளியே சென்றபோது துரியோதனன் மங்கல இசைச்சூதரைக் கடந்து அப்பால் சென்று அங்கு நின்றிருந்த புரவி மேல் ஏறிக்கொண்டதை கண்டான். அவன் பின்னால் செல்லப்போகும் போது யாரோ கைகாட்ட மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் வெடித்தன. கர்ணன் ஓடிச்சென்று இன்னொரு புரவியை அணுகி அதன் கடிவாளத்தைப்பற்றி ஏறி முன்னால் சென்ற துரியோதனனைத் தொடர்ந்து சென்றான்.